நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 18, 2019

சித்திரைத் திருவிழா 6

மாமதுரையில் நிகழும்
சித்திரைத் திருவிழாவின் காட்சிகள் தொடர்கின்றன..

திருக்காட்சிகளைப் பதிவேற்றிய
நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி..
***

ஒன்பதாம் (16/4) திருநாள்
திக்விஜயம் - இந்த்ர விமானம்


ஸ்ரீ மீனாம்பிகை மதுரையம்பதியின் மகாராணியாக
முடிசூட்டிக் கொண்டதும் திக் விஜயம் புரிகின்றாள்...

திசைகள் அனைத்தையும் வென்று விட்டோம்!..
என்று, அமைச்சராகிய சுமதி கூறியதற்கு
வடதிசை மீதம் இருக்கின்றதே!.. எனத் 
திருவாய் மலர்ந்தனள் அங்கயற்கண்ணி..

வட திசையா!?..
அது திருக்கயிலாயம் இருக்கும் திசையல்லவோ!...

ஆம்.. அதனையும் வென்றாக வேண்டும்!...

அன்னையின் சொல்லுக்கு அடுத்ததும் உண்டோ?..

அம்பிகையின் தங்க ரதம்
திருக்கயிலாய மலையின் அடிவாரத்தில் நின்றதும்
வில்லையும் வேலையும் உயர்த்தியவாறு
உடன்வந்த சேனைகள் ஆர்ப்பரித்தன..

அவ்வேளையில் திருக்கயிலை மாமலையில்
சிவம் தவத்திலிருந்தது.. 

ஈசனின் தவத்துக்கு இடையூறா?.. - என,
நந்தி தேவருக்கு சினம் மூண்டது...

ஏன் இந்த இரைச்சல்!.. - அதட்டினார்..

ஆனால் அடங்கவில்லை - ஆர்ப்பரித்த சேனை...

கயிலையில் மீன் கொடியை நாட்ட வேண்டும்!...

அது உங்களால் ஆகுமா?...

அதையும் பார்த்து விடலாம்!..

இடபக்கொடி பறக்கும் திருக்கயிலை இது!..
ஒரு மடக்கொடி இல்லா மனை என்று எண்ணி வந்தீரோ?..

நந்திதேவர் வியந்தார்...

கயல் கொடியை அயல் கொடி என்று எண்ண வேண்டாம்!...
எங்கும் ஜெயக்கொடி நாட்டி வருகிறாள் எங்கள் நற்றமிழ் சிவக்கொடி!...
புயல் கொடியாய் சுழன்று வருகின்றது புதுப் பூங்கொடி!..

ஆ... இதென்ன?..
பேச்சுக்குப் பேச்சு எதிர்ப் பேச்சு?..
பேசக் கற்றவர்களோ!...

ஆம்.. அவனிக்கே
பேசக் கற்றுக் கொடுத்தவர்கள்!..
பேச்சைக் கொடுத்தவர்கள்..
மொழி எனும் மூச்சைக் கொடுத்தவர்கள்!..

அதிகார நந்தி தேவருக்குக் கோபம் பொங்கியது...

அதுவரையிலும் தூங்கிக் கிடந்த பூதகணங்கள் 
விழித்துக் கொண்டு போர்ப்பறையை முழக்கின...

எதிர் நிற்பவள் யாரென 
உய்த்து உணராமல்
கையில் கிடைத்தவற்றை

எடுத்துக் கொண்டு போர் புரிந்தன..

விளைவு - வெற்றிகரமான தோல்வி...

தடைகளைக் கடந்த தடங்கண்ணியாள்
அமைச்சராகிய சுமதி உடன்வர
திருக்கயிலையின் உட்புகுந்தாள்...

தலைவன் எங்கிருக்கின்றான்?..
தேடிக் கண்டு பிடித்து விடுவோம்!...

அதோ
திருமாமணி மண்டபத்தில்
ஜோதிப் பிழம்பு!..

திருக்கரத்திலிருந்த வில்லினை வளைத்து 
நாணேற்றினாள்...

அக்கணத்தில் அந்த ஜோதிப் பிழம்பின் உள்ளிருந்து
சுந்தரன் - சோம சுந்தரன் என ,வெளிப்பட்டனன்...

ஒற்றைவார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்த வெம்புலித் தோலும்
கொற்ற வாள் மழுக்கரமும் வெண்ணீறணி கோலமும் நூல்மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப்பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர்கண்டனள்...
-: திருவிளையாடற்புராணம் :-

தன்னைக் கூர்ந்து நோக்கிய அழகனைக்
கூறுபவர் மனதைக் கோயிலாக் கொண்ட குழகனைக்
கண்ட மாத்திரத்தில்
அன்னையின் திருக்கரத்திலிருந்த
வில்லும் கணையும் நழுவி விழுந்தன...

வீரமும் கோபமும் கொதித்துக் கொண்டிருந்த திருவிழிகளில்
நாணமும் காதலும் குழைந்து நின்றன....

