நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

கலை விருந்து 3

தஞ்சை பெரிய கோயிலில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றுடன்
மீண்டும் கலை விருந்து..

நமது தளத்தில் இந்தத் தொகுப்பு மூன்றாவதாகும்...

முந்தைய இரண்டையும் கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்...

கலை விருந்து 1

கலை விருந்து 2 

ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஒரு புதிய சேதியைத் தருவது
தஞ்சை பெரிய கோயில் எனும் கலைப் பெட்டகம்...

அதைச் சொன்னால் புரியாது..
உள்ளுணர்வு உடையோர்க்குத்தான் அது விளங்கும்...

அன்பின் சகோதரி ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள் இக்கோயில் மகுடாகம விதிகளின்படி கட்டப்பட்டது என்ற தகவலைச் சொல்லியிருக்கின்றார்கள்...

நானும் இப்படித்தான் அறிந்திருக்கிறேன்... ஆனாலும் அதைப் பற்றிய நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது..

இத் திருக்கோயில் பற்பல ரகசியங்களை உள்ளடக்கியிருக்கின்றது...
அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முயன்றால் -

அதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகின்றாய்?.. - என்று பதில் வருகின்றது...

எப்போது நேரம் கூடி வருமோ அப்போது உணர்த்தப்படும்!.. - என்றும் பதில்...

ஆகவே அவ்வேளை வரும் வரைக்கும் அவனருளாலே அவன் தாளை வணங்கிக் கொண்டிருப்போமாக!...



தற்போது பெரிய நந்தி இருக்கும் இடத்தில் இருந்த நந்தி இதுதான்...
இதை மாற்றி விட்டு தான் நாயக்கர்கள் பெரிய நந்தியை சிவலிங்கத்தின் ஆகிருதிக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து நந்தி மண்டபமும் அமைத்தார்கள் - என்கின்றார்கள்..

இவ்வளவு பெரிய திருக்கோயிலை எழுப்பிய சோழனுக்குத் தெரியாதா - 
சிவலிங்கத்தின் ஆகிருதிக்கு ஏற்ப நந்தி அமைக்கப்பட வேண்டும் என்பது?.. 

- என்று கேட்டால்!... பதில் இல்லை...


ஊஞ்சல் அசைவது போன்று முன்னும் பின்னுமாக எற்படும் அதிர்வுகள் நந்தி தேவரின் மூச்சுக் காற்றினால் விளையும்.. நந்தியம்பெருமானின் நாசியும் சிவலிங்கத்தின் நாபியும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்..

இதனால் தான் கோயிலுக்குள் நுழையும் போது சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் குறுக்காகச் செல்லக்கூடாது என்பது...

இங்கே காணப்படும் நந்தி உயரம் குறைவானது... இதனை சோழன் ஈசனுக்கு முன்பாக அமைத்திருப்பானேயாகில் நாசியும் நாபியும் நேர்புள்ளி எனும் கணக்கு சரியாக அமைந்திருக்காதே!... 

இதனைக் கேட்டால் சரியான பதில் கூற அங்கு எவரும் இல்லை...

சோழ நாட்டு சிற்பிகளின் துணை கொண்டு நந்திக்கு மண்டபத்தை நாயக்கர்கள் அமைத்தார்கள் என்பது சரி..

ஆனால் பெரிய நந்தி தான் அங்கே இருந்தது என்பது உணர்த்தப்படுகின்றது...

கதை சொல்லும் களிறு 

கதை சொல்லும் களிறு  
ஸ்ரீமுருகப் பெருமானின் சந்நதிக்கு வடபுறம் உள்ள வாசலின் இருபுறமும் உள்ள யானைகள் பிரசித்தி பெற்றவை...

கலைப் படைப்பாகக் கல்லில் வடிக்கப்பட்டிருந்தாலும் அதன் கண் சொல்லும் கதை நமக்குக் கண்ணீரை வரவழைக்கும்...

நான் சொல்வதை விட தாங்களே உற்று நோக்கி உணர்ந்து கொள்ளுங்கள்..



மேலே உள்ள படங்கள் இரண்டும் - கருவறையின் வடக்கு வாசலில் இருந்து எடுக்கப்பட்டவை..

சண்டேசர் சந்நதியையும் சண்முகனின் சந்நதியும் காணலாம்..

இந்த சண்டேசர் சந்நதிக்கு எதிர்ப் புறம் சற்று கீழாக
ஸ்ரீ ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி அமைந்துள்ளது ... 

ஸ்ரீ உமையாம்பிகையுடன் ஈசன்  
தட்சனின் தலையை அரிந்து அக்னி குண்டத்தில் இடும் ஸ்ரீ வீரபத்ரர்.

மேலேயுள்ள சிற்பம் சண்டீசர் சந்நதியின் எதிர்புறம் படிக்கட்டுகளின் இறக்கத்தின் இடைவெளியில் இருக்கின்றது...

மறு முறை பெரிய கோயிலுக்குச் செல்லும் போது மறக்காமல் இந்த அழகை எல்லாம் கண்டு மகிழுங்கள்..

இங்கு சென்றால் ஆன்மீக உணர்வு வருவதில்லை.. சுற்றுலா வந்தது போலத் தான் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்...

சுற்றுலாவாக வந்திருந்தாலும் மனதில் மகிழ்ச்சியும் பிரமிப்பும் களிநடம் இடுகின்றனவா?.. இல்லையா!.. 

அப்படி உங்கள் மனதில் மகிழ்ச்சியும் பிரமிப்பும் களிநடம் இடுமேயானால் அது தான் ஆன்மீகம்... 

இக்கோயிலைச் சமைத்த சிற்பிகளுக்கு நன்றியுடன் வணக்கம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா இல்லையா!...

