நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 14, 2017

சிவகங்கைப் பூங்கா 3


தஞ்சை மாநகரின்
சிவகங்கைப் பூங்காவைப் பற்றிய மூன்றாவது பதிவு..


பூங்காவின் நீர் சறுக்குப் பகுதி நீச்சல் குளம், சிவகங்கைக் குளம் 
இவற்றைக் கடந்து பூங்காவின் வாசல் அருகே வந்து விட்டோம்..

இங்கே பழுதடைந்து கிடக்கின்றது -
பலகாலமாக ஓடிக் கொண்டிருந்த சிறுவர் ரயில்...

இதனுள்ளும் சிலர் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..

ஓடிக் களைத்த ரயில்
இதற்கு முன் ஒன்று (1965 ல்) இருந்தது..

பூங்காவினுள் நுழைந்ததும் மயில் கூண்டிற்கு அருகில் சின்னதாக ஸ்டேஷன்..

அங்கே டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏறினால் -
விலங்குகளின் கூண்டுகள் வழியாக பதினைந்தடி உயரமுள்ள குகையின் உள்ளே புகுந்து வெளிவரும்..

அடுத்த ஸ்டேஷன் புள்ளிமான் கரடு.. 
மான்கள் திரியும் தோட்டத்தின் வழியாக பறவைகள் பூங்கா, நீச்சல் குளம்..

இங்கே ஒரு ஸ்டேஷன் - சிவகங்கைக் குளம்...
அங்கிருந்து புறப்பட்டால் - நுழைவாயில்.. புறப்பட்ட இடம்..

வறண்டு கிடக்கும் நீரூற்று
வெளியே வரும் வாசலில் - ஆள் உயரத்திற்கு வெள்ளைச் சீருடையில் ஸ்டேஷன் மாஸ்டர் - தத்ரூபமான சுதை சிற்பம்..

இதைப் போலவே - 
தோட்டக்காரர், மீனவர், ஆடுபுலி விளையாடுவோர், இளங்காதலர் - என, சுதை சிற்பங்கங்கள் இருந்தன..

இப்போது ஆடுபுலி விளையாடுவோர் சிற்பம் மட்டும் சிதிலமடைந்து கிடக்கின்றது..

பழைய ரயில் பாதை, குகை எல்லாம் இப்போது கிடையாது..



இன்றைக்கு இருக்கும் சிறுவர் ரயிலில் சின்னதாக வட்டமிடுவதற்கும் கட்டணம்..

முன்பெல்லாம் மாலை வேளைகளில் 
வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்..
கலை நிகழ்ச்சிகளும் வாரந்தோறும் நடைபெறும்..

அவ்வப்போது 
திறந்தவெளி அரங்கில் அரசின் செய்திச் சுருளும் திரையிடப்படும்.. 

இப்போது அவையெல்லாம் நடைபெறுவதாகத் தெரியவில்லை..

வாலிபர்களுக்காக இருந்த பெரிய சறுக்கு மரமும் இப்போது இல்லை...

நடைபாதை ஓரமாக அமர்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள் பலவும் சிதைந்து இருக்கின்றன..

நிழல் கூடங்களில் வெட்டிக் கூட்டம்
பூங்காவின் தெற்குப் பக்கமுள்ள மண்டபங்களில் வெட்டிக் கூட்டம் தூங்கிக் கிடக்கின்றது...

பூங்காவில் எடுக்கப்பட்ட படங்கள் சற்றே மேல் நோக்கியதாகவே இருக்கும்..

காரணம் -
ஆங்காங்கே கல்லூரிகளைக் கடந்து வந்திருக்கும் இளம் பருவத்தினர்...


இதைத் தான் திரு Dr. B. ஜம்புலிங்கம் அவர்களும்
திரு தமிழ் இளங்கோ அண்ணா அவர்களும் குறிப்பிட்டிருந்தார்கள்...


இந்தப் பூங்கா இன்னும் சிறப்பாக பராமரிக்கப்படவேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்..



யானைமுக நீரூற்றினை சீர்ப்படுத்த வேண்டும்..
மீண்டும் வண்ண விளக்குகளுடன் பொலிவு பெற வேண்டும்..


