நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 15, 2020

ஏழைப் பங்காளன்

அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா!.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே!..


சந்தோஷமும் துக்கமும் ஏழை நெஞ்சுக்குள் அலை அலையாய் புரண்டன..

கல்யாணங்காட்சி..ன்னு ஒன்னும் இல்லாம - நாடு நாடு..ன்னு காடு மேடு எல்லாம் சுத்தித் திரிஞ்ச புள்ளை.. ஆசையா முகத்தைப் பாத்து சோறு போட்டு கொள்ளை நாளாச்சு..

என்னைய விட்டா யாரு பொறுப்பா பாத்துக்குவாங்க.. இனிமேயாவது ஒரு எடத்துல ஒக்காந்து புள்ளைய பாத்துக்கணும்.. நாமளும் காமாட்சி கூட பட்டணத்துக்கே போயிறலாம்!..

அன்னையின் மனம் ஆசைப்பட்டது. ஆனாலும் - கூடவே தயக்கம்!..

காமாட்சிக்கு இது தெரிஞ்சா - என்ன பதிலு வருதோ தெரியலையே.. நாகு!..

அன்பு மகளுடன் - தன் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டது தாய் மனம்..

அண்ணாச்சி.. ஒண்ணுஞ்சொல்ல மாட்டாக!..

தாய்க்கு ஆதரவாகப் பேசியது - அந்த ஏழைக் குடும்பத்தின் இளங்கிளி..

விளைந்த வெள்ளரி வீதிக்கு வரத்தானே வேண்டும்!..

ஒருவழியாக வெளியில் வந்தது விஷயம்..

ஒம் மனசுல இப்படியும் ஆசை இருக்கா.. அதெல்லாம் சரிப்படாது..ன்னேன்.. நீ எங்கூட வருவே.. உங்கூட இன்னும் நாலுபேரு வருவாங்க!.. கூடவே ஊரு பொல்லாப்பும் சேந்து வரும்!..

இதெல்லாம் பாக்குறதுக்கா நா மந்திரியானது.. ன்னேன்?.. பட்டணம் எல்லாம் உந்தோதுக்கு ஒத்து வராது.. நீ இங்கேயே இரு.. ன்னேன்!..

நறுக்கு தெறித்தாற்போல பேச்சு..

தாயின் ஆசை அத்துடன் அடங்கிப் போனது..

சீராட்டி பாராட்டி வளர்த்த அன்பு மகனை - நாட்டுக்காக அர்ப்பணித்தார்..

நாட்டுக்காக - உழைப்பைத் தருவர்..
நாட்டு மக்களுக்காக  பொருளைத் தருவர்.. பொன்னையும் தருவர்..

ஆனால் -

தன் உயிருக்கும் உயிரான செல்வ மகனை - கொடையாகக் கொடுத்த தாய் -

சிவகாமி அம்மையார்!..

(கலங்கும் கண்களோடு இந்தப் பதிவு!..)


தமிழகம் இதுவரையிலும் கண்டிராத -
இனியும் காண இயலாத - தங்கமகனின் பிறந்த நாள் இன்று!..

இலவசக் கல்வி, ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகங்கள், பிள்ளைகளுக்கு  சீருடை என்றெல்லாம் வழங்கியவர் பெருந்தலைவர்..

கல்லாய் கிடந்த மக்கள் கல்வி கற்று எழுந்திடக் கை கொடுத்தவர் - காமராஜர்.
* * *

கிட்டங்கியில கேப்பை தான் போடுறாங்க.. நல்ல அரிசி வாங்கிக் கொடு ராசா!..
தாய் ஆசையுடன் கேட்டார்..

அதற்கு நாட்டின் முதல்வராக இருந்த மகன் சொன்ன பதில் -

ஊருக்கு ஒன்னு..  உனக்கு ஒன்னா?.. இதையே நீயும் ஆக்கித் தின்னு!..

