நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 27, 2022

விருந்து


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
விருந்து
**


அன்று ஞாயிற்றுக்கிழமை.. 

மதிய விருந்துக்கு வருமாறு அழைப்பு.. நேரம் சொல்லப் படவில்லை.. 

தெரிந்தவர்கள் வந்திருந்தால் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கலாமே என்று பத்தரை மணிக்கெல்லாம் வந்து விட்டார்கள் சுந்தரமும் காமாட்சியமமாளும்..

அது வேறொன்றும் இல்லை..  

இவர்கள் வீட்டுக்குப் பின்புற வீட்டில் வசிக்கும் பெண் - காமாட்சியம்மாளுடன் நல்ல பழக்கம்.. அந்த அளவில் தனது மகனின் முதலாவது பிறந்த நாள் விருந்துக்கு வரவேண்டும் என்று கணவனுடன் வீட்டிற்கு வந்து அழைத்திருந்தாள்.. 

பக்கத்தில் இருக்கின்ற ஆடம்பர கல்யாண மண்டபத்தில் தான் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.. 

பக்கத்தில் என்றாலும் நாலு குறுக்குத் தெருக்களைக் கடந்து  போக வேண்டும்.. ஆட்டோ இருநூறு ரூபாய் கேட்கின்றது.. அந்தத் தண்டம் எதற்கு என்று ஸ்கூட்டியில் வந்து விட்டனர் இருவரும்.. 

இவர்களைக் கண்டதும் அவர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.. இளம் பெண்கள் இருவர் ரோஜாப் பூக்களுடன் சந்தனம் கொடுத்தனர்.. ஜில்லென்ற ரோஸ் மில்க் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் ஓடி வந்து உபசரித்தனர்.. யாரென்று விசாரித்தபோது தான் தெரிந்தது -  அவர்கள் கேட்டரிங் ஏஜென்ஸியின் பணிப் பெண்கள் என்று.. 

எதிர்பார்த்த மாதிரி அவர்கள்
வீட்டுப் பெரியவர்கள் எவரையும் காணவில்லை.. குடியிருப்பில் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் வசிப்பவர்கள் கூட காணப்படவில்லை..

ஆண்களும்  பெண்களுமாக அங்கு வந்து சூழ்ந்திருப்பவர்கள் அனைவருமே அலுவலகக் கூட்டாளிகள்.. 

குடியிருப்பில் நமக்கு மட்டும் தான் சொல்லி இருக்கின்றார்கள் - என்று புரிந்தது இருவருக்கும்.. 

அந்தப் பையனுக்கு வங்கி ஒன்றில் பெரிய உத்தியோகம்.. அந்தப் பெண்ணுக்கும் துறை சார்ந்த அலுவலகத்தில் வேலை.. இருவருக்கும் 
தற்போதைய தேவைக்கு அதிகமாகவே சம்பளம்.. 

தூரமாகச் செல்வதற்கு என்று சொகுசு ஹூண்டாய்.. அலுவலகம் செல்வதற்காக இருவருக்கும் தனித்தனி இருசக்கர வாகனங்கள் .. 

கல்யாணத்தை இவர்களாகவே செய்து கொண்டதால் அந்தப் பெண்ணுக்கு தாய் வீட்டோடு இருந்த தொடர்பு விட்டுப் போனது ..

அந்தப் பையனின் பெற்றோரும் அவ்வளவாக தொடர்பில் இருப்பதாகத் தெரியவில்லை.. 

அக்காளுக்கு சீர் செய்ய வேண்டும்.. தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்.. தம்பி படிப்பதற்குப் பணம் அனுப்பி வைக்க வேண்டும் - என்றெல்லாம் எதுவும் கிடையாது..

இப்படியிருந்தாலும் -
தலையில் நல்ல மாதிரியான எழுத்துக்கள்..

மணி பதினொன்று.. 

" ஓ.. " என்ற, சத்தத்துடன் பெரிய கேக் ஒன்று வெட்டப்பட்டது.. 

High Quality Cake - என்று பேசிக் கொண்டார்கள்.. 
Colourful Creamy Topping..

கண்களை மயக்கும் வண்ணங்களுடன் இருந்த அந்த Cake -
தங்க நிறத் துகள்களுடன் மினுக்கியது.. அதன் உள்ளீடுகளும் அப்படியே..  

Digital Delight என்று பெயராம்...

எல்லாருக்கும் வழங்கினார்கள்.. 

இவர்களிடத்தும் வந்தன சில துண்டுகள்..  

Diabetic என்று சொல்லி மறுத்தபோது சுற்றி இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள்..

பரிசுப் பொருட்களைக் கொடுத்த பலரும் பற்களைக் காட்டியபடி கிளிக்கிக் கொண்டார்கள்.. 
சிலர் மொய்ப் பணம் எழுதினார்கள்..

