நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 11, 2022

குரங்காடுதுறை 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்னும் எனது வலக் கை இயல்பு நிலைக்குத் திரும்ப வில்லை.. பிரச்னையும் தீரவில்லை..

இருப்பினும் என் பணி தொடர்கின்றது.. முன்னைப் போல் இல்லாவிடினும் இயன்றவரையில்!..

திருக்கூடலூர் திவ்ய தேசத்தின் குடமுழுக்கு தினத்தன்று இக்கோயிலிலும் தரிசனம்..

குரங்காடுதுறை..

தேவாரத்தில்  குரங்காடுதுறை எனப் போற்றப்படும் திருத்தலங்கள் இரண்டு.. ஒன்று தென்குரங்காடுதுறை.. மற்றது வடகுரங்காடுதுறை...

முன்னது ஆடுதுறை எனும் பெயருடன் கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது..

மற்றது வடகுரங்காடுதுறை.. 

தஞ்சையில் இருந்து (20 கி.மீ..) நேரடியாகச் செல்வதற்கு  இதுவரையிலும் பேருந்து வசதி கிடையாது..

திரு ஐயாற்றில் இருந்து பேருந்துகள் உள்ளன.. கும்பகோணம் சாலையில் 10 கி.மீ தொலைவில் வட குரங்காடுதுறை..

இன்றைக்கு இத்தலத்தின் பெயர் ஆடுதுறை..

மேற்குறித்த இரண்டு தலங்களுமே வானர வேந்தன் வாலியும் அனுமனும் வழிபட்டதாக சொல்லப்படுவது ஆயினும் வாலி வழிபட்டதற்குச் சான்றளிக்கும் திருப்பாடல்கள் வடகுரங்காடுதுறை திருப்பதிகத்தில் தான் கிடைக்கின்றன..

கோலமா மலரொடு தூபமுஞ்
சாந்தமுங் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலுமா காவிரி வடகரையடை
குரங்காடுதுறை
நீலமா மணிமிடற்று அடிகளை
நினைய வல் வினைகள் வீடே.. 3.91.6

- என்று ஞானசம்பந்தப் பெருமான் போற்றுகின்றார்..

சிவபக்தியில் இராவணனும் வாலியும்  குறிப்பிடத்தக்க வர்கள்.. இராவணன் நாளும் சென்று எட்டுத் திசைகளிலும் சிவபூஜை செய்தவன்.. 

வாலியோ எட்டுத் திசைகளுடன் ஆகாயம், பாதாளம் என பத்துத் தளங்களில் தாவிச் சென்று சிவபூஜை நிகழ்த்தியவன்.. 

அதனால் தான் எதிரில் நின்று யுத்தம் செய்பவனின் வலிமையைக் கவர்ந்து கொள்ளும் வரத்தைப் பெற்றான்..

ஆனாலும், என்ன புண்ணியம்!?..

இருவருமே நிலை தடுமாறி நின்றதால் முடிவு வேறு விதமாகிப் போனது..

அவர்களைத் தொலைத்துக் கட்டப் புறப்பட்டது இராம பாணம்..

அப்படியாகிய வாலி வழிபட்ட தலங்களுள் வடகுரங்காடுதுறையும் ஒன்று..


ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்ததும் தெற்கு முகமாக அம்மன் சந்நிதி.. சடைமுடி நாயகி என்பது திருப்பெயர்.. அபிராமி திருப்பதிகத்தில் பட்டர் உருகுவாரே - சந்த்ர சடாதரி!.. - என்று.. 

அந்தத் திருப்பெயர்..

எதிரில் நந்தியம் பெருமான்.. பலிபீடம்..





அன்னையை வணங்கி நிலை வாசலைக் கடந்ததும் 



முன் மண்டபத்தில் கணபதி, சின்னஞ்சிறிய அறுமுகன், பூர்ண புஷ்கலா காந்தன்..
தரிசனம் செய்தபடி தொடர்ந்து செல்கையில்
அர்த்தமண்டபத்தைக் கடந்ததும் தேஜோமயமாக மூலவர்..

ஈசன் ஜடாமகுடேஸ்வரர்.. 

ஆயினும், தயாநிதீஸ்வரர் என்பது திருநாமம்.. 

வாலியால் வணங்கப் பெற்றதால் வாலீஸ்வரர்.. 

சின்னஞ்சிறிய சிட்டு ஒன்று ஈசனை வணங்கி மோட்சம் அடைந்தது.. அதனால் சிட்டிலிங்கேஸ்வரர்..

இவற்றை எல்லாம் விட இன்னொரு திருப்பெயர் அமுதத் தமிழில்!..

"குலை வணங்கு நாதர்!.. "

என்ன காரணம்!?..

அடுத்த பதிவினில் தொடர்வோம்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. கோவில் பற்றிய விவரங்கள் அருமை. படங்களும் அருமை.  குலை வணங்கு நாதர் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. விவரங்கள் நன்று.

