நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

நிசும்பசூதனி

இன்று ஆடித் திருவாதிரை..

அதற்கென்ன இப்போது!?..

இனி எப்போதும் செய்ய இயலாதபடிக்கு - மாபெரும் செயல்களைச் செய்து முடித்த பெருங்குலம் சோழர்களுடையது...

தமிழனின் புகழ்க் கொடி எனும் புலிக் கொடி - கடல் கடந்தும் பறந்ததற்குக் காரணம் - சோழர்களே!..

பெரும்புகழ் கொண்ட அவர்களுள் - தனித் தன்மையுடன் பொலிபவன் -
மாமன்னன் இராஜேந்திர சோழன்!..

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இன்று!..

மாமன்னன் இராஜேந்திர சோழனும் - இராஜேந்திரனைப் பெற்றெடுத்த புண்ணியனாகிய சக்ரவர்த்தி ராஜராஜ சோழனும்,

அவன் பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் நின்று வணங்கிய திருக்கோயில் ஒன்று உண்டு!..

அப்படியா!.. எங்கே இருக்கின்றது அந்தத் திருக்கோயில்!?..

தஞ்சையம்பதியில்!.. வாருங்கள் - செல்வோம் அந்தத் திருக்கோயிலுக்கு!..


இந்தத் திருக்கோயிலில் குடிகொண்டிருப்பவள் -

ஸ்ரீநிசும்பசூதனி - ஸ்ரீ பத்ரகாளி!..

சோழப் பெருங்குலத்தினைக் காத்து அவர்களுக்குப் பேரும் பெருக்கும் அருளியவள் இவளே!..

இவளே - வடபத்ரகாளி எனவும் ராகுகால காளி எனவும் வழங்கப்படுகின்றாள்.. 

அசுரர்களாகிய சண்டனையும் முண்டனையும் சும்பனையும் நிசும்பனையும் தொலைத்துக் கட்டியவள்!..

அதனாலேயே - இவளுக்கு நிசும்பசூதனி எனும் திருப்பெயர்!..

இவளே சோழப் பேரரசை நிர்மாணித்த விஜயாலய சோழனின் இஷ்ட தெய்வம்..

தொண்ணூற்றாறு விழுப்புண்களைத் தன் திருமேனியில் தாங்கியிருந்தவன் - விஜயாலய சோழன்..

கி.பி., 850ல் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான்..

அதுவரையிலும் பழையாறையில் இருந்த சோழ மரபினர் - புதிய நகராகிய தஞ்சையில் குடியேறினர்..

தஞ்சை - சோழர்களின் புதிய தலைநகராயிற்று..

இது ஆதாரங்களுடன் கூடிய சோழ வம்சத்தின் வரலாறு..

தஞ்சையைக் கைப்பற்றியதும் விஜயாலய சோழன் - மாநகரைச் சுற்றி எட்டு திக்குகளிலும் ஸ்ரீ பத்ரகாளியைத் தொழுது வணங்கி நின்றான்..

எங்கும் எப்போதும் - தனக்கு வெற்றிகளையே அருளவேண்டும்!.. -  என்று..


விஜயாலய சோழனின் அன்புக்கு மனம் இரங்கிய அம்பிகை - அவன் முன் தோன்றி - அவ்வாறே வரமளித்தாள்..

அம்பிகையின் தரிசனத்தால் மனமகிழ்ந்த மன்னன் - அம்பிகையை அங்கேயே திருக்கோயில் கொள்ள வேண்டினான்..

மன்னனின் அன்புக்கு இணங்கி அம்பிகை கோயில் கொண்ட கோலம் தான் - நிசும்பசூதனி!.. 

அம்பிகை திருக்காட்சி தந்து அமர்ந்த கோயிலுடன் -
விஜயாலயன் - ஏழு கோயில்களை எழுப்பினான்.. 

ஆக, தஞ்சையைச் சுற்றி எட்டு காளி கோயில்கள் - விஜயாலயன் காலத்தில்!..

அடுத்த சில ஆண்டுகளில் - பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே - திருப்புறம்பியத்தில் நடைபெற்ற பெரும் போர் சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு வித்திட்டது.

இதற்குக் காரணமானவன் - விஜயாலய சோழனின் மகன் - முதலாம் ஆதித்த சோழன்..

