நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 22, 2017

பல்லுயிர் ஓம்புக..

இன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

1993 ல் இருந்து வருடந்தோறும் மே மாதத்தின் இருபத்து இரண்டாம் நாள்
இப்புவியின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான நாளாக அனுசரிக்கப்படுகின்றது..

International Day for Biological Diversity

-என்றும்,

World Biodiversity Day

- என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்..


மனித சமுதாயம் - தான் மட்டுமே வாழ்தற்பொருட்டு
இயற்கை வளங்களின் மீதும் இதனைச் சார்ந்துள்ள
பல்வேறு உயிரினங்களின் மீதும் நடத்திய தாக்குதலுக்கு
பரிகாரம் செய்வதைப் போல இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது..

புவி வெப்பமயமாவதற்கு மனித சமுதாயம் அன்றி
வேறொரு காரணமும் இல்லை...

எல்லாவகையான ஆடம்பரங்களும் வேண்டும் என்பதற்காக
இயற்கையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் கால சூழ்நிலை மாறியது

இயற்கையை மட்டும் சார்ந்திருந்த பிற உயிர்கள் இடர்ப்பட்டு நிற்கின்றன..

நிலைகுலைந்திருக்கின்றது இயற்கை...

அழிவின் விளிம்பில் பிற உயிர்கள்...

என்றாலும், தனக்குத் தானே குழி பறித்துக் கொண்டது மனித சமுதாயமே!..


1992 ல் ரியோடி ஜெனிரோவில் ஒன்று கூடிய உலக நாடுகள்
பல்லுயிர்களையும் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன...

அதன் விளைவாக - நம் நாட்டில் 2002 ல் பல்லுயிர் பரவல் சட்டம் உருவானது..

பல்லுயிர்களையும் பாதுகாத்து அவற்றின் பெருக்கத்தை மேம்படுத்துதல் - என்பதே இதன் சிறப்பு அம்சம்...

இதன்படி ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தத்தமது எல்லைக்குள் பல்லுயிர்ப் பாதுகாப்பினையும் அவற்றின் வாழ்விடங்களைப் பராமரித்தலையும் உறுதி செய்திட நிர்வாகக் குழு ஒன்றினை அமைத்திட வேண்டும்..

இதற்கான நிதி உதவியினை தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் வழங்குகின்றது...

இந்தக் குழு -
அந்த வட்டாரத்தில் விளையும் பயிர் வகைகள்,  மூலிகைகள் முதலான தாவரங்கள்  மற்றும் பாரம்பரிய உயிரினங்கள் அனைத்தையும் பல்லுயிர்ப் பதிவேட்டில் பதிவு செய்து ஆவணப்படுத்தவேண்டும்...

இதன்படி,

தென்னகத்தில் கர்நாடக மாநிலத்தின் நல்லூர் எனும் கிராமத்தில் உள்ள புளியந் தோப்பு பல்லுயிர் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த அறிவிப்பினை -
பல்லுயிர் நிர்வாகக் குழு மற்றும் கர்நாடக மாநில பல்லுயிர் பரவல் வாரியம் ஆகியவற்றின் பரிந்துரையின்படி -

தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் அறிவித்துள்ளது...

கேரளத்திலும் ஆந்திர மாநிலத்திலும் பல்லுயிர் பாதுகாப்பு நிர்வாகக் குழுக்கள் இயங்கி வருகின்றன என்று அறிய முடிகின்றது..

அப்படியானால் - தமிழகத்தில்!?...

பல்லுயிர் பாதுகாப்பு நிர்வாகக் குழு ஒன்று கூட இல்லை!.. - என்பதே செய்தி..


காக்கை குருவி எங்கள் ஜாதி!..

மகாகவியின் ஆனந்த ஆரவாரத்தினைக் காற்றோடு போக விட்டோம்..


காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன் 
கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா!..
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா!..

- என்று,

பார்க்கும் இடங்களை எல்லாம் பரந்தாமனாகப் பார்த்து விட்டால்
இந்தப் பாருலகிற்கு பங்கம் செய்யும் எண்ணம் தோன்றாது..