    உடல்நலம் கவனமாக இருங்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.. தங்கள் அறிவுரைக்கு நன்றி.. கவனத்தில் கொள்கின்றேன்..

      நீக்கு
  3. விபரங்கள் நன்று. இரண்டு ஆடுதுறை இருப்பதை இப்போத் தான் கேள்விப் படுகிறேன். விவசாயத்துறையின் ஆராய்ச்சி நிலையம் இருப்பது எந்த ஆடுதுறை? சஹஸ்ரலிங்கங்கள் இருப்பதும் எந்த ஆடுதுறை? ஒரு ஆடுதுறைக்கு நான் போயிருக்கேன். திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில். இன்னொன்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ள ஆடுதுறை கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.. ஆயினும் அங்கே உள்ள சிவாலயத்திலும் சஹஸ்ர லிங்கம் பற்றிய தகவல் இல்லையே..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. பெயரில்லா11 ஜூன், 2022 16:34

      ஹெஹெஹெஹெ, அ.வ.சி. அந்தப் பக்கம் வரிசையா இறங்கி ஏறிக் கோயில்களைப்பார்த்ததால் ஆடுதுறைனு தப்பா நினைச்சுட்டேன். உண்மையில் 1008 லிங்கங்கள் உள்ள கோயில் பாபநாசத்திலாம். நம்மவர் தலையில் அடிச்சுக் கொள்ளாத குறையாகச் சொன்னார். :)))) நாங்க கும்பகோணம் அருகே இருக்கும் அந்த ஆடுதுறையில் தான் முன்னெல்லாம் ஊருக்குப் போகக்குறுக்கு வழியென ரயில் தாமதமாக வரும் நாட்களில் இறங்குவோம். இந்த இன்னொரு ஆடுதுறை பத்தித் தெரியாது. இப்போத் தான் தெரிந்து கொண்டேன். விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் என் மாமா வேலை பார்த்தார். பிஎஸ்சி அக்ரி படிச்சுட்டு வலிவலம், ஆடுதுறை போன்ற ஊர்களில் வாழை ஆராய்ச்சி, நெல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் வேலை செய்திருக்கார். .

      நீக்கு
    3. அப்பாடா! ஒரு வழியா கூகிள் கணக்கை ஒத்துக் கொண்டது. அநாமதேயர் தான் என முடிவு கட்டி விட்டது ப்ளாகர். ரொம்ப முயற்சி செய்து என் பெயரில் வந்தேன். :)))))) இந்த இன்னொரு ஆடுதுறை கல்லணையிலிருந்து நாங்க கும்பகோணம் செல்லும் வழியில் வருதா? தெரியலை. பார்த்தது இல்லை.

      நீக்கு
    4. ஓ!.. சகஸ்ரலிங்கத் திருக்கோயில் என்று தஞ்சை மாவட்டத்தில் இல்லை.. நீங்கள் சொல்வது தஞ்சை பாபநாசம் அருகில் உள்ள 108 சிவாலயம்.. ஸ்ரீ ராமர் வழிபட்ட திருக்கோயில்..

      மேலதிக விவரங்களுக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா

      நீக்கு
    5. // இந்த இன்னொரு ஆடுதுறை கல்லணையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் வருதா?..//

      ஆமாம்.. கல்லணை, திருவையாறு, கபிஸ்தலம், கும்பகோணம் சாலையில் உள்ளது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    6. தஞ்சை பாபநாசத்தில் உள்ளவை 108 லிங்கங்கள்.. மூலவர் ஸ்ரீ ராமலிங்கம், வெளிப் பிரகாரத்தில் ஆஞ்சநேய லிங்கம், உள் பிரகார மண்டபத்தில் மத்திய லிங்கத்துடன் மூன்று
      வரிசைகளில் 105 லிங்கங்கள்.. ஆகக் கூடுதல் 108..

      நீக்கு
  4. தாங்கள் தஞ்சைக்கு வந்துவிட்டீர்களா. மகிழ்ச்சி. உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தஞ்சைக்குத் திரும்பி ஆறு மாதங்கள் ஆகின்றன.. தங்கள் ஆலோசனை க்கு நன்றி ஐயா..

      நீக்கு
  5. உங்கள் உடல் நலம் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
    இன்று சொன்ன கோயில்கள் எல்லாம் போய் இருக்கிறோம்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  6. குரங்காடுதுறை பற்றி அறிந்தோம். ததரிசனமும் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. குரங்காடுதுறை கோவில் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. காவிரி/கொள்ளிடக்கரையில் எத்தனை எத்தனை கோவில்கள். நின்று நிதானித்து அனைத்து கோவில்களையும் தரிசிக்க வேண்டும். வாய்ப்பு கிடைப்பது எந்நாளோ? அந்த ஈசனே அறிவான்.

    பணிச்சூழல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வலைப்பக்கம் வர இயலாத நிலை. முடிந்த போது விடுபட்ட பதிவுகளை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..