நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 24, 2022

தரிசனம் 7

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த வெள்ளியன்று தரிசனம்
செய்த திருக்கோயில் இன்றைய பதிவில்..

ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி பிரதிஷ்டை செய்து வணங்கிய திருத்தலம்..
பின்னர் காமதேனுவும் தேவர்களும் வணங்கிய தலம்..

ஊழிப் பெரு வெள்ளத்தில் மூழ்காது விளங்கும் திருத் தலங்கள் இரண்டு.. அவை தோணிபுரம் எனப்படும் சீர்காழியும் திட்டையும் ஆகும்..

ஊழிப் பிரளயத்தின் போது இத்தலம் மேடாகத் திகழ்வதால் திட்டு..

இங்கே இறைவன் குடி கொண்டு விளங்குவார் என்பதனால் தென்குடித் திட்டை..

தலம்
திருத் தென்குடித்திட்டை


இறைவன்
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
ஸ்ரீ பசுபதீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை
ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சக்கர தீர்த்தம்..

இத்தலத்தை தரிசித்து திருப்பதிகம் அருளியுள்ளார் திருஞான சம்பந்தப் பெருமான்..

இத்திருத்தலத்தின் வடதிசையில் வெட்டாறும் தென் திசையில் வெண்ணாறும் விளங்குகின்றன..

கிழக்கு நோக்கிய திருக்கோயில் .. எதிரில் திருக்குளம்..


எதிரில் சக்கர தீர்த்தம்

கொடி மரம்

ஸ்ரீ நந்தி

ராஜ கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் 
ஸ்ரீ விநாயக மூர்த்தியுடன் கொடிமரம்.. பலி பீடம்.. நந்தியம் பெருமான்..

தெற்குத் திசையை நோக்கியவளாக அம்பிகை..

ஸ்ரீ ராஜகுரு (நன்றி கூகிள்)

தேவகுருவாகிய பிரகஸ்பதி இத்தலத்தில் சிவவழிபாடு செய்த புண்ணியத்தால் 
ஸ்வாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் நடுவில் திகழும் பேறு பெற்றார்.. ராஜ குரு எனும் திருப்பெயருடன் நின்ற திருக் கோலம்..

இவரே நவக்கிரக மண்டலத்தில் வியாழன் என்று குறிப்பிடப்படுபவர்..

திருக்கோயிலின் உள் திருச்சுற்றில் நான்கு மூலைகளிலும் சிவலிங்கங்களுடன் மூல மூர்த்தியாக ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திகழ்வதால் இத்தலம் பஞ்ச லிங்கத் தலம் எனப்படுகின்றது..

மூலஸ்தானத்தினுள் ஸ்ரீ வசிஷ்டேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கும் போது நம்முள் ஆனந்தம் பெருகுவதை உணரலாம்..

கருவறையின் உட்புறம்
பிரம்மரந்திரத்தில் சந்திர காந்தக்கல் பொருத்தப் பட்டுள்ளது.. சந்திர காந்தக் கல் காற்றில் உள்ள ஈரப் பததை ஈர்த்து நீர்த் துளியாக வழிய விடும் தன்மையை உடையது..
இதனால் 24 நிமிடங்களுக்கு ஒரு முறை (ஒரு நாழிகை) சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துளி நீர் விழுகின்றது..
இது வேறெங்கும் இல்லாத அற்புதம் ஆகும்..  இதனை முப்பது ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்திருக்கின்றேன்..





உள் திருச்சுற்றில்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, கன்னி மூலையில் ஸ்ரீ விநாயகர்..
கருவறைக்கு நேர் பின்புறத்தில் ஸ்ரீ வள்ளி தேவயானை உடனாகிய ஸ்ரீ திருக்குமரன் சந்நிதி.. அடுத்து ஸ்ரீ கஜலக்ஷ்மி..
மேலும் சண்டிகேசர் ஸ்ரீ துர்கா தேவி.

ஸ்ரீ வைரவர்

தெற்கு முகமாக மிக விசேஷமான தனி சந்நிதியில் ஸ்ரீ வைரவ மூர்த்தி..

ஸ்ரீ நவகிரக பீடம்

திருக்கோயில் மகாமண்டபம், அர்த்த மண்டபம் மூலஸ்தானம் மற்றும் கொடிமரம்  - என, முழுவதும் கருங்கல் திருப்பணி..

ஸ்ரீ நால்வர்

கொடிமரத்தின் அருகிலுள்ள தூணில் சைவ சமயத்தின் குரு நாதர்களான அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்..

