நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 08, 2019

தை வெள்ளி


மங்கலங்கள் அனைத்திலும் மகா மங்கலமானதொரு நாள் இருக்கின்றதெனில் -

அது தை மாதத்தின் நிறைவான வெள்ளிக் கிழமைதான்...

இந்தநாளில் அதிகாலையிலேயே எழுந்து வீட்டினுள் அறைகள் முக்கியமாக சமையலறை மற்றும் சயன அறை எல்லாம் தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்து 

அப்படி இப்படியான துணிகள் பாய், படுக்கை விரிப்பு வகையறாக்களை எல்லாம் துவைத்துப் போட்டு 

தலைவாசலில் கோலமிட்டு நிலைப்படிகளில் பொட்டு வைத்து -

வழிபடும் இடத்தில் குத்து விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கலுடன் தீப தூப ஆராதனைகள் செய்தபோது கிடைத்த நிம்மதியும் சந்தோஷமும் அடுத்து வரும் நாட்களில் ஆரோக்ய வாழ்வினை உறுதி செய்தது...

இதெல்லாம் பாரம்பர்யப் பழக்கங்களாக இருந்த அந்தக் காலம் போல இனி எப்போது வரும் என்று தெரியவில்லை..

அதிலும் நிலை வாசல்படிக்கு வெள்ளிக் கிழமைகளில் தோரண அலங்காரங்களுடன் சிறப்பான பூஜைகள் செய்வதை வழக்கமாகவே கொண்டிருக்கும் குடும்பங்களும் உள்ளன..

வீட்டில் பசுவும் கன்றும் இருந்தால் அவற்றையும் குளிப்பாட்டி பொட்டு வைத்து இன்னும் கோலாகலமாக இருக்கும்...


இந்த தலைவாசல் நிலை உச்சி இருபுறமும் யானைகளுடன் கூடிய மஹாலக்ஷ்மியின் திருவுருவத்துடன் கூடியதாக இருக்கும்..

இப்படி நிலைவாசலின் மேல் பொருத்தப்படும் லக்ஷ்மியின் திருத் தோற்றத்துக்கு ஆதி லக்ஷ்மி என்ற பெயர் சொல்லப்பட்டாலும் இன்னொரு பெயரும் உண்டு... அது -

ஸ்ரீராஜ்ய லக்ஷ்மி..
தஞ்சை பெரிய கோயிலில் மஹாலக்ஷ்மியின் சித்திரம்
இத்திருத்தோற்றத்தை எல்லா சிவாலயங்களிலும் தரிசிக்கலாம்...

சிவாலயத்தின் நிலைப்படிகளின் உச்சியில் கூட இந்தத் தோற்றம் செதுக்கப்பட்டிருக்கும்..

புராணங்களிலும் தோத்திரங்களிலும் ராஜ்ய லக்ஷ்மியின் பேரும் புகழும் காணக் கிடைக்கின்றன..

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் நடத்திய யாகம் ராஜசூய யாகம்..

பாரதத்தின் மன்னர்களுள் குப்தர்கள் லக்ஷ்மியை அதுவும் ராஜலக்ஷ்மியைக் குல தெய்வமாகக் கொண்டாடியிருக்கின்றனர்..

வட பாரதத்தின் மா மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் 
 ஸ்ரீ ஹர்ஷ வர்த்தனர்..இவரது காலம் கி.பி. 600 - 647 ஆகும்..

இவருக்கு ஒரு தங்கை.. அவள் பெயர் ராஜ்யஸ்ரீ..

ஸ்ரீ மஹாலக்ஷ்மி
தஞ்சாவூர் கலைப்பாணி..
 
சரி.. இதெல்லாம் இங்கே எதற்கு!?..

17 ஆம் நூற்றாண்டில் ராஜ் என்னும் பெயர் இருந்ததோ ?..

- என்று நேற்றைய பதிவில் நெல்லைத் தமிழன் அவர்களை நோக்கி ஞானனந்த கவியமுதம் அதிரா அவர்கள் தொடுத்த வினாவுக்காக விடைகளே..

அந்தக் காலத்திலேயே
ராஜ்யம் , ராஜ்ய பரிபாலனம், ராஜகுமாரன், ராஜகுமாரி எனும் வார்த்தைகள்
புழங்கியிருக்கின்ற போது

பதினேழாம் நூற்றாண்டில் ஜயராஜ் எனும் பெயர் விசித்திரம் ஆகக் கூடுமா?...

ஸ்ரீ மஹாலக்ஷ்மி
தஞ்சை பெரிய கோயில்.. 
காணும் எல்லாவற்றையும் லக்ஷ்மி ரூபமாகக் காண்பது ஒரு மரபு..

இல்லறத்தில் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் மகாலக்ஷ்மி பிறந்திருக்கிறாள் என்பார்கள்..

