நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 03, 2020

சுதர்சன தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
சக்ராயுதம் எனப்படும் ஸ்ரீ சுதர்சனம்

ஸ்ரீ ஹரிபரந்தாமனின்
பஞ்சாயுதங்களில் முதன்மையானது..


ஆதி மூலமே!..
என்று கண்ணீருடன் கதறிய
கஜேந்திரனைக் கணப்பொழுதில்
முதலையின் வாயிலிருந்து காத்தருளியது
ஸ்ரீ சக்கரம்...




மீண்டும் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணனை
தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருந்து
சிசுபாலனைத் தொலைத்துக் கட்டியது
ஸ்ரீ சக்கரம்..


தேர்ச் சக்கரத்துடன் ஸ்ரீ கிருஷ்ணன் 
பாரதப் போரில்
ஆயுத ஏந்த மாட்டேன் - என்று
பார்த்தனுக்கு வாக்களித்த கண்ணன்
பீஷ்மருக்காக எடுத்த ஆயுதம் தேர்ச்சக்கரம்..

ஜயத்ரதன் வீழ்த்தப்படுவதற்காக
சூரியனை ஒருகணம் மறைத்து நின்றது
ஸ்ரீ சக்கரம்..

இதனை அருணகிரிநாதர்
ஒரு பட்டப் பகல் வட்டத் திகிரியின் இரவாக
என்று , திருப்புகழின் முதற்பாடலிலேயே
புகழ்ந்துரைக்கின்றார்...



சிவபெருமான் - தன் விரலால்
தரையில் வட்டம் ஒன்றை எழுத
அந்த வட்டம் சக்கரமாகியது...

அதனைக் கொண்டு - எம்பெருமான்
சலந்தரன் எனும் கொடிய அசுரனை
மாய்த்தது அட்ட வீரட்டங்களுள் ஒன்று..

சக்கரம் மாற் கீந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேல் அசைத்தானும் அடைந்து ஐராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்குடையானும் முக்கணுடை இறையவனே.. (2/48)
-: திருஞானசம்பந்தர் :-


இப்படியான சக்கரத்தை
ஈசன் எம்பெருமானிடம் இருந்து பெறுவதற்கு
ஸ்ரீ ஹரி பரந்தாமன் சிவ வழிபாடு செய்ததாக
தேவாரம் புகல்கின்றது...


ஏறுடன் ஏழடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறுடைச் சடையினானை அர்ச்சித்தான் அடியிணைக்கிழ்
வேறுமோர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழிஈந்தார் குறுக்கை வீரட்டானாரே.. (4/49)
-: திருநாவுக்கரசர் :-

 சலந்தரனை மாய்த்த சக்கரத்தை
ஈசனிடமிருந்து பெறுவதற்காக ஸ்ரீமந்நாராயணன்
நாளும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு
சிவ வழிபாடு செய்யும் போது
ஒருநாள் ஒரு பூ குறைய - அதைக் கண்ட
 திருமாலவன் தனது விழியை இடந்து
மலராகக் கொண்டு வழிபாடு செய்தார்...

அத்தன்மை கண்டு பெருமான் மகிழ்ந்து
சக்கரத்தை வழங்கியருளினார் என்பது புராணம்...

நீற்றினை நிறையப் பூசிநித்தல் ஆயிரம் பூக்கொண்டு

ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக் கண் நிறைய விட்ட
ஆற்றலுக்காழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சுங்கோயில்
வீற்றிருந் தளிப்பர்வீழி மிழலையுள் விகிர்தனாரே.. (4/64)
-: திருநாவுக்கரசர் :-

திருவீழிமிழலை மற்றும் திருமாற்பேறு
எனும் தலங்களின் புராணம் இதுதான்..

ஈசனுடைய மூர்த்தி வடிவங்களில்

ஸ்ரீசக்ர தான மூர்த்தி என்பதுவும் ஒன்றாகும்..

ஸ்ரீ சக்ரத்துடன் ஸ்ரீ நரசிம்ஹமூர்த்தி - நாமக்கல் 
ஸ்ரீ ராமபிரானின் கூரிய கணைகள் தான்
ராவணனின் மேனியைத் துளைத்தன..
அவனைத் தொலைத்தன...
இதுவே நாம் கண்டிருக்கும் ராமாயணம்..

