நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 15, 2023

தலைவாழை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல்நாள்
திங்கட்கிழமை

சமையல் குறிப்பு ஒன்றினை Fb ல் 
படித்ததனால் மனதில்
எழுந்த பதிவு..


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!..

உண்டி என்பது உணவு..
உண்பதெல்லாம் உணவு ஆகி விடுமா?..

உணவுக்கும் லட்சணங்கள் பல உண்டு..

அன்னத்தை லக்ஷ்மி என்றனர்.. அன்புடன் அதைத் தருபவள்
அன்பின் பூரணி - அன்ன பூரணி -  ஆகின்றாள்..

சிறைப்பட்ட நிலையிலும் காலந் தாழ்த்தி - தண்ணீர் கொடுக்கப்பட்டதால் மனம் பொறாமல் தன்னுயிரைத் தான் நீத்துக் கொண்டவன் கணைக்கால் இரும்பொறை..

சரி.. சோறும் நீரும் எப்படி இருக்க வேண்டும்?..

சமையலறையில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம்..

கோப தாப குரோதங்கள்  ஆக்ரோஷ விவாதங்கள் அனாவசிய சச்சரவுகள் நடந்தால் அவற்றின் அதிர்வுகளால் அங்கே சமைக்கப்பட்ட உணவு வகைகள் அசுத்தமாகி விடுகின்றன என்பது பழங்காலத்து நம்பிக்கை..

அதனை முழுப்பொய் என்று புறந்தள்ளுதற்கும் இயலாது..

துரியோதனனின் 
மேற்பார்வையில்  ஐம்பத்தாறு வகையான உணவு வகைகள் சிறப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தன - தூதாக வரவிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு என்று..

தூது செல்லும் இடத்தில் சாப்பிடுதல் முறையல்ல என்பதால் பொதுவானவராகிய விதுரர் இல்லத்தில் எளிய உணவை ஏற்றுக் கொண்ட - சர்வ வியாபியான ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தெரியும் - 

கிருஷ்ணனை அவமதித்து சிறை பிடிப்பது எப்படி?.. என்ற குரூர நினைப்புடன் குழம்பித் தவித்து இருந்த துரியோதனின் முன்னிலையில் தான் தனக்கான சமையல் நடந்தது என்பது!..

சில குடும்பங்களில் பெண் எடுப்பது நிச்சயம் ஆன பிறகே கை நனைப்பார்கள்..

இன்னும் - 
யார்?.. என்ன விவரம்!.. என்பதை முழுதாக அறியாமல் சாப்பிடுவது பேராபத்தில் முடியும் என்பதற்கு மகாபாரதத்தில் சல்லியனின் கதை மிகச் சிறந்த எடுத்துக் காட்டு..

உண்ட வீட்டுக்கு ரெண்டகமா?.. - என்பது எல்லாரும் அறிந்ததே!..

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தவன் கர்ணன் என்பது பிரசித்தம்..

ஒருவரது வீட்டில் மற்றவர் பால் அருந்தி விட்டால் அவர்களுக்குள் பகை கூடாது என்பது  நீதி..

சண்டை சச்சரவுகள்,  வில்லங்க விவாதங்கள் இவற்றுக்கான இடம் அல்ல - சமையலறை..

சுத்தமான இடத்தில்  உணவு சமைக்க வேண்டும் என்பதைப் போல நல்ல எண்ணங்களுடன் தான் உணவு சமைக்கப்பட வேண்டும்..

தமது குடும்பத்துக்கான உணவைத் தாமே தயாரிப்பதே உத்தமம்..


சமைக்கும் பொழுது இறைவனை வாழ்த்தி கணவர் குழந்தை மற்றும் வீட்டில் இருக்கின்ற உறவுகளை நினைத்து , அவர்களது ஆரோக்கியத்தை வேண்டிக் கொண்டு சமைத்தல் வேண்டும்..


அதுமட்டுமன்றி தெய்வீக அதிர்வுகள் பரவிடுமாறு தோத்திரங்களை சொல்லிக் கொண்டு சமைக்க வேண்டும். அப்படிச் சமைக்கும் போது அதனுடைய அதிர்வுகள் சமையலறையில் உள்ள பொருட்களில் நிறைகின்றன.. 

