நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 23, 2013

திரு ஆனைக்கா

அண்ட பகிரண்டமும் ஒரு கணம் அசைவற்று நின்றது.

தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.


கண்ணிமைக்கும் பொழுதுக்குள் கயிலாய மாமலையிலிருந்து அம்மையும் அப்பனும் - பிரம்ம லோகத்திற்கு எழுந்தருள - 

நான்முகன் - நாணித் தலை கவிழ்ந்து நின்றார்.

எம்பெருமானையும் பிராட்டியையும் ஏறெடுத்து நோக்கவும், இயலாமல் நான்முகனின் கரங்கள் மட்டும் குவிந்தன. 

ஈசன் திருவாய் மலர்ந்தருளினார்.

''..வெண் நாவற்காட்டில் எம்மைக் கண்டு தொழ - வினை தீரும்!..''


அம்மட்டில்  - ஈசனையும் இறைவியையும் தொழுது வணங்கிய பிரம்மன்  -  வெண் நாவல் மரங்கள் அடர்ந்த வனம் எங்கே எனத் தேடிக் கொண்டு பூமிக்கு வந்தார். எளிதில் அவரால் கண்டறிய முடியவில்லை!.. காரணம்   - கருத்தில் கொண்ட காமம் கண்ணில் இருந்து போகாததால்!.. 

சுந்தன் உபசுந்தன் என அசுர சகோதரர்கள் இருவர். இவ்விருவரும் - ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு அழியவேண்டும் என்பது அவர்கள் கேட்டு வாங்கிய வரம்.

இதற்காக - தேவதச்சன் ஆகிய விஸ்வகர்மாவைக் கொண்டு - உலகில் உள்ள அழகு எல்லாவற்றில் இருந்தும் எள் முனையளவு எடுத்து ஒரு பெண்ணுருவாக ஆக்கி, 

அந்த பதுமைக்கு உயிர் கொடுத்து - திலோத்தமை எனப் பெயரும் சூட்டிய வேளையில் -

''இத்தனை அழகா!..'' என மதிமயங்கிய பாவம் -  பிரம்மனைப் பற்றிக் கொண்டது. 

அதன் பொருட்டு தான் - முன் சொன்ன எல்லாமும்!..

மதி மயங்கிக் கருத்தழிந்த நான்முகன் - இப்போது கதி கலங்கி நின்றார். 

எங்கே பழியும் பாவமும் தீராமலேயே போய் விடுமோ!.. 


நினைத்தபோதே - கண்ணீர் - ஆறாகப் பெருகி வழிந்தது. அந்த தன்னிரக்கத்தில் - தகாத எண்ணங்கள் கரைந்தோட - அங்கே - வெண் நாவல் மரத்தடியில்   அழகான  சிவலிங்கம் ஜோதி வடிவாக வெளிப்பட்டது.

பாய்ந்தோடிச் சென்று அடி பணிந்து - வணங்கிய பிரம்மன் - தவத்தில் ஆழ்ந்தார்.  அப்போது நான்முகனுக்கு விளங்கியது - இத்திருத்தலத்தில் முன்பே,


ஞான உபதேசம் வேண்டி அம்பிகை  - காவிரி நீரை லிங்க வடிவில் திரட்டி ஈசனை வழிபட்டிருக்கின்றாள் என்பதும், அச்சமயத்தில் - ஜம்பு முனிவர் நாவல் மரமாகி அம்பிகைக்கு நிழலாக இருந்தார் என்பதும் விளங்கியது.

இப்படி  - அம்பிகை நீரை சிவலிங்க வடிவாகத் திரட்டி வழிபட்ட திருத்தலம் - ஜலகண்டேஸ்வரம் எனவும்,  ஜம்பு எனப்படும் நாவல் மரங்கள் சூழ்ந்த வனம் ஆனதால் ஜம்புகேஸ்வரம் எனவும் வழங்கப் பெற்றது. 

பின்னொரு சமயம்  - இத்திருத்தலத்துக்கு மேலும் ஒரு சிறப்பான திருப்பெயர் கிடைத்தது. அது -

திருஆனைக்கா!..

