நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஊர் சுற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊர் சுற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 09, 2023

சந்நிதி தேடி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 23
சனிக்கிழமை


திருச்செந்தூரில் இருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்டு உடன்குடி வழியாக மாலைப் பொழுதில் செட்டியாபத்து எனும் கிராமத்தில் ஸ்ரீ ஐந்து வீட்டு ஸ்வாமிகள் திருக்கோயிலை அடைந்தோம்..

திருச்செந்தூரில் இருந்து செட்டியாபத்து கிராமம் 18 கிமீ.,

இந்தக் கோயிலைப் பற்றி சென்ற ஆண்டில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன..

ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ பெரிய பிராட்டியார், ஸ்ரீ வயணப் பெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்தி ஸ்வாமி, ஸ்ரீ குதிரை ஸ்வாமி, ஸ்ரீ திரு புளி ஆழ்வார், ஸ்ரீ ஹனுமன் என சந்நிதிகள்..

ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணப் பெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள் மூவரும் மானுடப் பிறப்பில் தெய்வ நிலை அடைந்தவர்கள்..

இங்கே சந்நிதிகளுக்குள் வலம் செய்து வணங்கலாம் என்பது சிறப்பு..

கோயில் திருநடை திறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

































துப்புரவுப் பணியாளர் பொருட்டு அற்புதங்கள் நிகழ்ந்த கோயில் இது..

கோயில் வளாகத்தில்
பக்தர்கள்
தங்குவதற்கும்
 சமைப்பதற்கும்
வசதிகள் உள்ளன..









ஐந்து வீட்டு ஸ்வாமிகள்
போற்றி.. போற்றி..
*
 
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

திங்கள், செப்டம்பர் 04, 2023

சந்நிதி தேடி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 18
திங்கட்கிழமை


கடந்த ஞாயிறு அன்று (28/9) குல தெய்வ வழிபாட்டிற்காக (செந்தூர் விரைவு ரயில் தஞ்சையில் நேரம் இரவு 10: 20) புறப்பட்டு - திங்கள் அதிகாலை திருச்செந்தூரைச் சென்றடைந்தோம்.. 


திருப்பணி தொடங்கப் பட்டிருப்பதால் நிறைய  மாற்றங்கள். அதனால் சிரமங்கள்.. அனைத்தும் விரைவில் தீர்வதற்கு பிரார்த்தனை செய்து கொள்வோம்..

முந்தைய நாட்களில் -
கைப்பைகளை வைத்துக்  கொண்டு நாள் முழுதும் (குளியல் வசதியுடன்) தங்கிக் கொள்ள கோயிலுக்குப் பின்புறம் இடும்பன் சந்நிதி மண்டபம் - வசதியாக இருந்தது..
எப்போதும் இந்த மண்டபத்தில் ஆட்கள் இருப்பர்.. 

சென்ற ஆண்டு நித்ய அன்னதான கூடமாக மாற்றப்பட்டிருந்த இடும்பன் கோயில் மண்டபம் இந்த ஆண்டு இல்லை.. முற்றாக இடித்துத் தள்ளப்பட்டிருந்தது.. 

பொருள் பாதுகாப்புக்கான மாற்று இடம் தேடி அலைவதற்கும் இயலவில்லை.. 

மீண்டும் கடற்கரைக்குச் சென்று நீராடி விட்டு நாழிக் கிணற்றுக்கு வந்தோம்.. 

பழைமையான நடைவழி
பனை மரத்து (பனஞ் சப்பை) உத்திரங்களுடன் சீமை ஓடுகள் வேயப்பட்டிருந்த பழைமையான நடை வழி - இடிக்கப்பட்டு விட்டது.. 

புதிய அமைப்பு - இரும்புக் குழாய்கள் தகரக் கூரைகளுடன் உருவாகிக் கொண்டிருக்கின்றது..

கடும் வெயிலும் இடைவிடாத காற்றுமான கடற்கரைப் பகுதியில் - தகரக் கூரைகளும் சாதாரண இரும்புக் குழாய்களும் எத்தகைய பாதுகாப்பு என்பது புரியவில்லை..

திருக்கோயில் திருப்பணிக்காக அன்பர் ஒருவர் வழங்கியுள்ள நிதி  இருநூறு கோடி என்பது குறிப்பிடத்தக்கது..

