நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 25, 2013

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி

அன்னை - அவளே அதைச் செய்தாள்!..

அருவுருவம் எனத் திகழும் சிவலிங்கத்திற்கு - உருவம் என்று ஒன்றில்லாத - நீரினால் வடிவம் கொடுத்தாள்.

திருஆனைக்காவில் - இன்று நாம் தொழும் சிவலிங்க ஸ்வரூபம் ஆதியில் நீர் வடிவில் திகழ்ந்தது. அதனைத் தான் அம்பிகை நாளும் வழிபட்டு வந்தாள்.

ஏன்?..

திருக்கயிலாயத்தில் ஒருநாள் - ஏகாந்த வேளை!..

''தான் அருகிருந்தும் - ஈசன் யோகத்தில் ஆழ்ந்திருப்பது ஏன்!..'' - என அன்னை ஆச்சர்யமுற்றாள்.

''..போகத்தையும் யோகத்தையும் - விளக்கியருள வேண்டும்!..'' - என ஐயனிடமே விண்ணப்பித்துக் கொண்டாள். 

ஐயன் புன்னகையுடன் - ''..பூவுலகில் - காவிரிக் கரையில், சம்பு முனிவன் தவமிருக்கும் நாவல் வனத்தில் விடை கிடைக்கும்!..'' - என அருளினார்.

அதன்படி பூவுலகுக்கு வந்த அன்னை, தான் வழிபட வேண்டி - தன் வளைக்கரத்தால் - தண்ணீரைக் கொண்டு சிவலிங்கம் ஸ்தாபித்தாள். 

அதற்கும் முன் ஒரு சம்பவம்!.. சம்பு எனப்பட்ட மகாமுனிவர் ஒருவருக்கு ஈஸ்வர ப்ரசாதமாக நாவற்பழம் கிடைத்தது. அதனை அப்படியே முனிவர் உட்கொண்டு விட்டார். நாவற்பழத்தின் கொட்டையைக் கூட,  வெளியே உமிழ வில்லை. 

அது அப்போதே முளைத்து முனிவரின் சிரசின் மீது வெளிப்பட்டது. அதனை உணர்ந்த முனிவர் ஈசனைப் பணிவுடன் வேண்டிக் கொண்டார். ''..ஸ்வாமி!.. இப்போது யான் செய்ய வேண்டுவது யாது?..'' - என. 

''..பின்னொரு சமயத்தில் அம்பிகை, உன் நிழலில் தவம் மேற்கொள்ள வரும் போது சிவசக்தி அனுக்ரகம் பெற்று முக்தி எய்துக!..''  - என ஈசன் அருளினார். 


அதன்படியே - ஜம்பு முனிவர்  - அம்பிகையின் வரவை எண்ணி - பூமியில் நாவல் மரமாக வேரூன்றி நின்றார்.  அந்த நாவல் மரத்தின் நிழலில் தான் அம்பிகை லிங்க ப்ரதிஷ்டை செய்து - தவமிருந்தாள். 

காலங்கள் கடந்தன. நாளும் கோளும் நற்பொழுதாயிருந்த வேளையில் - எம்பெருமான் ரிஷபாரூடராக ப்ரத்யக்ஷமானார். திருக்கயிலையில் அன்றொருநாள் - அம்பிகையின் மனதில் எழுந்த ஐயங்களுக்கு விளக்கம் அளித்தார். 

ஈசன் குருஸ்தானமாக வீற்றிருக்க அம்பிகை சிஷ்யையாக இருந்த புண்ணிய பூமிதான் - பின்னாளில்  ஜம்புகேஸ்வரம் என்று  வழங்கப்பட்டது.

இறைவன் ஜம்புகேஸ்வரர் எனப்பட்டார்.

இத்திருத்தலத்தில் - யானையும் சிலந்தியும் ஈசனை உணர்ந்து வழிபட  - யானைக்கு முக்தி கிடைத்தது. சிலந்தி கோபமுற்று வீராவேசத்துடன் யானையைத் தாக்கியதால் - பின்னும் ஒரு பிறவி - மாமன்னனாக -

சோழர் தம் குலத்தில் - கோச்செங்கணான் எனத் தோன்றி - யானை ஏற முடியாதபடிக்கு எழுபத்தெட்டு மாடக்கோயில்களைக் கட்டி - என்றென்றும் அழியா முக்தி ஆனந்தமாக  - சிவனடியார் திருக்கூட்டத்துள் ஒருவராக நிலை பெற்றது.


