நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 07, 2020

நலமே வாழ்க

முழு உலகையும் பாதிப்புள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது -
கொரானா எனும் வைரஸ் ..

அறிவிலும் அறிவியல் மருத்துவ தொழில் நுட்பத்திலும் முன்னேறி விட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் நாடுகள் கூட -

தங்கள் மக்களைக் காப்பாற்றும் வகையறியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன...

அடிப்படைச் சுத்தமும் சுகாதாரமும் நம்மிடமிருந்தே தொடங்குகின்றன..

சுத்தமும் சுகாதாரமும் தமிழர் தம் கலாச்சாரத்தின் அடிப்படை..

நமது மண்ணுக்கேற்ற உணவு வகைகளை அறுசுவை என்ற பேரில்
வகுத்தும் தொகுத்தும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்...

அதையும் மீறி நோய் என்று வந்து விட்டால் அதற்கும் எளிமையான அதேசமயம் எதிர் விளைவு செய்யாத மருத்துவக் குறிப்புகளையும்  தந்திருக்கின்றனர்..

இப்படியிருந்தும்
நமக்கொரு பாதிப்பு நேருமாகில் குற்றம் நம் மீதே!...

வள்ளுவப்பெருந்தகை உணவையும் மருந்தையும் பற்றி நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்...

அவற்றையெல்லாம் அலட்சியம் செய்து விட்டோம்...

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.. (945)

முறையற்ற உணவுகளாலேயே பல்வேறு நோய்களும் நம்மைப் பீடிக்கின்றன என்பதை இன்றைய மருத்துவம் பேசுகின்றது...

எப்படியோ புலியிடம் சிக்கிக் கொண்ட புள்ளி மானாகி விட்டது
இன்றைய சமுதாயம்...

இறைச்சி வகையாறாக்களைத் தவிர்ப்பது நலம்..

என்றாலும்
பெரும்பான்மையான மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று எண்ணி ஒரு ஓரத்தில் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்...

சீனாவில் பல்வகை உயிர்களின் ஊன்களை விற்பனை செய்யும் சந்தையிலிருந்து தான் இந்த வைரஸ் பரவிற்று என்று சொல்லப்படுவதை
மறக்கலாகாது...

காய்கனி உணவு என்றாலே கடுப்படிக்கும் அராபியர்கள் கூட
மெல்ல மெல்ல ஊன் உணவுகளில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கின்றார்கள்...

இத்தனைக்கும் இங்கே எல்லா உணவு வகைகளுக்கும்
கடுமையான பாதுகாப்பு நடை முறைகள்...

உணவுப் பொருட்களின் (குளிர்/ உலர்) கிடங்குகளும் உணவகங்களும்
அடிக்கடி சோதனைக்குள்ளாக்கப்படும்...

அதன் பணியாளர்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனையும் உண்டு..

இப்படியான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் இல்லாத நம் நாட்டில்
நம்முடைய உணவு முறை முற்றிலும் மாறி விட்டது..

தற்போது சாதாரண குடும்பத்திலேயே வாரம் முழுதும் இறைச்சி உணவு... மேலும் விடுமுறை நாள் என்றால் புலால் தான் என்றாகி விட்டது...

யார் எப்படிப் போனாலும் போகட்டும்..

நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...

அடிப்படையில் சுத்தம் சோறு போடும் என்று சொல்லிக் கொடுத்தபோது
குழம்பு எது ஊற்றும்!.. - என்று எள்ளி நகையாடியதையெல்லாம் புறம் தள்ளி விட்டு சுத்தமும் சுகாதாரமும் பேணுவோம்...

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள பலவழி முறைகளைப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்...

இருந்தாலும் -
தலை சிறந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது..

எல்லாவற்றுக்கும் மேலாக - அன்பர் தமக்கு
எந்தவொரு நோயும் அணுகாதிருக்கும்படிக்கு
திருத்தணி திருப்புகழில் வேண்டிக் கொள்கின்றார் அருணகிரிப்பெருமான்...


இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி - விடமேநீ
ரிழிவு விடாத தலைவலி சோகை
யெழுகள மாலை - இவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறு - முள நோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத
படியுன தாள்கள் - அருள்வாயே...