அந்த வெற்றிக்கெல்லாம் மூல காரணம் - ஸ்ரீநிசும்பசூதனியே!..


இன்றும் வடபத்ரகாளி கோயில் எனும் பெயருடன் தஞ்சையின் கீழ்த் திசையில் விளங்குகின்றது - நிசும்பசூதனியின் திருக்கோயில்..

சப்த கன்னியருள் ஏழாமவள் - சாமுண்டி.. ஸ்ரீ காளி!..

இவளுடைய முக லாவண்யம் - தெற்றுப் பற்கள்..

இவளே - தெற்றுப் பல் தெரிய புன்னகைத்து - சண்டமுண்ட சும்ப நிசும்பர்களை வதம் செய்தவள்..

சும்ப நிசும்பர்களை வதம் செய்ததாலேயே - நிசும்பசூதனி!..

நிசும்பசூதனி எனும் திருக்கோலமே - இன்றைய தரிசனம்..

ஆடி மாதத்தில் அம்பிகையின் தரிசன வேளையில் -

அம்பிகை தெற்றுப் பல்லுடன் திகழும் கோயில் எது?..

- எனக் கேட்டிருந்தேன்..

வடபத்ர காளியைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் - பாலமகி எனும் மகேஸ்வரி பாலசந்திரன்..

அவருக்கும் மற்ற அனைவருக்கும் அன்னையின் நல்லாசிகள்..

நிசும்பசூதனி - ஏழடி உயரங்கொண்டு விளங்குகின்றனள்.

நிகரற்ற வல்லமையுடன் எட்டுத் திருக்கரங்களுடன் உக்ர கோலங்கொண்டு இலங்குகின்றனள்..

அம்பிகையின் திருமுடிக் கற்றைகள் விரிந்து பரந்து கிடக்கின்றன..

தீட்சண்யமான பார்வை.. தெற்றுப் பற்கள் பளீரிடுகின்றன..

பரந்து விரிந்திருக்கும் கேசங்களை மறைத்து -
அக்னி கிரீடம் அணிவிக்கப்பட்டிருக்கின்றது..

தெற்றுப் பற்களின் மீது புல்லாக்கு ஒளிர்கின்றது..

சற்றே இடப்புறம் திருமுகத்தைச் சாய்த்திருக்கின்றாள்..

மிகவும் மெலிந்த திருமேனி..

வார்கொண்ட வனமுலைகள் - வனப்பின்றி விளங்குகின்றன..

அம்பிகையின் விலா எலும்புகளும் புடைத்துத் தெரிகின்றன..

அசுரனின் தலை மீதிருக்கும் திருவடியும் மெலிந்து விளங்குகின்றது..

வல்லமையுடன் விளங்கிய அசுர சைன்யத்தை அழிப்பதற்கென - விரதம் பூண்டு எம்பெருமானின் நல்லருளை வேண்டித் தவமிருந்ததாக ஐதீகம்..

அம்பிகை முண்டமாலை தரித்திருக்கின்றாள்..
திருமேனியில் பாம்பு ஒன்றும் இழைகின்றது..

ஏழு திருக்கரங்களிலும் - வாள், தனுசு, பாசம், மணி, திரிசூலம், மணி, கேடயம், கபாலம் ஆகியனவற்றுடன் திகழ்கின்றாள் - அம்பிகை.. ..

வலது மேல் திருக்கரத்தில் உள்ள திரிசூலம் அசுரனின் மேல் பாய்ந்த வண்ணமாக உள்ளது..

இடக் கரத்தினால் கீழே கிடக்கும் அசுரனைச் சுட்டிக் காட்டுகின்றாள்..

வலது திருவடி - அசுரனின் தலை மீது பதிந்திருக்கின்றது..

இடது காலை மடித்து - அசுரர்களின் மீது அமர்ந்த திருக்கோலம்.

தேவியின் திருவடியில் கிடப்பது சும்பனின் உடல் என்றும் முண்டமாகக் கிடக்கும் தலை நிசும்பனுடையது என்றும் ஆன்றோர்கள் கூறுவர்.


இத்திருமேனியை சிற்பிகள் வடித்தனர் என்பது பொதுவான வார்த்தை.

ஆனாலும் -

எவருடைய கற்பனைக்கும் எட்டாத வடிவம் இது..

தேவி புராணங்களில் நிசும்பசூதனியின் இலக்கணம் கூறப்பட்டிருந்தாலும் - அதையெல்லாம் மீறிய அருள் வடிவம் இது!..

அம்பிகையே - தன்னுடைய திருவடிவத்தினைக் காட்டினாலன்றி - 
அவளே மனமுவந்து இங்கு அமர்ந்தாலன்றி - அறிய இயலாத திருக்கோலம்.

இப்படிப்பட்ட திருக்கோலம் - இப்புவியில் எங்கேயும் இல்லை!..

ஸ்ரீ பரமேஸ்வரியாகிய அம்பிகை ஸ்ரீ நிசும்பசூதனி என - தன்னுருவங்காட்டி,
சுயம்புவாக இங்கு எழுந்தருளியிருக்கின்றாள் என்பது திண்ணம்!.. 

தஞ்சையில் கீழவாசல் ஸ்ரீவெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு சற்று எதிரில் - வடக்கு தெற்காக - பழைய ராமேஸ்வரம் சாலை.

இந்த சாலையைத் தான் - கீழவாசல் மார்க்கெட் சாலை என்கின்றார்கள்..

இந்த சாலையைக் கடந்து பூமாலை ராவுத்தர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் சென்றால் ஐந்து நிமிடத்தில் வடபத்ர காளி எனும் நிசும்ப சூதனியின் ஆலயத்தை அடையலாம்.

பூமாலை ராவுத்தர் கோயில் எனப்படுவது -

ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்ய நாதர் திருக்கோயில்..

இந்த திருக்கோயில் சிறியது தான் என்றாலும் கீர்த்தி மிக்கது..

குதிரைச் சேவகன் போன்ற கோலத்தில் விளங்கும் திருமேனி ஒன்று உள்ளது.

அது - மாணிக்கவாசகருக்காக ஈசன் - குதிரை நடத்தி - பாண்டியனிடம் மாலை வாங்கிக் கொண்ட திருக்கோலம் என்கின்றனர். 

அதனாலேயே பூமாலை ராவுத்தர் கோயில் என்று பெயர்.

மாவுத்தன் எனில் யானையை நடத்துபவன்.. ராவுத்தன் எனில் குதிரையை நடத்துபவன்..

கந்தரலங்காரத்தின் முப்பத்தேழாம் பாடலில் - வெஞ்சூர் கொன்ற ராவுத்தனே!.. - என முருகனை விளிக்கின்றார் அருணகிரி நாதர்..

முருகனின் வாகனமாகிய மயிலை - குதிரை என்றே அருணகிரியார் வர்ணிப்பார்..

எனவே - மயிலாகிய குதிரையை நடத்தும் ராவுத்தனே!.. என்பது புகழ்ச்சி..

நிசும்பசூதனியின் உக்ரம் குறைய வேண்டி பின்னாளில் எழுந்ததே - இந்த சிவன் கோயில்!..

ஸ்ரீ வைத்ய நாதரின் மூலஸ்தானத்திற்குப் பின்புறம் தான் வடபத்ர காளியின் திருக்கோயில்.

ஏழடி உயரமுடைய அம்பிகைக்கு அபிஷேக அலங்காரங்கள் எல்லாம் - அருகிலுள்ள மேடையின் மீது நின்று தான்..

ஸ்ரீ வடபத்ரகாளியின் மூலஸ்தானம்

வடக்கு நோக்கிய சந்நிதி.

விஜயாலயன் எழுப்பிய கோயில் கால வெள்ளத்தில் கரைந்து போனது..

ஆயினும் - இப்போதுள்ள சந்நிதியும் முன்மண்டபமும் பழைமையானவை..

திருக்கோயிலுக்கு முன்பாக நீளவாக்கில் தகரங்கள் வேயப்பெற்ற மண்டபம்..

திருப்பணிக்குக் காத்திருக்கின்றது திருக்கோயில்..

கோர சௌந்தர்யம் எனினும் கருணைக் கடலாக அம்பிகை கொலுவிருக்கும் சந்நிதி..

மாபெரும் மன்னர்களும் மகத்தான வீரர்களும் நின்று வணங்கிய சந்நிதி!..

