நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 29, 2019

கீழ்வேளூர் 2

ஏதோ ஒரு காலத்தில் - அரசன் ஒருவன்
தனது பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான்..

வழக்கம் போல வழி தவறிய மன்னன் தாகத்தால் தவித்து
ஆசிரமம் ஒன்றினை அடைந்தான்...

காட்டுக்குள் ஆங்காங்கே சிற்றோடைகளும் சுனைகளும்.. ஆனாலும்,
அவற்றில் எல்லாம் நீர் அருந்த மன்னனின் கௌரவம் தடுத்தது...

தலை தெறிக்கும் தாகத்துடன் தவித்த மன்னன் 
ஆசிரமத்தின் முன்னால் நின்று அழைத்தான்.. சப்தமிட்டான்..

ஆரொருவரும் குடிலின் உள்ளிருந்து வாராததால் கடுப்பாகி
பெரிதாகக் கத்திக்கொண்டே குடிலின் கதவைப் பிய்த்துக் கொண்டு
உள்ளே நுழைந்தான்..

குடிலினுள் தியானத்திலிருந்த முனிவர் திடுக்கிட்டு விழித்து
அவரும் வழக்கம் போலவே கோபாவேசமானார்...

கடுங்குரலெடுத்துக் கத்தியதால் கழுதையாகப் போவாய்!...

சற்றும் குறையாத கோபத்துடன் சாபம் கொடுத்துவிட்டு
மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்..

அடுத்த சில விநாடிகளில் கழுதையாக மாறி விட்ட அரசன்
மறுபடியும் கத்திக் கொண்டே காட்டை விட்டு ஊருக்குள் நுழைந்தான்..

எதிர்ப்பட்ட ஒருவன் அந்தக் கழுதையைப் பிடித்து
வணிகன் ஒருவனுக்கு இரண்டு பணத்துக்கு விற்று விட்டான்..

வாட்ட சாட்டமான இந்தக் கழுதையின் மீது மூட்டைகளை ஏற்றி
மற்ற கழுதைகளுடன் வழி நடத்தினான் வணிகன்..

காலங்கள் கடந்தன... கழுதைக்கும் விடிவு காலம் வந்தது...

சோழ வளநாட்டில் காவிரியின் தெற்காக விளங்கும் இலந்தை வனத்துக்குக் கழுதைகளுடன் வந்தான் வணிகன்..

உச்சிப் பொழுது..  திருக்குளத்துத் தண்ணீரைக் காட்டினான் -
தாகங்கொண்ட கழுதைகளுக்கு...

தாகந்தீர்ந்த மற்ற கழுதைகள் சும்மா இருக்க
ஒரு கழுதை மட்டும் கத்தியது...

நாந்தான் ராஜா... நாந்தான் ராஜா!...  - என்று..

கழுதையிடம் மனிதக் குரலைக் கேட்டு பயந்து போன வணிகன்
அதை மட்டும் தனியாக விரட்டி விட்டு தன் போக்கில் போனான்...

குரல் மாறியது.. கொண்ட உருவம் மாறவில்லையே!..
- என்று வருந்தியது கழுதை..

அந்த நிலையில் அந்தக் குளக்கரையில் இலந்தை மரத்தினடியில் சிவலிங்கத்தைக் கண்டது..

முன் நினைவுகள் மூண்டெழவே
சிவலிங்கத்தைச் சுற்றிவந்து வணங்கியது...

அடுத்த சில தினங்களில் கழுதையின் சாபமும் தீர்ந்தது...

தன்னுரு மீளப் பெற்ற மன்னன் தன் கதையை ஆங்கிருந்த மக்களிடம் சொல்லிவிட்டு தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்...

இதனால் இங்கு வழிபடுவோர்க்கு - விதியிருப்பின்
அவரவர் மேலைத் தவத்தின்படி பிறப்பின் ரகசியம்
உணர்த்தப்படுகின்றது என்பது ஐதீகம்...

முப்பதாண்டுகளுக்கு முன்
இங்கே வணங்கி நின்றபோது தான்
தேவாரத் திருப்பதிகங்களில் நாட்டம் ஏற்பட்டது..

சந்தியாகால பூஜையின் போது 
ஓதுவா மூர்த்திகள் இருவர் திருப்பதிகம் ஒன்றின்
முதற்பாடலை ஒருவரும் அடுத்த பாடலை மற்றொருவருமாக
ஓதியதைக் கேட்டு மெய் சிலிர்த்து நின்றேன்..

அந்தத் திருப்பதிகம் யாரால் அருளப் பெற்றது என,
நூலகத்தில் திருமுறைகளைத் தேடியபோது தான்
தேவாரம் எனும் திருவிளக்கு கைக்குக் கிடைத்தது...

சில ரகசியங்கள் உணர்த்தப் பெற்றதால்
நானும் பேறு பெற்றவனானேன்....

இப்படியான இத்தலத்தில் மீண்டும்
புதியவனாக தங்களுடன்!...

ஸ்ரீ அட்சயலிங்கேஸ்வரர் 
ஸ்ரீ வாருலாவிய வனமுலையாள் 
நீருலாவிய சடையினர் அரவொடு மதிசிர நிரைமாலை
வாருலாவிய வனமுலை அவளொடு மணிசிலம்பு அவைஆர்க்க
ஏருலாவிய இறைவனது உறைவிடம் எழில்திகழ் கீழ்வேளூர்
சீருலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினைபோமே..(2/105)
-: திருஞானசம்பந்தர் :-

மேற்கண்ட இருபடங்களும் FB ல் இருந்து 
பெறப்பட்டவை.. 



