நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 05, 2013

நலம் தரும் நவராத்திரி

அம்பிகையைக் குறித்து மேற்கொள்ளும் விரதங்களுள் முதன்மையானது நவராத்திரி விரதம். 


புரட்டாசி மாதத்தின் வளர்பிறை (சுக்ல பட்சம் ) பிரதமை முதற்கொண்டு நவமி முடிய அனுசரிக்கப்படுவது நவராத்திரி விரதம்.

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் - பிரதமை தொடங்கி, பகலில் உணவு இன்றி - மாலையில் பூஜை முடித்தபின் நிவேத்ய பிரசாதம் உண்டு பால் பழம் அருந்துவர். 

ஒன்பதாம் நாளாகிய நவமியன்று உபவாசம் இருந்து பத்தாம் நாள் விஜய தசமியன்று காலையில் வழிபாடு செய்து மங்களகரமாக விரதத்தினை நிறைவு செய்வர். 

விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் - நவராத்திரி நாட்களில் - ஒரு நேரம் உணவு  உண்டு பக்தி சிரத்தையுடன் அம்பிகையை இதயக்கமலத்தில் இருத்தி, தியானிக்க -  பரிபூரண அருளைப்பெற்று நல்வாழ்வினை எய்தலாம்.

மகிஷனை வென்று நல்லோரைக் காத்தருளிய, அம்பிகையைப் போற்றும் பக்தியின் வெளிப்பாடு தான் - நவராத்திரி கொண்டாட்டங்கள். 

விரதம் மேற்கொள்வது அவரவர் விருப்பம். 

உண்மையான அன்புடன் எளிமையான வழிபாட்டின் மூலம் அம்பிகையின் அருளைப் பெறலாம் என்பது வெளிப்படை.

மனிதனின் அத்யாவசியங்களான - கல்வி, செல்வம், வீரம் - இந்த மூன்றனையும் அருளும்படி அன்னை ஆதிபராசக்தியை, அவற்றுக்கு அதிபதிகளான ஸ்ரீஸரஸ்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீதுர்கை எனும் அம்சங்களாகப் பாவித்து வழிபடுதலே நவராத்தியின் நோக்கம். 

வீரம் எனப்படுவது  போர்க்களத்தில் வேலெடுத்து வீசி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவது என்றாலும்,

ஐம்புலன்கள் தான் ஆன்மாவின் முதல் எதிரி. அவற்றை வென்று அடக்குவதே உண்மையான வீரம் என்று மகான்களும் ஞானியரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

திருவள்ளுவப் பெருமானும்,

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

என்று நமக்கு அருளிச் செய்கின்றார். இப்படி தன்னை வென்று தன்னடக்கத்துடன் இருப்பவர்க்கு என்ன கிடைக்கும்?.. 

வள்ளுவப்பெருமான் அதையும் விளக்குகின்றார். 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்.

தன்னடக்கமாகிய நல்ல பண்பினை உடைய ஒருவன் தேவ நிலையினை எய்துகின்றான். அடங்காமை எனும் குணத்தின் வசப்பட்டவன்  - தீமை நிறைந்த - காரிருள் போன்ற (அசுர) வாழ்வினில் வீழ்கின்றான். வீழ்ந்து அழிகின்றான்.

மகிஷாசுரன் - நினைவுக்கு வருகின்றானா!..

இந்த இரு முனைகளுக்கும் இடையே ஞானம் எனும் நல்லறிவு தான் உண்மையான செல்வம்!.. 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இங்கே செல்வம் என்பது  - பொன்னோ பொருளோ அல்ல!.. 

நல்லறிவு!..

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு 
மாடல்ல மற்றயவை.

எனவே, கல்வியும் அதனால் பெறும் நல்லறிவும் தான் ஒருவருக்கு செல்வம். அப்படி கல்வியும் நல்லறிவுச் செல்வமும்  பெற்று விட்டால் அடுத்த நிலை எதுவாக இருக்கமுடியும்?.. 

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழார் எனின்..

கற்ற கல்வியின் பயன் இறைவன் திருவடிகளை தொழுதலே!..

இதுதான் உண்மையான நவராத்திரியின் தத்துவம். 

இதை உய்த்து உணர்வதற்கே -  நவராத்திரி வழிபாடும், வைபவமும்!..

உண்மையான - வீரத்தையும் , செல்வத்தையும், கல்வியையும் வழங்க வேண்டியே - அம்பிகையைத் தொழ வேண்டும்!.. 

முதல் மூன்று நாட்களில் தன்னை அடக்கும் தைரியத்தையும் வீரத்தையும் நம்முள் விதைக்க வேண்டி ஸ்ரீதுர்காதேவியையும், 

அடுத்த மூன்று நாட்களில் நல்லறிவு ஞானம் எனும் செல்வத்தினை  நல்க வேண்டி ஸ்ரீ மஹாலக்ஷ்மியையும், 

அடுத்த மூன்று நாட்களில் நல்லறிவையும் ஞானத்தையும் தழைக்கச் செய்யும் கல்வியைக் கற்கும் வகையினை வேண்டி ஸ்ரீ ஸரஸ்வதியையும் வழிபடவேண்டும்.

வீடுகளில் கொலு வைத்தல் சிறப்பு அம்சம். ஒற்றைப்படையாக அமைக்கப்பட்ட படிகளில் அழகான பதுமைகளை அணி அணியாக கொலு வைத்து அலங்கரிக்கப்படுகின்றது.

நடுநாயகமாக கும்பம் வைத்து அணையா விளக்கு ஏற்றப்படும். மாலை வேளைகளில் - சுண்டல் இனிப்பு முதலான நிவேத்யங்கள் வைத்து ஒன்பது நாட்களும் ஆராதிப்பர்.

சிலர் அவரவர் குல ஆசாரப்படி நவதானிய  முளைப்பாரியும்  வைத்து அம்பிகையை வழிபடுவர். 

இல்லத்திற்கு சுமங்கலிப் பெண்களையும் திருமண வயதில் உள்ள கன்னிப் பெண்களையும் அழைத்து - தேவியாக பாவித்து - மஞ்சள் குங்குமம் தாம்பூலம் கொடுத்து உபசரிப்பர். 

நவராத்திரி - சுபராத்திரி என்பர். 

நாடு முழுவதும் கோலாகலமாக நவராத்திரிப் பெருவிழா தொடங்கியுள்ளது. மக்கள் உற்சாகத்துடனும் பக்திப் பெருக்குடனும் தத்தம் இல்லங்களில் வழிபாடுகளை அனுசரிக்கின்றனர்.

நன்மை பெருக வேண்டும். தீமை அகல வேண்டும்!..
தாயாகிய பராசக்தி அனைத்து நலன்களையும் அருள வேண்டும்!..

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி 
தந்நோ துர்கே: ப்ரசோதயாத்.

8 கருத்துகள்:

  1. அருமையான படங்களுடன் அழகான விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  2. அருமையான படங்களுடன் அறிந்து கொள்ள வேண்டியதை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்!.. தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. கோலாகலமான நவராத்திரி பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய மேலான வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. தீதின் மேல் நல்லதின் வெற்றியைக் கொண்டாட நவராத்திரி விழா. கொண்டாடுவோம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி வழிபாடுகள் - நமக்கெல்லாம் நன்மைகளை அளிப்பதாக!.. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..