நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 08, 2023

ஓதுவார்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 25
  புதன்கிழமை


பேசுதற்குக் கற்றுக் கொண்ட மனிதன் அடுத்ததாக குரலெடுத்துப் பாடினான்.. 

அப்படி பாடப் பெற்ற பாடல் -  இறையை நோக்கித் திரும்பியபோது உயிரும் உணர்வும் பரவசத்தில் ஆழ்ந்து பரமனிடத்தில் ஐக்கியமாகின..

ஓதுவார் என்றும் ஓதுவா மூர்த்திகள் என்றும் வழங்கப்பட்டோர்  சிவாலயங்களில்  திருமுறைகளைப் பண்ணோடு பாடுவதற்காகத் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்ட அன்பின் அடியார்கள்.. சிவத் தொண்டர்கள். 

நாளும்,
நல்லிசையால் நற்றமிழ் நலம் வளர்த்தவர்கள் அவர்கள்..

காதலாகிக் கண்ணீர் மல்கி ஓதுவார் - என்று மெய்யடியார்களைப் பற்றி தேவாரமும் திருவாசகமும் இன்ன பிற சமய நூல்களும் பேசி மகிழ்கின்றன..  

பழங்காலம் தொட்டு மன்னர்கள் பலரும் இவர்களுக்கு மானியங்கள் வழங்கி திருப்பதிகம் பாடச் செய்தனர் என்பது  கல்வெட்டுகள்  காட்டுகின்ற உண்மை....

தஞ்சை பெரிய கோயிலில் திருப்பதிகங்களைப் பாடுவதற்காகவே நாற்பத்தெட்டு ஓதுவார்களை ஸ்ரீ ராஜராஜ சோழன் நியமித்ததாக கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன..

திருக்கோயில் பூஜை முறைகளை பொறுத்து இறைவன் சந்நிதியில் தேவாரம், திருவாசகம், திரு இசைப்பா, திருப்பல்லாண்டு  திருப்புகழ் - என, திருப்பாடல்களை பண் முறையோடு பாடுகின்ற திருத்தொண்டர்கள். 

பற்பல நூற்றாண்டுகளைக் கடந்த திருப்பணி இவர்களுடையது. 

சைவ சமயத்தின் முதல் மூவராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலான அருளாளர்கள் பாடியருளிய திருப் பதிகங்களை அவர்களது காலம் முதலாகவே கர்ண பரம்பரையாக கேட்டு அதனைப் பாடி  - தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்து - அடுத்து 
வந்த தலைமுறையிடம் கையளித்த பெரும் பணி இவர்களுடையதே.. 

மாமன்னர் ராஜராஜ சோழன் தில்லைத் தலத்தில் இருந்த தேவாரத்தை மீட்டு நம்பியாண்டார் நம்பிகள் உதவியுடன் திருமுறைகளாக வகைப்படுத்தினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது..

அதன்பின் இறைவன் அசரீரியின் படி எருக்கத்தம்புலியூர் என்ற ஊரில் பாணர் மரபில் வந்த  மங்கையின் துணை கொண்டு மூவர் பாடிய அதே பண்கள் வகைப் படுத்தப்படு பண்ணடைவு செய்விக்கப்பட்டது.. 

மேலும் காலத்தாற் முற்பட்ட பனுவல்கள் பலவும் பிற்கால சமயப் பதிகங்களும்  சேர்க்கப்பட்டு திருமுறைகள் பன்னிரண்டு என,  முழுமை பெற்றது.. 

அதற்குப் பெருந்துணையாய் இருந்தவர்கள் இறைவனும் ஓதுவார் மூர்த்திகளும் தான்..

இறைவனின் அபிஷேக நேரங்கள், சந்நிதியில் கால பூஜைகள், உற்சவ நாட்களில் திருவீதி பாராயணம்,
கும்பாபிஷேகங்கள், மேலும் பற்பல சமய நிகழ்வுகளிலும் திருமுறைகளை பாடும் உரிமை பெற்றவர்கள் ஓதுவாமூர்த்திகள்..

இறைவனுக்கு பூஜையின் போது வேத உபசாரங்களைத் தொடர்ந்து திருமுறைப் பாடல்களை பஞ்ச புராணம் - என, ஓதுவாமூர்த்திகள் பாடிய பிறகே பூஜை முழுமை பெறுகின்றது.

திருக்கோயில்களில்  திருப்பள்ளியெழுச்சி முதல், இரவு அர்த்த ஜாம பூஜை பொன்னூசல் வரைக்கும் ஓதுவார்கள் இறைவன் புகழினை இசையோடு பாடித் திருத்தொண்டு புரிந்தனர்..

திருப்பதிகம் ஓதுவதையும் திருமுறை விண்ணப்பம் என்றே சொல்வர்..

ஓதுவாமூர்த்திகளிடம் இருந்து வாழ்த்து பெறுவதையும் அவர்கள் கையால் திருநீறு பெறுவதையும் பெரும் பேறாகக் கருதிய காலமும் நம்மிடையே இருந்தது..

முன்பெல்லாம் திருக்கோயிலுக்குள் நுழையும் போதே தேவாரமும் திருவாசகமும் இவர்கள் வாயிலாக மணம் கமழ்ந்திருக்கும்..