தாய், விதவை தங்கை நாகம்மாள் மற்றும் அவருடைய பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வைத்த தொகை -  

ரூபாய் நூற்றிருபது மட்டுமே!.. 


அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், காலக் கோளாறினால்  ஏற்பட்ட கடும் வறட்சியை - சரியாகக் கையாளத் தெரியாமல் சறுக்கி விழுந்தனர். 

பனை ஏறி விழுந்தவனைக் கிடா ஏறி மிதித்ததைப் போல - 
அப்போது மொழிப் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.

அடுத்து வந்த தேர்தலில் - 

எதிரணியினர் பேசியது புதியதாக புரட்சியாக இருந்தது. இனிமையாக இதமாக இருந்தது. அதனால் அன்றைய மக்கள் அவர்களின்  பின் ஓடினர்.  

மக்களோடு மக்களாக இருந்ததால் -  காமராஜருக்கு  வீர வசனம் பேசுவதற்குத் தெரியவில்லை.  

எதிர் அணியினர் விஷம் கக்கினர். அவர்கள் பேசியவற்றில் ஒரு சில!..

ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்!.. ஒரு படி நிச்சயம்!..
தட்டினால் தங்கம் வரும்!.. வெட்டினால் வெள்ளி வரும்!..

குடல் கருகுது!.. கும்பி கொதிக்குது!..
குளுகுளு கார் ஒரு கேடா!..

இந்த மாதிரி பல வசனங்களால் சொந்த மண்ணிலேயே காமராஜர் தோற்றுப் போனார். 

அண்டங்காக்கை, பனையேறி  - என்றெல்லாம்  பழிக்கப்பட்டார்.

இன்னும் ஒருபடி மேலே போய் - காமராஜர் சுவிஸ் பேங்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார் - என்று புழுதி வாரி வீசப்பட்டது. 

காட்சி மாறியது. அதன் பின்  நாட்டில் - நடந்தது அனைத்தும் அனைவருக்குமே தெரிந்த விஷயம்!.. 

நாவில் ஈரமின்றிப் பேசியவர்கள் எல்லாம் - 
லஞ்ச லாவண்யங்களில் மூழ்கித் திளைத்தனர்..
தாமும் தம் மக்களும் என - தின்று கொழுத்தனர்.



பொதுக்கூட்டங்களில் - தன்னைப் பாராட்டி யாராவது பேசினால், கொஞ்சம் நிறுத்து.. ன்னேன்!.. - என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். 

வேறு எவரையும் தாக்கிப் பேசினால், 

அதுக்கா இந்தக் கூட்டம்..ன்னேன்!.. - என்று தடுத்துரைப்பார்..


தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்குத் தாரை வார்த்தவர்.

யாரும் அன்பளிப்புகளைக் கொடுக்க முனைந்தால் - 
இதெல்லாம் கஷ்டப்படுற தியாகிகளுக்குக் கொடுங்க..ன்னேன்!.. -  என்பார்

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்தவர்..

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என வரையறுத்து - அதன்படி முதல் ஆளாகப் பதவி விலகியவர். 

சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் மக்கள் அவரைத் தோற்கடித்தனர். 

உடனிருந்த கட்சிக்காரர்கள் அழுதார்கள். 
பொதுவான நல்ல மனிதர்களும் அதிர்ந்தார்கள்..

இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்!.. 

- என்று சற்றும் தளர்ச்சியில்லாமல் சொன்னவர் பெருந்தலைவர்.



கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷம் அது ஒன்றுதான்!..

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர். 


பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர்..

அவருடைய அதிகபட்ச ஆடம்பர உணவு - சோற்றுடன் முட்டை.

இறந்தபோது அவருடைய கையிருப்பு என மிச்சம் இருந்தவை -  

ஒரு சில வேஷ்டி சட்டைகள்..
ஓய்வு நேரத்தில் படித்த புத்தகங்கள்..
எளிய சமையலுக்கான பண்ட பாத்திரங்கள்..
நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும்!.. 

