நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 23, 2012

திருவெம்பாவை - 05

மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

முன்னைப் பழம் பொருள்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோம் ஏலோரெம்பாவாய்!... 09 

காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படும் பழைமையான பொருள்கள் அனைத்தினுக்கும் முற்பட்ட பழைமையான பரம்பொருளே!...இன்னும் இனி வருங்காலங்களில் தோன்றி  இவ்வுலக மக்களுக்கும் மற்றவற்றுக்கும் பயனுள்ளதாக விளங்க இருக்கும் புதிய பொருள்களுக்குள் - புதுமையாகப் பொதிந்திருக்கும் புனிதனே!...

உன்னை எம்மை விட்டுப் பிரியாதவனாகப் பெற்றிருக்கும் அடியவர்களாகிய நாங்களே மிகவும் பேறு உடையவர்கள்!...

நின்னுடைய திருப்பெயரினால் சீரும் சிறப்பையும் பெற்றிருக்கும் நாங்கள் - 

அந்நிலையில் இருந்து வழுவாதிருக்க இனி என்றும் உன்னுடைய திருத்தொண்டர்களின் திருவடிகளையே பணிவோம்!... அவர்கள் ஆற்றும் திருப்பணிகளில் நாங்களும் ஒரு பங்கினராகி, சிவநெறிச்செல்வர்களாகிய அவர்களையே கணவராக - நல்லறமாகிய இல்லறத்தின் - துணைவராக அடைவோம். அவர்தம் குறிப்பறிந்து குறையின்றி - விருப்பங்களை நிறைவேற்றி அடிமையென உகந்து பணிபுரிவோம்.. 

எங்கள் இறைவா!... எமையாளும் அரசே!.. எங்கள் மனத்துள் இவ்வாறு ஊறித் ததும்பும் விருப்பங்கள் கூடிவர - எமக்கு அருள் புரிவையாயின் எவ்விதக் குறையும் இல்லாதவர்களாக நின் பணி செய்து கிடப்போம்!....

என்று பரமனின் பதம் பணிய .... பாவாய்!... துயிலெழுந்து வாராய்!....

மாதொரு பாகன்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!...10

இறைவனின் திருவடிக் கமலங்கள், வராகமாகத் திரு அவதாரம் செய்து தேடியும் நாரணனால் அறிய இயலாதனவாக - பாதாளம் ஏழினுக்கும் கீழாக விவரித்துச் சொல்வதற்கும் அரியனவாக - விளங்குபவை. 

பொங்கிவரும் கங்கைக்கும் பிறைச்சந்திரனுக்கும் வில்வம், கொன்றை - என பல்வகை மலர்களுக்கும் இடமாக விளங்கும்  இறைவனின் திருமுடியோ மேலினுக்கும் மேலாக - எல்லாவற்றுக்கும் மேலாக - மேன்மையுற்றனவாகத் திகழும் பெருமையை உடையது. 

அவன் ஏகனாக ஒன்றியும், அனேகனாக பரந்து விரிந்தும் விளங்குபவன். இடபாகத்தில் உமையம்மையை - ஒருகூறாகக் கொண்ட குழகன். அழகன். நான்கு வேதங்களும் விண்ணவரும் மண்ணவரும் மற்றவரும் ஊழிக் காலந்தொட்டு பாடிப் புகழ்ந்து பரவினாலும் இன்ன தன்மையன் என்று உரைக்க இயலாதவன். 

உற்ற தோழன்....உயிர்த் துணைவன்.... ஒன்றையும் நாடாதவர் தம் நடுவிருப்பவன்... 

அப்பெருமானின் திருக்கோயிலை சார்ந்து அலகிட்டும் மெழுக்கிட்டும் இருள் கெட திருவிளக்கேற்றியும் இண்டை மாலை புனைந்து சாற்றியும் இரவும்  பகலும் அகலாது அருகிருந்து அணுக்கத் தொண்டாற்றும் அன்புடையீர்!.... 

கன்னி மாடத்தில் உறைந்து உள்ளம் உகந்து திருக்கோயிற் பணி புரியும் கன்னியரே!....

அவன் ஊர் எது?... அவன் பேர் எது?... அவனுக்கு உற்றார் யார்?... அவனுக்கு அயலார் யார்?... அவனைப் பாடிப் பரவும் வழிதான் யாது?...

என வினவி அறிந்து பரமனின் பதம் பணிய -  பாவாய்!.. துயிலெழுந்து வாராய்!..
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..