நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 18, 2017

சுவையோ சுவை..

காலையிலேயே மகிழ்ச்சி...

எங்கள் Blog - திங்கட்கிழமைப் பதிவில்
நெல்லைத்தமிழன் அவர்கள் வழங்கிய சமையற்குறிப்பில் -
உருளைக்கிழங்கு கூட்டு!..

நானும் வழக்கம் போல படித்துச் சுவைத்து விட்டு -

நேற்று இது தான்.. இதே தான்!..
இங்கே மசாலா அரைத்து செய்வதற்கெல்லாம் வசதிப்படாது..
எனவே - நம்ம ஊரிலிருந்து வரும் பொடி வகைகள் தான்..

நல்ல குறிப்பு.. நலம் வாழ்க!..

இந்த உருளைக் கிழங்கு கூட்டை மூன்று விதமாக செய்யமுடியும்..
எனினும் - உருளைக் கிழங்கை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை..

- என்று கருத்து சொல்லியிருந்தேன்..


அதிலும் -

இந்த உருளைக் கிழங்கு கூட்டை மூன்று விதமாக செய்யமுடியும்..
எனினும் - உருளைக் கிழங்கை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை..

- என்று சொல்லிய விஷயம் இன்னொரு பதிவை ஆரம்பித்து வைக்கப் போகின்றது எப்போது தெரியாமற்போனது..

இன்று காலையில் வேலை முடிந்து அறைக்கு வந்ததும்
முதல் வேலை கணினிக்குள் நுழைவது தான்!..

ஏனென்றால் பத்து முதல் பதினொரு மணி வரை தான் இணையம் இணையமாக இருக்கும்..
அதற்கு மேல் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் தான்!..

தளத்தினுள் புகுந்து - ஆங்காங்கே நண்பர்களின் தளங்களுக்குச் சென்றபோது,
எங்கள் Blog - செவ்வாய்க்கிழமைப் பதிவாக கேட்டு வாங்கிப் போட்ட கதை..

ஐயா GMB வெளுத்து வாங்கியிருந்தார்கள்..

அப்படியே முந்தைய பதிவிற்குள் சென்றபோது -
எனது கருத்துரைக்குப் பதிலுரைத்திருந்தார் நெல்லைத் தமிழன் அவர்கள்..

வாங்க துரை செல்வராஜூ... குவைத்ல தானே இருக்கீங்க. மிக்சி இருக்கில்ல. அப்புறம் என்ன!.. (நானும் குழம்புப்பொடி ஊர்லேர்ந்துதான் எடுத்துக்கிட்டு வருவேன்).
''இந்த உருளைக்கிழங்கு கூட்டை மூன்று விதமாக செய்ய முடியும்.." 
- இதைப் படிச்சவுடனே எனக்கு, தசாவதாரத்தில் வரும் 
'இவர் தெலுங்கை 5 மொழில பேசுவார்' - என்ற டயலாக் நினைவுக்கு வந்தது. 
நீங்களே அந்த விதங்களைக் குறிப்பிட்டிருக்கலாமே...

- என்றவாறு ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்கள்..

அதன்பிறகு சும்மா இருக்க முடியவில்லை...

அதாகப்பட்டது என்னெவென்றால் -
ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் தங்கியிருக்கும்படியான தொகுப்பு தளங்களுடன் கூடிய பல (14) மாடிக் கட்டிடம் இது..

வாருங்களேன்.. எனது தளத்திற்கு.. உட்கார்ந்து பேசுவோம் - உருளைக் கிழங்கு மசாலாவைப் பற்றி!..

அன்புடன் அழைக்கின்றேன்...

என்று, இரு பொருள்படும்படியான அழைப்புடன் - இதோ தங்களுடன்...

இரவு வேலை முடிந்து விடியற்காலையில்
அறைக்குத் திரும்பும்போது தூக்கம் கலையாத முகத்துடன்
வேலைத் தளத்திற்கு சென்று கொண்டிருப்பார்கள்..

மிச்சம் மீதியாக ஆங்காங்கே அறைகளுக்குள் சிலர் முடங்கிக் கிடப்பார்கள்..

இவர்கள் பெரும்பாலும் கும்பகர்ணனிடம் வரம் வாங்கி வந்தவர்கள்...

சூர்யோதயத்தைப் பார்த்தறியாதவர்கள்..

எந்த அறைக்குள் யார் வேலைக்குப் போகாமல் தூங்கிக் கிடக்கின்றார்கள் என்பதும் தெரியாது..

எனவே - தான் மிக்ஸி இருந்தும் அதைப் பயன்படுத்துவதில்லை...

