நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 05, 2020

தங்கமுடி

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

ஆதி சிவ சூரியனே
ஆண்டருளும் சோதியனே..
கை கொடுக்கும் வீரியனே
கண்ணறியும் நாயகனே...


கையில் எடுத்த முடி
காவிரியாள் தந்தமுடி
காற்றில் தழைத்த முடி
கண் வளரும் நாற்றுமுடி


நன்செய் வளர் நிலத்தில்
நல்ல தமிழ் வைத்த முடி
தஞ்சைத் தரணி தனில்
தான் வளர்த்த தங்கமுடி..

கதிராய்க் கதிர் வளர்ந்து
கண் நிறைக்க வேணுமையா..
சதிராடி நின்ற கதிர்
குதிர் நிறைக்க வேணுமையா..

பயிராய் விளைந்து இங்கு
பஞ்சம் தீர்க்க வேணுமையா..
உயிராய் செழித்து இந்த
ஊர் காக்க வேணுமையா..

நீரோடி குளிர்ந்திருக்கும்
நெடுங்காணி வாழவேணும்..
ஏரோடி நெகிழ்ந்திருக்கும்
எங்கபூமி வாழவேணும்..


வானம் கறுக்க வேணும்
வந்து மேகம் சேர வேணும்..
நாளாம் பொழுது தன்னில்
நல்ல மழை பெய்ய வேணும்..


பூச்சூடி நின்ற பயிர்
காற்றாடி நிற்க வேணும்..
காற்றாடி நின்ற கதிர்
கனிந்தாடி கனக்க வேணும்..



கட்டும் கலம் காண
கதிர் உழக்கு நெல் காண
ஐயா உன் அருளாலே
ஆனந்தமே பொங்க வேணும்..



நெல்லும் செழிக்க வேணும்
நெடுங்களமும் கொழிக்க வேணும்..
அன்னம் நிறைக்க வேணும்
அல்லலையும் தீர்க்க வேணும்..

காடும் தழைக்க வேணும்
கருங்குயிலும் பாட வேணும்..
நாடும் செழிக்க வேணும்
நல்ல விளக்கேற்ற வேணும்..

வீடும் தழைக்க வேணும்
வெள்ளி விளக்கேற்ற வேணும்..
தாயும் பிிள்ளையும் எனத்
தங்க விளக்கேற்ற வேணும்...
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. கவிதைக்கு வார்த்தைகள் மிகச் சிறப்பாக வந்து விழுகின்றன உங்களுக்கு.  இன்னும் எவ்வளவு திறமைகள் ஒளித்து வைத்திருக்கிறீர்களோ...    எல்லாப் படங்களும் அருமை.   கிளை நதி புதாறுதானே அது?  அதன் ஓரம் பெரிய கோவில் கோபுரம்..   அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      பெரிய கோயிலின் தென் புற கோட்டை மதிலை ஒட்டி வருவது காவிரியின் கிளையாகிய புது ஆறு தான்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. ஆதிசிவன் தீ நுண் கிருமியையும் பொசுக்கி அகிலத்தைக் காக்கட்டும்.  பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தீ நுண் கிருமி அழிவதற்கான
      வழிமுறைகளை யார் மூலமாகவோ இறைவன் தந்து விட்டான்..

      மனுக்குலம் தான் அதைக் கண்டெடுத்து கடைப்பிடிக்க வில்லை...

      எனினும் -
      எம்பெருமானை வேண்டி நிற்போம்...

      நீக்கு
  3. மிக அருமையான பாடல். வழக்கம்போல் கொத்தமங்கலம் சுப்பு நினைவில் வருகிறார். நேற்று மாலா மாதவன் எழுதி இருந்த ஓர் கவிதையும் நாட்டுப்புறப் பாடல் போல் அமைந்திருந்தது. அப்போவும் சுப்புதான் நினைவில் வந்தார். இங்கே வார்த்தைகள் எல்லாம் அப்படியே தாமாக வந்து விழுந்திருக்கின்றன. இதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். தஞ்சையின் இந்தப் பகுதியைப் பார்த்ததில்லை. பார்க்கக் கிடைத்தமைக்கும் நன்றி. இப்பாடல்களைத் தொகுத்து நீங்களும் ஓர் மின்னூல் வெளியிடலாம். இம்மாதிரி எழுதுவதற்கு இப்போ யாரும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      சும்மா ஏதோ மனதில் தோன்றுவதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...

      கொத்தமங்கலம் சுப்பு ஐயா அவர்கள் எல்லாம் பெரியவர்கள்... நான் எங்கே!..

      அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா...

      நீக்கு
  4. பாடல் வரிகள் மிகவும் அருமை ஜி
    இன்றைய தலைமுறைக்கு இந்த சிந்தனைகள் தோன்றாது.

    காரணம் இவைகளை அவர்கள் கண்டது இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  6. துரை அண்ணா ஆஹா!! எப்படி இப்படிக் கவிதை வரிகள் உங்கள் மனதில் கொட்டுபவை அப்படியே எழுத்தில் வார்த்தைகள் முட்டாமல் அருவி கொட்டுவது போல் கொட்டுகின்றன!.

    அருமை அருமை மிகவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  7. அற்புதமான கவிதை ஐயா. பாராட்டுகள்.

    படங்கள் அனைத்துமே அழகு. கவிதைக்கான வார்த்தைகள் தேர்வு வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  8. உங்கள் கவிதை அற்புதம், படங்கள் அழகு.
    கவிதை மிக அருமையாக இருக்கிறது, ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.
    நாடு செழிக்கட்டும்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கவிதைக்கு.
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      கட்டு கலம் காணும்..
      கதிர் உழக்கு நெல் காணும்...
      என்ற இருவரிகளும் பழந்தமிழ் சொல்வழக்கு...

      மற்ற வரிகள் எல்லாம் தட்டச்சு செய்யச் செய்ய மனதில் தோன்றியவை..

      அன்பின் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      வாழ்க வையகம்...

      நீக்கு
  9. பாடல் எழுதுவதிலும் வல்லவராக இருக்கிறீர்கள் சார். அருமையான வரிகள். படங்கள் அம்சமாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..