நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 18, 2020

தொண்டருட்தொண்டர்


இன்று சித்திரை - சதய நட்சத்திரம்..

சைவ சமயம் கூறும் எண்ணற்ற நல்லடியார்களுள் -

எண்பத்தொரு அகவை தாங்கியவரும்
தலை சிறந்த திருத்தொண்டரும்
மக்கள் பணியே மகேசன் பணி - என
உலகுக்கு உணர்த்தியவரும் ஆகிய

திருநாவுக்கரசு சுவாமிகள் - ஈசன் திருவடிகளில் இரண்டறக் கலந்த நாள்..


திருவாமூரில் செழித்தோங்கிய வேளாண் குடியில் - புகழனார் மாதினியார் தம்பதியர்க்கு இரண்டாவது மகவெனத் தோன்றியவர்..

இயற்பெயர் மருள்நீக்கியார் என்பதாகும்..

மூத்தவர் திலகவதி எனும் அருங்குண நங்கை...

உரிய வயதில் கல்வி கற்று சிறந்து விளங்கினார் - மருள்நீக்கியார்..

திலகவதியார் - தம் பன்னிரண்டாம் வயதில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பெற்றது..

மாப்பிள்ளை - கலிப்பகை எனும் வீர மணாளன்

அவ்வேளையில் திருமுனைப்பாடி நாட்டின் வட எல்லையில் போர் மூளவே -
கலிப்பகையாரும் வாளேந்தி வன்பகை முடிக்க விரைந்தார்..

காலம் செய்த கொடுமையாய் - எதிர்பாராத விதமாக அன்பு மகளின் திருமணத்தைக் கண்குளிரக் காணாமல் - புகழனார் இறைவனடி சேர்ந்தார்..

அத்துயரத்தைத் தாங்க மாட்டாதவராக மாதினியாரும் -
உற்ற செல்வங்களையும் பெற்ற செல்வங்களையும் துறந்து -
கணவனைத் தொடர்ந்து விண்ணேகினார்..

பெற்றோரைப் பிரிந்த பெருந்துயரிலிருந்து மீள்வதற்குள் - மீண்டும் ஒரு பேரிடி..

நாட்டுக்காகப் போராடிய கலிப்பகையாரை மரணம் தழுவிக் கொண்டது..

தனக்குக் கணவனாக நிச்சயிக்கப் பெற்ற - கலிப்பகையார்
போர் முனையில் வீர மரணம் எய்திய செய்தியறிந்த திலகவதியார் -
தாமும் தன் இன்னுயிரைப் போக்கிக் கொள்ள முனைந்தார்..

அந்தக் கொடுமையைக் காணச் சகிக்காத மருள்நீக்கியார் -
அன்புச் சகோதரியின் கால்களில் வீழ்ந்து அரற்றினார்..

அன்னையிற் சிறந்த அக்கையார்.. தாமும் எனைக் கை விட்டால் நான் போவது எங்கே?.. அவனியில் எனக்கென்று ஓரிடமும் உளதோ?.. யானும் தம்முடன் வருகின்றேன்!.. அடியேனையும் அருள் கூர்ந்து அக்னிக் குழிக்குள் அழைத்துச் செல்க!..

கல்லாகியிருந்த திலகவதியாரின் - மனமும் கரைந்தது..

கால்களைப் பற்றிக் கொண்டு - மருள்நீக்கியார் சிந்திய கண்ணீர்த் துளிகளுடன் திலகவதியாரின் கண்ணீர்த் துளிகளும் கலந்தன...

தம்பியின் தோள்களைப் பற்றித் தூக்கி ஆரத் தழுவிக் கொண்டார்..

இனி என்றும் உனைப் பிரியேன்!..

அக்காளின் அன்பு மொழிகளினால் சற்றே ஆறுதலுற்றார் - தம்பி..

மனம் தேறியவராக - திரண்டு கிடந்த செல்வங்களை வாரி வாரி வழங்கினார்..

எந்த வகையிலெல்லாம் இயலுமோ -
அந்த வகையிலெல்லாம் குறைவின்றி அறம் புரிந்தார்..

ஆனாலும் மருள்நீக்கியார் மனதில் அமைதி உண்டாகவில்லை..