எதற்காவது மிக்ஸியை இயக்கிவிட்டால் - அணுகுண்டு விழுந்தாற்போல

யே!.. க்யா.. பாய்!.. க்யூங் இத்னா சவுண்ட்?..

- என்று, அலறியடித்துக் கொண்டு வெளியே கிளம்பி வருவான்...

இத்தனைக்கும் மிக்ஸி புதியது... உயர்தரமானது...

எதற்கு பிரச்னை!..

பகல் ஒரு மணி முதல் இரண்டரை மணி வரைக்கும்
பேய் பங்களா மாதிரி எல்லா அறைகளும் அமைதியாக இருக்கும்...

சமயங்களில் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வேன்..

தவிரவும் - நான் தனிச் சமையலை விரும்புபவன்...

தளத்தில் உள்ள மூன்று அறைகளுக்கும் பொதுவான சமையலறை...

அடுத்தவர் வந்து சமைப்பதற்குள் நான் எனது சமையலை முடித்து விடுவேன்..

ஒருவாரத்திற்கான காய்கள் - குளிர் பதனப் பெட்டிக்குள்..

சன்ன ரக பாசுமதி அரிசி விருப்பத்துக்குரியது...

சர்க்கரையைக் கட்டுப்படுத்தியதில் இருந்து
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு -என சுவைகள் விரவி நிற்க -
மிளகாயின் காரம் குறைந்து போயிற்று...

இன்சுலின் குறைபாடு ஆகிவிட்டால் இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது!.. 

- என்ற அச்சுறுத்தலோடு கொடுக்கப்படும் பட்டியலில் (பெரும்பாலும்) இரண்டாவதாக இருப்பது உருளைக்கிழங்கு...

விருப்பத்துக்குரியதைச் சாப்பிடாமல் என்னடா இது!..
- என்று, உருளைக் கிழங்கைக் குறைத்துக் கொண்டேனே தவிர,
முற்றாக நிறுத்தவில்லை...

வாரம் ஒரு நாள் உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய்..

சில வருடங்களுக்கு முன் இவை இரண்டின் பேரைக் கேட்டாலே போதும் -
வாயு வந்து இடுப்பைப் பிடித்துக் கொள்ளும்...

இப்போது அப்படியெல்லாம் இல்லை...

நம்மூரிலிருந்து வரக்கூடியவைகளுள் பேயன் வகை நன்றாக இருக்கும்...

வாழையின் துவர்ப்பு நல்லது.. அதேபோல மா வடுவின் விதை நல்லது..

தீய்ந்து போகாத, பூச்சி அரிக்காத மாங்கொட்டைகள் ரசமாகி விடும்...

மாங்கொட்டையின் துவர்ப்பு இரத்தத்தில் சர்க்கரையை குறைக்கின்றன...

நாவல் கொட்டைக்கு இணையானது..
காலிஃபிளவர், கோவைக்காய், பாகற்காய், சுரைக்காய், மாங்காய், கருணைக் கிழங்கு - என, அவ்வப்போது கிடைப்பவற்றை தவற விடுவதில்லை...

இன்று - பலாக்கொட்டை காரக்குழம்பு.. பொரித்த அப்பளம்!..

ஆக, 

கடந்த ஆண்டுகளில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட
உருளைக் கிழங்கு இன்றைய நாட்களில் வாரத்தில்
ஒருநாள் மட்டும் தான் என்றாகிப் போனது...

சரி...நெல்லைத் தமிழன் அவர்கள் கேட்டிருந்தபடிக்கு
உருளைக்கிழங்கு கூட்டு செய்முறைக்கு வருவோம்..

செய்முறை அவரவர் மனப்பக்குவம்..
சுவை அவரவர் கைப்பக்குவம்..

முதலாவது செய்முறை..

முதல் நிலை :-

சுத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் தோலை சீவாமல் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக் கொண்டு சற்றே அகன்ற பாத்திரத்தில் இட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்..

அடுப்பையும் ஏற்றவும்..

மிதமான சூட்டில் சற்றே தண்ணீர் சூடாகி கொதிக்கும் முன்பாக
சிறிது உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளவும்...

இரண்டாம் நிலை :-  

அடுத்து சுறுசுறுப்பாக -
ஐந்து டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய்த் துருவல்,
சிறிதளவு சீரகம்
மூன்று மிளகாய் வற்றல்
இவற்றை மிக்ஸியில் இட்டு சாந்து போல அரைத்துக் கொள்ளவும்..

அதற்குள் -
உருளைக்கிழங்கு முக்கால் வேக்காடு ஆகியிருக்கும்...

இந்த நிலையில் - அரைத்த மசாலாவைச் சேர்த்து மேலும் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்..

மூன்றாம் நிலை :-

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து
வெந்திருக்கும் உருளைக் கிழங்கில் கொட்டி பாத்திரத்தை மூடி வைக்கவும்..

சூடு ஆறும் முன்பாக சாப்பிட்டு மகிழவும்...

அன்னாசி பூ - Star Anise
இரண்டாவது செய்முறை..

முதல் நிலை :-  

சுத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் தோலை சீவாமல் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக் கொண்டு சற்றே அகன்ற பாத்திரத்தில் இட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்..

மிதமான சூட்டில் சற்றே தண்ணீர் சூடாகி கொதிக்கும் முன்பாக
சிறிது உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளவும்...

இரண்டாவது நிலை :- 

ஐந்து டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய்த் துருவல் 
அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு மிளகு, 
மூன்று கிராம்பு
சிறிதளவு பெருஞ்சீரகம் 
இவற்றை மிக்ஸியில் இட்டு சாந்து போல அரைத்துக் கொள்ளவும்..

கல்பாசி பூ -  Black Stone Flower
இந்த சாந்தினை உருளைக் கிழங்கில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் -
பட்டை, அன்னாசி பூ (Star Anise),  கல்பாசி பூ(Black Stone Flower) , கறிவேப்பிலை இவற்றைத் தாளித்துப் போட்டு இறக்கவும்..

மூன்றாவது செய்முறை..

முதல் நிலை :-  

சுத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் தோலை சீவாமல் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக் கொண்டு சற்றே அகன்ற பாத்திரத்தில் இட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்..

மிதமான சூட்டில் சற்றே தண்ணீர் சூடாகி கொதிக்கும் முன்பாக
சிறிது உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளவும்..-

இரண்டு பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறி சற்றே வதக்கிப் போட்டுக் கொள்ளவும்..

இரண்டாவது நிலை :- 

ஐந்து டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய்த் துருவல் 
ஐந்து பூண்டு பற்கள்
கட்டை விரல் அளவுக்கு இஞ்சி
மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு கெட்டியான தயிர்
இவற்றை மிக்ஸியில் இட்டு சாந்து போல அரைத்துக் கொள்ளவும்..

இந்த சாந்தினை உருளைக் கிழங்கில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் -
சிறிதளவு பெருஞ்சீரகம் கறிவேப்பிலை இவற்றைத் தாளித்துப் போட்டு இறக்கவும்..

உருளைக் கிழங்குடன் உப்பும் மிளகுத் தூளும்
இரண்டாவது மற்றும் மூன்றாவது செய்முறைகளில் 
பனீர் துண்டுகள் சிலவற்றைச் சேர்த்தும் செய்யலாம்...

இவை மட்டும் தான் என்றில்லை..
இன்னும் எத்தனை எத்தனையோ வழிமுறைகள்..

ஆக,

எல்லாவற்றுக்கும் அவரவர் திறமையும் கைப்பக்குவமும் தான்.. 

சமையல் குறிப்பினைப் பகிர்ந்து கொள்ளும்படிக்கு 
உற்சாகப்படுத்திய நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி...

நல்லமுறையில் சுவையாகச் சமைப்பது ஒரு கலை..
அன்பும் ஆர்வமும் இருந்தால் போதும்...
உணவும் வாழ்வும் சுவையோ சுவை!..

வாழ்க நலம்.. 
*** 

20 கருத்துகள்:

 1. ஆஹா... ஐயா தளத்தில் சமையல் குறிப்பு...
  இன்று மாலை மூன்றாவது செய்முறையான தயிர் சேர்த்து செய்து பார்க்கணும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகை மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. படித்தேன். உண்மையாகவே, உருளைக்கிழங்கு கூட்டு என்பது, எங்கள் வீட்டில் மட்டும்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கும் இது அன்னியமில்லை என்பதே எனக்கு அதிசயமான செய்தி. (எல்லோரும் ரோஸ்ட், குருமாவுக்குத்தான் உருளை உபயோகப்படுத்துவார்கள் என்று நினைத்தேன்).

  மற்ற இரண்டு செய்முறையும் நல்லாத்தான் இருக்கு. எனக்கு கூட்டில், பூண்டு, சோம்பு வந்தால் சாப்பிடமுடியாது (பழக்கம் அப்படி).