அதுவரையிலும்
அம்பிகையின் திருமேனியில் பொலிந்திருந்த
மூன்றாவது திருத்தனபாரம் மறைந்து போனது...

அருகிருந்த அமைச்சர் சுமதி சொன்னார்..
தாயே... சோமசுந்தரப் பெருமானே தங்களது மணாளர்!...

தன்னைத் தானே ஒளித்துக் கொண்டிருந்த
அம்பிகையும் புன்முறுவல் பூத்தாள்...

பெருமானே!.. தாங்கள் மதுரையம்பதிக்கு எழுந்தருளி
அம்பிகையின் திருக்கரம் பற்றியருள வேணும்!...

எம்பெருமானின் திருமுகத்தில் புன்னகை பொலிந்தது..

அந்த அளவில் மாமதுரை மங்கலக் கோலம் பூண்டது...

ஸ்ரீஹரி பரந்தாமன்
மீனாம்பிகையின் திருக்கரத்தினைப் பற்றி
எம்பெருமானின் திருக்கரத்தினில் ஒப்புவித்து
பாணிக்கிரஹணம் செய்விக்க
ஐயன் அம்பிகைக்கு மங்கலநாண் சூட்டியருளினார்...

அண்ட பகிரண்டமும் ஆனந்த கோலாகலத்தில் ஆழ்ந்தது...

பத்தாம் (17/4) திருநாள் காலை
திருக்கல்யாணம்

மணமகளாக வந்த மரகதவல்லி பூத கணங்களுக்கு அன்ன வைபவம்..
( இருவரில் யார் குண்டோதரன்!?..)
பத்தாம் (17/4) திருநாள் மாலை
யானை வாகனம் - பூம்பல்லக்கு


திருமணத்திற்கு வருகை தந்த
திருமுருகனும் தெய்வயானையும்
 


மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடை மேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் வந்து என்புந்தி எந்நாளும் பொருந்துகவே..
-: அபிராமிபட்டர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ  

12 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  சோமசுந்தரனைக் கண்டதும் கோபம் மறைந்து நாணம் குடிகொள்ளும் காட்சி 'அ'பாரம்.

  பதிலளிநீக்கு
 2. வழக்கம் போல படங்கள் அற்புதம். தரிசனம் செய்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. மகிழ்வான காலை வணக்கம் துரை அண்ணா.

  படங்கள் செமையா இருக்கு. பதிவு வாசிக்க வருகிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. கச்சட்டி மண்டபம் எனப்படும் கட்டுச்செட்டி மண்டபத்திலும், அன்னக்குழி மண்டபத்திலும் ஓடோடிச் சென்று பார்த்த காட்சிகளை மறக்க முடியவில்லை. வலப்பக்கம் இருப்பவனே குண்டோதரன்! திருக்கல்யாணக் காட்சிகளைத் தொலைக்காட்சி மூலமும் பார்க்க நேர்ந்தது. கடமையை ஆற்றிவிட்டு மீண்டும் வருவேன்.

  பதிலளிநீக்கு
 5. அழகான காட்சிகள். உங்கள் வர்ணனை வெகு சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. படங்களின் தரிசனம் அருமை

  //விளைவு - வெற்றிகரமான தோல்வி//

  ரசித்தேன் ஜி இந்த வர்ணனையை...

  பதிலளிநீக்கு
 7. அழகான கதை! சோமசுந்தர தரிசனம் அருமை.

  வீரம் குடிகொண்டிருந்த விழிகள் காதலில் நனைந்த அந்த வரிகள் அனைத்தும் ரசித்த வரிகள்! உங்கள் தமிழைச் சொல்லவும் வேண்டுமோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஒரு பக்கம் படங்கள் சிறப்பு என்றால், சொன்னவிதம் அதை விட...

  பதிலளிநீக்கு
 9. கதை சொன்ன விதம் அருமை.
  படங்கள் எல்லாம் மிக அழகு.
  திருக்கல்யாணம், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கொவிலில் பார்த்தேன்.
  இரவு சங்கரா தொலைக்காட்சியில் பார்த்தேன் வீதி உலா காட்சி.

  பதிலளிநீக்கு
 10. முன்பெல்லாம் பூப்பல்லக்கின் மணம் ஒரு காத தூரம் வீசும். அதனுள் ஒரு பக்கமாகப் பார்த்த வண்ணம் வெட்கத்தோடு அமர்ந்திருப்பாள் மீனாக்ஷி. அந்த அழகைக் காணக் கண் கோடி இருந்தாலும் போதாது. இப்போதைய பல்லக்கில் பூவின் ஆதிக்கம் குறைவு. படங்களை ஒவ்வொன்றாக ரசித்தேன். அருமையான விபரங்களுடன்கூடிய பதிவு!

  பதிலளிநீக்கு
 11. படங்களை மிகவும் ரசித்தேன்...குறிப்பா பூத கணங்களை... அருமை...

  பதிலளிநீக்கு
 12. யார் குண்டோதரன் என்பதில் சந்தேகமா? அமர்ந்து சாப்பிட ரெடியா இருப்பவர்தாம்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..