நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 11, 2017

ஆனந்த ஜோதி

நெஞ்சமெல்லாம் அன்பு மலர் பூத்துக் கிடக்கின்றது..


ஆனாலும் - அத்தனை இறுக்கம் மனதில்!..

யார் யாரைக் குறை சொல்வது?..
எதற்குக் குறை சொல்வது?..

சொல்வார்கள் - அந்தக் காலத்தில்!..

சூரியனைப் பார்த்து ஓணான் பழித்தது!..

சூரியனைப் பார்த்து நாய் குரைத்தது!..

- என்றெல்லாம்..

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குதலே நல்ல நெறி..

- என்பது, பள்ளியில் படித்த பாடல்களுள் ஒன்று...

ஔவையார் அருளிய பாடல் என்றே நினைத்திருந்தேன்..

ஆயினும்,
நீதி வெண்பா பாடல் இது என -
இப்போது தான் கூகிள் வழியே அறிந்தேன்..

காலத்தின் ஓட்டத்தினால் -
நீதி வெண்பாவை இயற்றிய புலவர் யாரெனத் தெரியாமல் போனது...

தெரிந்திருந்தால் மட்டும் நீதியைக் கடைப்பிடிக்கவா போகின்றார்கள்...

வம்புசெறி தீங்கினர்களுக்காக எவ்வளவு தான் ஒதுங்கிச் செல்வது?...

வைதோரைக் கூட வையாதே - இந்த 
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே..
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே!..

என்று, கடுவெளிச் சித்தர் அருளிய நீதி மனதிற் பதிந்து கிடக்கின்றது..

அதுவே - நல்வழியில் நடத்துகின்றது..

ஆனாலும் - 
தேவையே இல்லாமல் வம்பு வந்து சூழும்போது 
மனம் கொதிப்படைந்து தகிக்கின்றது... தவிக்கின்றது!..

அறிவினர் தம் செய்கையால் சொற்களால் -
ஆக வேண்டியவைகள் தடைபட்டுக் கிடக்கின்றன...

கைவனுக்கு அருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்!..


எவ்வுயிர் தன்னிலும் ஈசன் உள்ளான் என
எப்பொழுதும் கதைப்பாய் - நன்னெஞ்சே
எவ்வுயிர் தன்னிலும் சிவன் இருப்பதைச்
சிந்தனை செய்யாயோ - நன்னெஞ்சே!..

- என்றார் மகாகவி...

அவ்வழி நடக்க சித்தம் கொள்வதே நல்லது...

காற்றில் கலந்து வந்து - மேலே விழுந்த தூசியாக எண்ணி
இவற்றையும் கடக்கத் தான் வேண்டும்..

ஏனெனில் -


செல்ல வேண்டிய தூரம்
இன்னும் அதிகம் இருக்கின்றது..
செய்ய வேண்டிய செயல்களும்
இன்னும் ஏராளமாக இருக்கின்றன..

அந்த வழியில் சிந்திக்கும்போது
மனதின் இறுக்கம் தீர்க்கும்
முத்தான பாடல்களுள் இதுவும் ஒன்று..

காலத்தின் கண்ணாடியாக கவியரசர் இயற்றிய
அருமையான அழகான திரைப்பாடல் - இன்றைய பதிவில்!..

கடவுள் இருக்கின்றார் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா!..
காற்றில் தவழுகின்றாய் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா!..


கடவுள் இருக்கின்றார் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா!..

இருளில் விழிக்கின்றாய் - எதிரே
இருப்பது புரிகின்றதா!..
இசையை ரசிக்கின்றாய் - இசையின் 
உருவம் வருகின்றதா!..
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் 
வடிவம் வெளியே தெரிகின்றதா!..

கடவுள் இருக்கின்றார் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா!..

புத்தன் மறைந்து விட்டான் - அவன் தன்
போதனை மறைகின்றதா!..
சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தர்மம் அழிந்ததுண்டா!.. - இந்தச்
சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா!..

கடவுள் இருக்கின்றார் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா!..

தேடியும் கிடைக்காது - நீதி
தெருவினில் இருக்காது!..
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது!..
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது..
காக்கவும் தயங்காது!..


கடவுள் இருக்கின்றார் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா!..


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. 
இருட்டினில் நீதி மறையட்டுமே!..
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
ஒருதலைவன் இருக்கிறான் மயங்காதே!..

நடக்கும் பாதையில் 
நல்லொளி காட்டுவது ஜோதி..
அன்பெனும் ஆனந்தஜோதி..
***

9 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  ஆனந்த ஜோதி தங்களின் கைவண்ணத்தில் அழகிய ஜோதியாய் ஜொலித்தது

  பதிலளிநீக்கு
 2. சில நேரங்களில் வீணான பழிக்கு ஆளாவோம். வேண்டுமென்றே சிலர் தீங்கு செய்வார்கள். நன்கு அறிந்தவர்களே விரோதம் பாராட்டுவார்கள். அப்போதெல்லாம் இறைவனின் நிழலே நமக்கு தஞ்சம் தருவதாகும். நலதொரு பாடலை வழங்கிய ஆண்களுக்கு நன்றி.

  - இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

  பதிலளிநீக்கு
 3. அன்பெனும் அனந்த ஜோதி அகிலமெங்கும் பரவட்டும்...

  ....அனைத்தும் சிறப்பு....

  பதிலளிநீக்கு
 4. பாடல் பகிர்வு அருமை.
  அன்பெனும் ஜோதி எங்க்கும் பரவட்டும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அன்பெனும் ஆந்தஜோதி எல்லா இவ்வுலகம் முழுவதும் பரவட்டும்! பாடல்கள் அனைத்தும் சிறப்பு! அருமை....

  பதிலளிநீக்கு
 6. அன்பு தானே கடவுள் ,கடவுள்தான் அன்பு ..இதை புரிந்தால் உலகமே செழிக்கும்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..