நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 26, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 02

ஸ்ரீ ஹரிஹரசுதனின் திரு அவதாரம்..

அன்பும் அருளும் ஒரு வடிவாகி -
திருவடிவம் எனத் திகழ்வது பெண்மை!..

பெருமைக்குரிய
பெண்மையைக் காப்பதற்கு -  வந்தவர் தான் - 
ஸ்ரீ தர்ம சாஸ்தா!.. 

பழந்தமிழில்-
மகா சாத்தன்!.. - என்று போற்றப்படுபவர் இவரே!..

ஸ்ரீ கந்த புராணத்தில் -
ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரத்தினை
ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்யார் அழகுறச் சொல்லுகின்றார்.. 

ஸ்ரீ கந்த புராணத்தில் -
ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரப் படலம்
மகா சாத்தப் படலம் என்று வழங்கப்படுகின்றது..

மகா சாத்தன் எனும் ஸ்ரீ தர்ம சாஸ்தா
ஹரிஹர சுதன் எனவும் அழைக்கப்படுவார்...

காரணம் -
ஸ்ரீ ஹரி - ஹர சங்கமத்தில் தோன்றியவர்...


இதனால் ஸ்ரீ ஹரிஹர சுதனுக்கு
ஸ்ரீ மோகினி சுதன் என்ற பெயரும் உண்டு....

மோகினி சுதன் எனில் மோகினியின் புத்திரன்...

ஸ்ரீ தர்ம சாஸ்தா திருத்தோற்றமுற்ற போது
ஸ்ரீ ஹரிபரந்தாமனின் திருக்கோலம் - ஜகன் மோகினி...

ஜகன்மோகினி என்னும் திருப்பெயர்
பராசக்தியாகிய அம்பிகைக்கும் உரியது...

எதனால் இதெல்லாம்!?...

காலத்தை உருவாக்கும் காரணங்களாகிய 
ஸ்ரீஹரியும் ஹரனும் வகுத்து வைத்த கணக்கு அது!..

அதற்கு விடை காண்பதென்பது மானுடர்களுக்கு அரிது...

ஆனாலும்,
இப்படிச் சொல்லப்படுகின்றது...

ஸ்ரீ ஹரிஹர சுதனின் திருத்தோற்றம் -
பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தினைப்
பகிர்ந்தளித்த வேளையில் நிகழ்ந்ததாகும்...

பாற்கடல் ஏன் கடையப்பட்டது!?..

ஸ்ரீ ஹரிஹரசுதனின் திருத்தோற்றம் நிகழ வேண்டும்!.. -
என்பதற்காகவே பாற்கடல் கடையப்பட்டது - என்பது தெளிவு... 

நரை திரை எய்தாமலிருக்க பாற்கடலைக் கடைந்து
அமுதம் எடுத்து அருந்த வேண்டும்.. - என, முடிவு செய்த இந்திரன்
அசுரரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பாற்கடலைக் கலக்கினான்...

அது முதற்கொண்டு
ஆலகால விஷம் தோன்றியது வரைக்கும் பற்பல இன்னல்கள்..

எல்லாவற்றையும் கடந்த நிலையில்
பற்பல சீதனங்களுடன்
பாற்கடலில் தோன்றியது அமுதம்...

அந்த அமுத கலசத்தை
திருக்கயிலாய மாமலையில் அம்மையப்பனுக்கு சமர்ப்பித்தபோது
முல்லை வனம் எனப்பட்ட திருக்கடவூர் திருத்தலத்திற்குச்
சென்று சேருமாறு அருளாணை பிறக்கின்றது...

அங்கே சென்ற வேளையில்
அமுத குடம் மாயமாக மறைந்து போகின்றது....

அதற்குக் காரணம் - தேவேந்திரன்...

பாற்கடலைக் கடைவதற்கு முன்னதாக -
முதற்பொருளை முறையாக வணங்கவில்லை...

ஆலகால விஷத்தினைக் கண்டு அஞ்சி
திருக்கயிலாயத்தில் சரணடைந்த போது கூட
ஆங்கே முன் நின்ற முன்னவனைக் கண்டு
முக மலர்ச்சி கொள்ளவில்லை...

இந்த அலட்சியங்களால்
கைக்கு எட்டிய அமுதம் வாய்க்கு எட்டாமல் போகின்றது...

தேவேந்திரன் கண்ணீர் வடித்து நிற்கும்போது
நான்முகன் குறிப்பால் உணர்த்துகின்றார்..

