நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஓதுவார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓதுவார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 08, 2023

ஓதுவார்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 25
  புதன்கிழமை


பேசுதற்குக் கற்றுக் கொண்ட மனிதன் அடுத்ததாக குரலெடுத்துப் பாடினான்.. 

அப்படி பாடப் பெற்ற பாடல் -  இறையை நோக்கித் திரும்பியபோது உயிரும் உணர்வும் பரவசத்தில் ஆழ்ந்து பரமனிடத்தில் ஐக்கியமாகின..

ஓதுவார் என்றும் ஓதுவா மூர்த்திகள் என்றும் வழங்கப்பட்டோர்  சிவாலயங்களில்  திருமுறைகளைப் பண்ணோடு பாடுவதற்காகத் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்ட அன்பின் அடியார்கள்.. சிவத் தொண்டர்கள். 

நாளும்,
நல்லிசையால் நற்றமிழ் நலம் வளர்த்தவர்கள் அவர்கள்..

காதலாகிக் கண்ணீர் மல்கி ஓதுவார் - என்று மெய்யடியார்களைப் பற்றி தேவாரமும் திருவாசகமும் இன்ன பிற சமய நூல்களும் பேசி மகிழ்கின்றன..  

பழங்காலம் தொட்டு மன்னர்கள் பலரும் இவர்களுக்கு மானியங்கள் வழங்கி திருப்பதிகம் பாடச் செய்தனர் என்பது  கல்வெட்டுகள்  காட்டுகின்ற உண்மை....

தஞ்சை பெரிய கோயிலில் திருப்பதிகங்களைப் பாடுவதற்காகவே நாற்பத்தெட்டு ஓதுவார்களை ஸ்ரீ ராஜராஜ சோழன் நியமித்ததாக கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன..

திருக்கோயில் பூஜை முறைகளை பொறுத்து இறைவன் சந்நிதியில் தேவாரம், திருவாசகம், திரு இசைப்பா, திருப்பல்லாண்டு  திருப்புகழ் - என, திருப்பாடல்களை பண் முறையோடு பாடுகின்ற திருத்தொண்டர்கள். 

பற்பல நூற்றாண்டுகளைக் கடந்த திருப்பணி இவர்களுடையது. 

சைவ சமயத்தின் முதல் மூவராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலான அருளாளர்கள் பாடியருளிய திருப் பதிகங்களை அவர்களது காலம் முதலாகவே கர்ண பரம்பரையாக கேட்டு அதனைப் பாடி  - தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்து - அடுத்து 
வந்த தலைமுறையிடம் கையளித்த பெரும் பணி இவர்களுடையதே.. 

மாமன்னர் ராஜராஜ சோழன் தில்லைத் தலத்தில் இருந்த தேவாரத்தை மீட்டு நம்பியாண்டார் நம்பிகள் உதவியுடன் திருமுறைகளாக வகைப்படுத்தினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது..

அதன்பின் இறைவன் அசரீரியின் படி எருக்கத்தம்புலியூர் என்ற ஊரில் பாணர் மரபில் வந்த  மங்கையின் துணை கொண்டு மூவர் பாடிய அதே பண்கள் வகைப் படுத்தப்படு பண்ணடைவு செய்விக்கப்பட்டது.. 

மேலும் காலத்தாற் முற்பட்ட பனுவல்கள் பலவும் பிற்கால சமயப் பதிகங்களும்  சேர்க்கப்பட்டு திருமுறைகள் பன்னிரண்டு என,  முழுமை பெற்றது.. 

அதற்குப் பெருந்துணையாய் இருந்தவர்கள் இறைவனும் ஓதுவார் மூர்த்திகளும் தான்..

இறைவனின் அபிஷேக நேரங்கள், சந்நிதியில் கால பூஜைகள், உற்சவ நாட்களில் திருவீதி பாராயணம்,
கும்பாபிஷேகங்கள், மேலும் பற்பல சமய நிகழ்வுகளிலும் திருமுறைகளை பாடும் உரிமை பெற்றவர்கள் ஓதுவாமூர்த்திகள்..

இறைவனுக்கு பூஜையின் போது வேத உபசாரங்களைத் தொடர்ந்து திருமுறைப் பாடல்களை பஞ்ச புராணம் - என, ஓதுவாமூர்த்திகள் பாடிய பிறகே பூஜை முழுமை பெறுகின்றது.

திருக்கோயில்களில்  திருப்பள்ளியெழுச்சி முதல், இரவு அர்த்த ஜாம பூஜை பொன்னூசல் வரைக்கும் ஓதுவார்கள் இறைவன் புகழினை இசையோடு பாடித் திருத்தொண்டு புரிந்தனர்..

திருப்பதிகம் ஓதுவதையும் திருமுறை விண்ணப்பம் என்றே சொல்வர்..

ஓதுவாமூர்த்திகளிடம் இருந்து வாழ்த்து பெறுவதையும் அவர்கள் கையால் திருநீறு பெறுவதையும் பெரும் பேறாகக் கருதிய காலமும் நம்மிடையே இருந்தது..

முன்பெல்லாம் திருக்கோயிலுக்குள் நுழையும் போதே தேவாரமும் திருவாசகமும் இவர்கள் வாயிலாக மணம் கமழ்ந்திருக்கும்..

நாகஸ்வர இன்னிசை காதுகளில் நிறைந்திருக்கும்..

கலி புருஷனின் கைகளுக்குள் போய் விட்டன எல்லாமும்..

இப்போது ஓதுவார்கள்  வெகுவாகக் குறைந்து விட்டனர்..
 
சிவாச்சார்யார்களே தீப ஆராதனையின் போது தேவாரப் பாடல்கள் சிலவற்றைப் பாடி விடுகின்றனர்..

மேள தாளங்களும் இயந்திர டமாரங்கள் என்றாகி விட்டன..

பல கோயில்களில் திருமுறை விண்ணப்பம் இன்றியே வழிபாடுகள் நடக்கின்றன..

ஓதுவார்களது திருத்தொண்டினால் அடியார்களது மனம் மகிழ்வது போல இறைவனின் மனமும் குளிர்கின்றது என்பர் ஆன்றோர்..

இத்தகைய சிறப்புகள் பொருந்திய ஓதுவார் திருப்பணி சிறப்பாகத் தொடர்வதற்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் இறைன்பர்களும் இறைவனும் சிந்தை கொள்ள வேண்டும்..

தமிழகத்தின் தலை சிறந்த ஓதுவாமூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தருமபுரம் சுவாமிநாதன் அவர்களை இவ்வேளையில் நினைவு கொள்வோம்..

தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்கள்
இன்றொரு காணொளி

திரைப்படம்: கண்மலர்
பாடல்: கவிஞர் வாலி
இசை: K.V.மகாதேவன்

பாடியவர்கள்
பாலமுரளி கிருஷ்ணா
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இப்படியான பாடல்கள்
இனி வருவதற்கு
வாய்ப்புகளே இல்லை..


பத்தராய்ப் பணிவார்கள் 
எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார்
அடியார்க்கும் அடியேன்..
-: சுந்தரமூர்த்தி சுவாமிகள் :-

சிவாய திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***