நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 30, 2014

மார்கழிக் கோலம் 15

குறளமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (081)

இல்லம் பேணி - இனிதாய் வாழ்வதெல்லாம் 
இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்கேயாகும்.
 சொல்லால் செயலால் பிறர்க்கு
உதவுவதும் உபசரிப்பதும் வேளாண்மையே!..
   
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 15



எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்.
* * *

ஆலய தரிசனம்
திருவிண்ணகரம்


மூலவர் - ஒப்பிலியப்பன்
உற்சவர் - திருவிண்ணகரப்பன்
தாயார் - பூதேவி நாச்சியார்
தீர்த்தம் - அஹோராத்ர தீர்த்தம்
பிரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், கருடன், காவிரி

மங்களாசாசனம்
பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்

மஹாவிஷ்ணுவின் தேவியும் மஹாலக்ஷ்மியின் ஒரு அம்சமுமான பூதேவி - 

மஹாலக்ஷ்மியைப் போல நானும் தங்கள் திருமார்பில் தங்கியிருக்க வேண்டும். எனக்கும் அந்த பாக்கியத்தைத் தந்தருளுங்கள்.. ஸ்வாமி!.. 

- என பணிவுடன் வேண்டி நின்றாள்..

இதைக் கேட்டு புன்னகைத்த ஸ்ரீஹரிபரந்தாமன் - பூவுலகில் மார்க்கண்டேய மகரிஷியின் மகளாகப் பிறந்து இந்த பேற்றினை அடைவாய்!.. என மொழிந்தான்.

அச்சமயத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியும் தனக்கு மஹாலக்ஷ்மி மகளாத் தோன்ற வேண்டும் என தவம் புரிந்து கொண்டிருந்தார்.

அவ்வேளையில் திருத்துழாய் செடியினருகில் கமல மலரில் குழந்தை எனத் தோன்றினாள் பூதேவி.

நடந்தவற்றை உணர்ந்த மார்க்கண்டேயர் - அந்தக் குழந்தைக்கு துளசி எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.

நேரம் கூடி வந்த வேளையில் - பெருமாள் வயோதிகராக வந்து பெண் கேட்டார். 

அவரைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் - அவள் சிறு பெண்.. அவளுக்கு ஒழுங்காக சமைக்கக் கூடத் தெரியாது என்று சொன்னார் மகரிஷி..

உப்பில்லாத சமையல் என்றாலும் சரி.. நான் சாப்பிட்டுக் கொள்வேன். நீர் பெண்ணைக் கொடும்!.. - என விடாப்பிடியாக நின்றார்.

வந்திருப்பவர் பெருமாள் தான் என்பதை உணர்ந்து கொண்ட மகரிஷி - பூதேவியின் விருப்பததை முன் வைத்தார்.

சரி.. நீர் ஒருபோதும் அவளை விட்டுப் பிரியக்கூடாது!.. என நிபந்தனை விதித்தார்.

பெரியவர் அதற்கும் சம்மதித்தார்.. 

மங்களகரமாக கன்யாதானம் நிகழ்ந்தது.


பெருமாள் ஒப்பில்லாதவனாக - ஒப்பிலியப்பன் எனும் திருப்பெயர் தாங்கினார்.

பெருமாளை விட்டு அகலாதவளாக துளசி என திருமார்பில் தங்கினாள் - பூதேவி!..

எப்போதும் பெருமாளுக்கு இடப்புறம் எழுந்தருளும் பூதேவி - கல்யாண க்ஷேத்ரமாகிய இத்திருத்தலத்தில் வலப்புறம் இருக்கின்றாள்.

பிரம்மோத்சவ காலத்திலும் - பூதேவி - பெருமாளுடன் இணைந்தே திருவுலா கண்டருள்கிறாள். 

பெருமாள் உப்பில்லாத உணவையும் ஏற்பேன் என்றதனால் - நிவேத்யங்கள் எதிலும் உப்பிடுவது கிடையாது. 

பெருமாள் பெண் கேட்டு வந்த நாள் - பங்குனி திருவோணம்.
கன்யாதானம் நிகழ்ந்தநாள் - ஐப்பசி திருவோணம்.

இந்த ஐதீகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் பெருமாள் சந்நிதியில் சாம்பிராணி தூபம் இடப்பட்டு அகண்ட தீபம் ஏற்றப்படுகின்றது.

ஆவணி திருவோணத்தன்று பெருமாள் அதிகாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளி உதய சேவை சாதிக்கின்றார்.