உயிர் தரித்திருந்தாலும் அக்கா பூண்டிருந்த கைம்மைக் கோலம்
அன்புச் சகோதரனின் மனதைத் துளைத்தது..

நிம்மதி குலைந்திருந்த அவரை - புறச் சமயம் கவர்ந்தது..

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்..
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்..
நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்..
உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்..

- என்று பின்னாளில் தம்மைப் பற்றிக் குறித்தாலும் -
அந்த கொடுமையான சூழ்நிலையில் -

சைவ சமயத்தைத் துறந்து காஞ்சிக்குச் சென்று சமண சமயத்தைச் சார்ந்தார்..

அதைக் கண்டு திகைத்த திலகவதியார் - தாமும் திருவாமூரில் இருந்து நீங்கி திருஅதிகை வீரட்டானத் திருக்கோயிலில் நாளும் தொண்டு புரிவாராயினர்..

காலங்கள் காற்றென ஓடின..

மருள்நீக்கியார் - தருமசேனர் என்ற பெயருடன் - காஞ்சியில் புகழ் பெற்று விளங்குவதை அறிந்து ஏதும் செய்ய இயலாதவராக மனம் இளைத்தார்..

எனினும் என்றாவது ஒருநாள் தன் சகோதரன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் திளைத்தார்..

அந்த நம்பிக்கையுடனேயே - அதிகை வீரட்டானேஸ்வரரைத் துதித்தார்..

அவர் தம் நம்பிக்கை நிறைவேறும் நாளும் வந்தது..

காஞ்சி மடத்தில் தருமசேனர் என்ற பெயரிலிருந்த
மருள்நீக்கியாருக்கு சூலை நோய் உண்டானது..

அதன் கடுமையை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை..

புறச் சமயத்தின் - மணி மந்த்ர ஔஷதங்கள் எதுவும் பலனளிக்கவில்லை...

வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்து எனை நலிகின்றதே!..

- என, அரற்றினார்..

அவரது மனதில் மெல்லியதாக ஒளிக் கீற்று புலப்பட்டது..

அஞ்சேலும் எனீர் ... அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே!..

- என கரங்குவித்து வணங்கினார்..

தனது நம்பிக்கைக்கு உரிய பணியாளனுடன் - எவரும் அறியாத வண்ணம்
மாலை மயங்கிய பிறகு, விடியலைத் தேடி நடந்தார்..

ஆனாலும் - வயிற்று வலியின் கொடுமை.. அவரால் நடக்க இயலவில்லை..

பணியாளனுடன் குதிரையில் பயணித்து வந்தார்..

கிழக்கே ஆதவன் உதிக்கும் வேளையில் அவர் வந்து சேர்ந்த இடம் - திருஅதிகை..

திருக்கோயிலின் வாசலில் நீர் தெளித்துக் கொண்டிருந்த அக்காளைக் கண்டார்..

தத்தளித்துக் கொண்டிருந்த மனம் தெளிந்தார்.. கண்களில் நீர் பொங்கிற்று..

அவர் தம் திருவடிகளில் அடியற்ற மரம் போல் வீழ்ந்தார்..

எனக்கென உயிர் தாங்கிய உம்மையும் தவிக்க விட்டுச் சென்ற பாவமோ - இங்ஙனம் எனக்கு வந்துற்றது?.. இதிலிருந்து மீளவும் வழியுண்டோ?.. அறியேனே!...

அழுதார்.. தொழுதார்.. துடித்தார்.. துவண்டார்..

ஆதரவுடன் தோள்களைத் தொட்டுத் தூக்கி -
தம்பியின் நெற்றியில் திருநீற்றினைப் பூசினார் - திலகவதியார்..

வழி உண்டு!.. கலங்க வேண்டாம்!..

எங்கே?.. எளியேன் அறியும்படிக்குக் காட்டியருளுங்கள்.. அக்கையாரே!..

அதோ.. அங்கே!..

திருவதிகை வீரட்டானம்
அக்கையாரின் திருக்கரங்கள் காட்டிய திசை - திருவதிகை திருமூலத்தானம்..

அருள்மயமாக ஐயன் வீரட்டானேஸ்வரர்...