ஆதியில் - நல்வினையால் உந்தப்பட்ட சிலந்தி ஒன்று - தான் வசித்த நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கத்தைக் கண்டு உணர்ந்தது. தன் வினையாக,  சிவலிங்கத்தின் மீது  - மரத்தின் சருகுகள் விழாமல் இருக்கட்டும் என்று - விறு விறு என ஒரு வலையைப் பின்னியது.


திருப்பணி முடிந்ததும் ஓர் ஓரத்தில் இருந்தபடி, இறைவடிவத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த வேளையில் - அதே வனத்தில், 

வேறொரு புறம் வாழ்ந்து வந்த யானை ஒன்றும், நல்வினையால் உந்தப்பட்டு - இந்த வழி வந்தது. நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கத்தைக் கண்டு உணர்ந்தது.


தன் வினையாக, விறு விறு என ஓடிப் போய், காவிரி நீரை துதிக்கையால் உறிஞ்சிக் கொண்டு வந்து  - இறைவன் திருமேனியில் பீய்ச்சியடித்தது.

அபிஷேகத் திருமேனி ஜொலித்தது!. யானைக்கு பெருமிதம் தாங்க முடிய வில்லை. அப்படியும் இப்படியுமாக தலையை ஆட்டிக் கொண்டபோது - அந்த வலை - சிலந்தி வலை கண்ணில் பட்டது. சிலந்தி செய்த வேலையால், சில சருகுகளும் - வலையில் சிக்கி ஊடாடிக் கொண்டிருந்தன.

''..அழகான எம்பெருமானின் மேல்  - இதென்ன... அலங்கோலமாக!..''

துதிக்கையை நீட்டி - வலையைப் பிய்த்து எறிந்தது. அதன்பின் ஓர் ஓரமாக நின்று - பெருமானையே பார்த்துக் கொண்டிருந்தது.

இப்போது - சிலந்திக்கு சீற்றம் என்றால் சீற்றம்!.. அப்படி ஒரு சீற்றம்!..

''..அவனாக வந்தான்!.. எச்சில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தான். சரி என்று பார்த்தால் - என் வலையையும் பிய்த்துப் போட்டு விட்டான் - தடியன்!..'' என்று முணுமுணுத்துக் கொண்டு  -  மீண்டும் பின்னியது வலையை.


நின்றபடியே - சிவ தியானம் செய்த யானை, அப்படியே தூங்கி - திடுக்கிட்டு விழித்தபோது - மறுபடியும் பெருமானின் மேலாக வலை!.. அதில் இரண்டு சருகுகள்!..

''..டேய்!.. என்னடா.. நடக்குது - இங்கே!..'' - பெருங்குரலெடுத்து சத்தமிட்டதில் மற்ற விலங்குகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி ஒளிந்தன. ஆனால் சிலந்தியோ -  யாதும் அறியாத மகானுபாவனாக அமர்ந்திருந்தது.


தன் முயற்சியில் மனம் தளராத யானை மறுபடியும் வலையை அழிக்க, அதே போல சிலந்தியும் வலையை அமைக்க - அடுத்த சில தினங்களில், அங்கே பெரும் பிரச்னை மூண்டது. 

தன் வலையை அழிக்க முற்பட்ட யானையின் துதிக்கையினுள் புகுந்தது  சிலந்தி. துதிக்கையினுள் சிலந்தியின் ஊடுருவலால் நிலை குலைந்த யானை நிலை குலைந்தது. பெரும் பிளிறலுடன் துதிக்கையை தரையில் அறைந்தவாறு வீழ்ந்தது. 

பெருமானின் திருவருளினால் யானை முக்தி நிலையினை அடைந்தது. அதே வேளையில், நிலத்தில் அறையப்பட்டதால் - துதிக்கையின் உள்ளேயே - தன்னுயிர் துறந்தது சிலந்தி. 