எதிர்புறத்தில்
இறைவனை வணங்கும் நிலையில்  அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இத்திருக் கோயிலை கற்கோயிலாக (1926 ) எடுத்துக் கட்டிய ஸ்ரீ ராமசாமி செட்டியாரும் மற்றும் அவரது துணைவியாரும் என்று அறியப்படுகின்றது..



பங்குனி மாதத்தில் 25,26,27 ஆகிய நாட்களில் உதிக்கின்ற சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படர்கின்றன என்கின்றார்கள்..

தஞ்சை மாநகரின் வடக்கே அமைந்துள்ளது திட்டை..

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கிழக்காகப் பிரியும் திருக்கருகாவூர் சாலையில் இரண்டு கி.மீ தொலைவில் உள்ளாது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கருகாவூர் செல்லும் நகரப் பேருந்துகளும் திருக்கருகாவூர் வழியாக கும்பகோணம் செல்லும் புற நகர்ப் பேருந்துகளும் கோயிலின் அருகே நின்று செல்கின்றன..

தஞ்சை - மயிலாடுதுறை இருப்புப் பாதை தடத்தில் தஞ்சையை அடுத்த ஸ்டேஷன் திட்டை.. பாசஞ்சர் இரயில்கள் இங்கு நின்று செல்கின்றன..

ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகா சமேத
ஸ்ரீ வசிஷ்டேஸ்வர ஸ்வாமியின் நல்லருளை
அனைவரும் எய்துதற்கு
பிரார்த்தனைகள்..
***
முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்இடம்
மன்னுமா காவிரி வந்தடி வருட நல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.. (3.035)

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்தை உணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.. (3.035)
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. திட்டைக்கு 2,3 முறை போயிருக்கேன். நல்லதொரு தரிசனம். விபரமான தகவல்கள். சந்திரகாந்தக்கல்லில் இருந்து நீர் சொட்டுவதை நாங்களும் தரிசித்திருக்கோம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அவந்திகா பற்றிய சந்தேகங்களுக்கு விடையை எதிர்பார்த்து வந்த இடத்தில் ஈசன்/அன்னை தரிசனம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் எதிர்பார்த்தேன் கீதாக்கா. அண்ணாவின் விடைகளில் தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம்.

      கீதா

      நீக்கு
  3. குரு தரிசனம் கிடைத்தது இன்று, மகிழ்ச்சி.

    திட்டை கோயில் போனது நினைவுகளில் வந்து போகிறது.
    தென்குடி திட்டை பாடலை பாடி எல்லோர் நலத்திற்கும் வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் விவரங்களும் சுவாரசியம். படங்களை இன்னும் கொஞ்சம் பெரிதாகப் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. நீண்ட நாட்களாய் பார்க்காமல் விட்ட திருத்தலங்களை தரிசித்து வருகிறீர்கள் போலும்.  வாரம் இரண்டு கோவில் என்று கவர் செய்கிறீர்களோ...

    பதிலளிநீக்கு
  6. இந்த ஒரு துளி வியர்வை சமாச்சாரம் சமீபத்தில் பழனியில் கூட அடிபட்டதோ..  பேஸ்புக்கில் ஏதோ படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கலில் அம்மனிடமிருந்து வேல் வாங்குகையில் சிங்காரவேலனுக்கு வியர்க்கும்/இப்போதும் என்கிறார்கள்.

      நீக்கு
  7. திட்டையிலிருந்து வந்து என்னுடன் படித்த ஓர் நண்பன் நினைவு வருகிறது.  அவனை திட்டை என்றே அழைத்து அவன் சொந்தப் பெயர் மறந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  8. தென்குடித் திட்டை ஒரு முறை சென்று இருக்கிறேன். நல்லதொரு கோவில்.

    பதிலளிநீக்கு
  9. நானும் தரிசனம் செய்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  10. கோயில் மிக அழகான கோயில் என்று தெரிகிறது துரை அண்ணா. சென்றதில்லை.

    படங்கள் மிக மிக அழகு. அதுவும் தூண்கள் நிறைந்த அந்தப் பிராகாரம் படம் செம. அண்ணா படங்களைப் பெரிதாக்கிப் போட முடியுமா? இவ்வளவு அழகா எடுத்துட்டு ரொம்பச் சின்னதாக இருக்கே அதான்.

    ஊருக்கு வந்ததிலிருந்து இவ்வளவு வருஷம் போக முடியாமல் இருந்து இப்ப கோயில் உலா போய்வருகிறீர்கள். எங்களுக்கும் படங்கள் தரிசனம் கிடைக்கிறது. நன்றி அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சந்திரக் காந்தக் கல் - நீர்த்துளி அட! அறிந்திராத தகவல்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..