நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 30, 2013

திருநள்ளாறு


சந்நதியில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கியிருக்கும்  திருத்தலம் . 

அரசனின் ஆணைப்படி திருக்கோயிலின் பசுக்களைப் பராமரித்து பாதுகாத்து, திருக்கோயிலின் கைங்கர்யத்திற்காக   நாள் தவறாது முறையாக பசும்பால் அளந்து வந்தார்  -  இடையர் குலத் தோன்றலாகிய சிவனடியார் ஒருவர்.  ஆனால் திருக்கோயிலின் வரவு செலவு கணக்குகளை நிர்வகித்த கணக்கன்,  அளக்கப்பட்ட பாலின் ஒருபகுதியைத் தன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பொய்க் கணக்கு எழுதி அதையும் பராமரித்து வந்தான்.  

ஒருநாள் எதிர்பாராத விதமாக முன்னறிவிப்பு ஏதும் இன்றி திருக்கோயிலுக்கு வருகை புரிந்த மன்னன் திருக்கோயிலின் நிர்வாக செயல்பாடுகளைப் பரிசோதிக்க, அளக்கப்பட்ட பாலின் அளவில் குறைவினைக் கண்டறிந்தான்.  விசாரணையின் போது  ஏதும் அறியாதவராகிய தொண்டர் மீதே பழி விழுந்தது. கோபம் கொண்ட  மன்னன்,  பால் அளந்து கொடுத்த இடையரைத் தண்டிக்க தன் கைப்பிரம்பினால் வீசியபோது,  

பெருமானின் சந்நதியிலிருந்து மின்னலென சிவாஸ்திரம் பாய்ந்து கணக்கனின் கணக்கினை முடித்தது. இறைவன் நீதிக்கும் அநீதிக்கும் இடை நின்று - இடையரைக் காத்து, கணக்கனைத் தண்டித்து நிகழ்த்திய திருவிளையாடலை எண்ணி - பெருமை கொண்டாலும், 

முறையாக செயல்படாத தன் சிறுமதியையும் நிர்வாக சீர்கேட்டினையும் அதனால் விளைந்த பெரும் பழியையும் -  உணர்ந்து தன்னையே மாய்த்துக் கொண்டான் மன்னன். 

இதனால் மதி மயங்கிய சிவனடியார் தன்னையும் மாய்த்துக் கொள்ள முயன்ற போது அடியார்க்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார். பின்னர் அவர்  பொருட்டு மன்னனையும் கணக்கனையும் உயிர்ப்பித்து அருளினார்.

அன்று நீதிக்காக வெளிப்பட்ட -  சிவாஸ்திரத்திற்கு வழிவிட்டுத்தான் நந்தியும், பலிபீடமும் சற்றே தென்புறமாக விலகியுள்ளன.

எம்பெருமான் - அருள்மிகும் தர்ப்பாரண்யேஸ்வர். தர்ப்பை வனத்தில் வெளிப்பட்ட  சிவலிங்கத் திருமேனி. அம்பிகை பிராணேஸ்வரி   எனப்படும் போகமார்த்தபூண்முலையாள்.

திருநள்ளாறு விடங்க ஸ்தலம். சோழ மாமன்னராகிய முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்தில் இந்திரனிடமிருந்து பெற்று வந்த விடங்கத் திருமேனிகள் ஏழினுள்  " நகவிடங்கர்''  விளங்கும் திருத்தலம். பெருமானின் திருநடனம் உன்மத்த நடனம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலம். 

விநாயகப்பெருமான் -  ஸ்வர்ண விநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள் பாலிக்க -  திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்  ஆகியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம்.

நளச்சக்ரவர்த்தி தன் மனைவி தமயந்தி தேவியுடனும்  தம் பிள்ளைகள் இருவருடனும் போற்றி வணங்கி சனி தோஷம் நீங்கப் பெற்ற திருத்தலம். நளன் பெயரால் இத்திருத்தலம் விளங்குவதே நளனின் பெருமையாகும்.

திருக்கோயிலின் தென்புறம் சிவனடியாராகிய இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையனார், அவர்தம் மனைவி, கணக்கன் ஆகியோர் திரு உருவங்கள் உள்ளன.

சனி தோஷமுடையோர் அதிகாலையில் நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள விநாயகர் மற்றும் பைரவரை வணங்கி அனுமதி பெறவேண்டும்.

திருக்கோயிலினுள் நுழையும்போது கோயிலுக்குள் உள்ள கங்காதீர்த்தத்தை தரிசித்து,  நள தமயந்தி சரிதத்தை மனப்பூர்வமாக சிந்தித்து அவர்களைப் போற்ற வேண்டும். ஏனெனில் நள மகாராஜன் தான் - இத்திருத்தலத்தில் முறையாக சிவதரிசனம் செய்தவருக்கு சனி தோஷம் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டு  - நமக்கெல்லாம் வரம் பெற்றுத் தந்தவர்.

பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று அருள்தரும் தர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமியை மெய்யுருக வணங்கி வழிபடவேண்டும். பின்னர் தியாக விடங்கர் சன்னதியில் மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கவேண்டும்.

