நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 29, 2020

மார்கழி முத்துக்கள் 14

தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 14

ஸ்ரீ அமிர்த நாராயணப்பெருமாள் - திருக்கடவூர்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்...
*  
தித்திக்கும் திருப்பாசுரம்


பச்சைமாமலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே..(0873)

கங்கையிற் புனித மாய காவிரி நடுவுப் பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழை யேனே..(894)


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மாநக ருளானே..(900)


மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே..(901) 


கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்
ஒண்டிற லோன் மார்வத்து உகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்
வான்கடந்தான் செய்த வழக்கு..(2199)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருவீழிமிழலை


இறைவன் - ஸ்ரீ வீழிநாதர்  
அம்பிகை - ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம் - வீழிச் செடி
தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம்


சலந்தரனை வீழ்த்திய சக்ராயுதத்தினை வேண்டி 
ஸ்ரீ ஹரிபரந்தாமன் சிவ வழிபாடு நிகழ்த்திய
திருத்தலம்..

நித்தமும் ஆயிரம் தாமரை கொண்டு துதிக்க
ஒருநாள் மலர் ஒன்று குறைந்த வேளையில்
தனது கண்ணையே ஈசனுக்கு
அர்ப்பணித்தனன் ஸ்ரீஹரி..

அதுகண்டு நெகிழ்ந்த ஈசன் சக்ராயுதத்தை
ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு வழங்கியதாக ஐதீகம்..


அம்பிகையின் திருமணத்தலங்களுள்
இத்தலமும் ஒன்று..அப்பர் ஸ்வாமிகளுக்கும் ஞானசம்பந்தப் பெருமானுக்கும்
படிக்காசு வழங்கப்பட்ட திருத்தலம்..

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் 
பூந்தோட்டம் எனும் ஊரை அடுத்து உள்ளது - திருவீழிமிழலை..
*

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

இத்திருப்பாடலில் 
தலவரலாறு அருளப்பெற்றுள்ளது

நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக் கண்நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி அவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர்வீழி மிழலையுள் விகிர்தனாரே..(4/64)
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 17 - 18


செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்... 17

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...18
 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

6 கருத்துகள்:

 1. ஹரி ஓம் ஹரி; ஓம் நமசியவாய.

  பதிலளிநீக்கு
 2. திருக்கடவூர்/திருக்கடையூர் இரண்டுமே கொஞ்சம் குழப்பும் என்னை. ஆனால் நம்மவர் இரண்டும் வெவ்வேறு என்று சொன்னார். திருக்கடவூர் போனதில்லைனு நினைக்கிறேன். பெருமாள் தரிசனம் கிடைத்தது. நேற்று அரங்கனைப் போய்ப் பார்க்கலாம்னு நினைச்சால் ஒரே கூட்டம். நிற்க முடியாதுனு போகலை. பார்க்கணும் எப்போ முடியும்னு பார்த்தே ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. திருவீழிமிழலை கோயில் கோபுர தரிசனம் என் புக்ககமான கருவிலி ஊரின் சிவன் கோயிலில் இருந்து பார்த்தால் முன்னெல்லாம் நன்றாய்த் தெரியும். இப்போ அத்தனை தெரிவதில்லை.போயிட்டு வந்திருக்கோம்.

  பதிலளிநீக்கு
 3. இத்தலங்களுக்குச் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக காணும்வாய்ப்பு. மகிழ்ச்சி. பாடலடிகள் மனதிற்கு நிறைவினைத் தந்தன.

  பதிலளிநீக்கு
 4. அரங்கமாநகருளான் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

  பதிவு சிறப்பு. தொடரட்டும் பாசுர அமுதம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..