அதன்பின் -
விநாயகப் பெருமானைப் பணிந்து நிற்க
அவர் கைகாட்டியருள்கின்றார்...

அமுத கலசத்தை ஒளித்து வைத்து விளையாடியதால்
திருக்கடவூரில் விநாயகருக்கு கள்ள வாரணர் என்று திருப்பெயர்..

கள்ள வாரணர் கை காட்டிய திசையில்
மேற்கு முகமாக சுயம்பு லிங்கம் முளைக்க -
அதனுள்ளிருந்து அமுத கலசம் வெளிப்படுகின்றது...

அதனாலேயே திருக்கடவூரில்
அமிர்தகடேஸ்வரர் - என்று ஈசன் போற்றப்படுகின்றார்...

ஈசனின் திருமேனிலிருந்து வெளிப்பட்ட
அமுத கலசத்தை தனது மேனியிலிருக்கும்
ஆபரணங்களால் அலங்கரிக்கின்றான் - ஸ்ரீ ஹரிபரந்தாமன்...


அவ்வேளையில்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி - என
அமுத கலசத்திலிருந்து ஸ்ரீ அபிராமவல்லி
வெளிப்பட்டு திருக்காட்சி நல்கியருளினாள்...

இந்த அளவில் -
அமுத கலசம் மீண்டும் தேவேந்திரனிடம் வழங்கப்பட்டது...

ஆனாலும் -
அமுதத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கைகலப்பு, வெட்டு - குத்து, அடி - உதை...

தேவேந்திரன் கையிலிருந்த
அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு - அசுரர்கள் ஓடிப் போயினர்... 

மீண்டும் - கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல்
கலங்கி நின்றான் தேவேந்திரன்..

அந்த வேளையில் - தேவர்களுக்கு உதவி புரியவும், 
அமுதக் கலசத்தினை அசுரர்களிடம் இருந்து மீட்கவும் -
ஸ்ரீ ஹரிபரந்தாமன் திருவுளங்கொண்டான்...

அதன் விளைவாக -
ஜகன் மோகினி - எனத் திருக்கோலமுங் கொண்டான்...

விஷ்ணு மாயையில் மதிமயங்கிய அசுரர்கள் - 

அன்பே.. அழகே...
உன்னை விடவும்
தித்தித்து இருக்குமோ
அலைகடலின் அமுதம்?..
- என்று, அமுத கலசத்தினை நழுவ விட்டனர்... 


ஜகன்மோகினியாக நின்ற மஹாவிஷ்ணுவும் -
அசுரர்களிடமிருந்து அமுதத்தை மீட்டு தேவர்களுக்கு அளித்தார்...

அவ்வேளையில்,
மாயையால் தேவ வடிவம் கொண்டு சித்ரக்ரீவன் எனும் அசுரன்
சூரிய சந்த்ரர்களுக்கு நடுவில் அமர்ந்தான்..

இதை உணர்ந்த சூரியனும் சந்திரனும்
ஜகன் மோகினியிடம் மாய அரக்கனைச் சுட்டிக் காட்டினர்...

ஜகன்மோகினி தன் கையிலிருந்த கரண்டியை வீசினாள்..
அது சக்ராயுதமாகி அசுரனின் கழுத்தை அறுத்தது...

அந்த அளவில் - அசுரனின்,
தலையும் உடலும் தனித்தனியாகியது...


அமுதம் அருந்திய நிலையில்
தனியாய்க் கிடந்த தலையிலிருந்து
நாகத்தின் உடல் தோன்றி வளர்ந்தது..

அவனே ராகு...

தலையற்ற உடலிலிருந்து
நாகத்தின் தலை தோன்றியது..

அவனே கேது...

அமுதம் அருந்தியதன் சிறப்பினால்
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகி
சூரிய சந்திரர்க்கு பகைவர்களாயினர்...

இதனால் தான்
சூரியனை அமாவாசை அன்று ராகுவும்
சந்திரனை பௌர்ணமி அன்று கேதுவும்
தமது நிழலால் மறைக்கின்றனர்...

இந்நிலையில் -
அருட்பெருஞ்சோதியாகிய சிவபெருமான் -
அழகே உருவான ஜகன்மோகினியின்
திருக்கரத்தினை வாஞ்சையுடன் பற்றினன்..

ஹரிஹர சங்கல்பத்தின்படி நிகழ்ந்தது -
ஸ்ரீ தர்ம சாஸ்தா திருஅவதாரம்!..


பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பரை ஆடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே!..(4/32) 
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ ஹரிஹர சங்கல்பத்தில் -
அம்பிகை தான் - அச்சுதனாக நின்றாள்!..
- என்ற, மறைபொருளும் ஒன்றுண்டு... 

அம்பிகை - 
ஜகன்மோகினி, கோவிந்தரூபிணி, நாராயணி, சியாமளி
- எனும் திருநாமங்களைக் கொண்டு விளங்குபவள்...

பரந்தாமனைப் போலவே பச்சை வண்ணமும் 
நீலமேக சியாமள வண்ணமும் கொண்டு இலங்குபவள்...


மாதொரு பாகனாக எம்பெருமான் திகழும் போது
ஐயனின் இட பாகமாகிய வாமபாகம் அம்பிகைக்கு உரியது...

அதே சமயம் எம்பெருமான் -
சங்கர நாராயணனாகத் திருக்கோலங் கொள்ளும் போது - 
அதே வாமபாகம் ஸ்ரீஹரிபரந்தாமனுக்கு உரியது...


எரியலால் உருவமில்லை ஏறலால் ஏறலில்லை 
கரியலால் போர்வையில்லை காண்டகு சோதியார்க்குப் 
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென்று ஏத்தும்
அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.. (4/40)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீஹரியும் அம்பிகையும் ஒருவரே!.. - என்பதையும்,

மகா சாத்தன் எனப்படும்
ஸ்ரீ ஐயனார் சிவபெருமானின் புத்திரன்!.. - என்பதையும்

நமக்கு உரை செய்தருள்பவர்
திருநாவுக்கரசு சுவாமிகள் என்பதை மனதில் கொள்ளவேண்டும்....

இப்படி ஹரிஹர சங்கமத்தில் -
திருக்கரத்தில் பூச்செண்டுடன் ஒளி வடிவாகத் தோன்றிய  மூர்த்தியே,

ஸ்ரீஹரிஹர புத்ரன் - எனும் ஸ்ரீ தர்ம சாஸ்தா!..

இவர் தோன்றிய அப்போதே -
லோக நாயகன் - என்று பட்டம் சூட்டப்பட்டது...
அண்ட சராசரங்களையும் காத்து நிற்கும் பொறுப்பு
இவரிடம் ஒப்படைக்கப்பட்டது...

எனவேதான், இவர் பூத நாயகன் - என்று புகழப்படுகின்றார்...

இவருக்கு யானையும் குதிரையும் வாகனங்கள்...

இவரே மக்களின் தெய்வமான - ஸ்ரீ ஐயனார்...
  

காருறழ் வெய்ய களிற்றி டையாகிப் 
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப் 
பூரணை புட்கலை பூம்புற மேவ 
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்!..
-: கந்த புராணம் :-

இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட
ஸ்ரீ தர்மசாஸ்தா திருமணக்கோலம் கொண்டார்...

சத்யபூரணர் எனும் தபஸ்வியின் குமாரத்திகளான 
பூர்ணகலா தேவியும் புஷ்கலா தேவியும் 
மணக்கோலம் கொண்டு - ஸ்வாமியுடன் ரத்ன பீடத்தில் அமர -
முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்தி மகிழ, 
திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தது...

ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீஐயனார் - என, தமிழகத்தின் பற்பல கிராமங்களிலும் திகழும் காவல் தெய்வம் இவரே!..

சிறை காத்த ஐயனார் (தஞ்சாவூர்)
கற்குவேல் ஐயனார் (தேரிக்குடியிருப்பு - திருச்செந்தூர்)
அடைக்கலம் காத்த ஐயனார் (பட்டுக்கோட்டை)
அருஞ்சுனை காத்த ஐயனார் (மேலப்புதுக்குடி - திருச்செந்தூர்)
கரை காத்த ஐயனார் (கொல்லங்கொண்டான் - ராஜபாளையம்)
நீர் காத்த ஐயனார் (ராஜபாளையம்)
நிறைகுளத்து ஐயனார் (திருநெல்வேலி)

- என்னும் திருப்பெயர்கள் எல்லாம் -
ஸ்ரீ ஐயனார் மக்களுக்கு ஆற்றும் மகோன்னதமான
அருஞ் செயல்களின் பொருட்டு சூட்டப்பட்டவை...

பரிமேல் அழகன், கஜ வாகனன் 
- என்ற திருப்பெயர்களும் ஸ்ரீ ஐயனாரைக் குறிப்பவைகளே..

