நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 26, 2019

பரிதியப்பர் தரிசனம் 3

தஞ்சையை அடுத்துள்ள
ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயிலைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றோம்...

மிகப் பழைமையான கிழக்கு நோக்கிய கோயில்...

திருக்கோயிலின் எதிரில் மூன்று ஆலமரங்கள்...
அவற்றைக் கடந்து தேரடி.. அருகில் அழகான தேரடிப் பிள்ளையார்..






ஐந்து நிலைகளையுடையது முதல் ராஜகோபுரம்..

ராஜகோபுரம் 
திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம். வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி.



உள்பிரகாரம் வெளிப் பிரகாரம் என இரண்டு உள்ளன...

மூன்று நிலைகளையுடைய இரண்டாம் ராஜகோபுர வாயிலை அடுத்து -
உள் பிரகாரத்தில் வழக்கமான சந்நிதிகள்...

கோட்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, நான்முகப் பிரம்மன்...



சந்நிதிகளில் விநாயகர், முருகன், கஜலட்சுமி திருமேனிகளைத் தரிசிக்கலாம்..


பிரகாரத்தில் சண்டிகேசருக்கு மூன்று திருமேனிகள் உள்ளன..


அம்பாள் மூலஸ்தானம் 
சிவகாமசுந்தரி அம்பிகையுடன் நடராஜ சபை உள்ளது...
அருகில் ஸ்ரீபைரவர், சூரியன், சந்திரன்..

நவக்கிரக மண்டலமும் உண்டு..

ஸ்வாமி மூலஸ்தானம் 
துவார விநாயகரையும் துவார பாலகர்களையும் தொழுது உட்சென்றால் கருணையே வடிவான மூலவரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்..

ஸ்ரீ பரிதியப்பருக்கு முன்னால் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ சூர்ய மூர்த்தி...

ஞாயிற்றுக் கிழமைகளில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து,
அருள்தரும் பரிதியப்பரை வணங்கினால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பர்..

நூற்றெட்டு தாமரை மலர்கள் என்றால் இன்னும் சிறப்பு..

வருடம் தோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் சுயம்பு லிங்கமாகிய பரிதியப்பருக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களுடன் சூரிய பூஜை நிகழும்..

காலை 6.30 மணியளவில் உதித்தெழுகின்ற

சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்கின்றன..

இத்திருக்காட்சியினைக் காண்பதற்குத் தவம் செய்திருக்கவேண்டும்..
வரும் பங்குனியில் வாய்ப்புள்ளோர் அவசியம் தரிசனம் செய்க.. 

சிவலிங்கத்திற்கு எதிரில் சூரியன் 
சிவபெருமானின் எதிரில் - சூரியன் நின்ற வண்ணம் வணங்கும் திருக்கோலத்தினை வேறு எங்கும் காண இயலாது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறந்து விளங்கும் இத்தலம் -
பிதுர் தோஷத்தினை நீக்கும்  பரிகார தலமாகவும்  
குறைவற்ற கண்ணொளி வழங்கும் தலமாகவும்  சிறந்து விளங்குகிறது. 

எந்தத் துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான தொல்லைகளும் தீர்வதற்காக,
இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்...


ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் 
ஸ்ரீ இடும்பன் கோயில் 
திருக்கோயிலுக்குத் தென்புறம் பிடாரியம்மனுக்கும்,
திருக்கோயிலருகில் இடும்பனும் சந்நிதி கொண்டுள்ளனர்...

திருக்கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தம்,  பின்புறத்தில் சந்திர தீர்த்தம் ..

சென்ற பதிவில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற இருந்த அறிவிப்பைச் சொல்லியிருந்தேன்..

உள்பிரகாரம் சுற்றி வரும் போது சந்நிதி விமானங்களுடன்
ராஜகோபுரமும் சேர்ந்து விளங்கிய காட்சியைத் தவிர வேறெதுவும் எடுக்கவில்லை...

பதிவிலுள்ள படங்கள் அனைத்தும் வெளிப்பிரகாரத்தில் எடுக்கப்பட்டவை... 

நண்பர்கள் பலரும் இதைப் பற்றி சொல்லியிருந்தார்கள்...

படம் எடுக்கக்கூடாது - என்றால், கொடிமரத்தைக் கடந்து மூலஸ்தானத்தை எடுக்கக் கூடாது என்பதாகத் தான் அர்த்தம்...

எவருக்கும் அனுமதி இல்லையென்றால்
மேலே காணும் சூரியனின் படம் Fb ல் வந்தது எப்படி?...

கோயில் பணியாளர்கள் எவர் துணையும் இல்லாமல்
சிவலிங்கத்தையும் மூலஸ்தானத்துக்கு முன்னாலும் படம் எடுக்க இயலுமா!...

சில வினாக்களுக்கு விடை காண்பது கடினம்...


கோயிலின் எதிலுள்ள ஆலமரங்கள் 
இந்தத் திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள  உழூர் கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பரிதியப்பர் கோயில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..

இருந்தாலும் கோயில் வழியாகச் செல்லும் பேருந்துகள்
மணிக்கு ஒருதரம் தான்...

பழைய பேருந்து நிலையத்திலிருந்து
ஒரத்தநாடு செல்லும் நகரப் பேருந்துகளும்


புதிய பேருந்து நிலையத்திலிருந்து
பட்டுக்கோட்டை செல்லும் புறநகர்ப் பேருந்துகளும்
உழூர் வழியாகத் தான் செல்கின்றன...

