நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 24, 2019

செப்பறைச் செல்வன் 1

செப்பறை எனப்படும் தாமிரசபை 
சென்ற வாரத்தில் ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள் தனது தளத்தில்
நெல்லைக்கு அருகிலுள்ள செப்பறை நடராஜப்பெருமானைத் தரிசனம் செய்தபின் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்கள்..

அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார்கள்..

காடு போன்ற சூழலில் இருக்கும் கோயிலைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை...

அடர்ந்த வனத்தினுள்ளும் மலை உச்சிகளிலும் அருவிச் சாரல்களிலும் எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள்...

இங்கே பேசப்படுவது திருக்கோயில்களில் விளங்கும் கலைநயமிக்க சிற்பங்களை தூண்களை ஓவியங்களைப் படம் எடுப்பதில் உள்ள அணுகுமுறைகளைப் பற்றி...

கோயிலினுள் மூலஸ்தானத்தைப் படம் எடுப்பதற்கு அவ்வளவு எளிதாக யாரும் துணிந்து விடுவதில்லை..

ஆங்காங்கே காணப்படும் கலை நயமிக்க காட்சிகளைப் படமாக்கி மகிழ்வுடன் பகிர்ந்து கொள்வதற்கு எவர் மனதிலும் ஆவல் எழுவது இயற்கை...

அத்தகைய ஆவல் குன்றிப் போகுமாறு - இங்கே படமெடுக்கக் கூடாது என்று அதட்டுவதும் சேவார்த்திகளின் பின்னேயே வந்து விரட்டுவதும் கண்காணிப்பதும் ஏன் என்பது தான்...

அதேசமயம் பல கோயில்களிலும் நிகழும் மூலவர் அபிஷேகத்தையே ஊடகங்கள் முற்றாக ஒளிபரப்புவது எப்படி:...

சாமான்யருக்கு ஒரு நீதி.. ஊடகங்களுக்கு ஒரு நீதியா?..  என்பன
வேதனை தரக்கூடிய விஷயங்கள்...

நான் இதைப் போல பல கோயில்களில் அனுபவித்திருக்கிறேன்...

வைத்தீஸ்வரன் கோயிலில் இரட்டைக் கொடிமரங்கள்..

ஒரு சமயம் அவற்றை படமெடுக்க முயன்றபோது பாய்ந்து வந்தார் பணியாளர்.. அதே சமயம் அங்கு நிகழ்ந்த காதணி விழாவைச் சுற்றி சுற்றிப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்..

இதே போலத்தான் திருக்கடவூரிலும்...

அங்கே கோமுகத்தில் ஓடி வந்த அபிஷேகப் பாலைப் பிடித்து அங்கிருந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுடன் இருந்த பெண்களுக்கும் கொடுத்தபோது பெரிய பிரச்னை ஆகி விட்டது...

நீ யார்.. இந்த மாதிரி செய்வதற்கு?.. என்றபடி கோயில் வேலையாள் சண்டைக்கு வந்து விட்டார்...

ஒருமுறை தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனைப் படமெடுக்க முயன்ற போது - அங்கிருந்த கோயில் பணியாளர் என்னிடமிருந்த கேமராவைப் பிடுங்க முயற்சித்தார்...

படமெடுக்கக் கூடாது என்று சொன்னீர்கள்.. எடுக்கவில்லை..
அத்தோடு விட்டு விட வேண்டும்... அதற்கு மீறி கேமராவைப் பிடுங்க முயற்சிப்பது சரியில்லை!.. - என்று திருப்பிப் பேசியதும்

வந்த வழியே போய் விட்டார்.. ஆனால் -

நவராத்திரி விசேஷங்களின் போது பத்திரிக்கைக் காரர்களும்
உள்ளூர் புகைப்படக் கலைஞர்களும் மூலஸ்தானத்தில் அம்மன் அலங்காரத்தை வெளியிடுகின்றார்கள்..

இது என்ன நீதி என்று புரியவில்லை...

சமீபத்தில் நெல்லையப்பர் திருக்கோயிலில்
நந்தி மண்டபத்தில் அந்த அழகிய சுதை நந்தியை படமெடுத்துக்கொள்ள அங்கிருந்த அலுவலர்களைக் கேட்டபோது - ஏளனமாகச் சிரித்தார்கள்..

ஆனால் உற்சவத் திருமேனிகளுக்கு நடக்கும் திருமஞ்சனப் படங்கள் Fb ல் உடனுக்குடன் வெளியாகின்றன...