நாகஸ்வர இன்னிசை காதுகளில் நிறைந்திருக்கும்..

கலி புருஷனின் கைகளுக்குள் போய் விட்டன எல்லாமும்..

இப்போது ஓதுவார்கள்  வெகுவாகக் குறைந்து விட்டனர்..
 
சிவாச்சார்யார்களே தீப ஆராதனையின் போது தேவாரப் பாடல்கள் சிலவற்றைப் பாடி விடுகின்றனர்..

மேள தாளங்களும் இயந்திர டமாரங்கள் என்றாகி விட்டன..

பல கோயில்களில் திருமுறை விண்ணப்பம் இன்றியே வழிபாடுகள் நடக்கின்றன..

ஓதுவார்களது திருத்தொண்டினால் அடியார்களது மனம் மகிழ்வது போல இறைவனின் மனமும் குளிர்கின்றது என்பர் ஆன்றோர்..

இத்தகைய சிறப்புகள் பொருந்திய ஓதுவார் திருப்பணி சிறப்பாகத் தொடர்வதற்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் இறைன்பர்களும் இறைவனும் சிந்தை கொள்ள வேண்டும்..

தமிழகத்தின் தலை சிறந்த ஓதுவாமூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தருமபுரம் சுவாமிநாதன் அவர்களை இவ்வேளையில் நினைவு கொள்வோம்..

தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்கள்
இன்றொரு காணொளி

திரைப்படம்: கண்மலர்
பாடல்: கவிஞர் வாலி
இசை: K.V.மகாதேவன்

பாடியவர்கள்
பாலமுரளி கிருஷ்ணா
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இப்படியான பாடல்கள்
இனி வருவதற்கு
வாய்ப்புகளே இல்லை..


பத்தராய்ப் பணிவார்கள் 
எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார்
அடியார்க்கும் அடியேன்..
-: சுந்தரமூர்த்தி சுவாமிகள் :-

சிவாய திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. ஓதுவார்கள் பற்றிய விவரத்தொகுப்பு மிகவும் சிறப்பு.  தருமபுரம் ஸ்வாமிநாதன் என்றால் உடனே நினைவுக்கு வருவது கோளறுபதிகம்.  கண்மலர் பாடல் மிகவும் சிறப்பான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 70 களில் வானொலியில்
      இவரது குரலோடு தான் கோளறு பதிகம் கேட்டபடி பொழுது விடியும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. ஓதுவார்கள் பெருமையும் பாடல் பகிர்வும் அருமை.
    என் மாமனார் அவர்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி ஆற்றிக் கொண்டே மாலை நேரம் பேட்டைஈஸ்வரன் கோவிலில் ஓதுவார் பணி ஆற்றினார்கள்.

    கோவையில் ராஜவீதியில் இருக்கிறது. விஸ்வசேஸ்வரர் கோவில். கோவிலில் அமைந்து உள்ள தேவார பாடசாலையில் தேவார ஆசிரியராக 80 வயது வரை சொல்லி கொடுத்தார்கள். அவர்களிடம் கற்ற மாணவர்கள் நிறைய கோவில்களில் ஓதுவாரக இருக்கிறார்கள்.

    மாமனாரின் அண்ணன் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் சிதம்பரம் கோவிலில் ஓதுவாரக இருந்தார்கள், அவர்கள் நடராஜர் சன்னதியில் மேலே நின்று பாடி இருக்கிறார்கள். இப்போது மேலே நின்று பாட விடுவது இல்லை. தர்மபுர ஆதீனம் முன்னால் உள்ளவர் பெரியமாமாவிடம் தேவாரம் கற்றவர்.

    நீங்கள் சொல்வது போல மாமனாரிடமும் , பெரிய மாமனாரிடமும் வாழ்த்து பெற்று விபூதி இட்டு செல்வார்கள். அக்கம் பக்கம், உறவினர்கள் எல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு எழுதும் போது தங்களுடைய மாமா அவர்களை நினைத்துக் கொண்டு தான் எழுதினேன்..

      எல்லாம் சிவமயம்..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. பதில்கள்

    1. தங்கள் அன்பினுக்கு
      மகிழ்ச்சி.. நன்றி ஜி

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. தலைப்பைப் படித்தவுடன் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. அதனையே கொடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திடீரென மனதில் தோன்றிய கருத்துகள்..

      உடனடிப் பதிவு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. ஓதுவார்கள் பற்றிய பதிவு மனதை என்னென்னவோ எண்ணங்களுக்கு இட்டுச் சென்றது. சைவம் வைணவம் இவற்றின் பக்திப் பாசுரங்கள் பற்றிய எண்ணம் எழுந்தது. கோமதி அரசு மேடம் நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்ச்சகருக்கு தீப தட்டில் காணிக்கை இடுவது பற்றி தினமலரில் செய்தி ஒன்று வந்திருக்கின்றது.. அவசியம் வாசிக்கவும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. வடமொழி கூடாது, தமிழ்தான் என்பவர்கள்கூட பக்தி இலக்கியங்களை வளர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் பாழாய்ப் போன அரசியல்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..