பரிதாபமாக கூண்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சீமை எலி, முயல்கள் 
இவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டு விடவேண்டும்..

மான்களின் பூங்காவுக்குள் செயற்கை அருவி ஒன்றை அமைக்கவேண்டும்...
மான்கள் வாழுமிடத்தில் இயற்கையாக புல்வெளியை உருவாக்க வேண்டும்..

வெளியில் இருந்து வந்து பூங்காவுக்குள் சுற்றித் திரியும் 
மயில்களுக்கு இச்சூழ்நிலை மிகவும் உகந்ததாக இருக்கும்..


தொங்கும் தொட்டில் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன்
பாதுகாப்பை மேம்படுத்தி சிவகங்கைக் குளத்தின் நடுவிருக்கும் கோயிலுக்கு மக்கள் சென்று வரும்படி செய்தல் வேண்டும்...

அநாவசியமாக பூங்காவினுள் சுற்றித் திரிவோரை அப்புறப்படுத்த வேண்டும்...



பாரம்பர்யத்தைக் காட்டும் சுதை சிற்பங்கள் 
மீண்டும் அமைக்கப்படவேண்டும்..

சிறுவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள
காற்றடைக்கப்பட்ட சறுக்கு மேடைகளும்
நாற்சக்கர (மின்கல) வாகனங்களும்
மிதி படகுத் தொட்டிகளும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்..

பூங்காவினுள் குடிநீர்க் குழாய்களைக் கண்டேனில்லை..
உணவகம் ஒன்று இருப்பது காரணமாக இருக்கலாம்...

ஆப்பிரிக்க பாலைவனத்தில் காணப்படும் மரம் நம்மிடையே வளர்ந்திருப்பதை வளரும் தலைமுறையினருக்கு உணர்த்தவேண்டும்..

சுற்றுலா வரும் பள்ளிப் பிள்ளைகள் தெரிந்து கொள்ளும் விதமாக
இங்கே இருக்கும் யானைக்கால் (Adansonia Digitata ) மரத்தைப் பற்றிய
முழு விவரங்களையும் பதிவு செய்து வைக்க வேண்டும்...


சிவகங்கைப் பூங்காவில் மீண்டும்
செண்பக மரங்களும் நாகலிங்க மரங்களும் தழைக்க வேண்டும்...

மோதகவல்லியின் பழங்கள்
யானைக்கால் மரத்தைப் போலவே -
இன்னொரு பழைமையான மரமும் இந்தப் பூங்காவில் அமைந்துள்ளது...

கிழக்குப் பக்க மதிற்சுவர் அருகே உள்ள இம்மரத்தின் பெயர் - மோதகவல்லி...

பூங்காவை விட்டு வெளியே வந்த பிறகு தான் இதைப் பற்றி நினைவு வந்தது..

மறுபடி பூங்காவிற்குச் செல்ல முயன்றும் இயலவில்லை...
எனவே இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் -இங்கே..

மோதகவல்லி எனப்படும் இம்மரத்தின் பெயர் - Sterculia Foetida என்பதாகும்..
Java Almond என்றும் குறிக்கப்படுகின்றது...

கொழுக்கட்டை போன்ற வடிவத்தில் இதன் காய்கள் இருக்கின்றன..

ரத்த மூலத்திற்கான சூரணம் இம்மரத்தின் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது...


பூங்காவின் நுழைவாயிலை அடுத்தாற்போல
ஸ்க்வார்ட்ஸ் தேவாலயம் (Schwartz Church அமைந்துள்ளது...


மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி (1777-1832) தனது இளமையில் தனக்கிருந்த அரசியல் நெருக்கடிகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து அரசுரிமையை மீட்டுத் தந்த ஸ்க்வார்ட்ஸ் (Rev.Schwartz) பாதிரியாருக்காக அமைத்த தேவாலயம் இதுவாகும்..

இது டேனிஷ் மிஷனரியால் 1779 ல் கட்டப்பட்டது...


பூங்காவின் கோட்டை வாசலருகே சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில்..

ஆஞ்சநேயர் கோயிலின் அருகே -
கைவினைக் கலைஞர்களின் கடும் உழைப்பினால்
பலா மரங்களில் இருந்து வீணைகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன...



