நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 01, 2019

ஏழூர் தரிசனம் 5

திருப்பூந்துருத்தி..

திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி சாலையில் மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது..

இந்நாளில் நிர்வாகத்திற்காக கீழத் திருப்பூந்துருத்தி என்றும்
மேலத் திருப்பூந்துருத்தி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது...

திருக்கோயில் மேலத்திருப்பூந்துருத்தியில் அமைந்துள்ளது...

பேருந்தில் இருந்து இறங்கி கோயிலுக்குச் செல்ல வழி கேட்டால் சொல்கிறார்கள்...

அதற்கு முன்பாக பிரியும் கிளைச் சாலை நேராகக் கோயில் வாசல் வரை செல்கின்றது...

சப்தஸ்தானத் தலங்களுள் திருப்பூந்துருத்தி ஆறாவது தலமாகும்...

ஆற்றிடைப்பூந்திட்டில் அமைந்த தலம்...
ஆதலின் பூந்துருத்தி எனப்பட்டது...

இந்திரன் பூவனம் அமைத்து - ஈசனை வழிபட்டதாக தலபுராணம்..



நந்தியம்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தின்போது
மாலை மலர் அலங்காரங்களைத் திருப்பூந்துருத்தியினர்
கவனித்துக் கொண்டதாக ஐதீகம்...

அப்பர் ஸ்வாமிகள் திருமடம் அமைத்து தங்கியிருந்த திருத்தலம்...

அந்தத் திருமடம் கோயிலுக்கு வடபுறம் அமைந்துள்ளது...

மதுரையிலிருந்து வந்த ஞானசம்பந்தப் பெருமானை
அப்பர் ஸ்வாமிகள் வரவேற்று மகிழ்ந்த இடம் - சம்பந்தர் மேடு எனத் திருக்கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ளது...

அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப் பெருமானும்
ஒருங்கே நின்று தரிசனம் செய்த திருத்தலம் - திருப்பூந்துருத்தி...


அப்பர் ஸ்வாமிகள் உழவாரத் திருத்தொண்டு செய்த தலம் என்று ஞானசம்பந்தப் பெருமான் திருக்கோயிலின் உள் நுழையத் தயங்கிய போது நந்தியம்பெருமான் விலகியமர்ந்திட தரிசனம் கண்டதாகத் திருக்குறிப்பு...

அப்படி ஞான சம்பந்த மூர்த்தி சிவதரிசனம் செய்தாலும்
அவர் இத்தலத்தில் அருளிய திருப்பதிகம் கிடைக்கப்பெறவில்லை...

இங்கே இரவு நேரத்தில் வந்து சேரும் பல்லக்குகளில் உள்ள
மூர்த்திகளின் பழைய மாலைகள் களையப்பட்டு
புதிய மாலை பூச்சரங்களால் அலங்கரிக்கப்படுகின்றது...

காசியப முனிவர் வழிபட்ட தலம்..
அவரது வழிபாட்டிற்காக கங்கை ஊற்றாகப் பெருகியிருக்கின்றாள்..

அந்த கங்கா தீர்த்தக் கிணறு சந்நிதிக்குத் தென்புறமாக அமைந்துள்ளது...



கிணற்றுக்கு எதிர்ப்புறம் அமர்ந்த திருக்கோலத்தில் அப்பர் பெருமானும்
பரவை , சங்கிலி நாச்சியார்களுடன் சுந்தரரும் காட்சியளிக்கின்றனர்...



திருச்சுற்றுச் சுவர்களில் அப்பர் ஸ்வாமிகளின் வரலாற்றை அழகிய ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்...




கோயிலுக்கு முன்பாக சில மண்டபங்கள் இடிந்து விழும் நிலையிலுள்ளன..
அறநிலையத்துறை கண்டும் காணாதது போல இருக்கின்றது...

பேருந்திலிருந்து பிரதான சாலையில் இறங்கி வந்தால்
முஸ்லீம் தெருக்களைக் கடந்து தான் திருக்கோயிலுக்கு வரமுடியும்...

மக்கள் மனம் மாறியதால் திருப்பூந்துருத்தியில்
ஆங்காங்கே கிருத்துவ வழிபாட்டு இடங்களும் விளங்குகின்றன...

இவற்றையெல்லாம் கடந்து தான் -
இங்கே சப்த ஸ்தானத் திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது..

சக்ராப்பள்ளி ஸ்ரீசக்ரவாகீஸ்வரர் சப்த ஸ்தானத்தின் போது
ஏற்படுத்தப்படும் பிரச்னைகளைப் போல இங்கு இதுவரைக்கும் இல்லை..

இனி வருங்காலங்களில் எப்படியோ?..

ஈசன் எம்பெருமானுக்கே வெளிச்சம்...


ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி இயற்றிய -
ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் ஜீவ சமாதி இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது...

ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் தரிசித்த வரகூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் திருப்பூந்துருத்தியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது..



சிவநேசச் செல்வர்கள் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் - திருப்பூந்துருத்தி...

ஏனெனில்
சைவ சமயத்தின் பெருமக்களாகிய
அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப் பெருமானும்
அருகருகே நின்று தரிசனம் செய்த திருத்தலம் - திருப்பூந்துருத்தி...



ஐயன் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரையும் அம்பிகை சௌந்தரநாயகியையும்
கண்குளிரத் தரிசனம் செய்தபின்

வந்த வழியாகவே திருநெய்த்தானத்திற்குப் புறப்பட்டோம்...

