நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 14, 2023

நலமே நலம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 31
 ஞாயிற்றுக்கிழமை


இணையத்தில் இருந்து தொகுப்பு
நன்றி விக்கி

நம் நாட்டில் சித்தர்களாலும் ஞானிகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கண்டறியப்பட்டு எல்லை கடந்து சீனாவில் பரவி அங்கு பல கட்டங்களில் விரிவடைந்து வளர்ந்து இங்கே மீண்டும் வந்து பரவியிருக்கும் மருத்துவ முறையே அக்குபஞ்சர் அக்குபிரஷர் என்பன..

சீனத்தில் இருந்து வந்ததனால்
சீன மருத்துவம் எனப்படுகின்றது..

ஆகாயம், காற்று, அக்னி, நீர், மண் ஆகிய ஐந்து பௌதிகமும்  (பஞ்ச பூதங்கள்) - மூலகங்கள் (Elements) - என்று பகுக்கப்பட்டு அவற்றின் தொடர்பில் உள்ளவை மனித  உள்ளுறுப்புகள் என வகுக்கப்பட்டுள்ளது..

இதுவே அண்டத்தில் உள்ளது பிண்டம்.. பிண்டத்தில் உள்ளது அண்டம் என்று சித்தர்களால் சொல்லப்பட்டது..

நெருப்பு - இதயம், இதய உறை, சிறுகுடல் 
(மூவெப்ப மண்டலம்)
நிலம் - மண்ணீரல் , வயிறு.
காற்று  - நுரையீரல், பெருங்குடல்.
நீர் - சிறுநீரகம், சிறுநீர்ப்பை.
மரம் - கல்லீரல், பித்தப்பை.

உடலியல் கடிகை
Biological  Clock என்று சொல்லப்படுவதும் இதுவே..

இந்த மருத்துவத்தில்
உடல் நலம் குறித்து சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்..

உடலில் உள்ள முக்கியமான பன்னிரண்டு உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் அதனுடைய சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும்.
இது இயற்கை. 

இயற்கையின் விதிகளை மீறும் ஒருவருக்கு இயற்கை ஏற்படுத்தும் பிரச்னையே நோய்..

ஒருவன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அவன் - அவனுடைய உடல் மொழியைக் கவனிக்க வேண்டும்.

உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் இரவும் பகலும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன..

இருப்பினும் ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது..

அப்படியான சக்தி ஓட்டம் அதிகம் உள்ளதாக சொல்லப் பட்டுள்ள நேரங்களை இங்கே கவனிப்போம்..

நுரையீரல்
விடியற்காலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை நுரையீரலின் அதிக சக்தி நேரம்.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.. ஆஸ்துமா நோயாளிகள் சிரமப்படுவது இந்த நேரத்தில் தான்..

பெருங்குடல்
விடியற்காலை 5:00 - 7:00 மணி வரை பெருங்குடலின் அதிக சக்தி நேரம். 

காலைக் கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்.. இந்த நேரத்தில்  கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் பல பிரச்னைகள் தீரும்.. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.



வயிறு
காலை 7:00 - 9:00 மணி வரை வயிற்றின் அதிக சக்தி நேரம்.

காலை உணவுக்கான நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது தான் நன்கு செரிமானம் ஆகும். 

மண்ணீரல்
காலை 9:00 - 11:00 மணி வரை மண்ணீரலின் அதிக சக்தி நேரம்.

காலையில் சாப்பிட்ட உணவு மண்ணீரலில்  ஊட்டச் சத்தாக ரத்தமாக மாறுகின்ற நேரம் இது. இந்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. மண்ணீரலின் சக்தி பாதிக்கும்..

அப்படி எதுவும் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடல் வெப்பம் அதிகரிக்கும். சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய  புத்துணர்ச்சிக்குப் பதிலாக அசதி வரும்.

நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு படபடப்பு, மயக்கம், தூக்கக் கலக்கம் ஏற்படும்..

இதயம்
முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை இதயத்தின் அதிக சக்தி நேரம்..

கோபமும்  படபடப்பும் எந்த நேரத்திலும் கூடாது.. என்றாலும்
இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல் அதிகமாகப் படபடத்தல் கூடாது..

இதய நோயாளிகள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம். கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்..

இந்த நேரத்தில் தூங்கக் கூடாது.. தூங்கினால்  மாரடைப்பு, முகவாதம், மூட்டுவாதம் முதலானவை ஏற்படலாம்..

சிறுகுடல்
பிற்பகல் 1:00 மணி முதல் 3:00 மணி வரை சிறுகுடலின் அதிக சக்தி நேரம்.. 