இதைப் போலத்தான் செப்பறை திருகோயிலிலும் நடக்கிறது...

வெளியாட்களுக்குத்தான் உள்ளே படம் எடுக்க அனுமதி தரமாட்டார்கள்...

ஆனால் அவர்கள் படமெடுத்து வெளியிடுவார்கள்...

அந்தவகையில் -
சென்ற மார்கழி திருவாதிரை நிகழ்வுகளை
செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோயில் என்ற இணைப்பில் வெளியிட்டிருக்கின்றனர்..

நமக்கு வேண்டியது ஸ்வாமி தரிசனம்..


அதன்படி மார்கழித் திருஆதிரை விசேஷத்தின் போது எடுக்கப்பட்ட படங்களுள் ஒரு சில இன்றைய பதிவில்...

செப்பறை நடராசப் பெருமானின் கோலாகலத்தை அனைவரும் அறியும் படிக்கு படமெடுத்து வழங்கிய நல்லோர் தமக்கு மனமார்ந்த நன்றிகள்...

இந்தப் பதிவை ஒழுங்கு செய்த பின் ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது தளத்திற்குச் சென்றேன்... ராசி புரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் தரிசனம் பற்றி எழுதியிருந்தார்கள்..

அம்மன் அலங்காரத்தில் மயங்கி படமெடுத்துக் கொள்ளக் கேட்டபோது
அம்மா வந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாராம் குருக்கள்..

எவ்வளவு நல்ல மனசு!..

அந்த அளவில் எடுக்கப்பட்டபோது அருள் முகம் காட்டிய அம்மன் படம்
கூடுதல் இணைப்பாக இதோ!...

ஸ்ரீ நித்ய சுமங்கலி மாரியம்மன் - ராசிபுரம்..
என்னதான் படங்கள் எப்படித்தான் வெளியானாலும்
நாம் நமது கண் வழியாக எடுத்த படங்கள் தான் நமது நெஞ்சுக்கு நிம்மதி..
அவை தரும் சந்தோஷத்துக்கு ஈடு இணையில்லை...

இப்படியே சொல்லிக் கொண்டு -
கோயிலுக்கு வருவோரெல்லாம் கையில் கேமராவுடன்
சந்நிதியை அடைத்துக் கொண்டு நின்றால் அது சரியாகுமா?...

அதுவும் சரியில்லை தான்!...

சந்நிதியில் படமெடுக்க வேண்டாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..
ஆங்காங்கே மண்டபத்துத் தூண்களில் அழகிய சிற்பங்களைப் படமெடுக்க  அனுமதிக்கலாம் தானே!...

அது கிடக்கட்டும் ஒரு புறம்..
கிடைத்த வரைக்கும் ஆதாயம்!...

நாம் இப்போது அழகிய கூத்தனைத் தரிசனம் செய்வோம்..

மங்கல மூர்த்திக்கு
மஞ்சளால் அபிஷேகம்
ஆனில் ஐந்தாடும் அழகிய கூத்தன் 


தேனார் மொழியாளுக்குத்
தேன் கொண்டு அபிஷேகம் 


கழலடிக் கீழ் காரைக்காலம்மையார் 


இறைவா.. நின் அடிக்கீழ் இருக்க..
நல்லக விளக்கது நம சிவாயவே..
மேலும் சில படங்களுடன் அடுத்த பதிவினில் சந்திப்போம்....

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

30 கருத்துகள்:

  1. அனைத்தையும் ரசித்தேன். ஒரு விசேஷத்துக்குச் செல்வதால் பிறகு...

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம். இதுபற்றி பிறகு எழுதுகிறேன்.

    அழகிய கூத்தன் படங்களைப் பார்த்தபிறகு கூதா சாம்பசிவம் மேடம் அவர்களின் பதிவை இன்னும் நல்லா ரசிக்க முடியுது. மிக அருமையான செப்பறை நடராஜ தரிசனம் (மற்ற படங்கள் கோமதி அரசு மேடம் எடுத்த படங்கள் உட்பட அருமை). நடராஜர் படம் கலைநயமிக்க அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐபேடில் தட்டச்சு செய்யும்போது, சரியாக கவனிக்க முடிவதில்லை. தவறு நேர்ந்துவிடுகிறது... கீதா சாம்பசிவம் மேடம்.... தவறா எடுத்துக்காதீங்க...

      நீக்கு
  3. அழகிய கூத்தனின் அபிஷேகம், அலங்காரம் எல்லாம் கண்டு மகிழ்ந்தேன்.