மீட்டும் கரங்களுக்காக - வீணையை
வியர்வைத் துளிகளுடன் வடித்துக் கொண்டிருந்தன
உழைக்கும் கரங்கள்!..


என்ன இருந்தாலும்
அவ்வளவு பெரிய பூங்காவினுள் சுற்றித் திரிந்து
சிவகங்கைக் குளத்தின் அழகில் ஆழ்ந்திருக்கும்போது
ஆரவாரங்கள் அற்று மனம் அமைதியுறுவதையும்
சொல்லத்தான் வேண்டும்!..

சுற்றித் திரியும் மயில்களுள் ஒன்று
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து விளங்கும் பூங்கா என்பது சிறப்பு...

தஞ்சைக்குக் கிடைத்த பெருமைகளுள் சிவகங்கைப் பூங்காவும் ஒன்று..
இந்தப் பூங்கா எழிலோடும் பொலிவோடும் விளங்குதல் வேண்டும்..

அதுவே 
தஞ்சைக்கு மேலும் பெருமை...

வாழ்க நலம்...
***

8 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய படங்களும் விளக்கிய விதமும் அருமை தங்களது மன ஆதங்கத்தை உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. துளசி: முந்தைய பதிவுகளையும் வாசித்தேன். அருமையான பூங்காவாகத் தெரிகிறது ஆனால் பராமரிப்பு சிறப்பாக இல்லை என்பதும் தெரிகிறது. சில சிவாலயங்களுக்கு நடைப்பயணமாகவே தனியாகச் சென்ற்துண்டு பல 95 96 களில் ஆனால் பூங்கா எல்லாம் சென்றதில்லை. படங்கள் மிக அழகு..

    கீதா: சகோ படங்கள் ரொம்ப அழகா இருக்கு. மோதகவல்லி பழம் ரொம்ப அழ்கா இருக்கு...வீணை உருவாகுவது அழகு. தஞ்சாவூர் வீணை மிகவும் புகழ்வாய்ந்தது....பதிவை ஆதங்கத்துடன் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  3. கிட்டத்தட்ட ஒரு குட்டி டிஸ்னி லாண்ட் போல இருக்கே..

    மோதகவல்லி.. அழகிய பழம்.. புதுப்பெயர்..

    பதிலளிநீக்கு
  4. பூங்கா மற்றும் நீங்கள் சுட்டியுள்ள இடங்களுக்குச் சென்றுள்ளேன். உங்களின் ஆதங்கத்தை நானும் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சிவகங்கைப் பூங்காவின் அவலநிலை படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. பழைய நினைவுகள் மோதுகின்றன. அந்தக் காலத்தில் எப்படி இருந்த பூங்கா.....

    தஞ்சையில்எங்கள் பள்ளியில் (தூய அந்தோணியார்) ஸ்க்வார்ட்ஸ் என்கிற பெயரில் ஒரு ஸ்போர்ட்ஸ் வாத்தியார் இருந்தார்.

    பதிலளிநீக்கு
  6. ஒருமுறை தஞ்சைக்குச் சென்ற போது சிவகங்கைப் பூங்காவுக்குச் சென்ற நினைவு ஆனால் பதிவில் காணும் செய்திகள் எல்லாமே புதிது

    பதிலளிநீக்கு
  7. சிவகங்கைப் பூங்காவின் சிறப்புகளை அறிந்து கொண்டேன். ஆனால் இன்று அதன் நிலை பற்றியறியும் போது வருத்தமாயிருக்கிறது. அது மீண்டும் பராமரிக்கப் பட்டுப் பழைய பொலிவுடன் திகழ வேண்டும். அதற்கு உங்கள் பதிவு கண்டிப்பாக உதவும்.

    பதிலளிநீக்கு
  8. இந்த மோதகவல்லி மரத்தைச் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். இதன் பெயர் இதுவரை தெரியவில்லை. இந்தப் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி துரை சார்! இதன் காய்களை உண்ண பயன்படுத்துவார்களா? மோதகம் (பூரணம் வைத்த கொழுக்கட்டை) போல் இருப்பதற்கு மோதகவல்லி என்ற பெயர் சாலப்பொருத்தம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..