நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மாசி மகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாசி மகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 15, 2025

தரிசனம் 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி முதல் நாள் 
சனிக்கிழமை

மாசி மக திருவிழாவின் போது கும்பகோணத்தில்  தீர்த்தவாரி தரிசனம்.. 

முற்பகல் பத்து மணியளவில் பிடித்த மழை பத்தரை மணிக்கு ஓய்ந்தது..

மகாமகக் குளத்திற்கு வட கரையிலும் வடபுறச் சாலையிலும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் குளத்தின் மேல் கரையில் இரு சக்கர வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன..

காவல் துறையினரின் பணி குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது..

கடும் மழையிலும் அவர்களது பணி தொடர்ந்தது நெஞ்சை நெகிழ்த்தியது..






பதினொன்றரை மணியளவில்  பூஜைகள் தொடங்கி உச்சிப் பொழுதில் தீர்த்தவாரி நடைபெற்றது..

அன்பர்கள் சிவ  கோஷங்களுடன் நீராடி மகிழ்ந்தனர்... 

சற்றே தணிந்திருந்த மழை மீண்டும் பிடித்துக் கொண்டது..

காசி விஸ்வநாதர் கோயிலில் அடைக்கலம் ஆகி - ஒரு மணி நேரம் கழித்து - சந்நிதியை வலம் வந்து வணங்கிய பின் பேருந்து நிலையத்திற்குச் சென்று நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்..















தலைப் பாகையோடு போயிற்று என்ற கதையாக - கூட்ட நெரிசலில், தோள் பையில் இருந்த எழுநூறு ரூபாய் களவாடப் பட்டிருந்தது..


குடந்தைக் கீழ்க் கோட்டம்

ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்

இறைவன் ஸ்ரீ நாகேஸ்வரன்
அம்பிகை ஸ்ரீ பிரஹந்நாயகி

ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்து ஏற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே.. 6/75/10 
-: திருநாவுக்கரசர் :-
**

குடந்தை
ஸ்ரீ சார்ங்கபாணி தெப்பம்

காணொளி வழங்கியவர்
துரை மனோகரன்
கும்பகோணம்


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, மார்ச் 14, 2025

தரிசனம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 மாசி 30
வெள்ளிக்கிழமை

குடமூக்கு எனவும் குடந்தை எனவும்
வழங்கப்பட்ட கும்பகோணத்திற்கு
மாசி மக நாளில்
சென்றோம்..

குடந்தை நகருக்குள் நுழைந்ததுமே கடும் மழை..

முதல் நாள் பெய்த மழை நீர் தேங்கிக் கிடக்க - அதனுடன் அப்போதைய மழை நீரும் சேர்ந்து கொண்டது..

சாலையோர வடிகால்கள் அடைக்கப்பட்டு விட்டதால்  நீர் அழுக்காகி ஆங்காஙகே தேங்கி நின்றது சிறப்பு..

மழையோடு மழையாக எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

எதிரே
ஸ்ரீ சார்ங்கபாணி ஆலய கோபுரம்


ஸ்ரீ சோமேஸ்வரர் கோயிலில்



















அடுத்த பதிவிலும்
படங்கள் தொடர்கின்றன..

குடந்தைக் காரோணம்
சோமேஸ்வரர் கோயில்

இறைவன் ஸ்ரீ சோமேஸ்வரர்
அம்பிகை ஸ்ரீ சோமசுந்தரி

வாரார் கொங்கை மாதோர் 
  பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள் 
  சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி 
  அந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண் தோள் 
  எந்தை காரோ ணத்தாரே.. 1/72/1
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், மார்ச் 06, 2023

மாசி மகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி மகம்
மாசி 22
திங்கட்கிழமை

இன்றைய தரிசனம்
குடந்தை மாநகர்
(கும்பகோணம்)


பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்து தங்கிய
அமுத கலசத்தை வேடுவராக வந்த இறைவன் அம்பினால் உடைத்து அதனுள் தாமே எழுந்தருளிய
திருத்தலம்.. 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் நிற்க, சந்திரன் கும்ப ராசியில் இருக்கும் (மாசிமக)
பௌர்ணமி நாளில் மகாமகம் நடைபெறுகின்ற தலம். 

கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி - ஆகிய நவ நதிக் கன்னியரும் நீராடிய நாள் தான் மகாமகம்..

குடந்தையுள் திருப்பதிகம் பெற்ற தலங்கள் மூன்று..

திருக்குடமூக்கு,  
திருக்குடந்தைக் கீழ்க் கோட்டம், 
திருக்குடந்தைக் காரோணம் - என்பன.


திருக்குடமூக்கு
(ஸ்ரீ கும்பேசுவரன் கோயில்)
பிரளயத்தில் மிதந்த்
அமிர்த கலசம் 
தங்கிய இடம்..


