நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 29, 2022

ஆடி வெள்ளி 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி13.. 
இரண்டாவது வெள்ளிக்கிழமை..

இன்றைய பதிவில் 
திரு இலஞ்சி திருத்தலம்..

இலஞ்சி எனில் தாமரை 
பூத்திருக்கும் பொய்கை..


காஸ்யபர், கபிலர், துர்வாசர் ஆகியோருக்கு முப்பெரும் தத்துவத்தை உரைத்த முருகன் - தானே மும்மூர்த்தி வடிவன் என, அக்கோலத்தைக் காட்டியருளிய தலம்..

தென்பாண்டி நாட்டில் சிறப்புற்று விளங்கும் தலங்களுள் இத்தலமும் ஒன்று.. ராஜ கம்பீர நாடாளும் நாயகனின் குமார வயலூர் போல இத்தலமும் சிவாலயம்..

இலஞ்சிக்குமரன் எனப் பெயர் கொண்டு ஸ்ரீ வள்ளி தேவகுஞ்சரியுடன்  அருள் பாலிக்கின்றான் திருமுருகன்..மூலஸ்தானத்தில் இடப்புறம் நோக்கியிருக்கின்றது மயில்..

அகத்திய மாமுனிவர் மணல் கொண்டு பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்..

அருணகிரிநாதர் இத்தலத்தில் அருளிச் செய்தவற்றுள் நான்கு திருப்பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன..

இலஞ்சி - திருக்குற்றாலத்தில் இருந்து 2 கி.மீ.. தொலைவிலும் தென்காசியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது..


ஸ்தல கணபதி - செண்பக விநாயகர்
இறைவன் - இருவாலுக நாதர்
(வாலுகம் எனில் வெண்மணல்)
 அம்பிகை - குழல்வாய் மொழியாள்
தலவிருட்சம் மகிழமரம்
தீர்த்தம் சித்ரா நதி

அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்..
 *
தனந்தன தந்த தனந்தன தந்த
தனந்தன தந்த ... தனதானா

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு 
துரந்தெறி கின்ற ... விழிவேலால்

சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு 
சுருண்டும யங்கி ... மடவார்தோள்

விரும்பிவ ரம்பு கடந்துந டந்து 
மெலிந்துத ளர்ந்து ... மடியாதே

விளங்குக டம்பு விழைந்தணி தண்டை 
விதங்கொள்ச தங்கை ... அடிதாராய்

பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற 
பொனங்கிரி யொன்றை ... எறிவோனே

புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள் 
புரந்தரன் வஞ்சி ... மணவாளா

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் 
குரும்பைம ணந்த ... மணிமார்பா

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று 
இலஞ்சி அமர்ந்த ... பெருமாளே..
*
(நன்றி : கௌமாரம்)


கருமேகம் போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும் நறுமலர்களைச் சூடிக் கொண்டுள்ள பெண்களையும் அவர்களது கூரிய விழிகளையும் கண்ட நான் மனம் மயங்கி எனது விழி சென்ற வழியில் சென்று மிகவும் வாட்டமுற்று சோர்வுற்றுச் சுழன்றேன்..

அவர்களது தோள்களில் விருப்பம் கொண்டு அளவு கடந்து நடந்து கொண்டதனால் மெலிந்து தளர்ந்தேன்.. இனியும் மடிந்து போகாதபடிக்கு -

கடம்ப மலர் மாலைகளை விரும்பி அணிகின்ற முருகனே!..

அழகிய தண்டைகளும்  இன்னிசை மிகும் கிண்கிணிச் சதங்கைகளும்  விளங்கும் உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக...

பொன் போன்று ஒளி பொருந்தி நின்ற கிரெளஞ்ச
மலையை ஞானம் எனும் வேலால் அழித்தவனே...

உன்னைப் புகழ்ந்து மகிழ்ந்து வணங்கி நிற்பவனாகிய தேவேந்திரனின் மகள் தேவயானையின் 
மணவாளனே... 

தினைப் புனத்தைக் காவல் காத்து நிற்கின்ற வள்ளி நாயகியை அணைந்த மணி மார்பனே...

தாமரைப் பொய்கையில் தோன்றி
இலஞ்சி எனும் தலத்தில் குமரன் எனப் பெயர் கொண்டு வீற்றிருக்கும் சரவண முருகப்பெருமாளே!...


இந்நாட்டில் உன் மக்களாகிய எவரும் வழி தவறிப் போவதில்லை.. வழி மாறிச் செல்வோர் எவரும் உனது மக்களாக இருப்பதில்லை.. இத்தகைய சிவநெறியில் வாழ்கின்ற  அனைவரையும் அன்புடன் காத்தருள்வாயாக...

வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா
வீரவேல் முருகனுக்கு
அரோகரா..
***

15 கருத்துகள்:

  1. மூவுலகையும் காக்கட்டும் முத்தமிழ் முருகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருக்குற்றாலத்திலிருந்து இலஞ்சி வரும் வழியிலேயே இருட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஓட்டுநர் அழைத்துப் போனார். அருமையான தரிசனம். பக்கத்திலேயே உள்ள இன்னொரு மலைக்கோயிலுக்குப் போக முடியாதுனு சொல்லிட்டார்.
    https://aanmiga-payanam.blogspot.com/2009/12/blog-post_13.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றியக்கா..

      நீக்கு
  3. முருகனுக்கு அரோகரா வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஜி..

      நீக்கு
  4. புதிய, தெரியாத விஷயங்களுடன் இன்றைய பதிவு மிளிர்கின்றது. இலஞ்சி தரிசித்ததில்லை. தெரிந்திருந்தால் கட்டாயம் தரிசித்திருப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. இலஞ்சி குமரன் திருப்புகழ் பகிர்வு அருமை.
    இலஞ்சி குமரன் கோவிலுக்கு சாரின் தாத்தா தலவரலாறு எழுதி இருக்கிறார்கள். கோவிலுக்கு போய் வந்து பதிவு போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      இலஞ்சி தலவரலாறு பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கின்றீர்கள்..

      அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. இலஞ்சி பல பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். பதிவு அருமை.

    அது மட்டுமே நினைவு. ஊருக்குச் செல்லும் போது செல்ல நினைக்கும் நினைத்த இடம் ஆனால் செல்ல இயலவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ச்கோ..

      நீக்கு
  7. அறிந்திராத இடம், திருப்புகழ் வரிகள், பொருள், தகவல்கள் அனைத்தும் அருமையாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. இலஞ்சி முருகன் தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..