நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 31, 2020

மார்கழி முத்துக்கள் 16

 தமிழமுதம்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு..(086)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 16நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய 
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்..

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ வரதராஜப்பெருமாள் - காஞ்சி

பொருளால் அமருலகம் புக்கியல் ஆகாது
அருளால் அறம்அருளும் அன்றே - அருளாலே
மாமறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே
நீமறவேல் நெஞ்சே நினை..(2222)
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருஆரூர்


இறைவன்
ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ தியாகராஜர் 
  
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை


தல விருட்சம் - பாதிரி
தீர்த்தம் - கமலாலயம்


சுயம்புவாக எழுந்த புற்றுதான்
சிவலிங்கமாகத் திகழ்கின்றது..

பூமியின் அம்சமாகத் திகழும் திருத்தலம்...
ஆழித்தேர் பெருஞ்சிறப்புக்குரியது..

நீதி நெறிமுறையை நிலைநாட்டிய
மனுநீதிச் சோழன் ஆட்சி செய்த திருவூர்...

ஸ்ரீ சுந்தரரும் பரவை நாச்சியாரும்

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பரவை நாச்சியாருடன்
வாழ்ந்திருந்த திருநகர்..
*

திருப்பதிகத்
திருப்பாடல்கள்.. 


வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் நறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே..(1/105)
-: திருஞானசம்பந்தர் :-

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே..(6/34)
-: திருநாவுக்கரசர் :-

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் 
போகமும் திருவும் புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப் பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்துஅணி
ஆரூரனை மறக்கலு மாமே..(7/59)
-: சுந்தரர் :-


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

 1. படித்தேன்.  கொஞ்சம் பக்தியில் திளைத்தேன்.

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  இன்றைய தமிழமுதம், அருளமுதம் இரண்டும் மனநிறைவாக உள்ளது. பரந்தாமனின் அவதாரங்களை குறிக்கும் படம் மிக அழகு.

  திருப்பாவை பாடல், திருப்பாசுரம், திருப்பதிகம் அனைத்தையும் பாடி மகிழ்ந்தேன். இறையனாரின் தரிசனங்கள் கண்களுக்கு விருந்து. தொகுத்து தந்த தங்கள தொண்டுக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. காஞ்சி பலமுறை போயிருக்கேன். அருமையான தரிசனம். ஒரு முறை காஞ்சிபுரம் இட்லி கூடப் பிரசாதம் கிடைத்தது. அலுவலகர்களுக்குத் தெரியாமல் பட்டாசாரியார் கொடுத்துக் கொண்டிருந்தார். திருவாரூர் ஒரே முறை போனதுதான். அப்போது கோயிலின் நிலை கண்ணீரை வர வைச்சது. அதன் பிறகு போகலை. சில வகைகளில் திருவாரூர்க் கோயில் வழிபாட்டு முறை மனதில் திருப்தியை உண்டாக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிகங்கள், பாசுரங்களோடு கூடிய அழகான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. இன்றைய பாசுரங்கள் நன்று

  பதிலளிநீக்கு
 6. பதிகங்களும் பாசுரங்களும் சிறப்பு. தொடரட்டும் பக்திப் பரவசம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..