அந்த அளவில் மருள்நீக்கியாரின் நாவிலிருந்து -
மடை கடந்த வெள்ளமாக அமுதத் தமிழ் பொங்கியது..

கூற்றாயினவாறு விலக்கலீர் கொடுமைபல செய்தன நானறியேன்..
ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேனடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறைஅம்மானே!..  

திருப்பாடல்கள் வளர வளர - சூலை நோய் தேய்ந்து கொண்டே வந்து முற்றாகத் தொலைந்தது..

நோய் நீங்கிய மகிழ்வில் திலகவதியாரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார் - மருள்நீக்கியார்..

தம்பிக்கு நல்லாசி கூறிய திலகவதியார் -

ஐயனை வணங்கு..
அவனைத் துணை கொண்டு
அவனிக்குத் தொண்டு செய்!..

- என்று மொழிந்தவராக,

ஊருக்கு உழைப்பதற்கென உழவாரப் படையினை தம்பியின் கரங்களில் அளித்தார்..

அப்போது, விண்ணினின்று - திருநாவுக்கரசு!.. - எனும் ஒலி எழுந்தது..

ஆலயத்தின் மணிகள் தாமாகவே முழங்கின..

நெடுங்கிடையாய் விழுந்து வணங்கி எழுந்தவர் - திருஅதிகை வீரட்டானத்தின் மருங்கில் மண்டிக்கிடந்த முள்ளையும் கல்லையும் உழவாரப் படையால் செதுக்கித் துப்புரவு செய்து அடியார் நடக்கும் பாதையைச் சீர் படுத்தினார்...

அடுத்த சில விநாடிகளில் - அங்கே மகேந்திர பல்லவனின் படையாட்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்...

சமயம் துறந்து வந்த தாங்கள் அரசரின் ஆக்கினைக்கு ஆட்பட்டீர்.. எம்முடன் காஞ்சிக்கு வரக்கடவீர்!.. உம்மைத் தண்டித்து ஒறுக்கும் படிக்கு அரசரின் ஆணை!..

சேனை நாயகன் கடுங்கோபத்துடன் மொழிந்து நின்றான்..

நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்!..

- திருநாவுக்கரசர் திடங்கொண்டு மொழிந்தார்..

அதைக் கேட்ட சேனை நாயகன் பதறினான்..

ஐயனே.. தம்மைத் தண்டிக்கும் துணிவு எனக்கேது.. என்பிழை பொறுக்க வேண்டும்.. ஆயினும் - தாம் அறியாததா?.. அரசரின் ஆணையை நிறைவேற்றா விட்டால் எளியேன் தண்டனைக்கு ஆளாக நேரிடும்... இக்கட்டான சூழ்நிலையில் தாமே எனக்கு உதவ வேண்டும்!..

சேனை நாயகனின் துயர் தீரட்டும் என்று - தாமே காஞ்சிக்கு எழுந்தருளினார்..

அங்கே திருநாவுக்கரசர் பெருந்திடலில் நிறுத்தப்பட்டார்..

காஞ்சி சமண மடத்தில் தீ - எனக் கனன்று கொண்டிருந்தது சிவ சமயக் காழ்ப்பு..

ஏதேனும் செய்து கொள்க!.. - என்றவாறு மன்னன் மகேந்திர பல்லவன் - திருநாவுக்கரசரை - தான் சார்ந்திருந்த சமண சமயத்தினரிடம் ஒப்புவித்தான்..

அரசனின் வாக்கைச் சிரமேற்கொண்ட - அவர்கள்
திருநாவுக்கரசரைப் பலவகையிலும் துன்புறுத்தத் தலைப்ப்பட்டனர் - 

சமண சமயத்தினின்று நீங்கி மீண்டும் சிவசமயத்தைச் சார்ந்த குற்றத்திற்காக -
சுண்ணாம்பு நீற்றறையில் அடைக்கப்பட்டார்..

ஏழு நாட்களுக்குப் பின் -
நீற்றுப் போயிருப்பான் - நீற்றைப் பூசியவன்!.. -
என்ற இறுமாப்புடன் நீற்றறையைத் திறந்தவர்கள் அதிர்ந்து பின்வாங்கினர்..

