நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 26, 2013

திங்களூர்

தமக்கை திலகவதியாரின் வேண்டுதலால் - 

புறச்சமயத்திலிருந்து மீண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்படையுடன் ஊர் ஊராகச் சென்று திருப்பணி செய்து, 

அங்கே வீற்றிருக்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வாயார வாழ்த்தி மனமார வணங்கி திருப்பதிகங்களைப் பாடித் துதித்தார்..

அவ்வேளையில் - காவிரியின் வடகரையில் திங்களூர் எனும் திருத்தலத்தில் ஒரு அதிசயத்தினைக் கண்டு வியந்தார். 


வழி நெடுக - தண்ணீர்ப்பந்தல், வழிச்செல்வோர் தங்கும் இடங்கள், அன்னதான அறச்சாலைகள் - எல்லாமே ''திருநாவுக்கரசர்'' திருப்பெயரில்., 

வியப்பாக இருந்தது - பெருமானுக்கு.

விசாரித்தார். அப்பூதி அடிகள் எனும் அந்தணர் அவற்றை அமைத்து பேணி வருவதாகச் சொன்னார்கள். 

அது மட்டுமின்றி தன் பிள்ளைகளுக்கும் - திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டியிருப்பதையும் சொன்னார்கள். 

அவருடைய இல்லம் தேடிச் சென்றார் சுவாமிகள்.

அதுவரையிலும் திருநாவுக்கரசரை அப்பூதி அடிகள் நேரில் பார்த்ததில்லை.

எனவே, வந்திருப்பவர் சிவனடியார் என்ற அளவில் அவரை வரவேற்றார் - அப்பூதி அடிகள்.

அவரிடம் திருநாவுக்கரசர் கேட்டார் - 

'' ஐயா!... தாங்கள் தங்கள் பெயரில் அறப்பணிகளைச் செய்யாமல் யாரோ ஒருவர் பெயரில் செய்கின்றீர்களே!... அது ஏன்?...''

அப்பூதி அடிகள் உடனே பெருங்கோபம் கொண்டார்.. 

அப்போது,

''.. சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்ட எளியேன் யான்..'' என்று பணிவுடன் கூறியதும்

அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்த அப்பூதி அடிகள் சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி மகிழ்ந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டி, தம் இல்லத்திலேயே தங்கிவிடுமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

ஆனால், திருநாவுக்கரசர் தாம் இன்னும் பல திருத்தலங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதைக் கூறியதும் -

'' இன்று ஒரு நாளாவது எம் இல்லத்தில் உணவு அருந்த வேண்டும் '' எனக் கேட்டுக் கொண்டார்.

அப்பூதி அடிகளின் அன்பினைக் கண்ட சுவாமிகள் - அவர் தம் இல்லத்தில் உண்பதற்கு ஒத்துக் கொண்டார்.

அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து தன் மனையாளுடன் விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார்.

தன் மகனை வாழை இலை அரிந்து வரும்படி தோட்டத்திற்கு அனுப்பினார். ஆனால் - விதி வசத்தால் தோட்டத்தில், நாகம் தீண்டியது.

அந்தச் சிறுவன்  - வாழை இலையை தாயிடம் கொடுத்து விட்டு உயிரிழந்தான்.

இச் செய்தியை அறிந்தால் - திருநாவுக்கரசர் தம் இல்லத்தில் விருந்து உண்ண மாட்டாரே - என அஞ்சிய அப்பூதி அடிகள் தன்
மகன் உடலை மறைத்து விட்டு, 

தன் மனையாளுடன் சேர்ந்து  சுவாமிகளுக்கு அமுது படைத்தார். 

இறைவனின் திருக்குறிப்பினால் சிறுவன் நாகம் தீண்டி இறந்ததை அறிந்த திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் மகன் உடலை திருக்கோயிலுக்கு எடுத்து வந்து இறைவன் திருமுன் கிடத்தி, " ஒன்றுகொலாம் அவர் சிந்தை " எனத் தொடங்கி பதிகம் பாடினார்.  

இறையருளால் இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். பிள்ளை மீண்டெழுந்தது கண்ட அப்பூதி அடிகள் - பெருமானைப் பலவாறு துதித்து வணங்கி - சுவாமிகளுக்கு அமுது படைத்து பெரும் பேறு எய்தினார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பழைமையான திருத்தலம் திங்களூர். 


இறைவன் - கயிலாய நாதர். 
அம்பிகை - பெரியநாயகி. 
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.
தல விருட்சம் - வில்வம்

விநாயகரின் திருப்பெயர் -  விஷம் தீர்த்த விநாயகர். 

சந்திரன் இங்கு ஈசனை பூஜித்து பேறு பெற்றபடியால் இத்தலத்திற்கு வந்து  ஈசனையும், அன்னையும் துதித்து சந்திரனை வழிபடுவோர்க்கு - கிரஹ தோஷங்கள் விலகுகின்றன.

தஞ்சையிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது திங்களூர்.

திருவையாறு - கும்பகோணம் சாலையில் உள்புறமாக  1 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோயில்.

தஞ்சையிலிருந்து - கணபதி அக்ரஹாரம் செல்லும் நகரப்பேருந்துகள் திங்களூர் வழியாக செல்கின்றன.

காவாய் கனகத் திரளே போற்றி!..
கயிலை மலையானே போற்றி! போற்றி!...

'' திருச்சிற்றம்பலம்!...''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..