நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 07, 2014

தீப தரிசனம்

அண்ணாமலைக்கு அரோஹரா!..

- என்று லட்சக் கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வழிபட,  அண்ணா மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த  26/11 அன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆறாம் நாளான டிசம்பர் முதல் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும்,

ஏழாம் நாளான 2/12 அன்று, விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமான், உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் - என பஞ்ச மூர்த்திகளும் ரதங்களில் எழுந்தருள மகாதேரோட்டமும் நடைபெற்றது.

பத்தாம் நாளான (5/12) வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகைத் திருநாள்.

அதிகாலை 2.45 முதல் 3.40 மணி வரை, மூலவர் சந்நிதி எதிரே பரணி பூஜையை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, அதிகாலை 3.45 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதேநேரத்தில் மகா மண்டபத்தில் உள்ள பிரதோஷ நந்தியின் வலப்புறம் பஞ்ச மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

பின்னர், அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கும், ஐந்து மடக்குகளுக்கும் பரணி தீபாராதனை காட்டப்பட்டது.

இதர சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.


காலை ஒன்பது மணியளவில் அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றுவதற்கு 1000 மீட்டர் நீளமுடைய காடாத் துணி திரியையும், நெய் டின்களையும் நாட்டார் சமூகத்தினர் எடுத்துச் சென்றனர்.

பகல் 12 மணிக்கு கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

மாலை  ஐந்தரை மணிக்கு பஞ்சமூர்த்திகள் சந்நிதியில் இருந்து தீபதரிசன மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
மாலை 5.59 மணிக்கு சுவாமி சந்நிதியின் பின்புறம் இருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு, சரியாக மாலை ஆறு மணிக்கு தீபதரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எதிரே காட்சியளித்தார்.

அப்போது, காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்குகளை மூங்கில் தட்டில் வைத்து,  தலையில் சுமந்து கொண்டு  கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் தீபமுறை நாட்டார்கள் வலம் வந்தனர்.


பரணி தீபங்கள் கொடிமரம் முன்பு நிறுவப்பட்டிருந்த அகண்ட தீப குண்டத்தில்  சேர்க்கப்பட்டன.

அதே நேரத்தில் வைகுந்த வாசல் வழியாக, மலை உச்சிக்கு தீபம் ஏற்றுவதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டது.


அந்த அளவில் மலையின் மீது மகா தீபமும், சுவாமி சந்நிதியின் எதிரே அகண்ட தீபமும் ஏற்றப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நிகழ்ந்தது.

அப்போது - திருக்கோயிலிலும் திருஅண்ணாமலையிலும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய  அண்ணாமலைக்கு அரோஹரா!.. - என்ற முழக்கத்தால் விண்ணதிர்ந்தது.

திருஅண்ணாமலையை சுற்றிலும்  தங்கள் வீடுகள், கடைகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு, தீப தரிசன மண்டபத்தில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்தனர்.

திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கண்கவர் வாண வேடிக்கை நடைபெற்றது.

இதையடுத்து, தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

இரவு 10.30 மணி அளவில் தீபத்திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடியை சிவாச்சாரியார்கள் இறக்கினர்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மனும் அண்ணாமலையாரும் எழுந்தருள -

மாடவீதிகளில் பஞ்சமூர்த்திகள் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இத்துடன்,  பத்து நாள் கார்த்திகை உற்சவம் மங்கலகரமாக நிறைவு பெற்றது.

கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.

நேற்று சனிக்கிழமை சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பிகை தெப்ப உற்சவம் காணிகின்றாள்.

நாளை திங்கட்கிழமை வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமான் தெப்பத்தில் எழுந்தருள்கின்றார்.

அண்ணாமலை கோபுர தரிசனம்
ஈழத்திருநாட்டில் மிகப்புகழ் பெற்றது - யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீகந்தஸ்வாமி திருக்கோயில்.

ஸ்ரீகந்தஸ்வாமி திருக்கோயிலில் நிகழ்ந்த திருக்கார்த்திகை தீபத் திருநாளின் படங்கள் கிடைத்துள்ளன.

