நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 01, 2023

சுந்தரத் தமிழ் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 18
புதன் கிழமை

-:நன்றி:-
தலவரலாறு/திருப்பதிகம்: 
பன்னிரு திருமுறை
படங்கள்: விக்கி..


திருவிளம்பூதூர் என்று வழங்கப்பட்ட தேவாரத் திருத்தலமாகிய திருவெண்பாக்கம்,
தற்போது - பூண்டி நீர்த் தேக்கத்தினுள் மூழ்கிக் கிடக்கின்றது..

பூண்டி நீர்த்தேக்கம்
சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவதன் பொருட்டு  பூண்டியில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டபோது
திருவெண்பாக்கம் நீர்த்தேக்கத்தினுள் அடங்கிற்று..

அப்போதைய 
அறநிலையத்துறை அமைச்சர் திரு எம். பக்தவத்சலம் அவர்கள், மற்றும் அறநிலையத்துறை ஆணையர் திரு. உத்தண்டராமப் பிள்ளை  ஆகியோரின் பெருமுயற்சியால் திருவெண்பாக்கம் கோயில் மட்டும் அடியோடு பெயர்த்து எடுக்கப்பட்டு பூண்டி கிராமத்தில்  கட்டப்பட்டுள்ளது..


பூண்டியில் (தற்போது உள்ள இடத்தில்) -  புதியதாகக் கட்டப்பட்ட கோயில் 1968 ஜூலை ஐந்தாம் தேதி அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

(நன்றி - காமகோடி.Org)
***
திருமுல்லைவாயிலில் இருந்து புறப்பட்ட சுந்தரர் - தொடர்ந்து நடந்து திருவெண்பாக்கம் என்ற தலத்தினை அடைந்தார்..

தொண்டர்கள் எதிர்கொண்டு  - வணங்கி வரவேற்றனர்.. சுந்தரரும் திருவெண்பாக்கத்து இறைவனை வணங்கி, தேவரீர்..  இத்திருக் கோயிலில்  உள்ளீரோ?. - என்று  வினவினார்.. 

பெருமானும் - உளோம் போகீர்!.. - என்றபடி ஊன்றுகோல் ஒன்றை அருளினார்.. 

வன்தொண்டராகிய சுந்தரர்க்குக் கோபம் வந்து விட்டது..

கண் பார்வையைத் தர வேண்டிய இறைவன், தனக்குக் கண்களைத் தராமல் ஊன்று கோலைத் தந்தனனே!.. - என்று  ஊன்று கோலை வீசியெறிய அக்கோல் பட்டு நந்தியின் வலக் கொம்பு ஒடிந்து போனது..

பின்னர் சுந்தரர், மனம் வருந்தி -
பிழையுளன பொறுத்திடுவர்..  - என்று பதிகம் பாடித் துதித்தார்..


இதனை நினைவு கூறும்படிக்கு
நந்தியம்பெருமானின் அருகில் கையில் ஊன்றுகோலுடன் கூடிய சுந்தரர் திரு மேனி வடிவமைக்கப் பட்டுள்ளது.

உளோம் போகீர் எனும் இறைவனின் வாக்கு - உளம் பூதூர் என்று மருவி திருவிளம்பூதூர், என வழங்கியது.


இறைவன்
ஸ்ரீ ஊன்றீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ மின்னலொளியாள்

தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் அக்னி தீர்த்தம் 

கண்ணில் பார்வை இழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்திற்கு வந்து சேரும் வரை திருமுல்லை வாயில்  கொடியிடை நாயகி மின்னல் ஒளியாக வழி காட்டி அருளினாள் என்பர் ஆன்றோர்..

திருமுல்லைவாயிலில் இருந்து - கொடியிடை நாயகியாள்  - சுந்தரரைப் பின் தொடர்ந்து வந்தது இதற்காகத்தான்!..

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இங்கிருந்து காஞ்சீபுரம் சென்று சேரும் வரையில் அவருக்கு முன்பாக  மீண்டும் மின்னல் போலத் தோன்றி அம்பிகை வழி காட்டியதால்  இத்தலத்தில் அம்பிகைக்கு மின்னலொளியாள் - எனப் பெயர் அமைந்தது.. 

பின்,
இங்கிருந்து புறப்பட்ட சுந்தரர் காரைக்காலம்மையார் வழிபட்ட  திருவாலங்காட்டில் இறைவனைப் பணிந்து திருப்பதிகம் பாடித் துதித்தார்..

பின் அங்கிருந்து
திருவூறல் தலத்தை அடைந்து வழிபட்ட பின்னர்,

கச்சி என்று வழங்கப்பட்ட காஞ்சி மாநகரை நோக்கிப் புறப்பட்டார்..
***
திருப்பதிகம்
திருவெண்பாக்கம்


ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 89

பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளாயே என்ன
உழையுடையான் உள்ளிருந்து
உளோம்போகீர் என்றானே.. 1

இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணம்என் பேன்
நடையுடையன் நம்மடியான்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்தோல்
உடையுடையான் எனையுடை யான்
உளோம்போகீர் என்றானே..  2

செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தாயோ 
என்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே.. 3


கம்பமருங் கரியுரியன்
கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தாயே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணை எனக்கு
உளோம்போகீர் என்றானே.. 4

பொன்னிலங்கு நறுங்கொன்றை
புரிசடை மேற்பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்
பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே
உளோம்போகீர் என்றானே.. 5

கண்ணுதலால் காமனையுங்
காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தாயோ என்ன
ஒண்ணுதலி பெருமான்தான்
உளோம்போகீர் என்றானே.. 6

பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
ஈங்கிருந்தீரே என்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்
உளோம்போகீர் என்றானே.. 7

வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதுமிடந் திருவொற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே.. 8

பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தாயோ என்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளோம்போகீர் என்றானே.. 9

மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தாயோ என்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே.. 10


ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக்
காதலித்திட் டன்பினொடும்
சீராருந் திருஆரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்கு
அடையா வல்வினை தானே.. 11

திருச்சிற்றம்பலம்

சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. சுவையான தகவல்கள், இனிமையான தமிழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. ஆதாரதண்டேஸ்வரர், ஊன்றீஸ்வரர்.
    தடி கௌரி அம்பாள், மின்னொளியம்மை....

    திருவடிகளே சரணம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னொளியம்மை
      திருவடிகளே சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. திருவெண்பாக்கம்! புதிய தகவல். பூண்டி நீர்த்தேக்கம் சென்றதுண்டு ஆனால் இக்கோயில் போனதில்லை, தகவல்கள் சிறப்பு, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் தான் இந்தக் கோயில் இருக்கிறதாம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. பார்த்திராத கோயில். அறிந்திராத செய்தி. அவனைக் காண அவனருளை நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. அருமையான பதிவு.
    சுந்தரர் வரலாறு, மற்றும் பாடல் பகிர்வு கோவில் படங்கள் எல்லாம் அருமை. பாடல்களை பாடி எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. மின்னொளியம்மை, ஊன்றீஸ்வரர் பாதங்களே சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..