தக்ஷிண கங்கை எனப்படும் நாட்டாற்றில் தீர்த்தமாடிய பின் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் விமரிசையாக நிகழ்கின்றன.

இத்தலத்தில் உள்ள தீர்த்தம் அஹோராத்ர புஷ்கரணி - பகலிராப் பொய்கை எனப்படுவது. அதனால் எந்நேரமும் தீர்த்தமாடலாம் என்பது சிறப்பு.


ஸ்ரீசுத்தானந்த விமானத்தின் கீழ் - கிழக்கு முகமாக தரிசனம்!.. 

என்னைச் சரணடைந்தவர்களைக் காப்பேன்!.. - என்று வாக்கு அருள்கின்றான்.
  
மூன்று ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். 

ஒப்பிலியப்பன் கோயில் என வழங்கப்படும் இந்த திவ்யதேசம் - திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் திருக்கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.

கும்பகோணத்திலிருந்து ஒப்பிலியப்பன் கோயிலுக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருப்பாசுரங்கள்

போதார் தாமரையாள்புல விக்குல வானவர்தம்
கோதா கோதில்செங் கோல்குடைமன்ன ரிடைநடந்த
தூதா தூமொழி யாய்சுடர் போலென் மனத்திருந்த 
வேதா நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே!.. (1466)
 பெரிய திருமொழி (ஆறாம்பத்து/இரண்டாம் திருமொழி)

மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்
செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகைஉணர்ந்தே உண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன் திருவிண்ணகரானே!.. (1473)
பெரிய திருமொழி (ஆறாம்பத்து/மூன்றாம் திருமொழி)
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருநாகேஸ்வரம்


இறைவன் - நாகேஸ்வரர், நாகநாத ஸ்வாமி
அம்பிகை - கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையாள்
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி
தலவிருட்சம் - செண்பகம்

தலப்பெருமை

ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் என்பர். 
அதைப் போல அவனது உறவு முறைகளின் வட்டமும் ஆயிரம் ஆயிரம். 

இந்த உறவு முறைகளுக்குள் ஒன்பது நாட்டாண்மைகள்!.. 
இந்த ஒன்பது நாட்டாண்மைகளுக்குள் ஒருவன் தான் தட்க்ஷகன் என்பவன்.  

அதிபயங்கரமானவன். இவனுக்கு ஏதோ - பொல்லாத காலம். 

செண்பக வனத்தினில் வாழ்ந்திருந்த முனிவர் ஒருவரின் மகனான சுகர்மன் என்பவனைத் தீண்டி விட்டான். விஷம் தலைக்கேறியதால் - முனிவரின் மகன் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டான். 

அவ்வளவு தான்!.. முனிவர் வயதான காலத்திலும் ஓடோடி வந்தார்.  

இந்த பாதகத்தை செய்தவன் எவனோ அவன் தலை ஆயிரம் துண்டுகளாகச் சிதறட்டும்!.. -  என சாபம் கொடுத்து விட்டார். 

இதைக் கேட்டு அஞ்சி நடுங்கிய தட்க்ஷகன் இந்திரனைச் சரணடைந்தான். 

இந்திரனும் மற்றவர்களும் ஓடி வந்து முனிவரின் மகனை எழுப்பிக் கொடுத்து விட்டு - தட்க்ஷகனுக்கு சாபத்திற்கு விமோசனம் கேட்டனர். 

மகன் மீண்டும் கிடைத்து விட்டதால் மனம் குளிர்ந்த முனிவர் - செண்பக வனத்தில் சிவபூஜை செய்வாய்!.. என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 

அதன்படி தட்க்ஷகன் சிவபூஜை செய்த தலமே - திருநாகேஸ்வரம்.

பின்னும் நாகராஜன் - தான் சிவபெருமானின் திருமுடியில் இருப்பதை எண்ணி ஆணவம் கொண்டான். அதனால் பெருமானின் - ஜடாமுடியிலிருந்து கீழே அதள பாதாளத்தில் விழுந்தான்.

அவன் தலை உண்மையிலேயே ஆயிரமாக சிதறி விட்டது.

ஒரு தலை இருந்ததற்கே இந்த பெரும் தண்டனை. இன்னும் ஆயிரம் தலை இருந்தால் என்னென்ன தண்டனையோ - என அஞ்சி தவறுக்கு வருந்தி நின்றான்.