வீட்டிற்கு வரும் மணமகளை - மருமகளை மகாலக்ஷ்மியாகப் பாவிப்பது தொன்று தொட்டு வரும் வழக்கம்...

இந்த நாளில் பதிவு ஒன்றினை சமர்ப்பிப்பதற்கு ஆயத்தமாகியபோது நேற்றிரவு இணையம் இயங்கவில்லை..

இன்று காலையில் தளத்திற்கு வந்து -
நேற்றைய பதிவைக் கவனித்தபின் உருவாகிய பதிவுதான் இது...

ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்
ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் - மன்னார்குடி.. 
எல்லாரும் எல்லா நலன்களையும் பெற்று வாழ்ந்திட 
இந்நாளில் பிரார்த்தனை செய்வோமாக..

யாதேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

வாழ்க நலம்  
ஃஃஃ 

15 கருத்துகள்:

 1. உங்கள் பதிவு அம்மாவை எனக்கு நினைவு படுத்தி விட்டது. அம்மாவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்புதான்.
  எங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லி அம்மாசெய்து தரும் சர்க்கரை பொங்கலை வைத்து கும்பிட சொல்வார்கள்.
  திருவிளக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

  ஸ்ரீ ஹர்ஷவர்த்தனர் தன் வெற்றிவிழாவில் அனைத்தையும் தானம் செய்து விட்டு தங்கை ராஜ்யஸ்ரீயிடமிருந்து துணி வாங்கி கொண்டார் படித்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கு நல்வரவு...

  ஹர்ஷ வர்த்தனர் மனம் கவர்ந்தவர்.. தங்கையின் கணவனை வீழ்த்தி அவளது வாழ்வை அழித்த மன்னனைப் பழி தீர்த்து விட்டு தனது பாதுகாப்புக்காக வனத்துக்குள் ஒளிந்து கொண்ட தங்கையைக் காப்பாற்றி நாட்டுக்கு அழைத்து வந்த பிறகே ஹர்ஷர் பட்டமேற்றார்..

  தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 3. இனிமையான வெள்ளிக்கிழமை நினைவுகள். ஹர்ஷவர்த்தனர் பற்றிப் பள்ளியில் படித்தது. பின்னால் நாடகமாயும் போட்டோம். சிவன் கோயில் முகப்புகளில் மஹாலக்ஷ்மி கட்டாயம் இடம் பெறவேண்டும். அதே போல் கோஷ்டத்திலும் மஹாலக்ஷ்மி சந்நிதி தனியாகக் காணப்படும். நேற்று அதிரா நெல்லையிடம் கேட்டிருக்கும் கேள்வியைச் சரியாக் கவனிக்கலை. கவனித்திருந்தால் நேற்றே பதில் சொல்லி இருப்பேன். ஆனால் இப்படி ஓர் இனிமையான நினைவலைகளுடன் கூடிய பதிவு வந்திருக்காதோ என்னமோ! அதான் என் கண்ணில் படவில்லை. :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அக்கா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   எல்லாரையுமே ஹர்ஷவர்த்தனன் கவர்ந்திருக்கின்றான் எனில்
   அதற்குக் காரணம் அவன் தனது தங்கையின் மீது கொண்டிருந்த பாசம் தான்..

   நீக்கு
 4. தைவெள்ளிக்கிழமை பதிவு சிறப்பு. ஹர்ஷவர்தனர் பற்றி பள்ளிக்காலங்களில் படித்தது. இன்று எங்கள் வீட்டில் பாஸ் அருமையான சர்க்கரைப்பொங்கல் செய்திருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தை வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல். வடை பாயசம் என்றால் அமோகம் தான் அமிர்தம் தான்...

   அன்பின் ஸ்ரீராம் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. எங்கள் வீட்டில் என் விருப்பம், இனிப்பு சுண்டல்... அட்டஹாசமா இருந்தது. (ஆனால் தஞ்சை, கும்பகோணம் பகுதியில் இனிப்பு சுண்டல் செய்யும் வழக்கம் இல்லையாமே)

   நீக்கு
  3. யார் சொன்னது? என் மாமியார் வீட்டில் இன்னும் சொல்லப் போனால் கும்பகோணம் பக்கம்/தஞ்சை ஜில்லாப் பக்கமே இனிப்புச் சுண்டல் அதிகம். பச்சைப்பயறில் நான் உப்புப் போட்டுக் காரச் சுண்டல் செய்தாலே என் புக்ககத்தினர் சிரிப்பார்கள். :)))))

   நீக்கு
  4. நவராத்திரியில் கூட பயறு, தட்டாம்பயறு எனப்படும் காராமணி ஆகியவற்றில் வெல்லம் போட்டுத் தான் என் மாமியார் செய்வார். அவற்றை நான் முளைக்கட்டிப் பயன்படுத்துவது கூட அவங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும். அதோடு இல்லாமல் வெங்காயம், தக்காளி போட்டுப் பயறைக் கூட்டாகச் செய்து சப்பாத்திக்குத் தொட்டுக்கக் கொடுப்பதும் அவங்களுக்குத் தெரியாத ஒன்று. பின்னர் வந்த நாட்களில் வடமாநிலத்தில் வசித்த பின்னர் புரிந்து கொண்டார்கள். அதுக்கு முன்னால் எல்லாம் நான் பண்ணுவது சிரிப்பாக இருக்கும். கீரையில் கூட வெறும் மசியல் தான் தெரியும்.