    உற்சவர்கள் வீதி உலா வரும் போது சுவாமியை படம் எடுக்கும் போது அலைபேசிகளும், காமிராக்களும் உயர்ந்து நிற்கும் அதனுடன் தான் இப்போது எடுக்க முடிகிறது. அவ்வளவு ஆர்வம் எல்லோருக்கும் சுவாமியை சிறைபிடிப்பதில்.
    மனதில் சிக்கனபிடித்தபின் படங்கள் தேவை இல்லை தான்.ஆனலும் மனது எடுக்க சொல்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா, நம் மனதில் இறைவனைச் சிக்கெனப் பிடித்தாலும் இப்படி கேமராவில் எடுப்பதில் வெளியிடுவதில் எத்தனையோ பேருக்கு, அதுவும் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்குப் பார்த்து மகிழ உதவும் தானே!

      வல்லிம்மா கூடச் சொல்லிருக்காங்க பாருங்க இப்ப அவங்க வெளிநாட்டுல இருப்பதால...இப்படிப் பார்த்து மகிழ அவங்களுக்கு எவ்வளவு சௌகரியம்...என்னதான் மீடியா எடுத்தாலும் துரை அண்ணா சொல்லிருப்பது போல நாம் எடுப்பதும், நம் நட்புகள் எடுத்து இப்படி வெளியிடுவதும் கொஞ்சம் மனதிற்கு இன்னும் மகிழ்வாகத்தானே இருக்கு இல்லையா...

      கீதா

      நீக்கு
    2. கோமதிக்கா நீங்க எடுத்த அம்மன் படம் செம....அங்கும் ரசித்தேன் இங்கும்....மீண்டும்..

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் கீதா, நீங்கள் சொல்வது சரிதான்.
      உற்சவ காலங்களில் தெய்வங்கள் வீதி உலா வருவதின் காரணம் கோவிலுக்கு வர இயலாதவர்களுக்கு, உள் நுழைய முடியாதவர்களுக்கு ஏற்பட்டது தான் கீதா.

      நீக்கு
  4. பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேசங்களில் நாம் எடுக்க முடியாது.
    அவர்கள் கோவில் பெருமையை அனைவருக்கும் தெரிவிக்க தொலைக்காட்சிகளுக்கு அவர்கள் உரிமை வழங்கி அதன் பின் எடுக்கப் படுகிறது. அப்படியும் சில கோவில்களில் உற்சவர்களை மட்டுமே காட்டுவார்கள்.

    மூலவர்களை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.
    நான் எடுத்த படத்தையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! கோமதிக்கா நீங்க சொல்லியிருக்கும் கருத்து புரிகிறது....அதனால்தான் மீடியாக்களில் வருகிறது இல்லையா?

      சரி..அது புரியுது ஆனால் பிற கோயில்களில் அண்ணா சொல்லிருப்பது போல நடக்கிறதே...அட்லீஸ்ட் சிற்பங்களையாவது எடுக்க அனுமதிக்கலாம் இல்லையா ..

      நான் இன்னொன்றும் கவனித்தேன் கோமதிக்கா....ரொம்ப ஃபேமஸ் ஆகாத கோயில் என்றால் எடுக்க அனுமதிக்கறாங்க அதாவது கூட்டம் வராத கோயில் என்றால். ஃபேமஸ் கோயில் என்றால் அனுமதி இல்லை என்பதையும்...

      கீதா

      நீக்கு
    2. வெளி நாடு, வெளியூர் கோவில்கள் , வெளி மாநில கோவில்கள் எல்லாம் வீட்டில் இருந்த படியே இப்போது தரிசிக்க முடிகிறது. கூட்டம் வரும் கோவில்கள்தான் இப்போது நிறைய வருகிறது கீதா.
      சில சேனலில் ஆலய தரிசனம் என்று தினம் கோவில்கள் காட்டுகிறார்கள்.
      நமக்குதான் வரமுறைகள் போடுகிறார்கள். எடுக்கலாம், எடுக்க கூடாது என்று எல்லாம்.

      நீக்கு
    3. பழைய கோயில்கள் எனில் ஆள் நடமாட்டம் இல்லாத கோயில்களில் தான் ஓரளவுக்கு எடுக்க முடியும்.

      நீக்கு
    4. தொலைக்காட்சியில் போட்டால், புகழ் அதிகமாகி ஆட்கள் நிறைய வருவார்கள். நாம போட்டோ எடுத்தா, வர்ற கொஞ்சம் நஞ்சம் பேருக்கும் இடைஞ்சல். இந்தப் பாயிண்டை விட்டுட்டீங்களே..

