நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 10, 2013

சிவ தரிசனம் - 01

சிவராத்திரியின் முதற்காலம்
 -: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை :-

திருக்கயிலை மாமலையின் பொன் முகடு.


அம்மையும்  அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்.

அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக்கொண்டிருந்தனர்.  சிறகைக் கோதியபடி மயில் ஒருபுறம். கிடைத்ததைக் கொறித்தபடி மூஷிகம் மறுபுறம்..

பொற்பிரம்பினைத் தாங்கியபடி நந்தியம்பெருமான் சேவகம் சாதிக்க - 

முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் கின்னரர்களும் ஐயனின் அடித்தாமரைகளில் விழுந்து வணங்கி மகிழ்வதற்கு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த வேளை அது.

எம்பெருமானின் திருமுடியின் மேல் வெண்கொற்றக்குடை என நாகராஜன் படம் விரித்து மெல்ல அசைந்து கொண்டிருந்தான். அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு.....

''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்...''

அவன் இறுமாப்பு எய்திய  அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலை கீழாக விழுந்தான். விழுந்த வேகத்தில், தலை கீழே மோதியதில் ஆயிரமாக சிதறி விட்டது.

ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து  பின் வாங்கி நின்றது. ''...என்ன  ஆகுமோ?.. ஏதாகுமோ?.. ஈசனின் சிரசில் இருந்தவனுக்கு புத்தி பேதலிக்கலாமா!...'' - என நடுக்கம் வேறு!...

கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று கதறினான்  நாகராஜன்.

''... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்... ஸ்வாமி!....''

பாதாளத்தில் இருந்து மெல்ல மேலேறிய அவனுக்கு எம்பெருமானின் முன் வருவதற்கு அச்சம்!...

அம்பிகை ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் அர்த்தங்கள். ஸ்வாமியும் புன்னகைத்தார்.  நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த பிள்ளையார் - விறுவிறு  என நாகராஜனின் அருகில் சென்று, -

'' சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று வழிகாட்டி அருள் புரிந்தார்.

'' உத்தரவு... ஐயனே!...'' என வணங்கிய நாகராஜன் நூலாக நைந்து தொங்கிய தலைகளைத் திரட்டிக் கொண்டு சென்றான். விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான். பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார்.

சிவராத்திரியின் நான்கு காலத்திலும்  வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான். மண்டையில் வைத்துக் கொண்டால் தான் மண்டை கனமாகி விடுகிறதே!...

தான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும். அதற்கு ஆதிசேஷன் தலைமையில்  மாநாடு கூட்டினான் - நாகராஜன்.

அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவருடைய ஆதரவினையும் வேண்டினான்.

''சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்'' - என்று அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர். ஆனால் அவர்களுக்குத் தெரியாது இரவில் சிவபூஜை செய்யப் போவது!....  

தலை சிதறிய வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் -  காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்.

மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடன் தவமிருந்தான்.  அப்படி அவன் தவமிருந்த திருத்தலம் - திருக்குடந்தை.

அவனை நல்ல காலம் நெருங்கியது. விநாயகர் குறித்துக் கொடுத்தபடி -

காவிரியில் நீராடினான். தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது. பாவம் தீர்க்கும் மகாமகக் குளத்தில் மீண்டும் நீராடினான். தன்னை மறந்த நிலையில் தன் பிழை தீர - சிவபூஜை செய்தான். மனம் நிறைவாக இருந்தது.

கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்.

இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

* * * 

இப்படி சிவராத்திரியின் முதற்காலத்தில் நாகங்களுடன் கூடி நாகராஜன் வழிபட்ட திருத்தலம்,  கும்பகோணத்தின் நடு நாயகமாகத் திகழும் -

அருள்மிகும் நாகேஸ்வரன் திருக்கோயில்.


நாகராஜன் வழிபட்டதால் ஈசனின் திருப்பெயர் நாகேஸ்வரன். அம்பிகையின் திருப்பெயர் பெரியநாயகி.

இத்தலத்தின் மரம் - வில்வம். தீர்த்தம் - காவிரி, மகாமகத் திருக்குளம், பொற்றாமரைத் திருக்குளம். 

திருநாவுக்கரசர் இத்தலத்தினை குடந்தைக் கீழ்க்கோட்டம் எனக் குறித்துத் திருப்பதிகம் பாடியருளியுள்ளார்.

பாடகச்சேரி மகான் ராமலிங்க ஸ்வாமிகள் பொருள் திரட்டி திருக்கோயிலுக்கு கிழக்கு வாசலில் ராஜகோபுரம் எழுப்பினார். ஸ்வாமிகளின் திருமேனியினை ராஜகோபுரத்தில் நடுநாயகமாகக் காணலாம்.

ஆண்டு தோறும் சித்திரை 11, 12, 13 தேதிகளில் காலை இளங்கதிரவனின் ஒளி சிவலிங்கத் திருமேனியில் பரவுகின்றது.

'' ஓம் நம சிவாய!... சிவாய நம ஓம்!...''

''திருச்சிற்றம்பலம்''

1 கருத்து:

  1. சிவராத்திரியின் முதற்காலம் குறித்த அறியாத விளக்கங்கள், கதைகள், மற்றும் திருக்குடந்தை பற்றிய தகவல்களையும் அறிந்து கொண்டோம் ஐயா. பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..