  குவைத்துக்கும் பலதடவை வந்திருக்கிறேன். (கடைசியாக வந்தே 4-5 வருடங்கள் இருக்கும்) பேச்சலர்கள் தங்கியிருக்கும் மேன்ஷன், அதுவும் பலவித ஷிஃப்டில் வேலைபார்ப்பவர்கள் - புரிந்துகொள்ளமுடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   சிலருக்கு மசாலா வாசனை பிடிக்காது தான்.. ஆனால் சோம்பு ஜீரணத்திற்கு நல்லது என்கிறார்கள்..

   எப்படியோ தங்களால் சமையல் குறிப்பு பதிவிட நேர்ந்தது..

   குவைத் எல்லாம் வந்திருப்பதாகச் சொல்கின்றீர்கள்.. மகிழ்ச்சி..

   தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 3. சந்தோசம் உங்கள் பதிவில் தாண்டவம் ஆடுகிறது... வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தானே தனியாகச் சமைத்து, அதை, தானே சுவைத்து உண்ணும் பாக்கியம் இந்த உலகில் சிலருக்கே கிடைக்கும். எனக்கு விட்டுவிட்டு பதிநைந்து வருடங்கள் கிடைத்தது. உங்களுக்கு இன்னும் கிடைத்துக்கொண்டிருக்கிறது....போகட்டும், உருளைக்கிழங்கு பொடிமாஸ் என்று நான் சிறுவனாக இருந்தபோது என் தகப்பனார் ஒருமுறை செய்தார். இன்றும் எண்ணி எண்ணி ச் சுவைக்கிறேன்.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தானே சமைத்து தானே உண்பது ஒருவித திருப்தி என்றாலும் மனைவி மக்களுடன் இருந்து உண்பது ப்ப்ப்லாகுமா?..

   ஒன்றைப் பெற விழைந்தால் மற்றொன்றைப் பெற இயலாமல் போகின்றது..

   தங்களின் மலரும் நினைவு மனதில் நெகிழ்ச்சியாகின்றது..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அன்பின் ஜி தங்களது பாணியில் சமையல் குறிப்பு ஸூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. ஆஹா அதுக்குள்ளே செய்தாச்சா ஐயா ..நானும் அதே முறையில்ங்க செய்ய நினைத்தேன் நீங்க முந்திக்கிட்டிங்க :) அதனாலென்ன இப்போ மூன்று ரெசிப்பீஸ் கிடைச்சிருக்கே :) அத்துடன் உடல் நல குறிப்புகளும் இடையே தந்து அசத்திட்டீங்க ...
  ஒரு சமையலை பிறர் செய்முறை குறிப்பு பார்த்து நாமும் செயும்போது தனி ஆனந்தம் அது இப்பதிவில் வெளிப்படுகிறது ..
  அந்த மிக்சி சத்தம் நாங்க ஜெர்மனில இருந்தப்போ வசித்து ப்லாட்ஸில் ஹூவர் செய்யும்போது நான் அரைக்க வேண்டியதை அரைச்சு வச்சிப்பேன் .. லண்டனில் தனி வீடு அதனால் சத்தம் கேட்டாலும் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..

   நமது கைச்சமையல் உண்மையிலே சந்தோஷம்.. திருப்தி..

   தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. ஆஹா... உருளைக்கிழங்கு எங்கும் அசத்துகிறதே!

  வடக்கே முக்கிய உணவே உருளை தான் - நான் கூட சமீபத்தில் ஒரு பதிவில் Alu goes with anything! என்று எழுதி இருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட் ..

   இரண்டு அடுப்புகள் இருந்தால் சோறு ஆகிக் கொண்டிருக்கும்போதே உருளைக் கிழங்கு வேலை முடிந்து விடும்..

   எல்லாருக்கும் ஏற்றதாக இருப்பதே இதன் சிறப்பு..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. அட! தஞ்சையம்பதியிலும் தமிழ் சுவையுடன் உணவுச் சுவையும்!!!! நாவினிக்க, மூக்கு முகர்ந்திட...உருளையின் சுவை நாவில்....

  இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் இதுவரை செய்ததில்லை குறித்துக் கொண்டே ஐயா!!! உங்களது உணவுக் குறிப்பும் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   செய்து பாருங்கள்.. அந்தப் பக்குவம் நிறைய பேருக்கு விருப்பமாக இருக்கின்றது.. கிழங்கை கொஞ்சம் குழைத்து விட்டால் இட்லி தோசைக்கும் ஆகும்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. உருளை சமையல் குறிப்பு, தங்ககும் அறைகளில் மற்றவர்களின் தூக்கத்திற்கு பங்க்ம் இல்லாமல் அனுசரிப்புகள் என்று பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் சொல்வது சரி.. ஆனால் நாம் விட்டுக் கொடுத்து போவது போல மற்றவர்கள் செய்வதில்லை..

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..