ஒருவழியாக நாழிக் கிணற்றில் தீர்த்தமாடி உடை மாற்றிக் கொண்டு புதிய அன்ன தானக் கூடத்தில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஸ்வாமி தரிசனத்திற்குப் புறப்பட்டோம்.. 

திருக்கோயிலின் உட்புறமும் வேலை நடந்து கொண்டிருந்தது..  வழக்கத்தை விட சந்நிதிக்கு ஐந்தடி முன்பாகவே நிறுத்தப்பட்டு பொது தரிசனம்..

அந்த நேரத்தில் சந்நிதிக்குள் தீப ஆராதனை நடத்தப் பெற வில்லை.. 

" நகருங்க.. நகருங்க.. "  என்றும் " போங்க.. போங்க.. " என்றும் சத்தமிட்டுக் கொண்டே இருந்தார்கள்..

சந்நிதிக்கு ஐந்தடி முன்பாகவே நிறுத்தப்பட்டதால் ஜெயந்தி நாதர் தரிசனம் கிடைக்க வில்லை.. 

சண்முக நாதன் சந்நிதியில் நிமிட நேரம் அற்புத தரிசனம் கிடைத்தது..  

மூலஸ்தானத்திற்குப் பின்புறம் பஞ்சலிங்க தரிசனம் எல்லாம் தற்போது அரிது..

சோம சூத்திரப் பிரதட்சணம் மாதிரி உள் திருச்சுற்றில் தேவகுஞ்சரி, வள்ளி நாச்சியார் , தட்சிணாமூர்த்தி சந்நிதிகளிலும் -

காசி விஸ்வநாதர் விசாலாட்சி - ஏனைய  சிவ மூர்த்திகளையும் வெளித் திருச்சுற்றில் வல்லப கணபதியையும் தரிசனம் செய்த வேளையில் சூர சம்ஹார மூர்த்திக்கு அபிஷேகம்.. அலங்கார தரிசனம் கண்டு வணங்கி தீர்த்தமும் திருநீறு பெற்றுக் கொண்டு -

வடபுறத்தில் பெருமாளின் சயனத் திருக்கோலத்தைத் தரிசித்து விட்டு வெளியே வந்தபோது தொன்னையில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப் பெற்றது.. 

மேலைக் கோபுரத்தின் முன்புறம் தடுப்புகள்..
கோயிலின் காவல் நாயகமாகிய ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமியை நெருங்கி வணங்குவதற்கு இயலவில்லை.. 



வடக்குப் புறத்தில் ஸ்ரீ வள்ளி நாச்சியார் குகை தரிசனம் செய்தபின் அன்ன தான  மண்டபத்தில் உணவருந்தி விட்டு தேவஸ்தானத்தில்  முதியோருக்காக கட்டணம் இன்றி இயக்கப்படும் சிற்றுந்தில் பயணித்து பேருந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்து உடன்குடிக்குப் புறப்பட்டோம்..









மரக்கிளையில் மயிலின் ஓய்வு




இந்த முறை வெயிலின் தாக்கத்தினால்
கடற்கரை மூவர் நினைவாலயங்களுக்கும் ஐயா வைகுண்டர் கோயிலுக்கும் செல்வதற்கு இயலவில்லை..

கைத்தலப் பேசிக்கு  மின்னேற்றம் செய்து கொள்ள இயலாததால்  திருக்கோயிலுக்கு வெளியே அதிக அளவில் படங்கள் எடுக்க இயலவில்லை..

திருக்கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்படும் கைத்தலப் பேசிகள் பறிமுதல் செய்யப்படும் - என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்ததால் -

காலணி, கைத்தலப் பேசி வகையறாக்களை நாங்களே வெளியில் இருந்து - எங்கள் பொறுப்பில் ஒருவர் மாற்றி ஒருவராக கவனித்துக் கொண்டோம்.. 

இதனால் கூடுதலாக சிறிது நேரம் ஆனதே தவிர வேறொரு சிரமமும் இல்லை.. 

செந்தில்நாதனின் திருக்கருணையினால் 
அனைத்தும் நலமே!..
**
சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் 
கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே..(40)
-: கந்தர் அலங்காரம் :-
*
முருகா முருகா
முருகா முருகா..

சிவாய
திருச்சிற்றம்பலம்
***