அப்படித் தோன்றினால் அதுவே ஆன்மீகம்!...

ஏனெனில் ஈசன் எம்பெருமான் நினைப்பவர் நெஞ்சுக்குள்ளே தான்!..

இதைப் பற்றி மேலும் பேசலாம் - அடுத்தடுத்த பதிவுகளில்!...


காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிறையநீர் அமையஆட்டி
பூசனை ஈசனார்க்கே போற்றவிக் காட்டினோமே.. (4/76) 
-: அப்பர் ஸ்வாமிகள்:-

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. ஆன்மீகத்துக்கான விளக்கம் அருமை. குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
  2. நந்திய தேவரின் நாசியும், எம்பெருமானின் நாபியும் நேர்கோட்டில் - இது இன்று நான் அறிந்துகொண்ட தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா ஸ்ரீராம் சொல்லிருப்பதேதான் எனக்கும் இது புதிய தகவல். அதனால்தான் இடையில் செல்லக் கூடாது என்பதும் உங்கள் மூலம் அறிகிறேன்...

      கீதா

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் மிக அருமையாய் எடுக்கப்பட்டு கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள். அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. நந்தி தேவர் பற்றி நீங்கள் கூறியது போலத் தான் கருடாழ்வாரைப் பெருமாளுக்கு நேரே பிரதிஷ்டை செய்யும்போதும் கணக்கு இருக்கு! பலருக்கும் இது புரிவதில்லை. மகுடாகமம் என்று சொன்னதைக் கொஞ்சம் கூர்ந்து யோசித்தால் உங்களுக்கே புரியும். மேலும் யோக முறைப்படியும் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருவுடையாரைப் பிரதிஷ்டை செய்த பின்னர் விமானம் கட்டப்பட்டதா, விமானம் கட்டி முடித்ததும் பெருவுடையார் பிரதிஷ்டை ஆனாரா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இது பற்றிப் பின்னர் பேசலாம்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் எல்லாம் அழகு, அருமை, ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் அந்த ஆனையாரின் கண்களின் சோகம்! :(

    பதிலளிநீக்கு
  7. நேர்த்தியான படங்கள்... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  8. படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. மெய்கீர்த்தி பார்த்தீங்களா?

    பதிலளிநீக்கு
  9. படங்கள், புதிய கோணத்தில் மிக அழகு. பெரிய கோவிலின் பெரிய நந்தி நாயக்கர் காலத்தியது என்றுதான் கேள்வி பட்டிருக்கிறேன், நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் யோசிக்க வைக்கிறது. மிக நல்ல பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இக்கோயிலைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம். இக்கோயிலை பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதனைப் பார்க்க, இதனைப் பற்றி எழுத, படிக்க நாம் அதிகம் கொடுத்துவைத்துள்ளோம். இறையும் கலையும் இணையும் இவ்விடத்திற்கு நிகர் இவ்விடமே.

    பதிலளிநீக்கு
  11. நந்தியைப் பற்றி நீங்கள் சொன்னது சிந்திக்கத் தகுந்தது. கோவிலும் முழுமை பெறவில்லை என்று படித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. தஞ்சை கோவில் படங்களும் செய்திகளும் மிக அருமை. கருவூர் தேவர் சன்னதிக்கு பின் புறம் மரத்தில் மூன்று மரபல்லிகள் தேடுவது மிக மகிழ்ச்சியாக இருக்கும்.


    கோபுர பொம்மைகள் பார்ப்பது ஒரு பொழுது போக்கு.

    உள்ளே சுவாமியை அவன் அருளால் வணங்க்கி வந்தபின் தான் இந்த ஆராய்ச்சி எல்லாம் நடக்கும்.

    இரு யானையின் கையிலும் மனிதன் இருக்கிறான் ஒரு யானை கையை மட்டும் பிடித்து இருக்கு. இன்னொரு யானை குதிரையில் வந்த வீரனை இடுப்பு பகுதியை வளைத்து பிடித்து தூக்கி இருக்கிறது.


    குதிரையின் காலில் அறைபடுகிறான் ஒருவன். யானையின் மேல் இருப்பவன் கீழே விழுவது போல் இருக்கிறான்.
    அருமையான கலைபடைப்பு.

    யானைகள் பாகம் பாகமாக செய்து இணைக்கபட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னப்புறம் தான் யானைகள் தனித்தனியாக இருப்பதைக் கண்டேன்.

      நீக்கு
  13. அருமையான படங்கள். தகவல்களும் அருமை. நான் மிகவும் ரசித்து வணங்கிய கோயில்! ராஜராஜ சோழனின் பெருமை சொல்லும் கோயில் அந்த இறைவனின் பெருமையும் தான். நம் நாட்டின் பெருமையைப் பறைச்சாற்றும் கோயில் அல்லவா!

    படங்கள் மிக அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. துரை அண்ணா படங்கள் செம. ரொம்ப அழகா இருக்கு ஒவ்வொன்றும். படங்களையும் தகவல்களையும் கூட நீங்க ரொம்ப ரசித்து உள்வாங்கி சொல்லியிருக்கீங்க. நான் கோயில் சென்றதுண்டு. இரு முறை ஆனால் அப்போதெல்லாம் கேமரா கிடையாது. பல வருடங்கள் ஆகிவிட்டது சென்று.

    முதல் படத்தில் உள்ள ஆனையாரின் தந்ததம் உடைந்திருப்பது போல இருக்கே...அதான் அவர் கண்களில் சோகம் போலும்...இரு யானைகளின் கண்களும் வித்தியாசமா இருக்கு...முதல் படத்தில் குத்தியது போல இருக்கு...

    நல்ல தகவல்கள் அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..