காரணம் -
நீற்றறைக்குள் அருள் பூத்த திருமேனியராக அமர்ந்திருந்தார் - திருநாவுக்கரசர்..

அதன்பின், அவருக்கு - நஞ்சு கலந்த பால் சோற்றை வஞ்சனையுடன் உண்ணக் கொடுத்தனர் - வண்கணாளர்கள்..

அதிலும் வெற்றிகரமாகத் தோல்வியடைந்த பின் -
திருநாவுக்கரசரை கழுத்து வரை - ஆழ்குழிக்குள் நிறுத்திப் புதைத்தனர்..

மதயானையை அவிழ்த்து - அவர் மீது ஏவி விட்டனர்..

தடம் மாறியின் தலையை இடறித் தென்னங்குறும்பையைப் போல் நசுக்கட்டும்!.. - என்ற எண்ணம் அவர்களுக்கு..

ஆனால் - அவிழ்த்து விடப்பட்ட யானை - குழிக்குள் புதைக்கப்பட்டிருந்த நாவுக்கரசரைக் குனிந்து நோக்கியது..

பெருமானை நோக்கிய அளவில் அதனைப் பிடித்திருந்த மதம் அகன்று போனது.. ஐந்தறிவாகிய அந்த யானைக்கு நல்லறிவு பிறந்தது..

மதம் நீங்கிய மாதங்கம் ஐயனை வலம் வந்து வணங்கியது..

வேடிக்கை பார்க்க என கூடியிருந்த கூட்டத்துள் புகுந்து ஓடிப் போனது..

ஆனை ஓடிப் போனதும் அதனைப் பிடித்திருந்த மதம்
ஆங்கிருந்த ஆறறிவுடையோர்க்கு ஆனது...

இதெல்லாம் எம்மிடம் காட்டும் மாய வித்தைகளோ!.. இனி என்ன செய்யப் போகிறாய்?.. இதுவே உனக்கு இறுதி!..

என்று ஆர்ப்பரித்தவாறு - நாவுக்கரசரைக் கல் தூண் ஒன்றுடன் சங்கிலியால் இறுகப் பிணைத்தனர்..

தர.. தர.. - என்று தெருவில் இழுத்துச் சென்றனர்..
தரங்கக் கடலுள் தள்ளி விட்டு கை தட்டி மகிழ்ந்தனர்..

அந்தோ.. பரிதாபம்!..
அவர்களுடைய மகிழ்ச்சி அரை விநாடி கூட நிலைக்கவில்லை...

அதிர்ந்து போயினர்.. அச்சத்தால் உறைந்து போயினர்..


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே!..

கடலுள் ஆழ வேண்டிய கருங்கல் தூண் -
அலைகளின் ஊடாக மிதந்து கொண்டிருந்தது..

இரும்புச் சங்கிலிகள் இற்றுத் தெறித்திருந்தன..

இறைவனைத் துதித்து திருப்பதிகம் பாடிய வண்ணம் -
இன்முகத்துடன் கரையேறினார் - திருநாவுக்கரசு சுவாமிகள்..

நடக்கும் கொடுமைகளைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த அடியார்கள் ஓடோடிச் சென்று ஐயனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்..

அவர் இவர் என்றெண்ணாத அருள் மனத்தினராக
அனைவரையும் வாரியணைத்துக் கொண்ட திருநாவுக்கரசர்
ஆங்கிருந்த திருப்பாதிரிப் புலியூர் ஆலயத்தினை நோக்கி நடந்தார்..

நடந்தவற்றை அறிந்த மகேந்திர பல்லவன் தான் செய்த மடமையை எண்ணி வருந்தினான்...

மீண்டும் தன்னிடம் வந்து திருநாவுக்கரசர் பற்றி முறையிட்டவர்களை தண்டித்தான்..

விரைந்தோடிச் சென்று - சிவப்பழமாகக் கனிந்திருக்கும் திருநாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்...

என் பிழைதனைப் பொறுத்திடுக.. என்னையும் தாங்கள் ஒறுத்திடுக!..

உயர்ந்த மனத்தினரான திருநாவுக்கரசர்
அடிகளில் வீழ்ந்து கிடந்த அரசனை எழுப்பி -
ஐந்தெழுந்து மந்திரத்தை ஓதியவாறு
திருநீறளித்து ஆசி கூறினார்..