உள் வாங்கப்படும் நல்ல அதிர்வுகளால் நல்லன விளைகின்றன..


இறைவனை நினைத்துக் கொண்டே சமைக்கும் பொழுது, நம்முடைய குடும்பத்தினருக்கு, உணவின் வழியாக இறை உணர்வு  கொடுக்கப்படுகிறது. 

அசுத்தமான சூழ்நிலையில்  சுவாசிக்கும் காற்று நமக்கு  பிரச்னைகளை ஏற்படுவது போல -

சுத்தமில்லாத தண்ணீரும்   உணவும் நமக்கு நன்மையைத் தருவதில்லை..

அவ்விதமே
கோபத்துடன் சமைப்பதும்..

வேண்டாவெறுப்புடன் செய்யப்படும் சமையில் எத்தனை சுவையானதாக இருந்தாலும்  உடல் நலனுக்கு எதிரானதாகவே அமையும்..

வானலை வழியாக வீட்டுக்குள் வரும் அழுகைச் சத்தங்கள் அவலமான ஓலங்கள் கூக்குரல்கள்  வன்முறை, வஞ்சகப் பேச்சுகள், காட்சிகள் எல்லாமே நமக்குக் கேடானவையே!.. 

இவ்வாறான அமங்கல ஓசைகளைக் கேட்டுக் கொண்டு காய்களை நறுக்குவதும் சமைப்பதும்  நமது குடும்பத்தினருக்கு, தேவையில்லாத உணர்வுகளை தான் ஏற்படுத்துகின்றன..

துக்கம் நிகழ்ந்த வீட்டில் சமையல் செய்யமாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்..

குடும்பத்தில் இறை உணர்வுடன் சமைக்கப் படுகின்ற உணவினால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.
 

நல்ல எண்ணங்களுடன் சமைப்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு அவசியம் பரிமாறுவதும்..

(விருந்து) உபசரிப்பு பற்றி வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார்..

நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் பந்தி விசாரிப்பு என ஒன்று உண்டு.. 

ஏதோ ஒரு " ஆப்பைத் "  தேடி அதில் அழைப்பை அனுப்பி விட்டு அக்கடா என்று இருந்த காலம் அல்ல அது...


உள்ளூர் குடும்பங்கள் ஒவ்வொன்றையும் தேடித் தேடிச் சென்று அழைப்பு கொடுத்த பின்னும் - முகம் பார்த்து கல்யாணத்துக்கு வாங்க!.. - என்று அழைக்க வேண்டும்..

கல்யாண விருந்து என்பது கௌரவம்..

வாழையிலையில் விருந்திடுவது  பாரம்பரியம்.. மகிழ்ச்சி..


அதிலும் தலைவாழை என்பது (வாழை இலையின் நுனி) சிறப்பிலும் சிறப்பு..

தஞ்சை மாவட்டத்தின்   கல்யாணங்களில் எல்லாமே தலைவாழை இலைகளாகவே இருக்கும்..

கேரளத்தின் ஓண சத்யா

கல்யாணத்துக்கு
வந்தவர்களை அழைத்துச் சென்று பந்தியில் அமர வைப்பதும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது கனிவுடன் உபசரிப்பதும்.. அடடா!..

பந்தி விசாரிப்பு சரியில்லை.. - என்று பெரிய சச்சரவுகள் கூட நடந்திருக்கின்றன..  

இதைப் பார்த்து விட்டு
அடுத்த பந்திக்கானவர்கள் கலைந்து போயிருப்பார்கள்..

உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் 
தம் மனையில் உண்ணாமை கோடியுறும்!..

என்று ஔவையார் பாடி வைத்ததும் இதைத்தான்..

இதே போல
ஏசி இடலின் இடாமை நன்று.. - என்பதும் ஔவையாரின் வாக்கு..

அதாவது,
ஒருவரைக் கேவலமாகப் பேசி விட்டு - அவருக்கு சோறிடுவதை விட சோறிடாமல் இருப்பதே நல்லது - என்கின்றார்..

