நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 06, 2019

மங்கல மார்கழி 22

ஓம்

தமிழமுதம்

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.. (390)

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 22



அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் 
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.. 
*

நான் பெரியவன்!.. - என்று
இந்த நானிலத்தில் தருக்கித் திரிந்த
மன்னர்கள் எல்லாம்
நினது செங்கோலுக்கு முன்
ஏதும் இலாதவராகி
ஏதும் இயலாதவராகி
மனங்குன்றி மணிமுடி துறந்து
நின் வாசற்கடையில்
அகந்தையைத் துறந்தவராகி
கூடிக் காத்துக் கிடக்கின்றனர்...

ஆனால்
நாங்களோ உன்மீது கொண்ட அன்பினால்
அபிமானத்தை துறக்கிலாதாராகி
உன் வாசல் தேடி வந்திருக்கிறோம்...

கிணுகிணுக்கும் மணிகளைப் போன்ற
செந்தாமரைப் பூக்கள்
மெல்ல மெல்ல மலர்வதைப் போல
செங்கதிரும் தண்மதியும் ஆகிய
செவ்விழிகளால் 
எம்மை நீ நோக்கலாகாதா!...

அங்ஙனம் நீ நோக்குவையாயின்
நாங்களும் எங்களது
பிழைகள் நீங்கப் பெற்றவர்கள் ஆவோம்!..
*

தித்திக்கும் திருப்பாசுரம் 

ஸ்ரீ சாரநாதப்பெருமாள் - திருச்சேறை  
மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து.. (2284)
-: ஸ்ரீ பேயாழ்வார் :-

இயற்கையின் சீதனம்

பீர்க்கு


பொண்ணு வளர்த்தியோ 
பீர்க்கு வளர்த்தியோ!..
என்பது கிராமத்தின் சொல்வழக்கு...

பார்த்துக் கொண்டிருக்கும்போதே
பீர்க்கு முளைத்து
படர்ந்து வளர்ந்து - மலர்ந்து
பிஞ்சாகிக் காய்த்து தழைத்திருக்கும்...

 வீட்டுத் தோட்டத்து காய்கறிகளுள்
வெகு சிறப்பான ஒன்று...


வேலிப் படல் அருகில் நாலு விதைகளைப்
போட்டு விட்டால் போதும்...

வேறு எவ்விதச் செலவும் இல்லை...

பீர்க்கங்காயைப் பலவிதமாக
சமைக்கலாம்..

என்றாலும்
பீர்க்கங்காய் சாம்பாருக்கு
ஈடு இணை வேறு இல்லை!...

பீர்க்கு இலைகளை இரண்டு குவளை நீரில்
கொதிக்க வைத்து சுருக்கி
வடிகட்டி பனங்கல்கண்டு சேர்த்து
வாரம் இருமுறை அருந்தினால்
நீரிழிவுக் குறைபாடுகள் கட்டுக்குள் இருக்கும்...

முற்றி உலர்ந்த பீர்க்கங்காயை
நீரில் சில நாட்களுக்கு ஊறவைத்து சுத்தம் செய்தால்
அருமையான நார்க் கட்டு கிடைக்கும்...

அதைக் கொண்டு மேல் தேய்த்துக் குளிக்க
சரும நோய்கள் என்பன ஓடியேப் போகும்...
*

சிவ தரிசனம்
திரு ஐயாறு


இறைவன்
ஸ்ரீ ஐயாறப்பர், ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி


தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி 

காசிக்குச் சமமான திருத்தலம்...
அற்புதங்கள் பல நிகழ்ந்துள்ளன...

திருநாவுக்கரசருக்கு
திருக்கயிலாய தரிசனம் 
அருளப்பெற்றது
இங்கே தான்...

அம்பிகை
ஈசனின் இடப்புறத்தில் தனிக்கோயிலில்
கிழக்கு நோக்கியவளாகத்
திகழ்கின்றனள்...

இங்கு நிகழும் சப்தஸ்தானப் பெருவிழா
வெகு சிறப்புடையது...

திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில்
துவார பாலகர் சிவாம்சம் பெற்று 
யமனை விரட்டியடித்ததாக ஐதீகம்..

ஸ்ரீ ஆட்கொண்டார் எனும் திருப்பெயர் கொண்டு
விளங்கும் இவருக்கு முன்பாக
ஸ்ரீ நந்தீஸ்வரர் எழுந்தருளியிருப்பது சிறப்பு..  
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்கு
அருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல்
வயல்படியுந் திருஐயாறே.. (1/130) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


ஸ்ரீ ஆட்கொண்டார் ஸ்வாமி
திரு ஐயாறு..
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. (6/38)
***

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத்தொகை
திருப்பாடல் 02


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக் கஞ்சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39) 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. குட் மார்னிங். மமதையைத் தொலைத்து மால்வண்ணனைப் பணிவோம்.

    பதிலளிநீக்கு
  2. பீர்க்கங்காய் இதுவரை மொத்தமாக பத்துமுறைக்குள் மட்டுமே சமைத்துச் சாப்பிட்டிருப்போம்... (நமக்குதான் நல்லதே பிடிக்காதே!)

    பதிலளிநீக்கு
  3. பீர்க்கங்காய் கிராமங்களில் கிடைக்கும் பார்த்து வெகுகாலமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் துரை அண்ணா..

    அங்கண்மாஞாலத்து....இப்பாடலில் மஹாபாரதத்தின் முக்கிய பார்ட் இருக்கே...தத்துவத்துடனான பாடல். இதை தினமும் சொல்வதுண்டு...எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

    பீர்க்கங்காய் மிகவும் பிடிக்கும் பல விதங்களில் பயன்படுத்துவதுண்டு

    கீதா



    பதிலளிநீக்கு
  5. நேற்றைய அமுதம் (அமுதம் மட்டும் என்றுமே பழையது ஆகாதே!!!! என்றுமே புதியதுதானே) இன்றைய அமுதமும், ம் அற்றும் பாகற்காய், பீர்க்கங்காய் சிறப்புகள் அறிந்தேன். எங்கள் வீட்டில் பாகற்காயாவது எப்போதேனும் செய்வதுண்டு பீர்க்கங்காய் எல்லாம் இங்கு கிடைப்பதும் அரிது..செய்வதும் அரிது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. பீர்க்கங்காய் சிறப்பு அறிந்து கொண்டேன். நானும் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி.

    படங்கள் அழகு. பாசுரமும் விளக்கமும் சிறப்பு.

    தொடரட்டும் சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  7. கேஷவின் அழகான படமும் பாவை விளக்கமும் சிறப்பு. பீர்க்கங்காய் அடிக்கடி சமைப்போம். தோலைக்கூட விடுவதில்லை. துவையல் அரைப்போம்.எங்க வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கவும் வளர்த்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  8. ஆட்கொண்டார் படம் மனதை ஆட்கொண்டது.
    படங்கள், பாடல்கள்,குறள், கோவில் வரலாறு, அனைத்தும் அருமை.
    பீர்க்கையின் பயன்கள் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..