நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 10, 2013

சிவ தரிசனம் - 02

 சிவராத்திரியின் இரண்டாம் காலம்
-: இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை :-

திருக்குடந்தையில் முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தன் கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த சண்பகாரண்யம்.

அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாக்கியிருந்த சூரிய புஷ்கரணி  நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது. பயண களைப்பு தீர நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்...

இரண்டாங்காலத்தில்  இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்.

''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!... 
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''

- என்று தொழுது நின்றான். நினைவில் சேர்ந்த அழுக்கு தீர அழுது நின்றான்.

மூன்றாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

* * *

இப்படி சிவராத்திரியின்  இரண்டாம் காலத்தில் நாகங்களுடன் கூடி நாகராஜன் வழிபட்ட திருத்தலம்,

அருள் தரும் திருநாகேஸ்வரம்


இறைவன் - செண்பகாரண்யர். நாகராஜன் வழிபட்டதால் நாகேஸ்வரர். அம்பிகை -  குன்றமுலைநாயகி. தல விருட்சம் செண்பகமரம். தீர்த்தம் சூர்ய புஷ்கரணி.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் - என மூவரும் பாடியருளிய காவிரிக்குத் தென்கரையில் உள்ள  திருத்தலம்.

இத்திருக்கோயிலில் வழிபடுவோர்க்கு -

''காளமேகந் நிறக்கால னோடு  அந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாமனும் பட்டன நினைவுறின்

நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுர நண்ணுவார்
கோளு நாளும் தீயவேனு நன்காம் குறிக்கொண்மினே''
                                                                          - திருஞானசம்பந்தர் தேவாரம் ( 2/119 )

''... தீயகோள்களும் நாட்களும் நல்லனவே...'' என்று - திருஞானசம்பந்தப் பெருமான் தம் திருவாக்கினால் உறுதிப்படுத்துகின்றார். .

''சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்தலை  அரவின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச்சரவரே...''
                                                                          - திருநாவுக்கரசர் தேவாரம் ( 5/52 )

நாகராஜன் வழிபட்டதை  - ஐந்தலை அரவு - என்று குறிப்பிட்டு திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் புகழ்ந்து பாடுகின்றார்.

காலப்போக்கில் திருக்கோயிலின் வெளித்திருச்சுற்றில் நாகராஜனுக்கு - நாககன்னி, நாகவல்லி என, தேவியர் இருவர்  அருகில் வீற்றிருக்கும்படியான திருமேனி  எழுப்பப்பட்டது.

இந்தத் திருக்கோலத்தைத் தான் ராகு பகவான் என - பிழையாகக் குறிப்பிட்டு தவறான வழிகாட்டுதல்களுடன் - வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.


திருநாகேஸ்வரம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர். திருக்கோயிலின் அருகிலேயே அருள்மிகும் ஒப்பிலியப்பன் திருக்கோயில். சற்று தொலைவில், ஐயாவாடி. இங்குதான் -

அன்னை அருள்மிகு மகாபிரத்யங்கிராதேவி திருக்கோயில் கொண்டு அல்லல் எல்லாம் அகற்றி அருள் மழை பொழிகின்றனள் .

தஞ்சை மயிலாடுதுறை இருப்புப் பாதையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது. திருநாகேஸ்வரம். ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் திருக்கோயில் உள்ளது.  

கும்பகோணத்திலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

ஓம் நம சிவாய!... சிவாய நம ஓம்!... 

'' திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக