நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 17, 2014

மார்கழிக் கோலம் 02


குறளமுதம்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.(396)

ஊற்றைக் கொடுக்கும் மணற்கேணி தோண்டாவிட்டால் தூர்ந்து போகும். அது போலல்லாது கற்ற மாந்தரின் மனத்திலிருந்து அறிவு ஊற்றெடுக்க வேண்டும்.

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 02


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் 
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி 
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் 
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..

* * *

ஆலய தரிசனம்
திருஅரங்கம்


 பூலோக வைகுந்தம்..
வைணவத்தில் கோயில் என்றால் - திருஅரங்கம் தான்.


மூலவர் - ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள். தாயார்  - ஸ்ரீரங்கநாயகி.
பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருக்கோலம்.

வருடம் முழுதும் வைபவங்கள் நிகழும் திருத்தலம். எனினும் லட்சக் கணக்கான பக்தர்கள் திரள - மார்கழியில் வைகுந்த ஏகாதசி வெகு சிறப்பாக நிகழும் திருத்தலம்.

21 ராஜகோபுரங்கள். நிறைந்த மண்டபங்கள். சந்நிதிகள். தீர்த்தங்கள்.

ஏழு திருச்சுற்றுகளுடன் விளங்கும் பிரம்மாண்டமான திருக்கோயில். சந்திர தீர்த்தம் திருக்கோயிலின் உள்ளே இருக்கின்றது.

ஸ்ரீ ரங்கநாயகி
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர் - இத் திருத்தலத்தில் தான் பலகாலம் தங்கியிருந்தார். அவர் திருநாடு எய்தியதும் இங்கேதான். 

ஆடிப்பெருக்கு வைபவத்தின் போது -  பட்டுப்புடவை, வளையல், மஞ்சள் குங்குமம், தாம்பூலம்  - என அனைத்து மங்கலங்களையும் யானையின் மீது எடுத்து வந்து  -  காவிரி ஆற்றில் மிதக்க விடுவார்கள்.

ஸ்ரீரங்கநாதர் - காவிரிக்கு சீர் வழங்குவதாக ஐதீகம். 

அதேபோல,  ஸ்ரீரங்கநாதர் - சமயபுரம் மாரியம்மனுக்கும்  சீர் வழங்குகின்றார்.


பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிரயான் போய்இந்திர லோகம்ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே!..(873)
தொண்டரடிப்பொடியாழ்வார்.

அரங்கனைத் தம் சிந்தையில் கொண்டு வாழ்ந்தவர் விப்ர நாராயணர். 
இவரே தொண்டரடிப்பொடியாழ்வார்.

சோழ வளநாட்டின் திருமண்டங்குடியில் - மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் பெருமாளின் வைஜயந்தி மாலையின் அம்சமாகத் தோன்றியவர்.

அரங்கனுக்கு பூமாலை தொடுத்ததோடு பாமாலையும் தொடுத்த புண்ணியர். 

பெருமானுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியவர் இவரே.

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய 
திருப்பள்ளி எழுச்சி

கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கன இருளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாம லரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிறைந்தன இவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!..1 (917)

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குனதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலரணை பள்ளிகொள் அன்னம்
ஈர்பனி நனைந்தத மிருஞ் சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்
கனுங்கி ஆனையின் அருந்துயர் கெடுத்த 
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!..2

சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் 
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி 
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ 
பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின் 
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற 
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ 
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை 
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!..3

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் 
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் 
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் 
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை 
வாட்டிய வரிசிலை வானவ ரேறே
மாமுனி வேள்வியைக் காத்து அவ பிரத 
மாட்டிய அடுதிறல் அயோத்தி எம்மரசே
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே!..4

புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் 
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!..5

இரவியர் மணிநெடுந் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்
அருவரை அனையநின் கோயில்முன் னிவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே!..6

அந்தரத் தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திர னானையும் தானும்வந் திவனோ
எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே!..7

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் 
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே!..8

ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே!..9

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடியென்னும்
அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய் பள்ளி எழுந்தரு ளாயே!.. 10 (926)

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

ஓம் ஹரி ஓம்!..

சிவ தரிசனம்

மாணிக்க வாசகர் அருளிய 
திருவெம்பாவை
திருப்பாடல் 01

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டி இங்ஙன்
ஏதேனும் ஆகாள்கிடந்தாள் என்னே என்னே
ஈதேஎந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!..

திருக்கோயில்
மதுரையம்பதி


இறைவன் - சுந்தரேஸ்வரர்
அம்பிகை - மீனாட்சி
தல விருட்சம் - கடம்ப மரம்
தீர்த்தம் - வைகை, பொற்றாமரைக் குளம்

தலப்பெருமை.

ஜகத்காரணியாகிய அம்பிகை மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சன மாலைக்கும் - மகளாக - மரகத வல்லியாகத் தோன்றிய திருத்தலம்.  

மங்கை என வளர்ந்த பின் மணிமகுடம் சூடி நல்லாட்சி நடாத்திய திருத்தலம். 

வடதிசை நோக்கி படைநடத்தி கயிலை மாமலையில் மணாளனைக் கண்டு மணக்கோலம் பூண்ட திருத்தலம். 

தோள்மாலை கண்டு திருக்கோயிலும் கொண்டு மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றருளும் திருத்தலம். 

ஐயன் சோமசுந்தரர் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திய திருத்தலம்.

ஐயன் நடமிடும் அம்பலங்கள் ஐந்தனுள் -  வெள்ளியம்பலம்.

கால் மாற்றி - ஆடி அருளிய திருத்தலம்.

சங்கம் கொண்டு தமிழ் வளர்ந்த திருத்தலம்.

மாணிக்கவாசகர் முதலமைச்சராக இருந்து பணி செய்த திருத்தலம்.

பாண்டி நாட்டுத்திருத்தலங்களுள் முதன்மையானது.

ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் கூறி முடியாதபடிக்குக் கணக்கற்ற பெருமைகளை உடைய திருத்தலம்.


மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே!..(3/120)
திருஞானசம்பந்தர்.

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்

வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்

வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்

துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்

தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்

திளைத்தானைத் தென்கூடல் திருஆ லவாய்ச்

சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!.. (6/19)
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம்!..
* * *

12 கருத்துகள்:

  1. திருஅரங்கம் திருத்தலத்தின் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வருக.. வருக..
      தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் ஐயா!

    திருப்பாவையும் அரங்கநாதன் தரிசனமும் மிக அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. திருப்பாவையும்
    திருவரங்க தரிசனமும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. திருப்பாவை பிரமாண்டமாக இருந்தாலும் அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அரங்கனும், திருப்பாவையும் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  6. காவிரி அன்னைக்கு சீர் கொடுப்பது, சமயபாரியம்மனுக்கு சீர் கொடுப்பது அருமை.

    ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி கோவில் தரிசனம் பெற்றேன்.
    மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..