திருமூலஸ்தானம் 
அகத்தியருக்குக் காட்டியருளிய திருநடனம் 
விநாயகர் சந்நிதி 

நாயன்மார்கள் 

படங்கள் தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன்..
மேலும் சில படங்கள் அடுத்த பதிவினில்!..


தலவிருட்சம் - இலந்தை 
சுழித்தானைக் கங்கை மலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனை முன் வேனலானை
கிழித்தானைக் கீழ் வேளூர் ஆளுங்கோவைக்
கேடிலியை நாடும் அவர் கேடிலாரே..(6/67)
-: அப்பர் பெருமான் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. நடராஜமூர்த்தியின் திருநடனம் கால் மாறிக் காணப்படுகிறதே! அருமையான படங்கள். அக்ஷயலிங்கேஸ்வரர் எனப் படித்ததும், தயாநந்த சரஸ்வதியின் "போ சம்போ!" பாடலில் வரும் அக்ஷய லிங்க என்னும் பாடல் வரி நினைவில் வந்தது. கொஞ்ச நாட்களாக அந்தப் பாடலை மட்டும் கேட்டுக் கொண்டு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா அவர்களுக்கு நல்வரவு....

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. எப்போவோ போன கோயில் என்பதால் சரியாக நினைவில் இல்லை. தல வரலாறும் விளக்கங்களுடன் கூடிய படங்களும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. // வழக்கம்போல் வழிதவறிய மன்னன் //

    மன்னர்களுக்கு இதே வாடிக்கையாப்போச்சு!!!

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அக்காலத்தில்
      முடியுடை மன்னர்கள் வழி தவறியதால் நல்லதொரு நீதி கிடைத்தது...

      இக்காலத்தில்
      முடியற்ற மன்னர்கள் (!) வழியே
      தவறாக இருக்கிறது.. நீதி குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கிறது...

      நீக்கு
  4. // வழக்கம்போலவே கோபாவேசமான //

    ஹா... ஹா... ஹா.. அதுசரி.. தன்னுருவம் பெற்ற மன்னன் திரும்பிப்போகும் வரை அவன் நாடு வேறு யார் கைக்கும் போகாமலிருந்ததா?

    (இவனொருத்தன்.. சொல்ல வர்றதை விட்டுட்டு வேறெதையோ எல்லாம் கேட்டுகிட்டு...ஹிஹிஹிஹி......)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      கதையே ஆனாலும்
      அன்றைக்கு அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாது இருந்திருக்கிறார்கள்.

      தங்கக் கோடாலி கிடைத்தும் தனக்கு தன்னுடைய இரும்புக் கோடாலியே வேண்டும் எனக் கேட்ட விறகு வெட்டி உள்பட....

      இன்றைக்கு அப்படியில்லையே...

      இருந்தாலும்
      அந்த நாட்டை மகாராணி மற்றும் பட்டத்து இளவரசன் நல்லபடியாக கவனித்துக் கொண்டார்களாம்...
      மற்ற மந்திரி தளபதிகளும் உற்ற துணையாய் இருந்தார்களாம்...

      அங்கேயிருந்து இப்போது தான் செய்தி வந்தது...

      மகிழ்ச்சியாக.. நன்றி...

      நீக்கு
  5. ஆமாம், நடராஜர் கால் மாற்றிய கோலத்தில் நடனம். அபூர்வமோ? படங்கள் அனைத்த்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி .. நன்றி...

      நீக்கு
  6. நீதிபோதனை போன்ற கதை நன்று ஜி அழகிய தரிசனங்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு.
    இங்கே மாலை வேளைக்கு அக்ஷயலிங்க,நடராஜ தரிசனமும் அன்னை பார்வதி தேவியின் அருளும் கிடைத்தது.
    ராஜா காது கழுதைக்காது கதை நினைவுக்கு வந்தது.
    எத்தனை அரசர்கள் எத்தனை முனிவர்கள்,எத்தனை சாபங்கள்.
    இன்னும் மன்னர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.
    அப்பர் பெருமானின் பதிகம் மிக அருமை.
    கீழ்வேளூர் அருமையான பெயர்.
    படங்கள் வண்ணத்துடன் ஒளிர்கின்றன.
    தென்னாடுடைய சிவன் கருணை வடிவம்.
    எல்லோருக்கும் அருள் புரிவார்.நன்றி மா.

    பதிலளிநீக்கு
  8. கீவளூர் என்று இப்பகுதியில் சொல்லப்படுகின்ற கீழ்வேளூர் கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். விமானப்பகுதி கட்டுமானம் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ள கோயில்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அனைத்தும் அழகு.
    தலவரலாறு கதை அருமை.
    பிறப்பின் ரகசியம் உணர்த்த படுவது அருமை.

    உங்களுக்கு தேவார திருப்பதிகங்கள் மேல் நாட்டம் ஏற்பட்டது இறைவன் திருவுள்ளமே!

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. எத்தனை அழகான தேவாரப் பதிகம்! அதோடு படங்களும், தல புராணமும் வெகு அருமை!

    பதிலளிநீக்கு
  11. கதை அருமை. பதிகமும் அழகான பதிகம் படங்களில் சிறிய கோபுரம் மதில் மீதான சிற்பப் படங்களின் கோணங்கள் அட்டகாசம். மிகச் சிறப்பாக இருக்கின்றன துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கதை நன்று. படங்களும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..