மேலும்,
கொடியது கேட்கின் 
வரி வடிவேலோய்..
எனத் தொடங்கி,
ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது 
அன்பில்லாப் பெண்டிர்..
எனத் தொடர்ந்து,

அதனினும் கொடிது
அவர் கையால்
இன்புற உண்பது தானே!.. - என்று முடிக்கின்றார்..

இதனால், 
அன்புடன் உபசரித்தல்  அதி முக்கியம் என்பது புலனாகின்றது..


அலட்சியமாகப் பரிமாறுவதும்
அவசர அவசரமாக பரிமாறுவதும் மகா பாவம்..

இப்போது எல்லாம் தலை கீழ்.. ஒவ்வொரு வீடும் உறவுகள் அற்றதாகி விட்டன ..

இக்காலத்தில் சொல்ல வேண்டும் எனில்,
வீட்டுக்குள் தோக்கா பார்த்துக் கொண்டே பரிமாறுவது கூடாது..

சாப்பிடும் போது தோக்கா கவனிப்பதும்  சேப்போ பார்ப்பதும் கூடவே கூடாது..
(தோக்கா - தொலைக் காட்சி)
(சேப்போ - செல்போன்)

பரக்க பரக்க சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்..

அனைவரும் இயன்றவரை ஒன்றாக இருந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதே நல்லது..

உடல்நலன் மட்டுமல்ல மனநிலை மற்றும், நற்குணங்களுக்கு அடிப்படை உணவே!..

நவீன அரக்கர்களின் காலமாகிய இன்றைய சூழலில் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது..

வைகாசி பொறந்தாச்சு என்பதற்கேற்ப இன்றிலிருந்து நன்மைகள் பெருகட்டும்..

நம்முடைய நலம் 
நம்முடைய கையில்..
வாழ்க நலம்
வாழ்க நலம்!..
***

25 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சிறப்பான சிந்தனைகள். இன்றைக்கு பலர் வீட்டில் சமைப்பதே இல்லை. எல்லாம் Swiggy, Zomato வழி தான் வருகிறது! மனதில் நல்ல எண்ணங்களுடன் சமைத்த உணவில் இருக்கும் சுவை அலாதியானது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்...

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. கணைக்கால் இரும்பொறை பற்றி பள்ளிப் பாடங்களில் படித்ததோடு சரி. அதுவும் ஓரிரு வரிகளில். அவனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தேடிப்பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணைக்கால் இரும்பொறை பற்றி பள்ளிப் பாடங்களில் படித்ததோடு சரி...

      அவ்வளவு தான்..
      மறந்து விட வேண்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. சமையலறை பற்றியும், சாப்பாடு பற்றியும் எவ்வளவு சொல்ல முடிகிறது!  எங்கள் வீட்டில் எல்லோரும் வீட்டில் இருக்கும் நேரம், அல்லது வீட்டில் இருப்போர் எல்லோரும் சேர்ந்தே பேசிக்கொண்டு உணவருந்துவது இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது.  தரையில் அமர்ந்துதான் உண்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் அந்த வழக்கம் (சேர்ந்து உண்ணும், தரையில் அமர்ந்து உண்ணும்) வழக்கம் இல்லை. நான் எப்போதுமே தனியாக உணவை ரசித்து உண்ணும் வழக்கம் உள்ளவன். பேசிக்கொண்டே சாப்பிடுவது பிடிக்காது.

      நீக்கு
    2. @ ஸ்ரீராம்..

      //சமையலறை பற்றியும், சாப்பாடு பற்றியும் எவ்வளவு சொல்ல முடிகிறது! ..//

      இன்னும் சொல்லலாம்.. பதிவின் அளவு கருதி குறைத்துக் கொண்டேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு


    3. @ நெல்லை..

      //நான் எப்போதுமே தனியாக உணவை ரசித்து உண்ணும் வழக்கம் உள்ளவன். பேசிக்கொண்டே சாப்பிடுவது பிடிக்காது..//

      நான் முகம் பார்த்து சாப்பிடத்தான் சொல்லியிருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. // ஒவ்வொரு வீடும் உறவுகள் அற்றதாகி விட்டன //

    இந்தக் கால தலைமுறைக்கு உறவுகளின் மேன்மை புரிவதில்லை. அவசரயுகம், அபார்ட்மெண்ட் காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசர யுகம், அபார்ட்மெண்ட் காலம்..

