நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 14, 2026

புது வருடம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மங்களகரமான ஸ்ரீ பராபவ

சித்திரை முதல் நாள்
 செவ்வாய்க்கிழமை


அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-


பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!..

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திரு ஐயாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி!...
-: மாணிக்கவாசகர் :-


கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் 
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் 
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.. 894
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-


அனைவருக்கும்
  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம் 
நம சிவாய
***

திங்கள், ஏப்ரல் 15, 2024

சொல்மாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 2 
திங்கட்கிழமை

சென்ற ஆண்டு 
உடல் நலிவுற்று இருந்த போது 
புனையப்பட்ட சொல் மாலை... 
இதனை இப்போது சமர்ப்பிப்பதில் 
மகிழ்ச்சி எய்துகின்றேன்..
 

மணி மாடசாமி என
அணிகொண்ட அருள் தீபம்
பணிகின்ற நெஞ்சினில்
பிணிதீர்க்கும் ஒளிதீபமே.. 1

கொடி மாடசாமி என
மடிகாக்கும் மணிதீபம்
தடி கொண்டு தடை நீக்கி
குடிகாக்கும் சிவதீபமே..2

படிவாசல் வந்தார்க்கு
விடிவெள்ளி எனவந்து
பிடிசோறு தந்தருளும்
முடிகொண்ட குலதீபமே.. 3

சித்ரம் எனும் ரூபத்தில்
ஆனந்தத் திருமூர்த்தி
உக்ரகாளி அவள்தந்த
பாலன் அல்லவோ..4

திக்கெலாம் நீ காக்க 
திருவடிகள் போற்றி ஐயா
தீமைகளை நீ தீர்க்க
திருப்பெயர் போற்றி  ஐயா..5


ஆறளவு நூறளவு
அருள்கின்ற தளவாய்நீ
பூ அளவு என்றாலும்
பொன்னளவு தரும் சாமியே.. 6

மந்திரமும் தந்திரமும்
நலந் தரும் தவமணி
யந்திரமும் சுந்தரமும்
சுகந் தரும் சிவமணி நீ..7

அஞ்சுகிற முகம் கண்டு
ஆதரிக்க வாருமே
துன்பங்கள் தொலைந்திட
துணையாகி வாரும் ஐயா..8


பேச்சியம்மன் பேர் இருக்க
பேய் பிணிகள் சிதறுமே
இசக்கியம்மன் அருகிருக்க
இன்னல் அகன்றோடுமே..9


குமரியின் எல்லையில்
கொடி கொண்டு நின்றாலும்
குரல் கேட்டு குறை 
தீர்க்கும் தெய்வமகனே..10

முத்தையன் கோயிலில்
முறை காக்கும் முன்னரசு
முன் நின்று முறை சொல்ல
குறை தீர்க்கும் தென்னரசனே.. 11

ஆற்றாது அழுதார்க்கு
அருள்காட்டும் நல்லரசு
துன்புற்று தொழுதார்க்கு
துணையாகும் வல்லரசுநீ..12

வேட்டைக்குச் செல்கின்ற
வித்தகனை நான் பாடி
கோட்டைக்குள் வந்தேனே
வாழ்வெனும் ஒளிதேடி.. 13

நாயகனே உன் வாசல்
தாயகம் என்றிடக்
குறையென்று ஏதும் இல்லை
பகையென்று ஏதும் இலையே..14

குன்றாத குணம் தந்து
குறையாத நலம் தந்து
நானென்று முன்நின்று
என்றென்றும் காப்பாற்றுமே 15


வந்தாரை வரவேற்று
வழிகாட்டும் ஜோதிமணி
நடைவழியில் துணையாகி
நலங்காட்டும் ஞானமணிநீ..16


ஆதிசிவ சக்திமகன்
அலங்காரத் திருக்கோலம்
ஆதரவும் ஆறுதலும்
அருளான எழிற்கோலமே .. 17

எங்கெங்கும் திகழ்கின்ற
எங்கள் குல நாயகனே
மங்கலங்கள் தருகின்ற
மலரடிகள் போற்றி ஐயா.. 18


அன்பென்னும் ஆதரவில்
ஐம்புலனும் வாழுமே
ஆசையுடன் வாரும் ஐயா
அருள்தரவே வாரும் ஐயா..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஏப்ரல் 14, 2024

வருக வருக..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை முதல் நாள் 
ஞாயிற்றுக்கிழமை


அனைவருக்கும் அன்பின் இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துகள்


மணி மாடசாமி என
அணிகொண்ட அருள் தீபம்
பணிகின்ற நெஞ்சினில்
பிணிதீர்க்கும் ஒளிதீபமே.. 1

கொடி மாடசாமி என
மடிகாக்கும் மணிதீபம்
தடி கொண்டு தடை நீக்கி
குடிகாக்கும் சிவதீபமே..2

படிவாசல் வந்தார்க்கு
விடிவெள்ளி எனவந்து
பிடிசோறு தந்தருளும்
முடிகொண்ட குலதீபமே.. 3

சித்ரம் எனும் ரூபத்தில்
ஆனந்தத் திருமூர்த்தி
பாசமிகு காளியின்
பாலன் அல்லவோ..4

குலதெய்வத்தின் மீதான 
சொல்மாலையின் முழு வடிவம் 
அடுத்த பதிவில்!..