அவற்றை மகிழ்வுடன் பதிவிடுகின்றேன்.


 



நல்லூர் கந்தஸ்வாமி நமக்கு நற்றுணையாகி நல்லருள் பொழிய வேண்டுகின்றேன்.

எமது மக்களின் துயர் தீர்வதற்கு தமிழ்க்குமரனின் வேலும் மயிலும் துணையிருக்க வேண்டுகின்றேன்.

திருமங்கை ஆழ்வார்

கார்த்திகை கிருத்திகா நட்சத்திரத்தில் அவதரித்தவர் திருமங்கை ஆழ்வார்.

கார்த்திகை நாளில் - ஸ்ரீரங்கம் ஸ்ரீ அஹோபில மடம் தசாவதாரம் சந்நிதியில் இருந்து புறப்பாடு கண்டருளப்பட்டது.

திருப்பாணாழ்வார்
கார்த்திகை  மாதத்தின் ரோகிணி - திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம். 

ரோகிணி அன்று (6/11) உறையூர்  நாச்சியார் சந்நிதியில் - திருப்பாணாழ்வார் மங்களாசாசனம் கண்டருளினார்.

ஸ்ரீரங்கத்திலும் கார்த்திகை ரோகிணி நாளில் திருப்பாணாழ்வார் உள் புறப்பாடு நிகழ்ந்தது.

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்!.. 
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!..

தமிழகம் எங்கும் ஆலயங்கள் தோறும் தீபத் திருநாளின் கோலாகலங்கள் வெகு சிறப்புடன் நிகழ்ந்துள்ளது.

பழனியம்பதியில் தீபதரிசனம்

திருப்பரங்குன்றத்தில் தீபதரிசனம்
மருதமலையில் கோலாகலம்
சிவகாசியில் தீபத்திருநாள்
Facebook -ல் கிடைத்த படங்கள் இந்தப் பதிவினை அலங்கரிக்கின்றன.
படங்களை வலையேற்றம் செய்த அன்பர்களுக்கும் தகவல் வழங்கிய - தினமலர், தினமணி - நாளிதழ்களுக்கும் மனமார்ந்த நன்றி!..

இந்த பதிவு தயாராகிக் கொண்டிருந்தபோது -

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்தபதிவர் 
அன்பின் திரு. பழனிகந்தசாமி ஐயா அவர்கள்,
தஞ்சையம்பதி தளத்தினை -

அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!..

எம்பெருமானின் திருவருள்
அருட்பெரும் ஜோதியாக எங்கும் பிரகாசிக்குமாக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * * 

20 கருத்துகள்:

  1. சிறப்பை நேரில் கண்ட உணவு... படங்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அண்ணாமலை தீபம் கந்தசாமிக் கோவிலைக் கண்டோம்.மற்றும் பல தீபதரிசனங்கள் ஆஹா...அனைத்தும் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. பல கோவில்களின் தீபதரிசனம் கண்டு களித்தேன்.
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
    எம்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகையும் கனிவான வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சில நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நேரில் கண்ட ஓர் உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருவண்ணாமலையை தொலைக்காட்சியில் கண்டோம். பிற தீப விழாக்களை உங்களது பதிவு மூலமாகக் காணும் பேறு பெற்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  7. அருமையான படங்கள்......

    நானும் விழாக்களில் நேரில் கலந்து கொண்ட உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் ஐயா!

    தீபச் சுடர்கள் வானளாவப் பிரகாசித்து ஒளிவீசுவதைக் காண
    உள்ளம் நிறைந்தது!.. எங்கெணும் பக்தி வெள்ளம்!..
    அருமையான படங்கள்! அழகு!

    எங்கள் நல்லூர்க் கந்தனும் ஆரோகணித்துள்ளமை இன்னும்
    சிறப்பாக இருக்கின்றதையா!..
    பகிர்விற்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம் நண்பரே...
    அண்ணாமலைக்கு அரோஹரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      அண்ணாமலைக்கு அரோஹரா!..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அழகான படங்கள்...
    இறை தரிசனம் கிடைக்கப் பெற்றோம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..