திருஆனைக்கா - சக்தி பீடங்கள் ஒன்று!.. வராகி பீடமாகத் திகழ்கின்றது. அகிலாண்டேஸ்வரிக்கு தண்டினி, தண்டநாயகி, சிதானந்த ஸ்வரூபிணி எனவும் திருப்பெயர்கள் வழங்குகின்றன.

அம்பிகை  - நீரைத் திரட்டி வழிபட்டதால் - பஞ்சபூதங்களுள் - நீருக்கு உரிய க்ஷேத்திரமாகியது திருஆனைக்கா!..

குரு வடிவாக விளங்கிய ஈசனிடம் , அம்பிகை - போக, யோக நிலைகளுக்கு விளக்கம் கேட்டுத் தெளிந்ததனால் - ஞானக்ஷேத்திரம்!..

''..தவறிழைத்தாய்!..'' - என அகலிகைக்கு சாபம் கொடுத்தார் கெளதம மகரிஷி. அப்படி சாபம் கொடுத்த - பாவம் நீங்கிட வழிபட்ட திருத்தலம் திருஆனைக்கா!.

ஒரு சமயம் ஏதேதோ காரணங்களால் அம்பிகை - உக்ரமாகிவிட - பக்தர்களால் எளிதில் அணுக இயலாமற்போனது. அப்போது  விஜயம் செய்த ஸ்ரீஆதிசங்கரர் அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் கணபதியை பிரதிஷ்டை செய்து சாந்தப் படுத்தினார். அத்துடன் -

அம்பாளின் உக்ரத்தை தாடங்கம் எனப்படும் காதணிகளில் அடக்கி  - அவற்றை அம்பிகைக்கே  அணிவித்தார்.
ஜம்புகேஸ்வரருக்கு -  உச்சிகால பூஜையை - அம்பாள் நிகழ்த்துவதாக ஐதீகம்.


அதன்படி, உலக நாயகியாகிய அம்பிகை - ஈசனை வழிபட்டதனை உணர்த்தும் முகமாக - அம்பாள் சந்நிதியிலிருந்து சிவாச்சார்யார் புடவை தரித்து முடி சூடி, பூஜைப் பொருட்களுடன் மேள தாளங்கள் முழங்க மூன்றாவது திருச்சுற்று வழியாக வலம் வந்து ஸ்வாமி சந்நிதிக்குச் சென்று அபிஷேக ஆராதனை, கோபூஜை ஆகியவற்றை செய்கின்றார்.


பஞ்சப் பிரகாரத் திருக்கோயில் எனப்படும் திருஆனைக்காவில் - அம்பிகை  நான்காவது பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவளாகத் திகழ்கின்றாள். ஐந்தாவது பிரகாரத்தில் - ஜம்புகேஸ்வரர் - மேற்கு நோக்கியவராக அருள்பாலிக்கின்றார்.

1311ல் முகலாயர் படையெடுத்து திருஅரங்கத்தைச் சேதப்படுத்தும் முன்பு வரை - பங்குனித் திருவிழாவில் அரங்கன் திருஆனைக்காவுக்கு எழுந்தருளி - திருக்கோயிலின் உள் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் சேவை சாதித்து - இளநீர் அமுது செய்து, ஜம்பு தீர்த்தக்கரை மண்டபத்தில் சேவை சாதிப்பது வழக்கம் என்றும்,

பின்னர் - 1371ல் விஜய நகர அரசின் இரண்டாம் குமார கம்பணன் காலத்தில் பெருமாள் திருவரங்கம் - திரும்பிய பிறகு - பழையபடி பெருமாள் சேவையை நடத்தும் போது கலவரம் விளைந்து உயிர் சேதம் ஏற்பட்டதுடன் அந்த வைபவம் நின்று போயிற்று எனவும்  -

ஸ்ரீரங்கசரித்திரம் (நன்றி http://srirangacharithram.blogspot.com) தெரிவிக்கின்றது.

ஸ்வாமி சந்நிதியிலிருந்து அம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் ஸ்ரீமஹா லக்ஷ்மியும், அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் ஸ்ரீசரஸ்வதியும் குடிகொண்டு அருள்கின்றனர்.


திருஅரங்கத்தில் மடைப்பள்ளியில் பணி செய்த வரதனை தனது - தாம்பூல உச்சிஷ்டத்தினால்- கவி காளமேகம் என புலவனாக ஆக்கினவள் - அன்னை!..