விஜயாலய சோழன் - தன் கண் கொண்டு அம்பிகையைக் கண்டு கைகூப்பி வணங்கிய சந்நிதி..

மாமன்னன் ராஜராஜ சோழப் பெருந்தகையும் அவனது தந்தை சுந்தர சோழனும் முந்தைப் பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் என முன்னோர்கள் நின்று வணங்கிய சந்நிதி.

பின்னும், ராஜேந்திர சோழனும் அவனது மகன் ராஜாதி ராஜனும் அவன் சந்ததியரும் தொழுது வணங்கிய சந்நிதி!..

அன்னையின் திருமுகத்தைக் கண்டாலே - நம்முள் வீரமும் வைராக்கியமும் குடி கொள்வதை உணரலாம்..

சில வருடங்களுக்கு முன்னால் - 

ஒரு வெள்ளிக் கிழமையின் உபயதாரராக இருந்து அம்பிகையை சேவிக்கும் பெரும்பேறு கிடைத்தது..

அப்போது நானும் எனது குடும்பத்தினரும் அம்பிகையின் முன்னிருந்து பதினாறு வகையான மங்கல நீராட்டினைத் தரிசித்தோம்..

அதற்கு முன் கேள்விப்பட்டிருந்த - திருமேனி அழகினை -
அப்போது தான் கண்ணாரக் கண்டு இன்புற்றேன்..

எங்கிருந்த போதும் - எங்கள் சிந்தையில் இருப்பவள் - ஸ்ரீவடபத்ரகாளி..

தஞ்சை மக்களின் மனங்களிலெல்லாம் கோயில் கொண்டு உறைபவள் இவள்!..

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகள் எல்லாம் சிறப்பு தான்.. எனினும்

சித்ரா பௌர்ணமி நாளன்று சந்தனக்காப்பு அலங்காரம் கொள்கின்றாள்..

தை மாத வெள்ளிக் கிழமைகளில் பால்குட வைபவ கோலாகலம்..

ஆனாலும் -  விஜயாலயன் எழுப்பிய கோயில் இது அல்ல.. - என்ற கருத்தும் உண்டு..

அப்படி குறிக்கப்படும் கோயில் - இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கும் உக்ர காளியம்மன் கோயில்..

ஸ்ரீ உக்ர காளி
அது சிலகாலங்கள் முன்பு வரைக்கும் குயவர் தெருவை அடுத்திருந்த கருவேலங்காட்டிற்குள் இருந்ததால் - கருவக்காட்டு காளி என்றனர்..

மிகப்பெரிய கருவேலங்காடு - இன்றைக்கு அழிந்து போயிற்று..

கருவேலங்காட்டு கோயில்தான் நிசும்பசூதனி கோயில் என்றும் கூறுகின்றனர்.
ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன..

ஆனால்,

கைகூப்பித் தொழுவோரிடத்தில் எவ்வித வேற்றுமையும் இல்லை..

ஸ்ரீநிசும்பசூதனி - வடபத்ரகாளி
சமயங்களைக் கடந்த மெய்ப்பொருளாக நிசும்பசூதனியும் உக்ரகாளியும் விளங்குகின்றனர்..

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் - வேற்று சமயத்தவரையும் காணலாம்..

சோழப் பேரரசை நிர்மாணிக்கப் புறப்பட்ட பெரும்படைகள் -
நிசும்பசூதனியை தொழுத பின்னரே - முதலடியை எடுத்து வைத்திருக்கின்றன.

அன்றைக்கு திருக்கோயில் எத்தனை பெரிதாக இருந்ததோ - நாமறியோம்..

இன்றைக்கு நாற்புறமும் இல்லங்கள் சூழ்ந்திருக்கின்றன..

மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியில் மங்கலங்களை அள்ளித் தருபவளாக வீற்றிருக்கின்றாள் - வடபத்ரகாளி எனும் நிசும்பசூதனி!..

குண்டலிபுர வாஸினி சண்டமுண்ட விநாஸினி
பண்டிதஸ்ய மனோன்மணி ஸ்ரீவராஹி நமோஸ்துதே..

- என்று ஸ்ரீ வராஹி அம்மனின் துதியிலும் குறிப்பிடப்படுபவள் - நிசும்பசூதனி!..