இப்படியான உயர்வான எண்ணங்கொண்டு பாடிய மகாகவி தான்,

கொத்தித் திரியும் அந்தக் கோழி - அதைக் 
கூட்டி விளையாடு பாப்பா!..
எத்தித் திருடும் அந்தக் காக்கை - அதற்கு 
இரக்கப்பட வேணுமடி பாப்பா!..

பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப் 
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா!..

- என்று,
குழந்தைகளுக்கு இயற்கையின் மாண்பினை அறிமுகம் செய்து வைத்தார்..

பாரதத் திருநாட்டின் பல்வேறு வகைப்பட்ட மக்களின்
ஒற்றுமையைக் குறிக்கும்போது கூட,

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை 
அவை பேருக்கொரு நிறமாகும்..

சாம்பல் நிறத்தொரு குட்டி - கருஞ் 
சாந்தின் நிறமொருகுட்டி
பாம்பின் நிறமொரு குட்டி - வெள்ளைப் 
பாலின் நிறமொரு குட்டி..

எந்த நிறம் இருந்தாலும் - அவை
யாவும் ஒரே தரம் அன்றோ..
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்றம் என்றும் சொல்ல லாமோ?..

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை இல்லை..
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்!..

- என்று அஃறிணைகளான பூனைகளின் நிறத்தைக் கொண்டு முழங்குகின்றார்..

ஆனால் -
இன்றைக்கு நாம்!?..

இயற்கை நலன்கள் எல்லாவற்றையும் அழித்து ஒழித்த நிலையில்,

பாலை நிலத்தைக் கூட அல்ல -

பாழ் நிலத்தை அல்லவா நம் பிள்ளைகளிடம் விட்டுச் செல்ல இருக்கின்றோம்!..


ஒரு குளத்தையும் அதன் அருகே சில மரங்களையும் பாதுகாத்தால் -
நூற்றுக்கணக்கான உயிர்களை வாழவைத்த பெருமை உண்டாகின்றது...

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில்மூன் றெரித்தீர் என்றிரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்துஎமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்..
-: திருநீலகண்டத் திருப்பதிகம் :-

- என்று, குளங்களையும் சோலைகளையும் பாதுகாத்து பராமரித்தலைப் பற்றி உபதேசிக்கின்றார் திருஞானசம்பந்தர்...

புவி வெப்பமடைவதனால் விளையும் பயங்கரங்கள் 
கண் முன்னே காணக் கிடைக்கின்றன...

இதற்கு மேல் என்ன செய்வது!?.. 

எல்லாருமாகக் கூடி 
இயன்ற அளவில் பூமிக்கு நல்லதைச் செய்வோம்...

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
*** 

23 கருத்துகள்:

 1. வாழ்க வளமுடன் என்று சொன்னால் மட்டும் போதாது ,செயலும் தேவை என்று 'நச்'சென்று சொல்லிய விதம் அருமை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. செதுக்கியது போன்ற கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி இயற்கையை போற்றும் அற்புத விடயங்கள் அறிய தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. மிகவும் அழகான பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவாகத் தந்துள்ளீர்கள்.

  ஒவ்வொரு வரிகளிலும் தங்களின் ஆதங்கம் பளிச்சிடுகிறது.

  பாரதியாரின் பாடல்களுடன் மிகக்கோர்வையாக செம்மையாக எழுதியுள்ளீர்கள்.

  படத்தேர்வுகளும் மிகவும் அற்புதம்.

  தங்கள் பாணியில் தங்கமாகச் சொல்லி வெளியிட்டுள்ள இந்தப் பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். நல்வாழ்த்துகள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. மிகவும் அருமையான அத்தியாவசியமான பதிவு ஐயா ..
  பல்லுயிர்களின் அவசியத்தை இப்பூமி அனைத்துக்கும் ஆன பூமி என்பதை அழகுற சொல்லியுள்ளீர்கள் .
  பட்டாம்பூச்சியை பண்ணையில்தான் நாம் காண வேண்டுமா ..சிறு தோட்டம் அமைத்தால் பூச்சிக்கொல்லி தவிர்த்தால் நம் வீட்டுக்கு அவை வருமே ..மனிதன் தனது போக்கை மாற்றி இயற்கையை நேசித்தால் இயற்கை வளங்களை பாதுகாத்தால்மட்டுமே பூமி பல்லுயிர் வாழுமிடமாக இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..

