நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 03, 2017

கல்யாண அழைப்பு

மன்னர் மன்னா!.. வாழிய நின் கொற்றம்!.. பேராற்றுப் பெருவளநாட்டில் இருந்து ஓலை தாங்கி வந்திருக்கின்றார்!..

அவைக்கு வரச் சொல்!..

வாழிய மன்னன். வாழிய வளநாடு!.. கொடி வாழ்க.. கொற்றம் வாழ்க!..

வருக.. வருக!.. அமர்க!.. அவையினர் அறியும்படிக்கு வந்த காரியம் இயம்புக!..

மன்னர்மன்னா!.. பேராற்றுப் பெருவளநாட்டின் மகாமன்னர் - தமது வளநாட்டில் நிகழும் திருக்கல்யாணத்தைக் கண்டு இன்புறுவதற்கென தமக்கு ஓலை அனுப்பியுள்ளார்..

பேராற்றுப் பெருவளநாட்டின் மகாமன்னர்!.. அவர்தான் பெருங்கிழவர் ஆயிற்றே!.. அவருக்கு இன்னொரு கல்யாணமா?..

கல்யாணம் அவருக்கில்லை.. இது வளநாட்டில் பாரம்பர்யமாக நிகழ்ந்து வரும் தெய்வீகத் திருமணம்...

ஓ!.. யாம் அறியாத செய்தியாக இருக்கின்றதே!..

ஆம் அரசே.. காவிரிக் கரையில் தவம் செய்த சிலாத முனிவருக்குத் திருமகன் எனப் பிறந்தார் - நந்தியம்பெருமான்.. அவரைத் தன் மகனாக சொந்தம் கொண்டார் சிவபெருமான்...

நந்தியம் பெருமானுக்கும் வியாக்ரபாத முனிவரின் திருமகளான சுயம்பிரகாஷினி தேவிக்கும் பங்குனி புனர்பூச நாளன்று சிறப்பாக திருமணம் நிகழ இருக்கின்றது... 

அந்தத் தெய்வீகத் திருவிழாவிற்கு தாங்கள் வருகை தரவேணும்!.. - என்பதற்காக சீர்வரிசையுடன் தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்..

அப்படியா மிக்க மகிழ்ச்சி.. அமைச்சரே!.. அந்த அழைப்பிதழினைப் பெற்று சபையோர் அறிய வாசிக்கவேண்டும்!..


திருக்கல்யாண அழைப்பிதழ்
***

பார்வதி பரமேஸ்வரர் தம் ஸ்வீகார புத்திரரும் 
சிலாத முனிவரின் திருக்குமாரரும் 
சகல வரங்களையும் பெற்றவரும் 
திருக்கயிலாய மாமலையில் 
அதிகார நந்தி எனும் பெரும் பதவியினை வகிப்பவரும் 
ஜபேசன் எனப் புகழப்படுபவருமான 

நந்தீசன் எனும் திருநிறைச் செல்வனுக்கு, 

அருந்தவ முனிவரான வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் 
வியாக்ர பாதரின் திருக்குமாரத்தியும் 
உபமன்யுவின் பிரிய சகோதரியும் 
சுயசாதேவி  எனப் புகழப்படுபவளுமான
  
சுயம்பிரகாஷினி  எனும் திருநிறைச் செல்வியை

மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி, 
சகல தேவதா மூர்த்திகளின் நல்லாசிகளுடன்

மங்கலகரமான துர்முகி வருடம் 
பங்குனி மாதம் இருபத்திரண்டாம் நாள்
புனர்பூச நட்சத்திரங் கூடிய
செவ்வாய்க் கிழமையாகிய சுப தினத்தின் 
சுபயோக  சுபவேளையில் 

திருமழபாடி எனும் திருத்தலத்தில் 
திருமாங்கல்யதாரணம் 
நிகழ இருக்கின்றது..
***


அனைவரும் வருக.. அருள் நிதி பெறுக!.. 
என, அகமகிழ்வுடன் அழைக்கின்றோம்..
***


ஓலை வாசிப்பினை விவரமாகக் கேட்டுக் கொண்டான் மன்னன்..

மங்கலகரமான அழைப்பிதழைக் கொணர்வதற்கு இத்தனை தாமதம் ஏன்?..

மன்னர் மன்னா!.. மன்னிக்க வேண்டும்.. தங்கள் நாடு சென்ற வருடம் இருந்தாற்போல இந்த வருடம் இல்லை!..

என்ன உளறுகின்றாய்!..

உளறவில்லை மன்னா!.. உண்மையைத் தான் கூறுகின்றேன்.. 

பெருவழிச் சாலையில் செல்பவர்கள் தங்கி இளைப்பாறுதற்கு இருபுறமும் நூற்றுக்கணக்கான மரங்களும் அவர்கள் அருந்தி களைப்பாறுதற்கு ஆங்காங்கே தடாகங்களும் நீரோடைகளும் மலிந்திருந்தன... 

படர்ந்து நிழல் விரித்திருந்த மரங்களின் ஊடாகச் செல்லும்போது பயணக் களைப்பு தெரியாமல் இருக்கும்... 

இந்த வருடம் பருவமழை தவறி விட்டது... நீரோடைகளில் எல்லாம் நெருஞ்சி பூத்துக் கிடக்கின்றது...

தடியெடுத்தோர் பலர் கூடி தடாகங்களைத் தூர்த்தனர்... தமது வசமாக்கிக் கொண்டு ஆனந்த மாளிகை கட்டிக் கொண்டனர்... 

சாலை விரிவாக்கம் என்ற பேரில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி விட்டனர் - தங்களின் பணியாட்கள்... 