மாமன்னன் ஸ்ரீராஜேந்திர சோழனின் பிறந்த நாளாகிய இன்று - 
அவன் நின்று வணங்கிய நிசும்பசூதனியின் சந்நிதியை 
நினைவு கொள்வதில் மகிழ்வெய்துகின்றேன்..

வடபத்ர காளீ போற்றி!..
சும்பநிசும்ப சூதனீ போற்றி.. போற்றி!.. 
* * *  

24 கருத்துகள்:

  1. சிறப்பான திருக்கோலம்... அனைத்து சிறப்பு தகவல்களுக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இக்கோயிலுக்குச் சென்று அன்னையை தரிசித்துள்ளேன். குடவாயில் பாலசுப்ரமணியன் தன்னுடைய தஞ்சாவூர் என்ற நூலில் இவ்வன்னையை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது என்றும், மத்தியப்பிரதேசத்தில் இதே வடிவில் அன்னை எலும்புருவில் காட்சி அளிக்கும் சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் நூல்கள் படித்ததில்லை..
      எலும்புருவ சிற்பம் பற்றியது - புதிய தகவல்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பலமுறை இக்கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன் ஐயா
    ஆயினும் அனைத்தும் அறியாத செய்திகள்
    நன்றிஐயா
    இராஜராஜ சோழனின் பிறந்த நன்நாளில்
    அவர் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அணைத்து தகவல்களும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கோவிலில் இது போல் அன்னை இருக்கிறாள்.
    மாமன்னன் புகழ் வாழ்க.

    வடபத்ரகாளியை தரிசனம் செய்தது இல்லை. அடுத்த முறை தஞ்சை செல்லும் போது அன்னையை தரிசனம் செய்ய வேண்டும்,.
    நல்ல விரிவான செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நிச்சயம் தஞ்சைக்கு வந்து தரிசனம் செய்யுங்கள்..
      தங்கள் வருகைக்கும் புதிய தகவல் கூறியதற்கும் மகிழ்ச்சி..
      இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. வணக்கம்,
    நன்றிகள் பல. என் பதில் நினைவில் நின்று என்னைத் தங்கள் பதிவில் நினைவு கூர்ந்ததற்கு,மகிழ்ச்சி.
    வடக்கு வீதியில் இருப்பவளும் காளி என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். அவள் சன்னதி சென்றுள்ளேன்.
    ஆனால் அங்கு இந்த வாரம் தான் போகனும். அன்று கடைசி வெள்ளி சரியாக வருகிறது பிறந்த நாள்.
    இராஜராஜ சோழனின் பிறந்த நன்நாளில் அவர் நினைவினைப் போற்றுவோம்.
    வாழ்த்துக்கள். அருமையான நடை, விளக்கம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வடக்கு ராஜவீதியில் வீற்றிருப்பவள் - பகளாமுகி என்கின்றனர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. வணக்கும் ஜி பிரமாண்டமான தகவல்கள் பிரமித்து விட்டேன் நன்றி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. மகா தேவியின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்!
    அன்னையின் சிறப்புத் தோற்றங்கள் கண்டு சிலிர்த்தது தேகம் ஐயா!
    எத்தனை சிறப்புகள்! தங்கள் தயவில் இவ்வளவு விடயங்களையும்
    அறியக் கிடைத்ததும் எம் பாக்கியமே!

    அழகிய சிறப்பான பகிர்வு அதுவும் முக்கிய தினமாகிய இன்று!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. சிறப்பான கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி. படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. அருமையான கோயில், அறிந்திராத தகவல்கள்....படங்கள் அத்தனையும் அழகு... மிக் மிக முக்கியமான தினம்..இதெல்லாம் தெரியாத தகவல்கள்...அறியத்தந்த்மைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  11. ஐயா, நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கு 23 சூன் 2016 அன்று நடைபெறவுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மகிழ்ச்சியான தகவலை அளித்தமைக்கு மிகவும் நன்றி..

      நீக்கு
  12. எங்களுடைய குலசாமி தேடலுக்கு கிடைத்த மாபெரும் பரிசு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குபேரன்..

      தங்களுக்கு நல்வரவு..

      தங்களுடைய குலசாமி என்று கூறுகின்றீர்கள்..
      அந்த மகிழ்ச்சியில் நானும் கலந்து கொள்கின்றேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..