சிவகாமி அம்மையாரின் மரணத்தின் போது
பள்ளியில் பயிலாதவர் தான் பெருந்தலைவர்.. ஆனாலும் படிக்காத மேதை!..

அவர் படித்த நூல்களை அவரது நினைவாலயத்தில் காணலாம்..

அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதர்..

அறம் சார்ந்த ஆட்சியை அரசியலை நடத்திய மாமனிதர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

(சூழ்நிலையின் பொருட்டு இது மீள்பதிவு..)

எங்கள் ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *

26 கருத்துகள்:

  1. பதிவை முடிக்க மனமில்லாமல் முடித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.   இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்தக் கருப்புத்தங்கத்தின் பெருமைகளை...  இனி ஒரு மனிதர், இனி ஒரு தலைவரை காணும் தமிழகம் இவரைப்போல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு...

      நீங்கள் சொல்வது போல
      இனி என்றும் காணக் கிடைக்காத
      கறுப்புத் தங்கம் தான்...

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  2. //இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்//

    எவ்வளவு நுண்ணறிவான வார்த்தைகள், நன்றி கெட்ட மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      அப்படியான பெரியவர்களை எல்லாம் அலட்சியம் செய்து விட்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொண்டது தமிழினம்...

      பெருந்தலைவர் புகழ் வாழ்க!...

      நீக்கு
  3. அன்பு துரை,
    மிகுந்த நன்றி. ஜூலை 15 கொடுத்து வைத்திருக்கிறது.
    அன்னை சிவகாமியின் தங்க மகனைப் பெற.
    இவரைத் தக்க வைக்காத காலங்களில்
    நாம் இருந்திருக்கிறோம்.

    மாமனிதர் என்று இவர் ஒருவரையே சொல்ல முடியும்.
    இந்தியாவையே உயர்த்தியவர்,.
    தென் மாவட்டங்களில் இருந்ததால்
    ஓரிரு முறை காணும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
    அவர் கையால் திருக்குறளும் பரிசு வாங்கி இருக்கிறேன்.

    மிக அருமையான இந்தப் பதிவைக் கண்களில் ஒத்திப்
    படிக்க வேண்டும்.
    உணவிட்ட பெரு மகனுக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அம்மா...
      இப்படியான நல்லாட்சியில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கும் பெருமை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. பெருந்தலைவர், அருந்தலைவர், இப்படி ஒரு தலைவரை இனியும் நம்மால் காணக்கூட முடியாது. இவரை அந்தத் தேர்தலின் போது கிட்ட இருந்து பார்த்துப் பேசி இருக்கேன். கையெழுத்து கேட்டப்போ, வாங்கி வைச்சுட்டு என்ன பண்ணப் போறே? ஐயர் வீட்டுப் பெண்ணா? அப்பா என்ன செய்யறார்னு கேட்டதுக்கு அப்பா ஆசிரியப் பணினு சொன்னதும், முதல்லே படிச்சு உருப்படியாக ஆகி ஏதேனும் ஒரு வேலை தேடிக்கிற வழியைப் பாரு, ஐயருக்கெல்லாம் இனிமேலே வேலை கிடைப்பது கஷ்டம் என்றார். படிச்சு உருப்படு என்றார். கையெழுத்தெல்லாம் போட்டுத் தரலை. அவருடன் வந்த பக்தவத்சலம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. டிடிகே மட்டும் கூப்பிட்டுக் கையெழுத்துப் போட்டார். அவரும் ஓர் பள்ளி ஆசிரியரின் மகன் என்றார். டிடிகே கையெழுத்தை இன்னமும் வைச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் எப்படியான விஷயங்கள்...
      காலத்துக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை..