வருமொரு கோடி அசுர பாதாதி
மடியஅ நேக - இசை பாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை - விடுவோனே..
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் - மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு - பெருமாளே.. 
***

எல்லாருக்குமான
ஸ்ரீ தன்வந்த்ரி காயத்ரி...


ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய நாசனாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:
***
மயிலாடுதுறையை அடுத்துள்ள
புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில்
அம்மையும் அப்பனும் ஆருயிர்களைக் காத்தருள வேண்டி
மருத்துவத் திருக்கோலம் கொண்டு எழுந்தருளியதாக ஐதீகம்...


மேற்காணும் சித்திரம்
ஸ்ரீ தையல்நாயகி அம்மன் சந்நிதியின் 
உட்பிரகாரத்தில் தீட்டப்பட்டிருக்கின்றது...


பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை 
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் 
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே..(6/54)
-: திருநாவுக்கரசர் :-

நலமே எங்கும் விளைக...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. கொரானா குறித்து சிறப்பான பதிவு ஜி

    உணவு மாற்றம்தான் நமது இந்த சீரழிவுக்கு காரணம் இதை உணர வேண்டியது இளைய தலைமுறையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      சரியாகச் சொன்னீர்கள்...
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு.
    வைத்தியநாதன் பாடல் அப்பர் தேவாரம் எப்போதும் பாடும் பாடல்.தன்வந்திரி ஸ்லோகமும் சொல்வேன்.
    திருப்புகழ் பாடலை குறித்து கொண்டேன்.

    கொரானா வைரஸ் தாக்கியவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.

    கூட்டுப்பிரார்த்தனை பலன் அளிக்கும்.

    எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
    நல்ல பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லவை தேய்ந்து அறம் பெருகட்டும்..

      தங்கள் அன்புன் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. உலகில் பாதிக்கப்பட்டோர் அனைவரும் மீள வேண்டுகிறேன்...

    இனி யாருக்கும் பாதிப்பு வரவே கூடாது எனவும் வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      நானும் இவ்வாறே வேண்டிக் கொள்கிறேன்..

      நீக்கு
  4. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      குறள் பதிவு கண்டு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. இக்காலத்திற்குத் தேவையான பதிவு. புள்ளிருக்கு வேளூர் சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. இச்சமயம் மிகவும் தேவையான பதிவு.

    நலமே விளையட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      எங்கும் நலமே விளையட்டும்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆதங்கப் பதிவு. அக்கறைப் பதிவு. கட்டுப்பாடுதான் இந்த கணத்தின் அத்தியாவசியத்தேவை. அதுதான் பெரும்பான்மையான மக்களால் முடியாததும் கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      கட்டுப்பாடு - அதுதானே மிகவும் கஷ்டம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. மக்கள் மனதில் கட்டுப்பாடு தேவை. கூடியவரை கைகளைச் சுத்தம் செய்து கொண்டு கூட்டங்களில் போய்க் கலந்து கொள்ளாமல் இருந்தாலே போதும். அதற்கும் மேல் உணவுக்கட்டுப்பாடு. நல்ல சமயத்தில் தேவையான பதிவு. எல்லோரும் நன்றாக ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

      அன்பின் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி... நன்றியக்கா...

      நீக்கு
  10. அன்பு துரை ,மிக அவசியமான பதிவு.
    நம் உடல் ,உள்ள சுத்தத்தை மேன் படுத்தி,
    இறைவனை நம்பி இருப்போம்.
    இங்கே 60 வயதுக்கு மேற்பட்டோர், கூட்டம் நிறைந்த இடங்களுக்கு
    அதிகம் செல்ல வேண்டாம் என்று
    அறிவுறுத்தி வருகிறார்கள்.
    நம் பழைய வழக்கங்களை விடாமல்,வீட்டையும் மனதையும் சுத்தமாக வைத்து,
    சளி,இருமல் தொந்தரவுக்கு சரியான நேரத்தில் கவனிப்பு கொடுத்து
    இந்த நோய்த் தாக்குதலில் இருந்து வெளி வர
    வைத்தீஸ்வரனும், தன்வந்திரியும் நல் வழி காட்டட்டும்.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமியும்
      ஸ்ரீ தன்வந்திரியும் எல்லாரையும் காத்தருளட்டும்...

      அன்பின் கருத்துரைக்கு நன்றியம்மா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..