தமிழின் பன்னிரு மாதங்களில் சித்திரை முதல் மாதம்.. 

காலச் சக்கரத்தில் சூரியன் மேஷ ராசியில் திகழ்கின்ற காலம்..

அந்த நாட்களில் 
பங்குனியிலேயே புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாங்கி - சித்திரை முதல் நாளில் வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலம் இட்டு
நல்ல விளக்கு ஏற்றி வைத்து இறைவனை வழிபட்டு அனைவரும் கூடியிருக்க வாசிப்பது  பழக்கமாக இருந்தது.. 

கோயில்களிலும்
புத்தாண்டு நாளில் சிறப்பு வழிபாடுகளுடன்
பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.. இந்நிகழ்வில் கலந்து கொள்வது சிறப்பு என்பர்..

இந்நாளில் குலதெய்வ வழிபாடு சாலச் சிறந்தது..


தன்னை நாடி வருகின்ற பக்தர் நலனுக்காக ஆண்டுதோறும் - மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை  பச்சை பட்டினி விரதம் இருக்கின்ற சமயபுரத்து அம்மன் விரதம் முடித்து திருவிழா காண்கின்றாள்.. சித்திரை (3) முதல் செவ்வாய் (16/4) அன்று திருத்தேரோட்டம்..


இவ்வருடம் ஸ்ரீராமநவமி சித்திரை 4  (17/4) புதனன்று அமைகின்றது.. 

தென்னகத்தின் பெருவிழா ஆகிய மதுரை சித்திரைத் திருவிழா பங்குனி 30 (12/4) வெள்ளிக் கிழமையன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது..


ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் பட்டாபிஷேகம் சித்திரை 6
(19/4) வெள்ளிக் கிழமையன்றும்

திருக்கல்யாணம் சித்திரை 8 (21/4) ஞாயிற்றுக் கிழமையன்றும் 

திருத்தேர் சித்திரை 9 (22/4) திங்கட் கிழமையன்றும்

ஸ்ரீ கள்ளழகர் வைகையில் இறங்குதல் சித்திரை 10  (23/4)
(சித்ரா பௌர்ணமி) செவ்வாய்க் கிழமையன்றும் நிகழ இருக்கின்றன..

முருகன் கோயில்களில் விசேஷமான சித்ரா பௌர்ணமி சித்திரை 10  (23/4) செவ்வாய்க் கிழமை..


சித்ரா பௌர்ணமி அன்று ஆற்று மணலில் குடும்பத்துடன் கூடி அமர்ந்து உணவு உண்ணுவது நமது கலாச்சாரம்..

சித்ரா பௌர்ணமி அன்று தான் ஸ்ரீ சித்ரகுப்தர் வழிபாடு..


சித்திரை 21 (4/5) ல் அக்னி நட்சத்திரம் தொடங்கி (வைகாசி 15 வரை) 14 நாட்களுக்கு நீடிக்கின்றது..

இந்நாட்களில் நீர், மோர், விசிறி - என, தானம் அளிப்பது நல்லது.

சித்திரை 18 (1/5) புதன் கிழமையன்று குரு பெயர்ச்சி.. இதைத் தவிர வேறு கிரகப் பெயர்ச்சி எதுவும் இந்த ஆண்டில் இல்லை..


" என் கடன் பணி செய்து கிடப்பதே.. " - என்று, சமுதாயப் பணிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஐயன் ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள்..

அப்பெருமான் சிவசாயுஜ்யம் பெற்ற நாள் சித்திரை சதயம்.. 
இவ்வருடம் சித்திரை 20 (3/5) வெள்ளியன்று சதயம்..

புண்யங்களுக்கு உகந்ததான அக்ஷய திரிதியை சித்திரை 27  (10/5) வெள்ளி..

தமிழ் வருடப் பிறப்பு அன்று, வேப்பம் பூக்களுடன் புளி, வெல்லம் சேர்த்து ரசம் வைப்பதும் பச்சடி செய்வதும் மரபினைச் சார்ந்த ஆரோக்ய வழிபாடு..

பொதுவாக இந்த ஆண்டும் மக்களுக்கு சற்று பிரச்னைகளை தரக்கூடியதாக இருக்கும் என கணிக்கப் பெற்றுள்ளது..


ஸ்ரீ குரோதி வருடத்திற்கான வெண்பா

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார் மிக்க
அற்பமழை பெய்யுமே மேகங்குறையுமே
சொற்பவிளை உண்டெனவே சொல்..
- என்கின்றார்
இடைக்காட்டு சித்தர்..

இருப்பினும்,


நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே...
(அருணகிரிநாதர்)

எனவும்,


நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே 
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே..
(திருஞானசம்பந்தர்)
 
எனவும், 
அருளப் பெற்ற 
திருப்பாடல்களை சிந்தித்திருந்து 
நலம் பெறுவோம்..