ஆனால்
அப்பர் ஸ்வாமிகள்
இராமேஸ்வரத் திருப்பதிகத்தின்
திருப்பாடல் வழியாக
என்ன சொல்கிறார் - என்றால்

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே!.. (4/61)

ஸ்ரீ சக்ரதாரியாக ஸ்ரீ கோதண்டராமன்
பத்ராசலம்
அவர்தம் திருவாய்மொழியை நிரூபிக்கும் வகையில்
பத்ராசலத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ கோதண்டராமன்
சங்குடன் சக்கரத்தையும் தரித்திருப்பதைக்
கண்டு இன்புறுங்கள்...


 

ஸ்ரீ மஹாகணபதி 
வல்லப கணபதி எனத் திருக்கோலம்
கொள்ளும்போது
சக்கரத்துடன் திகழ்கின்றார்....

ஸ்ரீ துர்காம்பிகை - வேதாரண்யம் 
எல்லாம் வல்ல ஸ்ரீ பராசக்தி
மகிஷாசுரனை மாய்ப்பதற்கு
துர்கை எனத் திருக்கோலம் கொண்டபோது
பதினெட்டுத் திருக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தினள்..
அந்த ஆயுதங்களுள் சக்கரமும் ஒன்று..

ஸ்ரீ துர்காம்பிகை
பட்டீஸ்வரம்
 
மகிடன் மாய்ந்த பிறகு ஸ்ரீ துர்கை
சாந்தம் கொண்டு மற்ற ஆயுதங்களைக் களைந்த போதும்
சக்கரத்தை மட்டும் தன்னுடனே தாங்கிக் கொண்டனள்..

இத்திருக்கோலமே இன்றும் நாம் வழிபடுவது..
இனியும் வழிபடப்போவது இத்திருக்கோலத்தினையே!..

ஸ்ரீ வராஹி அம்மன் 
மேலும்
ஸ்ரீ வராஹி அம்மனின் திருக்கரத்தினிலும்
திருவக்கரையில்
ஸ்ரீ வக்ரகாளியம்மனின் திருக்கரத்தினிலும்
சக்கரம் திகழ்வது சிறப்பு...


ஸ்ரீ வக்ரகாளியம்மன் 
இப்படி தந்தை வழங்க
தாய் மாமனின் திருக்கரத்திலும்
தாயின் திருக்கரத்திலும் திகழும் சக்கரத்தை
தேவசேனாபதியாகிய முருகப்பெருமானும்
தாங்கியருள்கின்றான்..


கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோயிலுக்கு
அருகிலுள்ள அழகாபுத்தூர் எனும் திருத்தலத்தில்
இத்திருக்கோலத்தினைத் தரிசிக்கலாம்...
.
திருமுருகன் -அழகாபுத்தூர் 
பொன்னையும் பொருளையும் வாரித்தரும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியும்
சீற்றம் கொள்ளும்போது
சங்கு சக்ரதாரியாக எழுகின்றாள்...



நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸூரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..
என்பது மஹாலக்ஷ்மி அஷ்டகம்...

இத்தகைய சக்கரத்தை
ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியும்
தாங்கியருள்கின்றார்..

சோளிங்கர் மற்றும் அனந்தமங்கலம்
ஆகிய கோயில்களில் தரிசிக்கலாம்...

ஸ்ரீ சக்ரத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேயர்
சோளிங்கர் 
இப்படி சைவமும் வைணவமும் கொண்டாடும் 
ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி இன்னும் சொல்லலாம்...

திருவாழியாழ்வான் 
என்று வைணவம் சக்ராயுதத்தைப் புகழ்கின்றது..

அனைத்து நாடுகளும்
கொடுங்கிருமியின் தாக்குதலால்
நிலைகுலைந்து கிடக்கும் இவ்வேளையில்
தெய்வத்தின் உள்ளக் கிடக்கையை
மானுடராகிய நாம் எவ்விதம் அறியக்கூடும்?..

ஆயினும்
அநாதி காலம் தொட்டு
நெருக்கடியான வேளைகளில்
முந்தி வந்து அருள் கூட்டி
சங்கடம் தீர்த்து சத்ரு விநாசனம் செய்வது
ஸ்ரீ சக்ராயுதம்!..