      தங்களால் நாங்களும் தெரிந்து கொண்டோம்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  5. ஒப்பற்ற தலைவரின் அஞ்சலிப் பதிவில் சொந்த விஷயத்தைச் சொன்னதுக்கு மன்னிக்கவும். அருமையான அஞ்சலி. இன்று அவரை நினைக்கும் பலரும் அன்றும் நினைத்துப் பார்த்திருந்தால்! தமிழகம் எங்கேயோ போயிருக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலொன்றும் தவறு இல்லை...
      பெருந்தலைவர் சொல்லிய மாதிரி
      அவருடைய கையெழுத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்...

      அவரைக் குறை சொன்னவர்களைக் கொண்டாடிய பாவத்தை எங்கே போய்த் தீர்ப்பது?...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  6. கும்பகோணம் மூர்த்திக்கலையரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு பெருந்தலைவர் வந்தபோது எங்கள் தாத்தா அழைத்துச்சென்றிருந்தார். அந்த நாள் என்றுமே என் நினைவில் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      பொதுக்கூட்டம் ஒன்றிலும் கும்பகோணம் மகாமகக் குளக்கரை சத்திரத்திலுமாக இரண்டு முறை பார்த்திருக்கிறேன்...

      கும்பகோணத்தில் பார்த்தபோது ஐயா அவர்கள் சொன்ன வார்த்தை ஒழுங்கா படிக்கணும்... என்பதே!...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. சிறப்பான பகிர்வு...

    அன்று தோற்கடித்த மக்கள், இன்று வரை வெற்றி பெறா விட்டாலும் அடிமைகளாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      // அடிமைகளாக...//
      சரியாகச் சொன்னீர்கள்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. கலங்க வைத்த பதிவு. காமராஜர் மறைவுக்குப்பின் எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் காங்கிரஸ் ஆதரவிலிருந்து மாறிவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கௌதமன்...

      ஏதோ புண்ணியம்.. தப்பித்து விட்டீர்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. சிறப்பான தலைவர். “தலைவர்” என்ற சொல்லுக்கு அவர் ஒருவரே சிறப்பான உதாரணம்.

    மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் படித்து ரசித்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. காமராசர் போன்ற ஒருவர் வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டா என்று வரும் காலம் சந்தேகப்படும்படியான வாழ்வு அவருடையது.

    300 கோடி சொத்து சேர்த்துவிட்ட காங்கிரஸ் தலைவர்களெல்லாம் மீண்டும் காமராஜ் ஆட்சியைக் கொண்டுவருவோம் எனச் சொல்லும்போது பத்திக்கிட்டு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்களது கருத்துரை முற்றிலும் சரியே..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. கர்மவீரர் காமராசர் போல காணகிடைப்பது அரிது
    அவர் விட்டு சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
    மிக அருமையான பதிவு.
    மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க விரும்பும் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.. அவருடைய இடத்தை எவராலும் நிரப்ப முடியாது...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. காமராசரும் சாதாரண மற்ற அரசியல்வாதிகள் போல இருந்து கோடிகளைக் குவித்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றும். நல்ல அரசியல்வாதிகளை மதிக்கும் மாண்பு தமிழக மக்களுக்குக் கிடையாது.

    ஆனா பாருங்க.... ஒரு பயலும் அண்ணாவின் ஆட்சியை உருவாக்குவோம், தம்பியின் ஆட்சியை உருவாக்குவோம் என்று சொல்வது கிடையாது. அவங்களுக்குத் தெரியும், அப்படிச் சொன்னா மக்கள் வாக்கு கிடைக்காது, அவங்க ஆட்சியின் லட்சணம் எல்லோருக்கும் தெரியும் என்பது. எல்லா அரசியல்வாதிகளும் காமராசர் ஆட்சியை உருவாக்குவோம் என்றுதான் சொல்றாங்க. அது ஒன்று போதாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      அதுதானே... தம்பிகள் எவரும் அண்ணனின் ஆட்சியைத் தருவோம் என்று செல்வதில்லை... அது இக்காலத்தில் எடுபடாது என்பது அவர்களுக்கே தெரியும்.

      தங்கள் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..