பூத உடலை நீத்ததும் யானைக்கும் சிலந்திக்கும் நல்லறிவு பிறந்தது. உட்கிடக்கையை உணராமல்  - ஒருவருக்கொருவர் பகை கொண்டு நின்றதை நினைத்து வெட்கின. சிலந்தி தனக்கும் முக்தி நல்குமாறு வேண்டியது. 

எம்பெருமான் - புன்னகைத்தார். அந்த அளவில் - ஒளி வடிவாக விளங்கிய சிலந்தியின் உயிர் -

உறையூர் - சோழன் அரண்மனையில், பட்டத்தரசியின் கருவில் சென்று கலந்தது.


நிறைமாத கர்ப்பிணியான சோழமாதேவியின் - உடல் நிலையைக் கவனித்துக் கொண்டிருந்த தாதி சொன்னாள் - ''..இன்னும் சிறு பொழுதில் பேறு நிகழலாம்!..''  - என்று.

அப்போது  - வானியலைக் கணித்த வல்லுநன் கூறினான்.

''..இப்போது குழந்தை பிறந்தால் - வையகம் போற்ற வாழ்வான். ஆனால், இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால்!..'' -

''..பிறந்தால்!..''

''..வானகமும் போற்ற வாழ்வாங்கு வாழ்ந்து சிவ சாயுஜ்யம் பெறுவான்!..''

மாதரசியாகிய சோழமாதேவி  கூறினாள். 

''..எனில் - என் கால்கள் இரண்டையும் தூக்கிக் கட்டி விடுங்கள். இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கட்டும் - என் குழந்தை!..''

மன்னர் பதறினார் - ''..தேவி!.. வேண்டாம் இந்த விஷப்பரிட்சை!..''

''..என் மகனைச் சான்றோன் எனக் கேட்டு நான் பெரிதும் உவக்க வேண்டும்!..''

அதன்படி  - சோழமாதேவியின் கால்கள் தூக்கிக் கட்டப்பட்டன. பிரளயம் ஏற்படுவது போல் பெருத்த வேதனை. அதை -  பிள்ளைக்காகப் பொறுத்துக் கொண்டாள் - அந்தப் புண்ணியவதி.

ஒரு நாழிகைப் போது கழிந்தது - கயிறுகள்  அறுக்கப்பட்டது தான்  - தாமதம்!..

வீறிட்டுக் கொண்டு வந்து விழுந்த பாலகனை -  பட்டுத் துணி விரிக்கப்பட்ட தங்கத் தாம்பாளத்தில் ஏந்தினர். தாயிடம் காட்டினர். குழந்தையை வாரித் தன் மார்பின் மேல் போட்டுக் கொண்டாள். உச்சி முகர்ந்தாள்.


ஞானமும் முற்பிறவி நினைவும் கொண்டதாகப் பிறந்த பிள்ளை - தாய் முகத்தைப் பார்த்தது. எத்தனை எத்தனை பிறவிகளோ!.. ஒன்று பட்டு விளங்கிய உயிர்கள் கலந்து இன்புற்றன. 

மகனின் கண்களைப் பார்த்தாள். 

மேலதிக நேரம், கர்ப்பத்தினுள் பனிக்குடத்து நீரில் மூழ்கி மூச்சடைத்துக் கிடந்ததால் - கண்கள் - சிவந்திருந்தன. 

''..மகனே!.. செங்கண்ணா!..'' என்றாள். குழந்தை வீறிட்டு அழுவதற்குள் - மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்றாள்.

அந்தப் பாலகனே - பின்னாளில் கோ செங்கணான் - எனப்பட்டான். 

சிவசிந்தனையில் திளைத்த மாமன்னன் கோ செங்கணான் - பூர்வ ஜன்ம நினைவுகளுடன் - யானை ஏற முடியாதபடிக்கு திருக்கோயில்களைக் கட்டி மகிழ்ந்தான்.

தேவாரத்தில் பல இடங்களிலும் சிலந்தி - மன்னனாகப் பிறந்த அரிய வரலாறு பேசப்படுகின்றது. 

