நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 09, 2018

கந்தன் கருணை 2

முருகன் - 
சரவணத்தில் வடிவெடுத்தான்...
செந்தூரில் பகை முடித்தான்...
தேவர்களின் வினை தொலைத்தான்...

அவதார நோக்கம் இப்படி.. ஆயினும்,

திருச்செந்தூரில் எய்திய வெற்றிக்குப் பின்
திருப்பரங்குன்றம் எனும் மணமன்றத்தில்
தெய்வயானையின் திருக்கரத்தினையும் பிடித்தான்!... 

திருப்பரங்குன்றம் 
கந்தக் கடம்பனின் வேல் பட்டு - சூரன் அழிந்த
அதனால் அமரர் கோனின் மணிமுடி திரும்பக் கிடைத்தது...

தனது மணிமுடி திரும்பக் கிடைத்த
அதற்கு நன்றி கூறும் முகமாக - 
தேவேந்திரன் - தனது பட்டத்து யானையாகிய, 
ஐராவதம் வளர்த்த தேவகுஞ்சரியை 
திருமுருகனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்..

அந்த மங்கலகரமான வேளையில்
முருகா!... உனது அடியார்களை - 
முன்வினைப் பகையின் பேரால் வருத்த மாட்டோம்!...
- என, வாக்கும் கொடுத்தான் - இந்திரன்... 


நாள்என் செய்யும் வினைதான் என்செய்யும் எனை நாடிவந்த
கோள்என் செய்யும் கொடுங்கூற்று என்செய்யும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுந்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!..(38) 
-: கந்தர் அலங்காரம் :- 

மேலும் - 
ஏ..மனமே... வாட்டி வதைக்கும் வினைகளைக் கண்டு கலங்காதே!..

முந்தைய வினையின் கணக்குகளைக் கையில் வைத்துக் கொண்டு
வையகத்தைக் கலங்கடிக்கும் அங்காரகனோ சனைச்சரனோ
ராகுவோ கேதுவோ இவர்களுக்குத் தலைவனான இந்திரனோ
யாரைக் குறித்தும் கவலை வேண்டாம்!..


ஏனென்றால் - இவர்கள் இப்படிச் 
செய்வதற்கான மூலக் குறிப்பு
நான்முகப் பிரம்மனின் கையெழுத்து...
அது ஜீவான்மாக்களின் தலையெழுத்து..

பிரம்மனின் கையெழுத்தாகிய - தலையெழுத்து
அறுமுக வேலனின் திருவடிகள் பட்டதனால் அழிந்தே போயின...


சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்குயென் தலைமேலயன் கையெழுத்தே.. (40)
-: கந்தர் அலங்காரம் :- 

மேலும் -
இவர்கள் எல்லாம்
முடிவற்ற முதற்பொருளாகிய 
முருகப்பெருமானின் முன்பாக
முடியற்றவர்கள் ஆனார்கள்...

ஆட்சி செலுத்துபவனுக்கு அடையாளம் -
அவன் தனது சிரசில் தாங்கியிருக்கும் முடி - மணிமுடி - கிரீடம்...

வானோர்களைப் பொறுத்தவரை அவர்களது மணிமுடிகள் எல்லாம்
அறுமுகனின் திருவடிகளுக்கு அணிகலன்களாகிக் கிடக்கின்றன...


ஆலுக்கு அணிகலம் வெண்தலைமாலை அகிலமுண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந்துழாய் மயிலேறும்ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர்முடியுங் கடம்புங்கையில்
வேலுக்கு அணிகலம் வேலையுஞ்சூரனும் மேருவுமே.. (62)
-: கந்தர் அலங்காரம் :- 


இப்படி,
பிரம்மனின் கையெழுத்து அழிந்து போன நிலையில் -
மணிமுடி, கொற்றக்குடை எல்லாமும் எம்பெருமானின் திருவடிகளில்...

இதெல்லாம் போதாதென்று -
தேவர்களின் தலையின் மேலாக முத்துக்குமரனின் சிற்றடி!..

இதையெல்லாம் கடந்து
என்ன செய்யமுடியும் தேவர்களால்!...


தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலுமென்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ படிமாவலி பால்
மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூடமுகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே!..(15) 
 -: கந்தர் அலங்காரம் :- 

மாவலிபால் மூவடி கேட்டு, 
மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டி 
உலகளந்த பெருமாளின் மருகன் தான் இந்த முருகன்!..
எனவே, நாளும் கோளும் குறித்து அஞ்ச வேண்டாம்!..'

- என்று நம்மைத் தேற்றுகின்றார் அருணகிரிப் பெருமான்...
* * * * *


ஆன்றோர்கள் அருளிய உரை வழி நின்று
எனது சிற்றறிவுக்கு எட்டியபடி
கந்தரலங்காரத்தின் திருப்பாடல்கள் சிலவற்றினை
இப்பதிவில் சொல்லியிருக்கின்றேன்...

குற்றங்குறைகளைப் பொறுத்தருள்க..

முருகா சரணம்... முதல்வா சரணம்...
முத்துக் குமரா... சரணம் சரணம்...

வெற்றி வேல்.. வீரவேல்.. 
ஃஃஃ  

8 கருத்துகள்:

 1. படிக்கப் படிக்க மனம் அமைதியுற்றது. பொருத்தமான விளக்கங்களுடன் கூடிய பொருத்தமான பதிவு. தேடித்தேடிப் படித்து நீங்கள் இன்புறுவதை எங்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி. மனமும் கண்களும் நிறைந்தன.

  பதிலளிநீக்கு
 2. கந்தரலங்கார பாடல்களும், அதற்கான விளக்கங்களும் மிக அருமை.
  படங்கள் தேர்வும் அருமை.
  இன்று கந்தரலங்கார பாடல்களை பாடி மகிழ்ந்தேன்.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நாளும் கோளும் குறித்து நாம் அஞ்சாமல் இருக்க அவன் துணை நிற்பான். மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. நல்ல விளக்கங்களுடன் அமைந்த பாடல்களுடன் இடுகை ஜொலிக்கின்றது.

  "எனக்கு முன்னே வந்து தோன்றிடினே"

  நல்ல கண்டிஷன். அவன் நினைவாகவே நீ இருந்தால் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் அஞ்சேல் என்று அவன் சொல்கிறான். அத்தகைய எண்ணம், அவன் தாளினையே நினைத்திருக்கும் மனம், அவன் அருளால் அல்லவா கிடைக்க வேண்டும். கந்தவேள் அதற்கு அருள் புரிவான் ஆகுக

  பதிலளிநீக்கு
 5. அருமை பக்திரசம் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 6. மிக அருமை ..


  முருகா சரணம்

  முத்துகுமரா சரணம் ...

  பதிலளிநீக்கு
 7. அருமையான பாடல்களுடன் கூடிய பதிவு.

  சரணம் என்று சொல்லித் தொழுகின்றோம்

  எங்கள் இருவரின் கருத்தும்...

  பதிலளிநீக்கு
 8. சிறப்பாக பதிவு செய்த உங்களுக்கு வாழ்த்துகள் 🎊.

  நாங்களும் பக்தி ரசத்தில் திளைத்தோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..