இவர்களுக்கு - சுந்தர காமாட்சியம்மாள் தம்பதியருக்கு - வீட்டில் விசேஷம் ஒன்றும் இல்லை.. இனிமேல் முறை செய்து மொய் வசூலிப்பதற்கு.. 

இருந்தாலும்,
ஐந்நூறு ரூபாய் தாளைக் குழந்தையின் கையில் வைத்தபடி, அந்தக் குழந்தையையும் பெற்றோர்களையும் மனதார வாழ்த்தி விட்டு அங்கும் இங்கும் தேடினர் சுந்தர காமாட்சி தம்பதியினர்..

"என்னம்மா?.."

"விபூதி, குங்குமம்!.."

" அது.. அது.. எடுத்து வர மறந்து போச்சு..ம்மா!.." - என்றாள் அந்தப் பெண்..

பையனோ சிரித்தபடி -
" இன்னுமா அந்த Culture.. ல இருக்கீங்க!.. " - என்றான்..

அருகில் தாடியுடன் நின்றிருந்த ஒருவன் - 'ஹீ... ' - என்று இகழ்ச்சியாக இளித்தான்..

அதற்குள் யாரோ சப்தமிட்டார்கள்... 

" ரெடி.. ரெடி.. எல்லாரும் வாங்க.. சாப்பிடலாம்!.. "

வித்தியாசமான மணம் காற்றில் வந்தது.. 

காமாட்சியம்மாள்
சந்தேகமடைந்தார்கள்..

" அம்மா.. வாங்க!..."  -  கைகளைப் பற்றியவாறு கனிவுடன் அழைத்த அந்தப் பெண்ணிடம்,
" என்னம்மா சாப்பாடு?.. " - என்று வினவினார்கள்..

" Mutton பிரியாணி, பனீர் Chicken குருமா, Fish fry, மசாலா Egg , Ice cream!.." - என்றாள் புன்னகையுடன்..

" அடடா... நாங்க அதெல்லாம் சாப்றதில்லம்மா!.. "

" Pure vegetation?.. What nonsense in this century?.. "

அந்தத் தாடிக்காரனின்
குரல் பின்னாலிருந்து கேட்டது...

உண்மையிலேயே வருந்தினாள் அந்தப் பெண்..

" வேற Arrangement கூட எதுவும் செய்யலை.. மா.. Very Very sorry!.. " - என்றாள் கலக்கத்துடன்..

" பரவாயில்ல..ம்மா.. நீங்க போய் முதல்ல அவங்கள கவனிங்க!.." - என்று ஆறுதல் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்..

" குக்கர்..ல சாம்பார் சாதம் வச்சிடறேன்.. வடு மாங்கா இருக்கு.. தயிர் இருக்கு..  நாலு மெதுவடை மட்டும் ராவ்ஜி கடை..ல வாங்கிக்குங்க.. தயிர் வடை பண்ணிடலாம்!.. - என்றார்கள் காமாட்சியம்மாள்..

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும்  - கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் என்று நறுக்கிக் கொடுத்தார் - சுந்தரம்...

சமையல் முடித்து தயிர் தாளிப்பதற்கு அரை மணி நேரம் ஆயிற்று.. 

இருவரும் சாப்பிட உட்கார்ந்த வேளையில்  வெளியே கார் வந்து நிற்கும் சப்தம்..

வாசலுக்கு வந்து பார்த்த போது அந்தப் பையனும் பெண்ணும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்..

இருவரிடமும் பரபரப்பு..
இவர்களைக் கண்டதும் அந்தப் பெண்,  அழுதபடியே ஓடிவந்து காமாட்சி அம்மாளின் தோளில் சாய்ந்து கொண்டாள்..

" ஏன்?.. என்ன ஆச்சு?.. "  
பலவாறான சிந்தனைகள் பெரியவர்கள் இருவருக்கும்..

மெல்ல வீட்டுக்குள் அழைத்து வந்து -
" ஏன்.. என்னம்மா ஆச்சு?.."  - என்று கேட்டபடி, கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார்கள்...

" விருந்துக்கு வந்தவங்கள்..ல ஏழெட்டு பேர் ரெண்டு பொண்ணுகளோட சேர்ந்து சரக்கு அடிச்சிட்டு வந்து
சாப்பிட்டாங்க.. நாங்க இதை 
எதிர்பார்க்கலை.. சும்மா ஜாலிக்கு.. ன்னு சொல்லிட்டு
கலகலப்பா ஆரம்பிச்சு ஒருத்தருக்கொருத்தர் கைகலப்பு சண்டை தள்ளு முள்ளு.. ன்னு முடிஞ்சு போச்சு.. இந்த மாதிரி பார்ட்டிக்கு சரக்கு வாங்கி வைக்கணும்.. னு ஏன் உனக்கு தோணலை.. ன்னு,
குடிபோதையில ஒருத்தன்  சண்டைக்கு வந்து இவரோட சட்டையப் பிடிச்சுட்டான்.. ஒரே சத்தம்.. ரகளை.. டைனிங் ஹால்ல ஏகப்பட்ட டாமேஜ்..