இறைவன்
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி


அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை
தலவிருட்சம் வில்வம் வன்னி
தீர்த்தம் மகாமக தீர்த்தம்

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்பதிகம் அருளியுள்ளனர்.


நங்கையாள் உமையாள் உறைநாதனார்
அங்கையாள்  அறுபதந் தாழ்சடைக்
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குட மூக்கிலே.. (5/22/3)
-: திருநாவுக்கரசர் :-


குடந்தைக் கீழ்க்கோட்டம் 
( ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்)
நாகராஜன் வழிபட்ட தலம்.

இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ பிரஹந்நாயகி
தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் மகாமக தீர்த்தம்

சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படர்கின்றன..

 திருநாவுக்கரசர் திருப்பதிகம் அருளியுள்ளார்.

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூர் உள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருஆனைக் காவில் ஓர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.. (6/75/8)
-: திருநாவுக்கரசர் :-
 

குடந்தைக் காரோணம்
(ஸ்ரீ விஸ்வநாதர் கோயில்)
நதிக்கன்னியர் வழிபட்ட தலம்..

இக்கோயிலில் தான்
நதிக்கன்னியர்
விளங்குகின்றனர்..

இறைவன்
ஸ்ரீ காசி விஸ்வநாதர்
அம்பிகை
ஸ்ரீ விசாலாட்சி
தலவிருட்சம் வேம்பு
தீர்த்தம் மகாமக தீர்த்தம்

ஸ்ரீ காவிரி




வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில்
காரார்கண்டத்து எண்தோள் எந்தை காரோ ணத்தாரே..(1/72/1)
-: திருஞானசம்பந்தர் :-
  
ஸ்ரீ வியாழசோமேசர் கோயில்
குடந்தைக் காரோணம் என்பது -
பொற்றாமரைக் குளத்தின் மேல் கரையிலுள்ள
ஸ்ரீ தேனார்மொழியாள் உடனுறை ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் 
வியாழ சோமேசர் கோயில் -  என்று கொள்ளப்படுகின்றது..

வியாழனும் சந்திரனும் 
வணங்கிய தலம்..
**

கும்பகோணம் 
திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் 
திகழ்கின்றது..


திருக்குடந்தை
ஸ்ரீ சார்ங்கபாணி கோயில்


ஸ்ரீ சார்ங்கபாணி
ஸ்ரீ ஆரா அமுதன்
ஸ்ரீ கோமளவல்லி

தலவிருட்சம் புன்னை
பொற்றாமரை தீர்த்தம்

வைதீக விமானம்
கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலம்..

மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள்,  திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்..

கருவறைக்கு உத்தராயணம் 
தட்சிணாயணம் என - இரண்டு திரு வாசல்கள்..


சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று  அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார்குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே!.. (808)
-: திருமழிசையாழ்வார் :-

கும்பகோணம் நகருக்குள்  ஆலயங்கள் அநேகம்.. 

அவற்றுள் சிவாலயங்கள்:
ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோயில்,
ஸ்ரீ வியாழ சோமேசர் திருக்கோயில்,
ஸ்ரீ பாணபுரீசர் திருக்கோயில்,
ஸ்ரீ ஏகாம்பரேசர் திருக்கோயில்,
ஸ்ரீ கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்,

பெருமாள் கோயில்கள்:
ஸ்ரீ சக்ரபாணி கோயில்,
ஸ்ரீ வராகப்பெருமாள் கோயில்,
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்,
ஸ்ரீ ராமஸ்வாமி கோயில்..

கும்பகோணம் நகருக்கு
அருகிலுள்ள தலங்கள்:
திருக்கொட்டையூர் 2 கிமீ 
பழையாறை வடதளி 4 கிமீ 
திருகலயநல்லூர் (சாக்கோட்டை ) 4 கிமீ 
திருஇன்னம்பர் (இன்னம்பூர்) 4 கிமீ 
திருசத்திமுத்தம் 5 கிமீ 
திருபட்டீச்சரம் (பட்டீஸ்வரம்) 5 கிமீ 
திருசிவபுரம் 4 கிமீ 
திருவலஞ்சுழி 5 கிமீ 
திருஏரகம் (சுவாமிமலை) 7கிமீ.

கும்பகோணம் நகருக்கு
அருகிலுள்ள திவ்ய தேசங்கள்: 

திருஆதனூர், திருபுள்ளபூதங்குடி, 
திருவிண்ணகர்,
(ஒப்பிலியப்பன் கோயில்)
 திருச்சேறை, திருநறையூர்
(நாச்சியார் கோயில்)..


மாசி மகத்தன்று
சிவாலயங்களின் தீர்த்தவாரி மகாமகக் குளத்திலும் பெருமாள் கோயில்களின் தீர்த்த வாரி - காவிரியின் சக்கர படித்துறையிலும் நடைபெறும்..

கண்டு தரிசிப்பதற்கு வாய்ப்பையும் வசதியையும் 
எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***