இந்த நேரத்தில் மிதமான மதிய உணவு சாப்பிட்ட பின் சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். 

இந்நேரத்தில் படுத்து உறங்குவதை
தவிர்க்க வேண்டும்.

சிறுநீர்ப்பை
பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறுநீரகத்தின் அதிக சக்தி நேரம். 

நீர்க் கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம். பானங்களோ, தண்ணீரோ குடிக்க உகந்த நேரம்.

சிறுநீரகம்
மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை சிறுநீரகங்களின் அதிக சக்தி நேரம்.

பகல் நேர பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதி பெறவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் தியானம்  வழிபாடுகள் செய்யவும் சிறந்த நேரம். 

இதய உறை
இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை பெரிகார்டியத்தின் அதிக சக்தி நேரம். 

பெரிகார்டியம் என்பது இதயத்தை அதிர்வில் இருந்து பாதுகாப்பதற்காக இதயத்தைச் சுற்றி இருக்கின்ற உறையின் பெயர்..

இதுவே இரவு உணவுக்கு உகந்த நேரம். 

இது தவறினால்
மார்பில் வலி, படபடப்பு தோன்றக் கூடும்..

மூவெப்பமண்டலம்
இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை அதிக சக்தி நேரம். 

இது தனிப்பட்ட உறுப்பல்ல.. 

உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள
(இதயம், நுரையீரல், சிறுகுடல்) மூன்று  மண்டலங்களை இணைக்கும் ஓட்டம். இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது. 

இந்நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருப்பது  கூடாது..

பித்தப்பை
இரவு 11:00 மணி முதல் 1:00 மணி வரை பித்தப்பை இயங்கும் அதிக சக்தி நேரம். 

இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால் பித்தப்பை குறைபாடு ஏற்படும். இது தொடர்ந்தால் உடலின் முழு சக்தியையும் இழக்க நேரிடும்..

கல்லீரல்
இரவு 1:00 மணி முதல் விடியற்காலை 3:00 மணி வரை கல்லீரலின் அதிக சக்தி நேரம்..

இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்க வேண்டும்.

ஒருவேளை உறக்கம் வராவிட்டாலும்
உட்காந்திருக்கக் கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும்..

உடல் முழுவதும் ஓடும் ரத்தம் கல்லீரலில்  சுத்திகரிக்கப்படும் நேரம் இது.

இந்தப் பணி பாதிக்கப்பட்டால்  சுறுசுறுப்பில்லாமல் போகும். கண்ணின் திறன் குறையும்.

இந்த நேரக் கணக்கினை எல்லாம் இயன்றவரை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிப்போம்!..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

8 கருத்துகள்:

  1. நல்ல தொகுப்பு. சில விஷயங்களை சரியாகத்தான் செய்து வருகிறேன் என்று தெரிகிறது. சில விஷயங்கள் இயலாதது!

    பதிலளிநீக்கு
  2. இது வாட்ஸாப்பில் அனுப்பினால் பலபேரை சென்றடையும்.  உபயோகமான குறிப்புக்கள்.  ஆனால் வாட்ஸாப்பில் படிப்பவர்கள் உணர்ந்து படிப்பார்களா, இல்லை 'நல்ல விஷயம் நாராயணனுக்கு அனுப்புவோம்' என்று 'பார்வேர்ட்' மட்டுமே செய்வார்களோ...  சிலராவது ஒழுங்காய்ப் படித்து பயன் பெறுவார்கள்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல செய்திகளுடன் நல்ல பகிர்வு. நம் உடலியக்கத்தைப் பற்றிய பல செய்திகளை அறிந்து கொண்டேன்.
    நம்முடைய நலம் நம்முடைய கையில். உண்மை. நலம் காப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. சிலவற்றைத் தவிர பலவற்றை follow செய்வது கடினம். காலை எழுந்துகொள்வது, காலை உணவு, தூங்குவது போன்றவை ஓகே

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல் தொகுப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மயிலாடுதுறையில் இருக்கும் போது மாதம் ஒரு முறை இயற்கை சங்கம் போவோம். அதில் ஒரு இயற்கை மருத்துவர் நீங்கள் பகிர்ந்த விவரம் சொன்னார் குறிப்புகள் எடுத்து வைத்து இருக்கிறேன். நன்றாக தொகுத்து கொடுத்து விட்டீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு தொகுப்பு. இவற்றை நாம் எவ்வளவு கடைப்பிடிக்கிறோம் என்பதும் கடினமான ஒன்று. எல்லோராலும் முடியாதது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..