   நீக்கு
 5. விளக்கமான பதிவு, ஓம் இன்றுதானே தையின் கடசி வெள்ளி.. இம்முறை 11 ம் திகதியே மாசி பிறக்கிறதே... வழமையாக 15,16,17 இல் தானே மாதப் பிறப்பு வரும்.

  பதிலளிநீக்கு
 6. ஓ இன்று கடைசி தை வெள்ளியோ....விளக்கம் எல்லாம் அருமை.

  தை சீக்கிரம் முடிவது போல் உள்ளது. முதல் லக்ஷ்மி படம் அப்படியே என் ஊரில் நாங்கள் அம்மா வழி பாட்டியுடன் பாட்டி வீட்டில் திண்ணை நிலைப்படியிலிருந்து உள் வரை மரம் தான் அதில் இப்படியான சிற்பங்கள் உண்டு. மிக மிக அழகாக இருக்கும். பச்சை கலர் அடித்து வைத்திருந்தாலும் தெரியவே தெரியாது பழமைவாய்ந்தது போல இருக்கும். திண்ணை திண்ண படிகளில் ஏறியதும் சிறிய நடை, நடையிலிருந்து அதற்கடுத்து சிறிய ஹால் ட வடிவில் நடைக்கும் ஹாலுக்கும் இடையே சுவர் இல்லாமல் மரத்தினால் ஆன சுவர் நிலைப்படியில் சிற்பங்கள் அடுத்து ஹாலில் அங்கு தான் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் மரத் தூண்கள் மற்றும் உத்திரம் முழுவதும் வேலைப்பாடுகள் என்று அழகு மிக மிக மிகச் சிறிய வீடு ஹாலில் ஒரு குச்கில் என்று சொல்லப்படும் சாமான் அடுக்கும் சிறிய அறை.. அடுத்து முற்றம் ஒட்டி சிறிய அடுக்களை அடுத்து சிறிய கொட்டில், முற்றம் திறந்தவெளிதான். கதவுகள் எல்லாமே மரம்...கொட்டிலை அடுத்து கொல்லைப்புறம் அங்கு அழகான ஓடை மாமரம். வாழை, துளசிமாடம் கிணறு என்று ஹையோ...அந்த ஒரு படத்தைப் பார்த்ததும் என்னெல்லாம் நினைவுகள் பாருங்கள்....ஆனால் அதற்குப் பிறகு அந்த வீடு கொஞ்சம் உருமாறிவிட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. எத்தனை விளக்கங்கள் ...அனைத்தும் மிக சிறப்பு

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அருமையா போட்டிருக்கீங்க. தை வெள்ளியை நினைவுபடுத்தும் இடுகை. காலையிலேயே போடலையே (அல்லது நான் காணத் தவறிட்டேனோ?)

  ஹர்ஷவர்தன் - வட இந்திய அரசனல்லவா? 'ஜ' வடமொழில உண்டு. தமிழ்ல எப்படி என்று அதிரா கேட்டிருந்தார்கள். பல்லவ அரசர்களில் 'ஜ' எழுத்து உண்டா? யோசிக்கிறேன். தமிழ்ல இலக்கியங்கள்ல, 'ச' என்றுதான் உபயோகப்படுத்தியிருக்காங்க. இருந்தாலும், துரை செல்வராஜு சார் ஆதரித்து எழுதினது சந்தோஷம்தான்.

  தஞ்சை பெரியகோவில் மஹாலக்‌ஷ்மி படம் பார்த்துட்டு, நான் எப்போ இதை அனுப்பினேன் என்று யோசித்தேன் (முன்பே அந்தப் படத்தை நீங்கள் வெளியிடாததினால்). சரஸ்வதி பூசைக்குள் சரஸ்வதி படத்தை அனுப்பிடறேன் (தஞ்சை பெரியகோவிலில் உள்ள) ஹா ஹா

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையான லட்சுமிகரமான பதிவு.
  நாங்கள் கஜலக்ஷ்மி என்போம்.
  பாற்கடலிலிருந்து அவள் எழுந்த போது யானைகள் மலர் வர்ஷித்து அவளை திருமஞ்சனம் செய்தனவாம்.
  ஹர்ஷ்வர்த்தனன் எல்லோரையும் ஈர்க்கும் மன்னன்.
  மிக நன்றி துரை. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு