நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 24, 2012

திருவெம்பாவை - 06

ாணிக்காசர் அருளிய  
ிருவெம்பாவ

மையார் தடங்கண்ணி மணவாளன்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். - 11

கனன்ற நெருப்பென - செம்பவளம் என இலங்கும் திருமேனியில் பால் எனத்   திருநீறு துலங்க - திருக்கோலம் தந்தருளும் - செல்வனே!... சிவபெருமானே!... சிற்றிடையாள் மை தீட்டிய கருந்தடங்கண்ணி உமையம்மையின் நாயகனே!...

எங்கள் ஐயனே!...வண்டுகள் ரீங்காரத்துடன் மொய்க்கின்ற  தாமரை மலர்கள் பூத்துத் தவழும் அகன்ற தடாகத்தில் - இந்த இளங்காலைப் பொழுதில் -  ''முகேர் முகேர்'' என ஒலி எழும்பும்படி வளைக்கரங்களால் நீரில் துழாவிக் குடைந்தும், குளிர்ந்த நீரில் மூழ்கியும் பெருமகிழ்ச்சியுடன் விளையாடிக் குளித்து - உந்தன் திருவடித் தாமரைகளைப் புகழ்ந்து பாடி - வழி வழியாக வரும் நெறிமுறைகள் தவறாதபடி தாமரைத் திருவடிகளுக்கு அன்பராய் - அடியவராய் நாங்கள் வாழ்ந்தோம்!...

பெருமானே!... தங்களிடம் அன்பு கொண்ட எம்மை அடியவராய் ஆட்கொண்டு அருளும் திருவிளையாடலின் வழி - இந்த உலக வாழ்வில் துன்பம் நீங்கி உய்வடைந்தார் உய்யவடைந்த வண்ணம் நாங்களும் பெற்று விட்டோம்.. இனி இப்பிறவியில் இடர் படாதபடிக்கு எம்மை காத்தருளவேண்டும்!...

என இறைஞ்சி நிற்க.. வாராய் ... எம் பாவாய்!.....


ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்ப அரவஞ்செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர்  எம்பாவாய். - 12

நம்முடைய பிறவிப்பிணி தீரும்படிக்கு சிவ வழிபாடு இயற்றும் பொருட்டு - புறந்தூய்மை அமைவான் வேண்டி - நாம் குளித்து விளையாடும் இந்தப் பொய்கையின் தீர்த்தமாக  நம்பெருமானே திகழ்கின்றனன். 

தில்லைச் சிற்றம்பலத்தில் அங்கையில் அனலேந்தி ஆடும் அற்புதக் கூத்தன். விண்ணையும் மண்ணையும் இங்கே நிலை பெற்றுள்ள எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிபவன்.


அத்தகைய ஈசனின் பெரும் புகழினைப் பாடிய வண்ணம், தாமரை மலர்கள் பூத்து விளங்கும் இப்பொய்கையின்  நீரைக் குடைந்து குடைந்து குளிக்கும் போது - கைகளில் உள்ள வளையல்கள் அதிர்ந்து ''கல கல'' என ஒலிக்கின்றன. இடையில் அணிந்துள்ள மேகலையின் மணிகள் அசைந்தாடி ''சலசல'' என்று இசைக்கின்றன. அது மட்டுமா?...

கூந்தலில் தவழும் நறுமணத்தினை உணர்ந்து வண்டுகள் ரீங்காரத்துடன் சுற்றி வருகின்றன. மனமும் பெரு மகிழ்ச்சியுடன் பெருமிதமும் கொள்கின்றது...

இவ்வேளையில் நம்மை உடையானாகிய பெருமானின் பொற்கழல்களைப் பாடித் துதித்து  -  இந்த அருஞ்சுனையில் மார்கழி நீராடுவோம்!...

வாராய்!.... எம் பாவாய்!...
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..