ஆனாலும் -

உழூரில் இருந்து பரிதியப்பர் கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் அரிது...



ராஜகோபுரத்தின் தென்புற நாசித்தலை 
ஏதோ காரணத்தால் சிதைந்துள்ளது..

நுணுக்கமான வேலைப்பாடுகள் சுதை சிற்பங்களில் காணப்படுகின்றது...
திருக்கோயில் திருப்பணியை நோக்கியுள்ளது - நிதர்சனம்...

கூடிய விரைவில் -  திருப்பணிகள் தொடங்குவதற்குப்
பிரார்த்தனை செய்து கொள்வோம்...

கூடுதலாக ஒரு செய்தி - இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் உருவான சிறுகதை தான் - மறுபடியும் அம்மா.. (டீச்சர் - கல்பனா)



நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண்மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் நீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார்புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதிந் நியமமே.. (3/104)
-: திருஞானசம்பந்தர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

25 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    பரிதியப்பரை தரிசனம் செய்ய வந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆம், மூலஸ்தானத்தில்தான் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பார்கள். சில பணியாளர்கள் கண்டு கொள்ளாதபோது படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் யாருமில்லாத நேரத்துக்காய்க் காத்திருந்து படம் எடுத்திருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்... அதை விடுங்கள்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. ஓ... அந்தச் சிறுகதையின் பிறந்தவீடு இதுதானோ?

    சீக்கிரம் திருப்பணிகள் தொடங்கப்பட அந்தப் பரிதியப்பர்தான் அருள்புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      அவ்வணணமே வேண்டிக் கொள்வோம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. நின்ற நிலையில் சூரியனை, நந்தியம்பெருமானுக்கு அருகில் கண்டேன். பொதுவாக சிவன் கோயில்களில் சந்திரன் ஒரு புறமும், சூரியன் ஒரு புறமும் இருக்கக் காணலாம். குடமுழுக்கின்போது, அவ்வாறு இருந்த சிற்பங்களில் ஒன்றை இங்கு வைத்திருப்பார்களோ என்ற எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்...ஆனால் ஆகம பிரதிஷ்டா விதிகளை யாரும் மீறுவதில்லை.. வேறு சில கோயில்களிலும் வித்தியாசமாக சந்நிதிகள் அமைந்துள்ளன...

      அவற்றையும் தாங்கள் சொல்வது போல எண்ணிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. பரிதியப்பர் தரிசனம் கண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. பரிதியப்பர் தரிசனம் இன்றும் கிடைத்த்து மகிழ்ச்சி.
    கோவில் முழுவதும் சுற்றி வந்த அனுபவம் கிடைத்தது.
    சூரியன் நல்ல அலங்காரமாய் இருக்கிறார்.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. பரிதியப்பர் தரிசனம் நன்று.

    மூலவரை படம் எடுக்கக்கூடாது என்பது பொதுவான விதி. ஆனால் கோவில் அலுவலர்கள் (கோவிலுக்காக) படம் எடுப்பார்கள். மற்றபடி அனைவரையும் படம் எடுக்க விட்டால், எல்லோரும் பெருமாளோடு செல்ஃபி எடுப்பார்களே தவிர அங்கு பக்தி இருக்காது.

    மற்றபடி மூலத்தானத்தைப் படம் எடுத்தால் சான்னித்தியம் கிடையாது என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

    கோவில் மூலவர் பட தரிசனம் நன்று என்றாலும், கோவிலுக்குச் சென்று நாம் பெறும் தரிசனமே ஆத்ம திருப்தியையும் மந்திரபூர்வமான சக்தியையும் தரும். அதற்குக் காரணம் அங்கு பதிக்கப்பட்டிருக்கும் யந்திரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அனைத்துபடங்களும் அருமை. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியும்..
      நன்றியும்..

      நீக்கு
  10. thenadu udaya sivanay potri ennatavarukkum iraiva potri.. Neril kaana mudiyavittalum thangal thayaval kopurathaiyum nandiyampathi matrum sooriyanariyum kaana mudinthathukku nandri..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சரவ்..
      தங்களுக்கு நல்வரவு...

      தங்களது முதல் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  11. கோயில் படங்கள் மிக மிக அற்புதம் ஐயா/அண்ணா

    விவரங்களும் அறிந்தோம். கூடவே எப்படிச் செல்ல வேண்டும் என்ற பேருந்து விவரங்களுக்கும் மிக்க நன்றி. நல்ல தரிசனம்.

    துளசிதரன், கீதா

    கீதா: அண்ணா அதானே எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைத்தது கொடிமரம் தாண்டி சன்னிதானத்தின் படங்கள்...

    விடை கிடைக்காத கேள்விகள். டிவியிலும் தான் வருகின்றனவே அது போல பல ஆன்மீக இதழ்களிலும் கூட..ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      பதிவில் உள்ள சந்நிதி படங்கள் Fb யில் கிடைத்தவை...

      நீக்கு
  12. இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டதில்லை. தரிசிக்க ஆவல். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் தரிசனம் செய்யுங்கள்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. அழகான படங்கள்.

    கோவிலுக்குள் படம் எடுக்கத் தடை என்றால் நானும் எடுப்பது இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..