நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 08, 2024

வண்டல்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 26
திங்கட்கிழமை


கார்மேகங்கள் திரண்டு எழுந்து பொழிந்த மழையானது மலையில் இருந்து ஆறு எனப்பெயர் கொண்டு ஓடி வரும் போது இயற்கையின் கொடையாக
வண்டல் மண் உருவாகின்றது..


தமிழகத்தில்
தக்கதொரு கொடையை வாரி வழங்குவதில் முதன்மையானவள் பொன்னி எனப்படும் காவிரியாள்..

இத்தகைய அருட் கொடையால் சிறப்புற்றது தஞ்சை வளநாடு.. 

தாவரங்கள் நமக்கு அளிக்கின்ற சத்துகள் எல்லாம் வண்டலில் இருந்தே உருவாகின்றன.. 


வண்டல் மண் -
நெல், கரும்பு, மஞ்சள், இஞ்சி, வெற்றிலை, மா, பலா, வாழை  ஆகியவற்றுக்கானது..
ஆற்றங்கரை மூங்கில் தனிப் பெருமை உடையது..

இவற்றோடு சித்திரம் சிற்பம் இசை நாட்டியம் எனும் கலைகளும் சேர்ந்தே பயிராகின.. 


இம்மண்ணின் மக்களிடம் அன்பும் கருணையும் கலந்திருக்கும் என்றாலும் போர்க் குணமும் பொலிந்திருக்கும்..


தாமரை, அல்லி, ஆம்பல் - என நீரிலும் மல்லிகை, முல்லை, ரோஜா - என நிலத்திலும் பல்வகைப் பூக்கள் பலவித மூலிகைகள்.. ஒருசில இடங்களில் பயறு உளுந்து கடலை கூடவே தோட்டத்துப் பயிர்கள் - இவையெல்லாம் 
சோழ வளநாட்டின் அழகுகள்..

ஞானசம்பந்தப் பெருமான் 
காட்டுகின்ற சீர்காழியின் அழகு


கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் 
கொடுமுடி உறைபவர் படுதலைக்கையர்
பண்டலர் அயன்சிரம் அரிந்தவர்பொருந்தும் 
படர்சடையடிகளார் பதியதனயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவு மறி கடல் 
திரைகொணர்ந்து எற்றிய கரைமேற்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் 
கழுமல நினைய நம் வினை கரிசறுமே. 1/79/2 

மேகம் போலும் நீல மலர் போலும் அழகிய மிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும்,  தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முன்பொரு சமயஎ தாமரையில் உறைகின்ற பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுற  விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபெருமானது பதி  எதுவெனில் (பொன்னி நதி) ஒருபுறம் வண்டலைக் கொணர்ந்து சேர்க்க மறுபுறம் அலைகடலானது சங்கு சுறா ஆகியவற்றைக் கரைமேல்
வீசிட - அவற்றோடு  நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்துக் குலவுகின்ற கழுமலம் (சீர்காழி) ஆகும்.. 
அவ்வூரினை நினைத்துத் தொழ 
நமது வினைககள் நீங்கும்..

மேலும் வேறொரு அழகு

மண்டிய வண்டல் மிண்டி வருநீர 
பொன்னி வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன 
வளர்கின்ற கொச்சை வயமே.. 2/83/4

திரண்ட வண்டல் மணலோடு பொன்னி நதி ஓடி வந்து  வயல்களில் நிறைந்ததும்  அகன்ற குண்டு குழிகளில்   வாளை மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடுகின்ற ஓசையானது போருக்கு வருகின்ற படைகளின் 
இரைச்சல் போல வளர்கின்ற கொச்சைவயம் (சீர்காழி)...


வண்டலொடு மணல் கொணரும் 
பொன்னி நன்னீர் வலஞ்சுழியார் (6/51/9) 
என்கின்றார் திருநாவுக்கரசர்..

திருவலஞ்சுழி சிவாலயத்திற்கு அருகில் அரசலாறு.. அதையடுத்து தாயாகிய காவிரி.. ஆற்றில் நீர் தவழ்ந்திருக்க இவ்விரு நதிகளின் கரைகளும் மரகத மணிக் களஞ்சியம் எனப் பொலிந்திருக்கும்..
**

கரையேறி மீன் விளையாடும் 
காவிரி நாடு எங்கள்
கலைக் கோயிற் 
தாயகமே நீ வாழிய நீடு..

முகிலோடு நீர் நிறைந்தாட
நிலத்தோடு நீர் வழிந்தாட
நதியோடு நிதி விளையாட நலந்
திகழ் நாடு நல்ல
புகழோடு வாழிய என்றும்
காவிரி நாடு..
*
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. சோழ வளநாடு...   தஞ்சை மண்ணில் நானும் சிலகாலம் வசித்திருப்பதில் பெருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வண்டல் பற்றிய தெளிவான விளக்கங்களை ரசித்துப் படித்தேன். படங்கள் அனைத்தும் மிக அழகு. முதல் படத்தில் இயற்கையின் வனப்பு கண்களை கவர்கிறது. தஞ்சையில் சிறப்பைப் பற்றி சொன்ன விதம் அருமை. இவ்வளவு சிறப்பை தந்த அந்த இறைவனை பணிவோம்.

    /கரையேறி மீன் விளையாடும்
    காவிரி நாடு எங்கள்
    கலைக் கோயிற்
    தாயகமே நீ வாழிய நீடு../

    இந்தப் பாடல் இனிமையானது. அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தஞ்சையில் சிறப்பைப் பற்றி சொன்ன விதம் அருமை. இவ்வளவு சிறப்பை தந்த அந்த இறைவனை பணிவோம்... ///

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. வண்டல் மண் அறிந்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  4. வளம் மிக்க காவிரி நாட்டின் சிறப்புகள் படிக்கப் படிக்க இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..