அந்த அளவில் அரசன் அகம் தெளிந்தான்..

சமணத்திலிருந்து கரையேறினான்

சிவமே தவம்!.. என்று மனம் தேறினான்..

அடைக்கப்பட்ட அனைத்து ஆலயங்களையும் திறப்பிக்கச் செய்தான்..
சிதைக்கப்பட்ட அனைத்து கோயில்களையும் சிறப்பிக்கச் செய்தான்..

சிவனடியார்களின் பஞ்சாட்சர முழக்கம் மண்டலம் எங்கும் ஒலித்தது...

தாம் இங்கேயே இருந்து எமக்கு அருள வேண்டும்!.. எனக் கேட்டுக் கொண்டான்..

இனி இயற்றவேண்டிய பணிகள் ஏராளம்.. வடமேரு தொட்டு தென்குமரி வரை எனது இல்லம்.. எல்லாரும் எமக்கு உற்றார்.. அவர் தமக்குப் பணி செய்து கிடப்பதே என்கடன்!..

என்று மொழிந்தவராக எழுந்து நடந்தார் - திருநாவுக்கரசர்..

அவரைத் தொடர்ந்தது - அடியார் பெருங்கூட்டம்..

அவர்களைக் கையமர்த்தினார் - திருநாவுக்கரசர்..


எவராயினும் எத்திறத்தார் ஆயினும் கங்கையை வார்சடையில் கரந்தார்க்கு அன்பராகில் - அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!..

கோத்திரமும் குலமும் கொண்டு ஏதும் செய்ய இயலாது.. எனவே எல்லாம் சிவன் என பணிந்து நிற்பீராக!..

துறவி நெஞ்சினராகிய தொண்டர்களே!.. நீவிர் அனைவரும் அவரவர் நிலையில் வழுவாது இருந்து வையகத்திற்குத் தொண்டு புரிக..  மதம் கொள்ளாது மனம் கொண்டு வளர்க!..

- என, மனதார வாழ்த்தினார் - திருநாவுக்கரசர்..

அன்பர்கள் ஆற்றாமையுடன் அவருக்கு விடை கொடுத்தனர்..

அந்த அளவில் திருநாவுக்கரசர் தனது திருப்பயணத்தைத் தொடங்கினார்..

அப்போது அவருடைய வயது - எழுபது..

தன்னந்தனியராக - தென்னகம் முழுதும் நடந்த திருநாவுக்கரசர் -
திருக்கயிலை மாமலையைத் தரிசிக்க விழைந்தார்..

மா மலையில் நடந்ததால் கால்கள் தேய்ந்தன..
நடை மறந்து தவழ்ந்தார் - ஆயினும் எலும்புகள் முறிந்தன..

தளரா மனத்தினராக - தரையோடு தரையாக ஊர்ந்தார்..

மானசரோருவ ஏரியை நெருங்கிய வேளையில் - நெஞ்சக் கூடு நைந்தது..

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை..

அவருக்காக - திருக்கயிலை நாதன் இறங்கி வந்தான்..

பெரியீர்.. இந்தத் தடாகத்தில் மூழ்கி - கயிலாயக் காட்சியைக் காண்பீராக!..

என்று நவின்றான்..

அது கொண்டு - மானசரோருவ ஏரியில் மூழ்கிய நாவுக்கரசர் -
திருவையாற்றின் சூரிய புஷ்கரணியில் எழுந்தார்..

அதிர்ந்து நின்ற திருநாவுக்கரசருக்கு - 
அம்மையும் அப்பனும் - அனைத்து உயிர்களின் வடிவமாகி
சிவசக்தி ஐக்கியத் திருக்கோலத்தினைக் காட்டியருளினர்..

கண்டேன் அவர் திருப்பாதம்.. கண்டறியாதன கண்டேன்!..

என - கசிந்துருகி வணங்கி நின்றார் - திருநாவுக்கரசர்..

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.. (0033)

எனும் திருக்குறளின்படி - சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்தார்..


அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகங்கள் நாலாயிரம் என்று ஒரு சொற்குறிப்பு உண்டு..

தஞ்சை பெரிய கோயிலில் திருநாவுக்கரசரின் திருமேனியை வடிவமைத்து வைத்து பேரானந்தம் கொண்டான் - மாமன்னன் ராஜராஜ சோழன்..

பெரிய கோயில் மகா மண்டபத்தின் வலப்புறத் தூண் ஒன்றில் அப்பர் பெருமானின் திருக்கோலத்தினைக் கண்டு இன்புறலாம்..

தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஷ்வரர் திருக்கோயிலில் தென்புற கோட்டத்தில்
கோவணத்துடன் உழவாரம் தாங்கிய திருக்கோலத்தில் ஸ்வாமிகளைத் தரிசிக்கலாம்..

இந்தத் திருக்கோயில் - தஞ்சை பெரிய கோயிலுக்கு முந்தையது..
மகாராணி செம்பியன் மாதேவியாரின் திருப்பணி..

அப்போதே சமய ஆச்சார்யார்களுக்கு செய்யப்பெற்ற சிறப்பினை இதன் மூலம் உணரலாம்..

சிவாலயங்கள் பலவற்றிலும் - திருநாவுக்கரசர் ஜோதி வடிவாக ஈசனுடன் கலந்ததை குறிப்பால் உணர்த்தி அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி வழிபட்டுவது மரபு..

இப்போதைய சூழ்நிலையில் அடியார் கூட்டமின்றி ஆலயங்கள் பலவற்றிலும் அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நிகழ்கின்றன..

நன்றி - Facebook
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் மூன்று நாள் விழாவாக சித்திரை சதயம் அனுசரிக்கப்படும்..

ஓடும் பொன்னும் ஒருசேர நோக்கிய உத்தமர் - அப்பர் ஸ்வாமிகள்..

நாகையை அடுத்துள்ள திருப்புகலூர் திருத்தலத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்தார்.. அங்கே நாளும் சிவத் தொண்டு ஆற்றினார்..

போதும்... இவ்வுலக வாழ்வு!.. - எனத் தோன்றியது அந்தப் புண்ணியருக்கு..

தம் விருப்பத்தைத் தெரிவித்து திருப்பதிகம் பாடினார்..

அந்த அளவில், பொழுது விடிவதற்கு முந்தைய பொழுதில்
எல்லாம் வல்ல எம்பெருமான் - தனது திருவடித் தாமரைகளில்
திருநாவுக்கரசரை இணைத்துக் கொண்டான்..

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே!..

- என்ற புகழ்ந்தவாறு - சித்திரைச் சதய நாளில்,
ஈசனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார்..

அப்போது அவருடைய வயது எண்பத்தொன்று..

அப்பர் ஸ்வாமிகளின் காலம் 575 - 656 என்றறியப்படுகின்றது..

துகளற்ற துறவு.. மாசற்ற தொண்டு.. 
மக்கள் பணி.. மனித நேயம்..
இவற்றின் திருவடிவம்
திருநாவுக்கரசு ஸ்வாமிகள்..

அப்பர் பெருமானுடைய திருவடிகளைத்
தலைமேற்கொள்வோம்..

ஆழிமிசைக் கல்மிதப்பில் 
அணைந்த பிரான் அடி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

11 கருத்துகள்:

  1. மிகப் பெரிய புராணம் அறிந்தேன் ஜி
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு...

      வாழ்க நலம்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      ஓம் சிவாய நம..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சுவாரஸ்யமான புராணம். மறுபடி படித்து இன்புற்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வாருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. ஸ்வாரஸ்யமான புராணம். மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. நாவுக்கரசர் ஈசனுடன் ஜோதி வடிவில் கலந்த நாள் பற்றியும் அவர் பற்றிய புராணத்தையும் அறிந்தேன் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருநாவுக்கரசரின் திருவரலாற்றை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். மிகச் சிறப்பான புராணம். நேற்று சதய நக்ஷத்திரம் எனச் சில அன்பர்கள் வாயிலாக அறிந்தேன். உங்கள் பதிவை இன்றே படிக்க முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      விடியற்காலையில் தான் தெரிந்து கொண்டேன்.. அவசரமாக வெளியிடப்பட்ட பதிவு இது. ஐந்தாண்டுகளுக்கு முந்தையது..

      நன்றியக்கா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..