பின் வெளிப்பிரகார வலம் வந்து தெய்வத் திருமேனிகளைத் தரிசித்த பின் அம்பிகையாகிய பிராணேஸ்வரியை வழிபட வேண்டும்.

பிறகு தான்,  சனைச்சரரை வணங்கி  - குறை தீர -  முறையிட வேண்டும்.

வில்வம் தல விருட்சம்.  தீர்த்தங்கள் - பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்,  நள தீர்த்தம் என்பன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் - என மூவரும் எழுந்தருளி,  திருப்பதிகங்களால் துதித்து வணங்கிய திருத்தலம்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சமணருடன் அனல்வாதம் செய்யும் முன்பாக,  திருப்பதிகங்கள்  எழுதப் பெற்ற  ஓலைச்சுவடிகளில் திரு உளம் பற்றி - கயிறு சாத்திப் பார்த்தபோது ''போகமார்த்த பூண்முலையாள்'' (1/49) எனத் தொடங்கும் திருநள்ளாற்றுப் திருப்பதிகம் கிடைத்தது.  

அதையே திருக்குறிப்பெனக் கொண்டு, தீயில் இடப்பட்ட பனை ஓலைகள் -  கருகாமல் பச்சையாகப் பொலிந்தன. அதனால் இப்பதிகம் ''பச்சைப் பதிகம்'' எனும் சிறப்பினைப் பெற்றது. சைவ நெறியும் பகை வென்று நிலைத்தது. 

பெருமானின் கருணையைப் போற்றி, ஆலவாய் எனும் மதுரையம்பதியையும் திருநள்ளாற்றினையும் இணைத்து ''பாடக மெல்லடிப் பாவையோடும்'' (1/7) திருப்பதிகம் பாடியருளினார். பின்னும்,

''வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
 நளன்கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே!.''
(2/33/3) - என்று, 


ளன் இங்கு வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற வரலாற்றினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்..

'' நலங்கொள் நீற்றர் நள்ளாறரை நாள்தொறும்
  வலங்கொள்வார் வினையாயின மாயுமே!. ''
(5/68/10) என்றும்


'' நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
  நானடியேன் நினைக்கப்பெற்று  உய்ந்தவாறே!. ''
(6/20/6) - என்றும்


- திருநாவுக்கரசர் தம் திருவாக்கினால் நமக்கு வழி காட்டுகின்றார்.

''நாதனை நள்ளாறனை அமுதை
  நாயினேன் மறந்து என் நினைக்கேனே!.''
-
(7/68/8) என்றும்

''நலங்கொள் சோதி நள்ளாறனை அமுதை
  நாயினேன் மறந்து என் நினைக்கேனே!.''
- (7/68/9) என்றும்


 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகழ்ந்துரைக்கின்றார்.

நள தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் சனி  தோஷம் நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் தீரும். சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் ஞானம் விளையும் என்பது நம்பிக்கை. 

இங்கு இறைவனை வணங்கிய பிறகு சனைச்சரனை வணங்கினால் தான்  சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

திருநள்ளாறு - சிவாலயம் சிறப்புற்று விளங்கும் திருத்தலம். சிவபெருமானே மூல மூர்த்தி. ஆயினும் இன்றைய ஊடகங்களும் பல்வேறு வகையான நாளிதழ்களும் சனீஸ்வரன் திருக்கோயில் என்றும் சனி பகவான் திருத்தலம் என்றும் குறிப்பிட்டு வருகின்றன. இது தவறு.


சூரியன் - சாயாதேவி தம்பதியருக்குப் பிறந்தவரும் மந்த நடையினை உடையவருமான சனைச்சரன் கங்கைக் கரையில், காசி விஸ்வநாதரை ஏக சிந்தையராக வழிபாடு செய்து - கிரகநிலையினைப் பெற்றார். எந்நேரமும் சிவசிந்தனையில் திளைப்பவர்.  மிகச் சிறந்த சிவபக்தர்.

நம்முடைய பாவக் கணக்குகளைப் பராமரித்து, நமது சிந்தையைச் சிவ வழியில் செலுத்துபவர் சனைச்சரரே!.. ஈஸ்வரனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நளமகராஜனை விட்டு விலகி - நளன்  இழந்த  எல்லாவற்றையும் அருளினார்.

அந்தத் திருத்தலமே திருநள்ளாறு. தம்மை உணர்ந்து தம் வினையை உணர்ந்து இங்கு வந்து வழிபடும்  பக்தர்க்கு நலம் விளையும் என்பதே திருக்குறிப்பு!...

உண்மையை உணர்ந்து கொள்வோர் - கொள்க!...

'' நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
  நானடியேன் நினைக்கப்பெற்று  உய்ந்தவாறே!. ''

''திருச்சிற்றம்பலம்!''

2 கருத்துகள்:

 1. தியாக விடங்கர் சன்னதியில் மரகதலிங்கத்தை பெட்டியிலிருந்து எடுத்து நைவேத்தியம் செய்து பூஜை நடக்கும் போது தரிசிக்கும் பேறு கிடைத்தது..!

  வலைச்சரம் வழியாக ஆலய தரிசனம் தந்ததற்கு வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் நல் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..