      நீக்கு
  5. நெல்லைத் தமிழன் கீதா சாம்பசிவம் அவர்கள் பெயரை மாற்றி விட்டார் அவசரத்தில்.

    பதிலளிநீக்கு
  6. இராசிபுரத்தில் இரண்டு அம்மன் கோவில் போய் இருந்தோம், மாரியம்மன் கோயிலில் அனுமதி தந்தார்கள். அங்காளபரமேஸ்வரி கோயிலில் அனுமதி இல்லை.

    பதிலளிநீக்கு
  7. நான் காமிராவில் எடுக்கவில்லை ஃப்ளாஸ் அடித்தால் அம்மனுக்கு கஷ்டம் என்று அலைபேசியில் எடுத்தேன்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ஜி
    தங்களது கேள்வியில் உள்ளது பொதுநலமே...

    எல்லாம் வியாபார நோக்கில் சென்று விட்டது என்ன செய்வது ?

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...

    அண்ணா உங்க ஆதங்கத்தை அப்படியே நான் டிட்டோ செய்கிறேன். அதே அதே...சாமானியர் எடுப்பதற்குத் தடை...ஆனால் மீடியாக்கள் எடுத்துத் தள்ளுகின்றன இன்னும் சிலருக்கு ஸ்பெஷல் அனுமதி என்று.. ஏன் இந்த பாரபட்சமோ...

    சரி நாம் ஒன்னு செய்வோம்...அடிக்கடி தேம்ஸ் கரையில் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தும் உண்ணாவிரதப்போராட்ட ஃபேமஸ் அதிரடியைக் கூப்பிட்டுக்குவோம் இங்க போராட!! ஹா ஹா ஹா

    படங்கள் அனைத்தும் செம அழகு! நல்ல தரிசனம்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சாமானியர்களுக்கு ஒரு நீதி
    வலுத்தவர்களுக்கு ஒரு நீதி
    இதுதான் என்றென்றும் உலக வழக்கு

    பதிலளிநீக்கு
  11. நடராஜர் ஸ்வரூபம் மிக நேர்த்தியாக இருக்கிறது.

    ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இப்படிச் சிற்பக்கலை (உலோகத்தில்) இருந்திருந்தால், எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் அந்தத் தொழில் நுட்பம் இருந்திருக்கவேண்டும்? சிலையைப் பெரிதாக்கிப் பார்த்தால் புன்னகை, சாந்தமான கண்கள் என்று ரசனையை உயர்த்துகிறது. அடியார்கள் சிற்பங்கள் என்று நம் முன்னோர்களின் திறமை.... எங்கேயோ மிக உயரத்தில் இருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. நான் இந்த 'சிலையைப் படமெடுக்க விடாதது' என்பதை இரண்டுவிதமாகச் சிந்திக்கிறேன்.

    இப்போ நீங்க பதிவுல போட்டுத்தான் அந்த நடராஜரின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொள்வது தெரிகிறது.

    ஆனால் எத்தனை எத்தனை ஆயிரம் சிலைகள் 'நம்பிக்கையற்றோர்களால்' களவாடப்பட்டிருக்கின்றன. இன்னும் சிலைக்கடத்தல் நடந்துகொண்டிருக்கிறது. (ஐம்பொன் சிலையைத் திருடிவிட்டு அந்த இடத்தில் அதேமாதிரி செப்புச் சிலையை வைத்த அவலங்களும் நடந்திருக்கின்றது). கூட்டத்தில் யார் நல்லவர்கள் யார் கெடுதல்காரன் என்று யாருக்குத் தெரியும்?

    இப்போகூட ராஜராஜ சோழன் சிலையை மீட்டார்களே தவிர, எந்த அயோக்கியன் அதனை குஜராத்துக்கு விற்றான் என்பதை யாரும் கண்டுபிடிக்க விரும்பவில்லை. இது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்.

    இரண்டாவது, செல்போன் வந்ததிலிருந்து பக்தி குறைந்து, காட்சி சாலைக்குப் போனதைப்போல் எல்லோரும் படம் எடுத்துக்கொள்ள, செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். பொதுவா, தெய்வச்சிலையை நோக்கி நிற்பதற்குப் பதிலா திரும்பி நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வதில் நாம் வெட்கம் காட்டுவதில்லை.