இறைவன் ஆணைப்படி - சிதறிய தலைகள் ஒன்று சேரவும் - மனதில் கொண்ட மமதை அழியவும் நாகராஜன் பூஜை செய்த திருத்தலம் - திருநாகேஸ்வரம்.


கம்பீரமான ராஜகோபுரம்.. கலைநயமிக்க சிற்பங்களுடன் திகழ்கின்றது.

திருக்கோயிலின் தென்புறமாக சூரிய தீர்த்தம்.


நீண்டு உயர்ந்த கொடிமரம். கொடிமரத்து கணபதி சந்நிதி..

நந்தியம்பெருமான்.  அவரை பணிந்து வணங்கி இரண்டாம் ராஜகோபுரத்தைக் கடக்கின்றோம்.

வெளித்திருச்சுற்றின் தொடக்கம்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் - ராகுவைத் தரிசிப்பதற்கு!..
அவரவர்க்கும் ஆயிரம் ஆயிரம் வேண்டுதல்கள்..

ராகு காலம் எப்போது வரும்!?.. என்று காத்திருக்கின்றார்கள்.

அந்த மண்டபத்தில் தோஷ நிவர்த்தியாக நூற்றுக்கணக்கான நாக பதுமைகள்..

அவற்றைக் கடந்து மூலஸ்தானத்தை நோக்கிச் செல்வோம் வாருங்கள்!..

அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் பாடிப் பரவிய - நாகேஸ்வரப் பெருமான்!..

கருவறையின் திருவிளக்கின் சுடரொளியில் ஜோதிமயமாகத் திகழ்கின்றார்.

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே!..(2/43)

- என திருஞானசம்பந்தர் போற்றுகின்றார்.

நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு நாகேச் சரவரே!..(5/52)

அந்தக்காலத்திலேயே பாரத நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து பெருமானை வழிபட்டதை அப்பர் ஸ்வாமிகள் தமது திருப்பாடலில் குறிப்பிடுகின்றார்.

கொம்பனாள் பாகர்போலும் கொடியுடை விடையர் போலும்
செம்பொனார் உருவர் போலும் திகழ்திருநீற்றர் போலும்
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சரவனாரே!..(4/66)

நம்புவார்க்கு அன்பர் போலும் நாகேச்சரவனார்!.. - என ஈசனின் தன்மையை அப்பர் பெருமான் தெளிவாகக் கூறுகின்றார்.

குன்றமுலைக் குமரி கொடியேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின் உரிபோர்த்ததும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின் முதுபாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துலவுந் திருநாகேச்சரத்தானே!..(7/99)

- என்று சுந்தரர் - எம்பெருமான் யானையை உரித்த போது உமையாம்பிகை அஞ்சிய நிகழ்வினைப் பதிவு செய்கின்றார்.

ஞானசம்பந்தர் இரண்டு திருப்பதிகங்களையும் அப்பர் பெருமான் இரண்டு திருப்பதிகங்களையும்  சுந்தரர் ஒரு திருப்பதிகத்தையும் அருளியுள்ளனர்.

அவை எல்லாவற்றிலுமே - நாகேஸ்வரனை வணங்கி நலமும் வளமும் பெற கூறுகின்றனர்.

ஸ்ரீநாககன்னி நாகவல்லி சமேத ஸ்ரீ நாகராஜன்

நாம் தான் அறியாமையால் - வெளித்திருச்சுற்றில் நிருதி மூலையில் நாககன்னி, நாகவல்லி எனும் இரு தேவியருடன் திகழும் நாகராஜனை ராகு என்று சொல்லி வழிபட்டு நிற்கின்றோம்.

செவ்வாய்க் கிழமைகளில் (1.30 - 3.00) ராகு கால அபிஷேகம் - என்ற பெயரில் வழிபாடு செய்து விட்டு சிவாலயத்தில் செய்யக் கூடாதததைச் செய்கின்றர்.

மூலஸ்தானம் நடை அடைபட்டிருக்கும் போது திருக்கோயிலை வலம் வரக்கூடாது என்ற மரபினை மீறுகின்றார்கள்..

நாக வழிபாடு என்பது மிகத் தொன்மையானது. அடிப்படையே இதுதான்.

தஞ்சை பெரியகோயிலில் - மிகப் பெரிய நாகராஜர் திருமேனி இருப்பது எத்தனை பேருக்குதெரியும்?..

