நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 29, 2017

மார்கழிக் கோலம் 14

தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 14

ஸ்ரீ அமிர்த நாராயணப்பெருமாள் - திருக்கடவூர்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்...
*  
தித்திக்கும் திருப்பாசுரம்

இன்று
வைகுந்த ஏகாதசிபச்சைமாமலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே..(0873)


கங்கையிற் புனித மாய காவிரி நடுவுப் பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழை யேனே..(894)


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மாநக ருளானே..(900)


மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே..(901) 


கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்
ஒண்டிற லோன் மார்வத்து உகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்
வான்கடந்தான் செய்த வழக்கு..(2199)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருவீழிமிழலை


இறைவன் - ஸ்ரீ வீழிநாதர்  
அம்பிகை - ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம் - வீழிச் செடி
தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம்


சலந்தரனை வீழ்த்திய சக்ராயுதத்தினை வேண்டி 
ஸ்ரீ ஹரிபரந்தாமன் சிவ வழிபாடு நிகழ்த்திய
திருத்தலம்..

நித்தமும் ஆயிரம் தாமரை கொண்டு துதிக்க
ஒருநாள் மலர் ஒன்று குறைந்த வேளையில்
தனது கண்ணையே ஈசனுக்கு
அர்ப்பணித்தனன் ஸ்ரீஹரி..

அதுகண்டு நெகிழ்ந்த ஈசன் சக்ராயுதத்தை
ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு வழங்கியதாக ஐதீகம்..


அம்பிகையின் திருமணத்தலங்களுள்
இத்தலமும் ஒன்று..அப்பர் ஸ்வாமிகளுக்கும் ஞானசம்பந்தப் பெருமானுக்கும்
படிக்காசு வழங்கப்பட்ட திருத்தலம்..

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் 
பூந்தோட்டம் எனும் ஊரை அடுத்து உள்ளது - திருவீழிமிழலை..
*

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

இத்திருப்பாடலில் 
தலவரலாறு அருளப்பெற்றுள்ளது

நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக் கண்நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி அவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே..(4/64)
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 11 - 12


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்..

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை சகோ.

  புழஹ்க்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் ஆம்பல் எல்லாம் கனவாகிப் போனதே!!!

  எனக்கு ஒன்றுமே இல்லை எல்லாம் நீ தான் என்று சரனடையும் பாசுரம்....ஆஹா!!!

  இறை தரிசனம் நன்று.....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஜி
  இன்றைய தமிழமுதம் நன்று வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
 3. பாடல்களைப் படித்தேன், ரசித்தேன். பல முறை திருக்கடையூரும், திருவீழிமிழலையும் சென்றுள்ளேன்.தங்கள் பதிவு மூலமாக இன்று மறுபடியும் சென்றேன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  திருப்பாசுரங்கள் தேனென மனத்தில் இனிக்கிறது.
  வைகுந்தனை வேண்டிகொள்கின்றேன்!
  இந்தியாவிற்கு இவருடன் வந்தபோது ஸ்ரீரங்கநாதன் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
  இன்னும் அந்தக் காட்சி என் கண்களில் நிறைந்திருக்கிறது.

  இங்கும் தேடற்கரிதான படங்கள் காட்சியாகத் திவ்விய தரிசனம் ஐயா!
  மிக்க நன்றி!
  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 5. சரியான நாளில் அரங்கனின் தரிசனம். நன்றி.

  தொடரட்டும் கோலங்கள்....

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..