போலீஸ், கேஸ்.. ன்னு கிளம்பிட்டான் அந்த ஹால் மேனேஜர்.. போலீசுக்கெல்லாம் வேண்டாம்.. ந்னு சொல்லிட்டு அவங் கேட்ட தண்டம்  அம்பதாயிரத்தைக் கையில கொடுத்துட்டு வர்றோம்!.. "

கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

" சரி.. சரி.. அதையெல்லாம் கெட்ட கனவா மறந்துட்டு.. வாங்க சாப்பிடலாம்!.. "

கையில் குழந்தையுடன் 
மேஜையை நோக்கி நடந்த
காமாட்சியம்மாளைத் தொடர்ந்தனர் - அந்தப்  பெண்ணும் அவளது கணவனும்..

அங்கே,
சாம்பார் சாதமும்  தயிர் வடையும் வடு மாங்காயும் காத்திருந்தன..
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பின் தங்களது வருகை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  2. நாகரீகம் என்ற பெயரில் நாறிக்கொண்டு போகிறது இன்றைய சமூகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. உண்மை.. உண்மை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. நம் பாரம்பரிய முறைகளுக்கு என்றுமே ஒரு மரியாதை உள்ளது என்பதை நிரூபிக்கும் அருமையான கதையை. தங்கள் எழுத்துகளில் படித்ததும் மனது மகிழ்ந்தது. நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நமது பாரம்பரிய முறைகளுக்கு என்றுமே ஒரு மரியாதை உள்ளது.. //

      ஆனால் இது பலருக்குப் பிடிப்பதில்லை.. முக்கியமாக இறைச்சி வியாபாரிகளுக்கு..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. தன் ஊன் பெருக்கத்திற்கு அலைகின்றார்கள் மக்கள்..

      காலத்தின் கொடுமை தான் தனபாலன்..

      நீக்கு
  5. கதை அருமை.
    பாரம்பரிய முறையை கடைபிடிக்க சொல்ல காமாட்சி அம்மா, சுந்தரம் மாதிரி பெரியவர்கள் இல்லை என்ன செய்வார்கள்.
    எதற்கு எடுத்தாலும் விருந்து அதுவும் சரக்கு வாங்கி வைப்பது என்று சினிமாவில் காட்டி காட்டி மக்களும் பழகி கொண்டார்கள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் பழக்க வழக்கங்களை வெக வேகமாக மாற்றுகின்றார்கள் உணவு வியாபாரிகள்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. அநேகமா இப்போ நடப்பது இதானே! புதுசெல்லாம் இல்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  7. "கொஞ்சம் இரும்மா" என்ற பெரியவர் ஸ்வாமியிடமிருந்து விபூதியை எடுத்தவர் குழந்தையின் நெற்றியில் இட்டார்.  காமாட்சி அம்மா துளி குங்குமம் குழந்தை நெற்றியிலிட்டு, பெண் நெற்றியிலும் இட்டு விட்டு, அன்புடன் தோளுடன் அணைத்தபடி சாப்பாட்டு மேஜைக்கு நடத்திச் சென்றார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... இதுவும் நல்லா இருக்கே..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  8. நாகரீகம்!  ஆனாலும் சைவம் இலலாமல் வைக்கும் அளவுக்கு எனக்குத் தெரிந்து யாரும் இருப்பதில்லை என்றே நினைக்கிறேன்.  அதுவும் சனி, வியாழன், வெள்ளி செவ்வாய் கிழமைகள் என்றால் கேட்டுக் கொள்வார்கள்.  புரட்டாசி வேறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் குழந்தைப் புள்ளையாகவே இருக்கின்றீர்கள்..

      கும்பகோணத்தில் மடத்துத் தெரு, கொட்டையூர், சுவாமி மலை எனப் பல இடங்களிலும் பிறந்த நாளில் தொடங்கி வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பிரியாணி என கண் கவரும் விளம்பரங்களைப் பார்த்து வெறுப்படைந்த நிலையில்
      இந்தக் கதையை எழுதினேன்..

      சில தினங்களுக்கு முன் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் இருந்த ஊர்களில் தனி சைவமாக எந்த
      உணவகமும் இல்லாதது மிகுந்த சங்கடத்தை உண்டாக்கியது..

      அவனுங்க ஓட்டல் விளம்பரத்திலேயே சைவம்/ அசைவம் என்று எழுதப் பட்டிருக்கின்றது..

      ஒரு நீதி வேண்டாமா?...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..