சித்திரையை வரவேற்போம்..
சீர்மிகு வாழ்வில் மகிழ்ந்திருப்போம்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஏப்ரல் 14, 2017

நலமே விளைக..

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..


இன்றைய பதிவில்
அருட்திரு வள்ளலார் ஸ்வாமிகள் அருளிய
கந்தன் சரணப் பத்து..

அருட்பெரும் ஜோதி.. அருட்பெரும் ஜோதி.. 
தனிப்பெரும் கருணை.. அருட்பெரும் ஜோதி!..
  

அருளார் அமுதே சரணம் சரணம் 
அழகா அமலா சரணம் சரணம் 
பொருளா எனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!.. {1}

பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{2}

முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{3}



பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்
காவே தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{4}

நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லூர் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{5}

கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத் தவருக் கருள்வோய் சரணம் 
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவா கியநல் ஒளியே சரணம்
காலன் தெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{6}



நங்கட் கினியாய் சரணம் சரணம்
நந்தா உயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையாய் மகனே சரணம்
சிவைதந் தருளும் புதல்வா சரணம் 
துங்கச் சுகம்நன் றருள்வாய் சரணம்
சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{7}

ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம்சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{8}

மன்னே எனையாள் வரதா சரணம்
மதியே அடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவோய் சரணம்
அன்னே வடிவேல் அரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{9}

வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவையில் லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{10}



நாடு நலம் பெறட்டும்..
நல்லறம் தழைக்கட்டும்!..

வாழ்க நலம்..
வளர்க நலம்!..

அருட்பெரும் ஜோதி.. அருட்பெரும் ஜோதி.. 
தனிப்பெரும் கருணை.. அருட்பெரும் ஜோதி!.. 
***

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

ஸ்ரீவிஜய விநாயகர்

விநாயகர் வழிபாடு - பாரதத்தின் தனிச் சிறப்பு. 

எளிமையின் தனிப்பெரும் அடையாளம் விநாயக மூர்த்தி!..

தங்கத் தகடுகள் போர்த்தப்பட்ட ஆடம்பரமான மூலஸ்தானமாகட்டும்.. தளிரும் இலைகளும் தழைத்து சரியும் அரச மரத்தின் நிழலாகட்டும்!... எங்கும் ஒரே மாதிரியாகப் பொங்கிப் பெருகும் அருள் வெள்ளத்துக்கு உரியவர் அவரே!...

எல்லா மூல மந்திரங்களுக்கும் முதலான,   ஓம் - எனும் ப்ரணவமே அவர் தம் இருப்பிடம். விநாயகப்பெருமானை ஓம் எனும் ப்ரணவத்தால் தியானித்து வணங்கினால் ஓஜஸ் எனும் நினைவாற்றலும் தேஜஸ் எனும் வடிவழகும் நமக்கு சித்தியாகும்.

காதுகளின் கீழ் நுனியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்து, நாம்  சமர்ப்பிக்கும் வணக்கத்தினால் காதுகளின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகளால் நினைவாற்றல் தூண்டப்படுகின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மையாகும்.

மக்கள் நலன் கருதி தன் தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை மேரு மலையில் எழுதிக்கொடுத்த தியாக மூர்த்தி. நம் உடலில் மூலாதாரத்துக்கு அதிபதி.

சிவ - சக்தி அம்சங்களாகத் திகழ்ந்த - சமஷ்டி , வியஷ்டி எனும் ப்ரணவ ரூபங்களை, அப்பனும் அம்மையும் நோக்கிய மாத்திரத்தில் ப்ரணவ ரூபமாக பேரொளிப் பிழம்பில் தோன்றியவர் கணபதி!...


கஜமுக அசுரனை அழிப்பதற்கென - சிவபெருமானால்  தோற்றுவிக்கப்பட்டவர் கணபதி என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்கு...

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறைஇறையே...

என்று - தம்மை வழிபடும் அன்பரின் இடர்களைக் களைவதற்காக  எம்பெருமானும் அம்பிகையும் கணபதியை அருளினர் என்பது திருஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்கு!...

இந்தத் திருக்கோலத்தைத்தான் -

காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!...,

என்று திருஐயாற்றில், தாம் கண்டு இன்புற்றதை நமக்கும் காட்டியருள்கின்றார் திருநாவுக்கரசு சுவாமிகள்.

எனவே இந்த அளவில் - புத்தாண்டின் முதல் நாளில் நம் முன்னோர் நமக்குக் காட்டியருளிய -

காக்கும் கணபதியைக் கைகூப்பித் தொழுது வணங்குவோம்!...

அவர்தம் பொற்பாதங்களைப் பணிந்து போற்றி இன்புறுவோம்!..

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை...

நம் வாழ்வில் தடுமாறும் பல தருணங்களிலும் நமக்குக் கை கொடுத்துத் தூக்கி விடுபவர் அவரே!...


விஜய எனும் புத்தாண்டின் நற்பலன்களை 
நம் கைமேல் தந்தருள்வார் விநாயகப் பெருமான்!...


ஸ்ரீ கணேச சரணம்!... சரணம்!...