தேவியருடன் வீற்றிருக்கும் நாகராஜனை ராகு என்று சொல்வதுடன் - பால் அபிஷேகம் செய்யும் போது நீல நிறமாகத் தெரிகின்றது என்கின்றார்கள்..

இன்னும் சிலர் - பால் நீல நிறமாக மாறுகின்றது என்கின்றார்கள்..

ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாக - சங்கல்பத்துடன் மூன்று முறை கூட்டு அபிஷேகம் செய்கின்றார்கள்.

நான் தான் வீற்றிருக்கின்றேன்!.. - என்று நாகராஜனே வந்து சொன்னாலும் யாரும் இனிமேல் நம்பமாட்டார்கள்..

நாகராஜன் தன் கூட்டத்தாராகிய ஆதிசேஷன், கார்க்கோடகன் ஆகியோருடன் இங்கே பூஜை செய்தது - மகாசிவராத்திரியின் இரண்டாம் காலம்.

மகாசிவராத்திரியின் முதல் காலம் -  நாகேஸ்வரன் திருக்கோயில், குடந்தை.
மூன்றாம் காலம் - ஸ்ரீசேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்.
நான்காம் காலம் - ஸ்ரீகாயாரோகணேஸ்வரர், நாகப்பட்டினம்.

பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமானின் அபிமானத் திருத்தலம்.


அம்பிகை கிரிகுஜாம்பிகை கிழக்கு நோக்கிய தனிக்கோயிலில் திகழ்கின்றாள்.

வலமும் இடமும் - சரஸ்வதியும் மஹாலக்ஷ்மியும் விளங்குகின்றனர்.

அம்பிகையில் சந்நிதிக்கு முன்பாக - பாலகணபதி, பாலசாஸ்தா, நாகர் - அருள் புரிகின்றனர்.

மற்றும் சங்க நிதியும் பத்மநிதியும் விளங்குவது சிறப்பு அம்சம்.

மிகவும் தொன்மையான திருக்கோயில்.

கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரத்திற்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

நாகேஸ்வரனும் கிரிகுஜாம்பிகையும் நாடிவருவோர்க்கெல்லாம்
நலமும் வளமும் தந்தருள்கின்றனர்.

நாம் என்றுமே - மழை பெய்யும் இடத்தில் 
பாத்திரம் வைப்பதில்லை!..

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழிபாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே!..(5/52)
அப்பர் ஸ்வாமிகள். 

திருச்சிற்றம்பலம்
* * *

12 கருத்துகள்:

  1. மூலவரை விட்டுவிட்டு இவ்வாறான தெய்வங்களை வணங்குவதைப் பல கோயில்களில் காணமுடிகிறது. அண்மை உதாரணமாக பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலைக் கூறலாம். உடனிருந்த துர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதில்லை. அண்மைக்காலமாக பைரவர் சன்னதிக்கு பலர் நேரில் சென்றுவிடுகின்றார்கள். மனிதனின் தன்மீதான பயம் கோயிலையும் தெய்வங்களையும் வணிகமயமாக்கிவிட்டது என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது உண்மையே..
      பட்டீஸ்வரத்தில் ஸ்ரீ துர்கையின் சந்நிதி மிக சமீப காலத்தியது என்பது இவர்களுக்குத் தெரியாது.

      கூடுதலாக தகவல் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. விண்ணகரம் கோயிலுக்குச்சென்றதில்லைஐயா
    இனி செல்ல வேண்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஒருமுறை சென்று வாருங்கள்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அறியாத ஆலயத்தின் சிறப்புகளை அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. தன்னை சரண் அடைந்தவர்களை காக்கும் ஒப்பில்லா அப்பன் பெருமைகள் அருமை.


    மூலவரை இப்போது கண்டு கொள்வதில்லை .அந்த அந்த கோவிலில் எது முக்கியம் என்று இப்போது சொல்லி மக்களை கவர்கிறார்களோ ! அதை மட்டும் கும்பிடுவது என்று முடிவு செய்து விட்டார்கள்.
    உறவினர்களுடன் அடிக்கடி போகும் கோவில்.
    ஒப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம் கோவில் தரினம் செய்தேன். நன்றி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மூலஸ்தான மூர்த்தியைப் புறக்கணிப்பது பிழை என்பதை உணரவில்லை.

      தங்கள் கருத்தினைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
      இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. அறியாத ஆலயங்கள்...
    நல்ல தொகுப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  6. நிறைய தெரியாதவை தந்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      வாழ்க நலம்..
      இனிய வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..