    பதிலளிநீக்கு
  13. சில கோவில்களில், மூலவரைத் தவிர மற்ற இடங்களைப் படமெடுக்க, நல்லவர்களுக்கு அனுமதி தருகிறார்கள் என்றே நினைக்கிறேன். பல இடங்களில் கோவிலுக்கு ஒரு தொகை (நூறு ரூபாய்) டிக்கட் வாங்கி பிறகு படமெடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். அதில் தவறில்லை (கும்பகோணம் ராமசாமி கோவிலில்). நான் சக்ரபாணி கோவிலில், மராட்டிய ராஜா சிலையைப் படமெடுக்க தக்கார் அனுமதி கேட்டபோது அனுமதித்தார்கள்.

    கோவிலில் பணிபுரிபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் (அரசாங்கப் பணியாளர்களால்) கொடுக்கப்படுகின்றன. அதே சமயம் அந்தப் பணியாளர்கள் மூலமாக வருபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கவேண்டிய கட்டாயமும் இருக்கின்றது. அதனால்தான் படமெடுக்க விடுவதில் இத்தனை பேதங்கள் (வல்லாரிடம் பணிவு, மெல்லாரிடம் அதிகாரம் அல்லது ரூல்ஸை மதிக்கச் சொல்லுதல்)

    மிகுதி பிறகு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உ.பி.கோயில் போனப்போக் கீழேயே காமிரா டிக்கெட் வாங்கிக் கொண்டு தான் போனோம்.ஆனால் தாயுமானவர் கோயிலில் எடுக்க விடவில்லை! :( சரினு எடுக்கலை. சமணப்படுக்கைகளைத் தேடினால் மலையின் அந்தப் பக்கம் என்றார்கள்.வெயில் அதிகமாய்த் தெரியவே போக முடியலை! கூட வந்தவர்கள் எங்களை விட வயது ஆனவர்கள் என்பதால் வந்தவரை போதும்னு திரும்பிவிட்டோம்.

      நீக்கு
    2. கீசா மேடம்... நான் உங்கள் இருவரோடு கோவிலுக்கு வந்தால், என் ராசியினால் உங்களையும் படம் எடுக்க அனுமதிப்பார்களா இல்லை உங்கள் ராசியினால் என்னையும் படமெடுக்கக்கூடாது என்று தடுத்துவிடுவார்களா?

      நீக்கு
  14. சில கோவில்களில் மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள் என்று சிலர் சொல்லியிருந்தனர். அது மிகுந்த வருத்தத்துக்கு உரியது. அந்த பிஹேவியரை நான்,

    'நாய் பெற்ற தெங்கம்பழம்'

    என்பதற்கு உவமையாக நினைப்பேன். தெய்வம் அருகில் இருக்கும் பேறு, தன்னுடைய வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும், இன்னும் கீழே கீழே மனம் செல்லுகிறது (அதாவது பக்தர்களை அவமதித்தல், பகவானை அவமதிப்பதை விட மிகக் கொடுமையான தண்டனைக்குரியது என்பதை அறிந்தும்)

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் கூறியதை நான் பல இடங்களில் அனுபவித்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  16. அருமையான தரிசனம். செப்பறை நன்றாகப் படத்தில் வந்திருக்கிறது. இந்தப் படிகளில் ஏறத்தான் சிரமப்பட்டேன். :) பார்த்தால் இதுவா எனத் தோன்றலாம். ராசிபுரம் அம்மன் அலங்காரமும் அருமை! கோமதி அரசு ஊருக்குப் போய் வந்த பின்னர் பதிவு போட்டிருப்பது தெரியாது. இங்கே தான் தெரிந்தது. இனி போய்ப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  17. இந்தச் செப்பறைக் கோயிலுக்குக் காரைக்கால் அம்மையார் எப்படி வந்தார் என்பதே தெரியலை. திருவாலங்காட்டில் தான் காரைக்கால் அம்மையார் உண்டு. இங்கே எப்படி வந்தார்னு புரியலை. சிதம்பரத்தில் மாணிக்கவாசகர்!மூவருக்கும் மரியாதை உண்டு என்றாலும் திருவாதிரை சமயம் சேந்தனார், மாணிக்க வாசகர். தினம் தினம் கால வழிபாட்டின் போது திருவாசகம் சொல்லிப்பின்னர் மாணிக்க வாசகருக்கு தீபம் காட்டிப்பின்னர் நடராஜருக்குக் காட்டுவார்கள். அந்த நேரம் கோயில் மணி ஓசை எல்லாம் நின்று ஓதுவார் பாடும் குரல் மட்டும் கேட்கும். அது முடிந்தவுடன்"கணீர்"என மணி ஓசை எழும்பும்! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு அது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..