ஸ்ரீ சக்கரத்து ஆழ்வானே வருக.. வருக..
எம்இடர் எலாம் தீர்த்து நலம் தருக.. தருக...

ஸூதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ 

18 கருத்துகள்:

  1. ஸ்ரீ சக்கரத்தின் பெருமைகளும் அருமைகளும் பற்றி அருமையான தொகுப்பு. ஸ்ரீசக்கரம் அகிலத்தைக் காக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்கள் வருகையும் பிரார்த்தனையும்
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. ஸ்ரீ சக்ராயுதத்தின் பெருமைகளைச் சொல்லி முடியாது.
    இத்தனை தெய்வங்கள் இருக்கும் போது நமக்கென்ன கவலை அன்பு துரை. சிரம காலங்கள்
    எல்லோரையும் சிரமப் படுத்திக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. அத்தனை கட்டுகளையும் அறுத்து நம்மைக் காப்பார் ஸ்ரீ சுதர்சனர்.
    என்றும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வேண்டுதலுக்கும் மகிழ்ச்சி.. நன்றியம்மா.

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

      நீக்கு
  3. இறைவன் உலகை காப்பான் என்று நம்புவோம் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      வாழ்க நலம்...

      நீக்கு
  4. சிறப்பான தொகுப்பு.

    சக்கரத்தாழ்வான் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அனைவரின் வாழ்க்கை சக்கரம் இயற்கை எனும் சக்கரத்தின் கையில்...

    ஓம்...
    ஓம்...
    ஓம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் பெருமைகளை எல்லாம் அழகாய்ச் சொல்லிப் பகிர்ந்தமைக்கு நன்றி. சக்கரத்தாழ்வாரைத் துதித்தால் துன்பங்கள் பறந்தோடும் என்பார்கள். தன் சக்கரத்தால் அனைத்து உலக மக்களின் துயரையும் தீர்க்கட்டும் எம்பெருமான். அவனை வணங்குவோம். சக்கரத்தை எடுத்து அழிக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி. நன்றியக்கா.

      நீக்கு
  7. அருமையான பதிவு.
    பகிர்வும், பாடல்களும் படங்களும் அருமை.
    ஸ்ரீசக்கரத்து ஆழ்வார் வரட்டும் அனைவருக்கும் நலம் தரட்டும் இந்த தொற்றை ஓட்டி.

    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
    காலம் என்னும் சக்கரமே அவன் கையில் சூழலும் அற்புதமே! பாடல் நினைவுக்கு வருது.
    கேட்டவருக்கு கேட்டபடி வாழ்வு தரட்டும். அவரிடம் நாம் இப்போது கேட்பது உலக மக்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்பதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான பாடல்.. திருமலை தென்குமரி..

      தங்கள் அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. நாராயணா எனும் பாராயணம் பாடலில்
    துணையாக வருமவன் சக்ராயுதம் தொழுவாருக்கு அருள்கின்ற திருவேங்கடம்
    பாடலும் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர்காழி அவர்களின் முத்தான பாடல்களுடன் இதுவும் ஒன்று...
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. சக்கரத்தாழ்வார் பற்றிய இடுகை அருமை. கோவில்களில் (வைணவ) சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கும். மூலவரான சக்கரத்தாழ்வாரின் பின்னால், அதே கல்லில் யோக நரசிம்மர் சிலையும் இருக்கும். (அதனைச் சேவிக்க நேர் பின்னே சிறிய சன்னல் வைத்திருப்பார்கள்).

    ப்ரதிபட ச்ரேணி பீஷண ! வரகுண ஸ்தோம பூஷண!
    ஜநிபய ஸ்தான தாரண ! ஜகத வஸ்தான காரண !
    நிகில துஷ்கர்ம கர்சன ! நிகம ஸத்தர்ம தர்சன !
    ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ! ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      பதிவின் நீளம் கருதி இந்த விஷ்யங்களைச் சொல்ல வில்லை..
      பொதுவாக இதெல்லாம்ப்நம்மவர்களுக்குத் தெரியும் தானே...

      தங்கள் வருகை தந்து ஸ்ரீ சுதர்சன ஸ்லோகம் அளித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..