அடைக்கலம் காத்த
- எனும், சிறப்புடைய சொற்குறிப்பு -  ஐயனார் ஒருவருக்கே உரியது...


அங்கண் மேவி அரிகர புத்திரன் 
சங்கையில் பெருஞ்சாரதர் தம்மொடும் 
எங்குமாகி இருந்தெவ்வுலகையும் 
கங்குலும் பகல் எல்லையுங் காப்பனால்!..
-: கந்த புராணம் :-

ஸ்ரீ ஐயனார் - பெரும் சைன்யத்தை உடையவர்...
பூத ப்ரேத பேய் பிசாசங்களை அடக்கி ஆள்பவர்...

மண்ணையும் மக்களையும் 
வயற்காட்டையும், ஏரி குளங்களையும் 
கால்நடைச் செல்வங்களையும் கட்டிக் காப்பவர்...

ஸ்ரீ ஐயனார் வழிபாடு
முறையாக நடைபெறும் கிராமங்களில் 
கள்வர் பயம் என்பதே இருக்காது...

ஸ்ரீ ஐயனார்  வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து - 
தனது சேனை பரிவாரங்களுடன் - நள்ளிரவு நேரத்தில்
ஊர்க்காவல் மேற்கொள்வார் என்பது
இன்றளவும் மெய்ப்பட விளங்கும்...

ஸ்ரீ ஐயனாரைப் பக்தியுடன் வழிபடும் பெண்களுக்கு
துன்பம் என்பது எவ்விதத்திலும் இல்லை!...

பெண்களைக் காத்தருளும் பெருமான் - ஸ்ரீ ஐயனார்...  

பெண்மையைக் காத்தருளும் பெருமானைப் பற்றி -
அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்!..

ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஐயனே
ஸ்ரீ ஐயனாரப்பனே 
சரணம்!.. சரணம்!..
ஃஃஃ 

9 கருத்துகள்:

  1. ஹரிஹர சுதனே, சரணம் ஐயப்பா!

    பதிலளிநீக்கு
  2. சாஸ்தாவை வணங்குகிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இந்த தேவேந்திரனுக்கு பதவியில் இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது போலிருக்கு... மற்றவர்கள்தான் அதை அவருக்குச் செய்து தரணும் போல இருக்கு!

    பதிலளிநீக்கு
  4. புராணத்தொடரை அழகாக விளக்குகின்றீர்கள் தொடர்கிறேன் ஜி...

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பகிர்வு.

    படங்களும் அழகு.

    எங்கள் குலதெய்வம் கூட சாஸ்தா அபிராமேஸ்வரர் தான்.

    மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. காரண காரியங்கள் யாவும் முறைப்படி நடக்கிறது காலம், நேரம் பார்த்து.
    தொடரை அழகாய் விவரித்து விட்டீர்கள், சாஸ்தாவின் அருளால்.

    படங்களும் அழகு. பொருத்தமான பாடல் பகிர்வும் அற்புதம்.

    வயல்கள், ஏரி இவை நிறைந்து இருக்கும் பகுதியில் நெல்கதிர்களை கொண்டு வந்து சேர்த்து களத்தின் கோடியில் இருக்கும் ஐயனார் என்பதால் எங்கள் குலதெய்வம் பெயர் களக்கோடி சாஸ்தா. குதிரையும், யானையும் அவர் எதிரில் இருபார்கள். ஒரு கால் மடித்து ஒரு காலை தொங்கவிட்டு யானையை அடக்கும் அங்குசத்துடன் தேவியர்களுடன் அழகாய் காட்சி தருவார்.

    மாயவரத்தில் நாங்கள் போய் வணங்கும் ஐயனார் பெயர் வெள்ளம்காத்த ஐயனார்.
    இப்போது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஐயனார் பெயர் பொய்சொல்லா ஐயனார்.

    ஐயனார் அனைவரையும் காக்க வேண்டும்.
    ஐயனார் அப்பனே சரணம் சரணம்.
    வாழ்த்துக்கள்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. எந்தாஆஆஆஆஆஅப்பெரிய போஸ்.. சபரிமலைப் படிகளை விட நீளம்ம்ம்ம்ம்..

    பதிலளிநீக்கு
  8. கதையுடன் புதியவை அதிகம் அறிகிறோம்...உங்கள் விளக்கம் வித்தியாசமாக இருக்கிறது. அருமை தொடர்கிறோம் ஐயா. துரை அண்ணா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..