''..பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் 
பெருங்கோயில் எழுபதினோடு எட்டு!..''-

என்று திருநாவுக்கரசு சுவாமிகள் புகழ்வது  - மாமன்னன் கோ செங்கணான் எழுப்பிய மாடக் கோயில்களையே!..

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் 
கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே! (4/49) 

சோழமாதேவி விரும்பியவாறு - சான்றோராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாக்கினில் இடம் பெற்றதோடு மட்டுமல்லாமல், 

சமயம் வளர்த்த சான்றோர்களுள் ஒருவராக நாயன்மார் வரிசையில் வைத்துப் போற்றப்பட்டார் - கோ செங்கட்சோழர்.


இத்தனையும் நிகழ்ந்தது - திருஆனைக்காவில்!.. காவிரிக் கரையில்!..

திருஆனைக்கா - பஞ்ச பூதத் திருத்தலங்களுள் - நீர் நின்று விளங்கும் திருத்தலம்.

துலா மாதத்தில் -  காவிரியின் பெருமைகள் புகழ்ந்து பேசப்படுகின்றன.

திருஆனைக்கா  க்ஷேத்திரத்தில் - அம்பிகை - அகிலாண்டேஸ்வரியாக எழுந்தருளி - தன் திருக்கரங்களால்,

திரட்டிய சிவலிங்கத் திருமேனி - காவிரியின் நீர்!..

கருவறையில் - கருணையின் ஊற்று என - சிவலிங்கத்தைச் சுற்றிலும் பெருகித் திகழ்வது காவிரியின் நீர்!.. 

காவிரி சூழ் தென் ஆனைக்காவானைத் தேனைப் பாலைச் 
செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே!..

என்று,
அப்பர் பெருமான் - திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்!.. 

நாமும் அவ்வாறே,
காவிரியில் நீராடிக் கரையேறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

16 கருத்துகள்:

  1. பெயர்க்காரணம் விளக்கிய விதம், மற்றும் சிறப்புகள் மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் .. தனபாலன் .. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. கயிலாயம் தொடங்கி திருவானைக்கோவில் வந்து உறையூரில் முடித்து விளக்கமான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. இறையருளும் குருவருளும் தங்களின் நல்லாசியும் என்னை வழிப்படுத்துமாக!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. அறியாத தகவலை அறியத் தந்தீர்கள் ஐயா....
    அருமை.... அருமை,...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் .. குமார்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. திருவானைக்கா பற்றிய பதிவு மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகை தந்து பாராட்டியமைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. திருவானைக்கா தலத்தின் மகிமை சிலந்தி வலைபின்ன அதை யானை அழித்து இறுதியில் இரண்டும் அழிந்த வரலாறு மட்டுமே நான் அறிந்திருந்தேன்.

    இப் பதிவினால் நிறைய அறிந்திராத அற்புத வரலாறுகளை அறியத்தந்தீர்கள்!
    அழகிய படங்களும் அருமை! அனைத்தும் சிறப்பு ஐயா!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் .. சகோதரி!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  6. திரு ஆனைக்கா மகத்துவம் அறிந்தேன். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  7. பலவாறாகக் கேட்ட கதைகளை இடத்துக்கேற்ப ஒருங்கிணைத்து சொல்லும் விதம் மனம் கவர்ந்தது. வாழ்த்துக்கள். இப்போது ஜம்புலிங்கத்தைச் சுற்றி முன்பெல்லாம் கண்ட நீர் இப்போதெல்லாம் தென்படுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!. தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி. சில ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. இருப்பினும் அளவு குறைந்து விடுவதாகச் சொன்னார்கள்.. எங்கெங்கும் ஆழ்துளைக் கிணறுகளால் நீர் இறைக்கப்படுவது காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
  8. கருவறையில் - கருணையின் ஊற்று என - சிவலிங்கத்தைச் சுற்றிலும் பெருகித் திகழ்வது காவிரியின் நீர்!..

    மனமும் நிறைந்து திகழ்கிறது ஐயா..
    அருமையான பதிவுகளைக்கண்டு ..! பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகை தந்து கருத்துரை வழங்கி - பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..