   அனைத்திற்குமான பூமியை அதகளம் செய்தான் மனிதன்..
   ஆக்கபூர்வமாக பூமிக்கு நலம் செய்விக்க வேண்டிய காலம் இது..

   தாங்கள் சொல்வது போல பட்டாம் பூச்சிகள் நம்மைச் சுற்றி வட்டமிட்ட காலங்கள் போய் விட்டன... தேடியலைந்தாலும் தென்படுவது அரிதாக இருக்கின்றது..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. விழிப்புணர்வுப் பதிவு. உங்கள் வேதனை எனக்கும் வருகிறது. அறிவியல் வளர வளர இயற்கையை அழிக்கிறான் மனிதன். நேற்று கூட ஒரு புத்தக விமர்சனம் படித்தேன். அதில் பனிக்கரடி, பனி யானை போன்ற விலங்குகள் இனம் அழியக் காரணமே மனிதன் அங்கு குடியேறியதுதான் என்று படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   கொடுக்கும் இயற்கையைக் கெடுத்தது மனித சமுதாயம்..

   இயற்கை எப்படியாவது தழைத்துக் கொண்டாலும் -
   மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள வேறொரு வழியும் இல்லை..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. அருமை
  பல்லுயிர் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அருமையான விழிப்புணர்வு கட்டுரை வாழ்த்துக்கள்.
  எங்கள் பக்கம் ஒரு ஐய்யனார் கோவில் இருக்கிறது. அங்கு ஆலமரம், அரச மரம், வேப்பமரம், புளியமரம் இருக்கிறது. ஆலமரத்தில் பழங்க்கள் பழுத்து இருக்கிறது எவ்வளவு பற்வைகள் அங்க்கு வந்து செல்கிறது. புளிய மரத்தில் எவ்வளவு பற்வைகள் கூடு கட்டி இருக்கிறது. நகரமயமாக்கல் என்று மரங்க்களை வெட்டி சாய்த்துக் கொண்டு இருக்கிறோம்.
  மறுபடியும், குளம், குட்டைகளை உருவாக்கி, மரங்க்களை நட்டு பலுயிர்களும் வாழ வழி
  செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   நாம் வாழும் மண்ணை மீண்டும் வளம்பெறச் செய்ய வேண்டும்..

   இனிய கருத்துரைக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. நேற்று வெளியானதும் கமென்ட் போட்டும் அது நெட் பிரச்சனையால் போகவே இல்லை...

  அழகான கட்டுரை!! உங்கள் ஆதங்கம் எங்களுக்கும் உண்டு. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராக நாம் விளையாடுகிறோம். இயற்கையோடு ஒன்றி வாந்தான் நன்மை இல்லையேல் அழிவுதான்...நாமும் நம்மால் இயன்ற அளவு பல்லுயிர் போற்றிடுவோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் தான் நமக்கு நன்மை.. இல்லையேல் அழிவு தான்!..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. சரியான விழிப்புணர்வுப் பதிவு.ஏற்ற புகைப்படங்கள், ஓவியங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. நேர்த்தியான கட்டுரை. மனிதன், இருக்கும் இடத்தில் ஒழுங்காக இருப்பதை விட்டுவிட்டு, காடுகளையும், குளங்கள்/ஏரிகளையும் ஆக்கிரமிக்கிறான். முக்கியமான விழிப்புணர்வு கட்டுரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   காடுகளையும் ஏரி குளங்களையும் ஆக்ரமித்து அழிக்கும் மனித சமுதாயம் தான் செய்த பிழைக்கு பரிகாரம் செய்தே ஆகவேண்டும்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. நல்லதோர் விழிப்புணர்வுப் பகிர்வு.

  பாலை நிலத்தை அல்ல... பாழ்நிலத்தை அல்லவா நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்கிறோம்.... :(

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..