திருச்சியை ஆட்சி செய்த விஜய ரங்க சொக்கநாத நாயக்கரிடம் பெருங் கணக்கராகப் பணி செய்து வந்தவர் தாயுமானவ ஸ்வாமிகள்.

அவர்  மனதினுள் - ஸ்படிகம் போல ஒளிர்ந்தவள் - அகிலாண்டேஸ்வரி!..

காலையில் லக்ஷ்மி , உச்சிப்பொழுதில் ஸ்வயம்பிரகாசினி,  மாலையில் சரஸ்வதி - என விளங்குகின்றாள்.

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநர் - உறை பேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்றதாய் உமை
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி - அருள்பாலா!.. 

- என்று திருஆனைக்கா திருக்கோயிலில் உறையும் முருகனைப் போற்றி அருணகிரி நாதர் புகழ்கின்றார்.


பொன்னே வருக மூவுலகும் பூத்தாய் வருக நாயேனைப் 
புரந்தாய் வருக வழுதியர்கோன் புதல்வீ வருக முகிற்கிளைய 
மின்னே வருக மெய்ஞான விளக்கே வருக மறைநான்கின் 
விரிவே வருக பேரின்ப விளைவே வருக மிகுங்கருணை
அன்னே வருக அகநெகுவார்க்கு அணியே வருக அலர்மடவார்க் 
கரசே வருக உரைப்பருஞ்சீர் அம்மே வருக அழற்கரத்து 
மன்னேருடலம் பகிர்ந்த இளமயிலே வருக வருகவே 
மத மாதங்க வனத்து மடமானே வருக வருகவே!..

- என்று மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், பிள்ளைத்தமிழ் பாடி - அன்னை அகிலாண்டேஸ்வரியை  அழைக்கின்றார்.

அன்னையின் பேரும் புகழும் இம்மட்டோ!.. அவளைக் குறித்து பேசவும் எழுதவும் இந்த ஒரு ஜன்மம்  போதாது என்பது தான் உண்மை!..

காவிரியின் பெருமைகள் பேசப்படும்  - துலா மாதத்தில்,

காவிரியின் புகழ் விளங்கும் - திருஆனைக்கா பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றியும் - நாம் பேசத் துணிந்தது -

அங்கே அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி நமக்களித்த பெருங்கருணை!..

இந்தப் பூவுலகில் - எங்கிருந்த போதும் 
கருணாசாகரியான அம்பாளின் கழலடிகளைச் 
சிந்தித்தவாறு

காவிரியில் நீராடி கரையேறுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

15 கருத்துகள்:

  1. ஸ்ரீஅகிலான்டேசுவரி அருமை அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. அன்னையின் பேரும் புகழும் எழுதிக் கொண்டே இருக்கலாம்... ஜம்புகேஸ்வரம் தகவல்கள் அனைத்திற்கும் நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்!.. தங்களின் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. அன்னையின் பேரும் புகழும் இம்மட்டோ!.. அவளைக் குறித்து பேசவும் எழுதவும் இந்த ஒரு ஜன்மம் போதாது என்பது தான் உண்மை!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. மிக்க நன்றி!..

      நீக்கு
  4. ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் ஆனந்த தரிஸனம் கிடைக்கப்பெற்றேன். மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. ஜம்புகேஸ்வரம் தகவல்கள் அருமை!
    படங்களும் அழகு! அனைத்தும் சிந்தைக்கும் சிறப்பு!

    பகிர்வினுக்கு நன்றி!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. அன்பின் சகோதரி!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    எல்லாருக்கும் அன்னை நல்லருள் பொழிவாளாக!..

    பதிலளிநீக்கு
  7. படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  8. ஒவ்வோர் ஆண்டும் ஆலய தரிசனம் செய்யும் கோயில்களி திருவானைக்காவும் ஒன்று. அப்புத்தலமாக அறியப் படும் ஆனைக்காவில் லிங்கத்தைச் சுற்றி காணப் படும் நீர் இப்போதெல்லாம் காணக் கிடைபதில்லை.. அம்பிகை நீரினால் லிங்கம் செய்து வழிபட்டாள் எனும் செய்தி அறியாதது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர்!.. அம்பிகை நீரினால் சிவலிங்கம் செய்து வழிபட்டதால் தான் திருஆனைக்கா - அப்பு ஸ்தலம் ஆகியது. தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  10. அங்கயற்கண்ணி25 நவம்பர், 2020 07:13

    அம்மையை அப்பனை நேரில் தரிசித்த உணர்வு. அருமையான தகவல்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..