      நல்லதொரு சொல்லாடல்..

      .அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. திருமணம் போன்ற நிகழ்வுகளில் பந்தி விசாரிக்கக் கூட கான்டராக்டில் வெளியாட்கள் அமர்த்துவது இந்நாள் வழக்கம்.  விருந்தளிப்பவர் வந்து எல்லோரையும் விசாரிபபது இப்போதெல்லாம் மிக அரிதாகவே நடக்கிறது.  எல்லாமே ஒரு செயற்கையாய், கடமையாய் மாறி விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கான்டராக்டில் வெளியாட்கள் அமர்த்துவது இந்நாள் வழக்கம்.

      பெண் மாப்பிள்ளையும்
      காண்ட்ராக்டில் தானே ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. படித்தவரோ, படிக்காதவரோ,  வசதியானவரோ, இல்லாதவரோ..  உறவுகளையும், வீட்டின் பெரியோர்களையும் மதித்து உபசரிக்கும் பண்பு இப்போது தொலைந்தே போயிற்று.  அது ஒரு நாசூக்கான ஏமாற்றுக் கடமையாக மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு மிகப் பெரும் காரணம் அலைபேசி. எல்லோருக்கும் அதிலேயே மூழ்கி இருப்பது, இணைய கனவுலகத்தில் மிதப்பது என்பவையே உறவுகளுடன் கலந்து பேசிப் பொழுதைப் போக்குவதைக் குறைத்துள்ளது (அதாவது விருந்தினர் வந்தாலே, ஐயையோ பேசிக்கிட்டிருக்கணுமே என்று நினைக்கும்படியாக ஒவ்வொருவரும் ஒரு தனித் தீவாக ஆகிவிட்டோம்)

      நீக்கு
    2. உறவுகளையும், வீட்டின் பெரியோர்களையும் மதித்து உபசரிக்கும் பண்பு இப்போது தொலைந்தே போயிற்று.

      இதுதான் கலாச்சார சீர்கேடு..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    3. இதுக்கு மிகப் பெரும் காரணம் அலைபேசி..

      இருந்தாலும் நமக்கு அறிவு இருக்கும் அளவுக்கு உணர்வு ம் இருக்க வேண்டுமே..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அதனினும் அருமை. தூய்மையான சமையல், அதைப்பரிமாறுவது பற்றி தாங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. தற்சமயம் சோம்பல்கள் உருவானது நவீன மின்சார பயன்பாடுகளா, இல்லை, காலங்களின் மாறுதல் எனச் சொல்லிக் கொண்டு உறவு முறைகள் பிரிந்ததலா எனத் தெரியவில்லை. பழைய முறைகள் மாறி விட்டது.

    இலை போட்டு பரிமாறுவதும், அவ்வகையான பந்திகளில் வந்து விருந்தை பற்றி வந்த விருந்தாளிகளிடம் அக்கறையாக கேட்பதும், வேண்டியதை பரிமாறுவதும் குறைந்து விட்டது.

    அதற்கு பதிலாக தானாக எடுத்து போட்டுக் கொண்டு நின்ற மேனிக்கு அவரவர் சாப்பிட்டு விட்டு ஓடும் காலங்கள்தான் இன்றைய திருமண விருந்தில் காண்கிறோம். என்ன செய்வது?

    அருமையான பதிவைபடிக்கத்
    தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தானாக எடுத்து போட்டுக் கொண்டு நின்ற மேனிக்கு அவரவர் சாப்பிட்டு விட்டு ஓடும் காலங்கள் தான்..