திருப்பூந்துருத்தியிலிருந்து குடமுருட்டியையும் காவிரியையும் கடந்தால்
அக்கரையில் திருநெய்த்தானம்...

ஆனால்,
ஆறுகளின் குறுக்காக இது வரை பாலங்கள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...



நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையா என்நெஞ்சை நினைவித் தானைக்
கல்லாதன எல்லாங் கற்பித் தானைக்
காணாதன எல்லாங் காட்டி னானைச்
சொல்லாதன எல்லாஞ் சொல்லி என்னைத்
தொடர்ந்திங்கு அடியேனை ஆளாக் கொண்டு
பொல்லா என்நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.. (6/43)
-: திருநாவுக்கரசர் :-

இந்தப் பதிவு
ஆயிரத்து முன்னூறாவது பதிவாக
மலர்ந்திருக்கின்றது..

இந்த அளவினை எட்டுதற்கு
எல்லாம் வல்ல இறைவனும்
வலைத்தள உறவுகளும் நண்பர்களுமே காரணம்..

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி... 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. திருக்காட்டுப்பள்ளி வரை சென்றிருந்தாலும் இந்த திருப்பூந்திருத்தி தலம் சென்றதில்லை. அடுத்த முறை செல்லும் போது இங்கே செல்ல வேண்டும். பார்க்கலாம்.

    1300-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள்....

    ஒரு செய்தி - இன்றைக்கு என் பதிவும் கொஞ்சம் ஸ்பெஷல் தான்! 1900-வது பதிவு என்பதை இப்போது தான் பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... உங்கள் 1900 வது பதிவுக்கு வாழ்த்துகள் வெங்கட்.

      நீக்கு
  2. குட்மார்னிங்!

    திருக்காட்டுப்பள்ளி! ங்கு என் உறவுகள் இருந்தன. இரண்டு சித்தப்பாக்கள். ராஜம் காபியில் வேலை செய்த சித்தப்பா, கடை வைத்திருந்த சித்தப்பா ஒருவர். மேலும் என் அக்காவுக்குத் திருமணம் ஆனவுடன் முதல் குடித்தனம் அங்குதான். என் தாயமாமனையே மணந்தவர் என் அக்கா. அப்போது திருக்காட்டுப்பள்ளி சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மேலும் எனது நண்பன் ஒருவன் ஊரும் அதுதான். வீட்டை விட்டு ஓடுவதில் ஸ்பெஷலிஸ்ட்டான அவன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தையும் எங்கள் தளத்தில் எழுதி இருந்தேன்!

    பதிலளிநீக்கு
  4. திருக்காட்டுப்பள்ளி என்கிற பெயரே என்னை கொஞ்சம் உணர்ச்சிவசபப்டா வைத்துவிட்டது போல.. சம்பந்தமில்லாத விஷயங்கள் எழுதி விட்டேன்.

    அடடே... வெங்கட் எனக்கு முன்னால் வந்துவிட்டாரே...

    1300 வது பதிவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. திருப்பூந்துருத்தி(யும்) சென்றதில்லை. இங்கு தரிசனம் செய்து கொள்கிறேன்.

    அறநிலையத்துறை கண்டுகொள்ளாதது வியப்பில்லை. பணம் கொட்டும் தலமாயிருந்தால் இந்நேரம் தூள் பறந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. 1300 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி.

    இனிய தரிசன காட்சிகளை இன்றைய சமூக மாற்றத்தின் சூழல்களை நாசூக்காக விவரித்து சொல்லும் விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  7. ஆயிரத்து முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். திருப்பூந்துருத்தி கோயில் பற்றிய விபரங்கள் அருமை! ஆனாலும் மற்ற விபரங்கள் மனதைக்கலங்கச் செய்தன. நல்லபடியாக எல்லாம் நடக்க இறை அருள் கூட்டட்டும்! முன்னெல்லாம் திருப்பூந்துருத்தி உபசாரம் என்பார்கள். ஏன் எனத் தெரியாது. இன்றளவும் சப்தஸ்தானத் திருவிழாக்கள் நடைபெற்று வருவதில் மனம் மகிழ்கிறது.

    பதிலளிநீக்கு
  8. தரிசணங்கள் தொடரட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  9. ஆயிரத்து முந்நூறா
    வியப்பாகத்தான் இருக்கிறது
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  10. நினையா என் நெஞ்சை நினைவித்தானை - கண்ணில் நீர் வரவைக்கும் பாசுரம்.

    பூந்துருத்தி சிவ தரிசனம் அருமை.

    நீங்கள் எப்போ சென்றீர்கள்?

    பதிலளிநீக்கு
  11. திருப்பூந்துருத்தி தரிசனத்திற்கு நன்றி ஐயா...

    1300 - மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. திருப்பூந்துருத்தி கோவில், அதன் பக்கத்தில் உள்ள ஜீவசமாதியும் சென்று இருக்கிறோம். வரகூர் ஸ்ரீவேங்கடஷேபெருமாள் கோவிலுக்கும் போய் வழி பட்டு இருக்கிறோம்.
    1300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    படங்கள் எல்லாம் அழகாய் தெளிவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. 1300 வது பதிவிற்கு வாழ்த்துகள்!

    திருப்பூந்துருத்தி இறைவன் நல்ல தரிசனம்.

    ஆற்றின் குறுக்கே பாலங்கள் இல்லை என்றால் அதனால்தான் வந்த வழியே மீண்டும் பயணமோ.(.ஆற்றில் தண்ணீர் இருந்ததோ - கீதா)

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..