      உண்மையைச் சொல்லியிருக்கின்றீர்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. எனக்கு, தாட்ட இலை (என்று தஞ்சாவூரில் சொல்லுவார்கள் என்று படித்ததிலிருந்து)யில் லஞ்ச் சாப்பிடணும் என்று ரொம்பவே ஆசை. அதை என் வீட்டில் சொல்லிக்கொண்டே இருப்பேன் (அவ்வளவு சாப்பிட வயிறு கிடையாது. வயது ஆகிறது இல்லையா?) நான் சொல்வதைக் கேட்டுக் கேட்டு, மகளுக்கு அவள் கையால் செய்து தரணும் என்று எண்ணம் வந்துவிட்டது போலிருக்கு. நான் இண்டீரியர் வேலைக்காக பெங்களூரில் இருந்தேன். என் பிறந்த நாள் அன்று சென்னை வரச்சொன்னாங்க வீட்டில். நான் மாலை 5 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். எம்மாம் பெரிய இலை (ரொம்ப ரொம்பப் பெரிது). அதில் 50க்கும் மேற்பட்ட ஐட்டம் (எல்லாம் துளித் துளிதான்) என் மகள் செய்தது அதில் 40 இருக்கும். இலையுடன் படம் எடுத்துக்கொண்டேன். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. என்னால் 10 சதம் கூட சாப்பிட முடியவில்லை. படம் பகிரணும்னு ஆசை. ஆனால் அதற்கு வீட்டில் தடா. அவங்க அனுமதி கிடைக்காமலா போயிடும்? பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுதல் தகவல்கள் அருமை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  10. பதிவு அருமை. நீங்கள் சொன்னது அனைத்தும் வீட்டு பெரியவர்கள் வழி வழியாக சொன்னது.
    நல்ல நினைவுகளுடன் சமைக்கப்படும் உணவு அமிர்தம், மற்றது சொல்ல வேண்டாம்.

    குழந்தைகளுக்கு கதை சொல்லி, நல்ல பாடல்களிய பாடி ஊட்டியது போய் இப்போது செல்லில் ஏதாவது குழந்தைக்கு பிடித்த பாடலை போட்டு விட்டே உணவு கொடுக்க வேண்டி இருக்கிறது.

    எனக்கும் தனிமையாக சாப்பிட பிடிப்பது இல்லை, தொலைகாட்சியோ அல்லது ரேடியோ கேட்டுக் கொண்டு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. தவிர்க்க வேண்டும். உண்ணும் உணவை கையில் எடுத்து இறைவனை வேண்டி உண்ணும் பழக்கம் இருக்கிறது.

    எத்தனை பேரின் உழைப்பால் இந்த உணவுபொருள் வயலில் விளைந்து வந்த வகை நினைத்து அவர்களையும் வாழ்த்தி உண்ணச் சொல்வார் மகரிஷி.

    உணவை அலுப்போடு, சலிப்போடும் சாப்பிடாமல் ரசித்து ருசித்து உமிழ்நீரோடு நங்கு மென்று சுவைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள், நொறுங்க தின்றால் 100 வயது. என்று சொல்வார்கள்.

    நல்ல நினைவுகளுடன் , சமைப்போம், நல்ல நினைவுகளுடன் உண்போம்.

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் சொல்வது போல இலையில் பருமாறும் முறை. ஏடு இலை எப்படி போடுவது நுனிஇலை எப்படி போட வேண்டும். முதன் முதலில் மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு வரும் போது இரட்டை வாழை இலையில் உணவு பரிமாறும் வழக்கம் உணடு. இனிப்பு எங்கு வைக்க வேண்டும் இலையில் முதலில் எதை வைக்க வேண்டும் என்பது எல்லாம் வகுப்பு நடத்தப்படும் பெண் பிள்ளைகளுக்கு. கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் என்றாலும் கல்யாணம் ஆகி போகும் போது சொல்லி அனுப்புவார்கள்.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் சொல்வது போலப் பரிமாறும் முறை, முக்கியமாய் வாழை இலையைப் போடும் முறை, சாப்பாடுகளை எந்த எந்த இடத்தில் வைக்கணும் என்பதை எல்லாம் சொல்லி ஒரு பாடம் அல்லது யூ ட்யூபில் யாரானும் சொல்லிக் கொடுக்கலாமோ? ஒருத்தருக்கும் ஒண்ணும் தெரியறதில்லை. உப்பிட்ட பதார்த்தங்கள் இலையின் மேல் புறமும் உப்பிடாத பதார்த்தங்கள் அன்னம் உட்பட இலையின் கீழ்ப்புறமும் வைக்கணும். ஆனால் இப்போவெல்லாம் யாரும் அதைப் பற்றி நினைப்பது கூட இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..