பின்னால் வரவிருக்கும் தீங்கினை உணராத மக்களும் ஏனென்று எதிர்த்துக் கேட்கவில்லை... அடுப்பெரிக்க ஆகும் என்று எடுத்துச் சென்று விட்டார்கள்...

நானும் குதிரையும் பல இடங்களில் களைத்து விட்டோம்..
இளைத்து நின்றவேளையில் எதிர்ப்படுவோரிடம் தண்ணீர் கேட்டால் -

நாங்கள் குடிக்கவே தண்ணீர் இல்லை.. 
இதில் குதிரைக்கு தண்ணீர் ஒரு கேடா?.. - என்று கடுங்கோபம் கொண்டனர்...
எனவே, எனது பயணம் தாமதமாயிற்று...

சாலை விரிவாக்கம் வளரும் நாட்டிற்கு அவசியம் தானே!...

- நெடுஞ்சாலைத் துறைக்கான கங்காணி துள்ளினான்...

சாலை அவசியம் தான்.. அதே வேளை பற்பல நன்மைகளுக்குக் காரணமான மரங்களும் பறவையினங்களும் அவசியம் தானே!..

இன்று வீழ்ந்து கிடக்கும் மரங்களெல்லாம் உங்கள் முன்னோர் வளர்த்தவை..
நூறாண்டுகளைக் கடந்தவை.. அவற்றைக் காணும் போது உங்கள் முன்னோர் முகம் நினைவுக்கு வரவில்லை எனில் தவறு அவர்களுடையதில்லை..

மரங்களை வெட்டி வீழ்த்திய பாவத்திற்கு அடுத்தடுத்த ஊர்களை இணைத்துப் புதிய சாலை அமைத்திருக்கலாம்..

தாங்கள் சென்ற ஆண்டு அரபு தேசங்களுக்குச் சுற்றுலா சென்றிருந்தீர்களே.. அங்கு காணவில்லையா?.. வெட்ட வெளிகளாய்.. பாலை நிலங்களாய்!..

ஏதோ இடித்துரைக்கிறாய் போலிருக்கின்றதே!..   - அரசன் தடுமாறினான்..

அரசருக்கு அரசே!.. நான் எளியேன் தங்களுக்கு என்ன கூற முடியும்!.. எல்லாம் வள்ளுவப் பெருந்தகை சொல்லிச் சென்றது தானே!..

தாங்கள் நல்லவர் தான்.. ஆனாலும் மக்களின் பிரச்னைகளை இன்னும் முழுதாக உணராதிருக்கின்றீர்கள்.. தங்களிடம் எதையாவது சொல்லுதற்கு விழையும் மக்களை தேச விரோதிகள் என்று தங்களது வேலையாட்கள் முத்திரை குத்தி விடுகின்றனர்..

அப்படியா!?..

அதற்குப் பயந்து கொண்டு ஓட்டுக்குள் ஆமையாய் ஒடுங்கிக் கிடக்கின்றனர்... இன்றைய பிரச்னை இன்று அடங்கிக் கிடக்கலாம்.. ஆனால், 

ஆமை நீடித்த ஆயுளை உடையது.. அதைப் போல பிரச்னைகளும் நீடித்த ஆயுளை உடையவை..

எங்கே.. எல்லா பிரச்னைகளையும் விளக்கமாகச் சொல்!..

மன்னர் மன்னா!.. நான் பல இடங்களுக்கும் சென்று அறிவிக்க வேண்டியவன்.. மீண்டும் ஒருநாளைக்குச் சந்திப்போம்.. அவசியம் நந்தி திருக்கல்யாணத்திற்கு வாருங்கள்.. நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்!.. என்றுரைப்பர் ஆன்றோர்..

எனக்குத் தான் கல்யாணமாகி விட்டதே!..

கல்யாணம் என்றால் மங்கலம் என்றொரு பொருளும் உண்டு.. 
மங்கலம் என்பது நல்லறிவையும் உள்ளடக்கியது...நந்தியம்பெருமான் அறத்தின் திருவடிவம்..
நல்லறிவைப் பிரசாதமாகப் பெறலாம்..

ஆகவே.. 
வாருங்கள்.. திருக்கல்யாணம் காணுங்கள்..
சிவ மகா தரிசனம்.. மகா பாப விநாசனம்!..

நாளை (ஏப்ரல்- 04) பங்குனி - 22 புனர்பூசம்..
முன்னிரவு ஏழு மணியளவில் திருமாங்கல்யதாரணம்!..
அனைவரும் வருக!.. வருக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

7 கருத்துகள்:

 1. இருக்கும் நிலையை சமயோசிதமாக பகிர்ந்ததற்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஜி இன்றைய நிலைபாட்டை இலைமறைகாயாக சரித்திர நிகழ்வுகளோடு இணைத்து தங்களுக்கே உரித்த நடையோடு பகிர்ந்தமைக்கு நன்றி

  திருமழபாடி நண்பர் திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களின் சொந்த ஊர் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. "ஒரு பொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ..," என்று ஒரு பழைய பாடல் வரி உண்டு. அது நினைவுக்கு வருகிறது. நாம் மரங்களை வெட்டிப் போடுவோம். மணலை அள்ளுவோம். சீமைக்கருவேலம் வளர்ப்போம். தண்ணீரைச் சேமிக்காமல் கடலுக்கு அனுப்புவோம். யார் கேட்பது!!!

  பதிலளிநீக்கு
 4. தலைப்பைப் பார்த்ததுமே திருமழபாடிக்கு அழைக்கின்றீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறே அழைத்துள்ளீர்கள். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கல்யாண அழைப்பு.
  நாட்டின் நிலமையை மன்னரிடம் சொல்லிவிட்டீர்கள் இனி மக்களுக்கு நலம் செய்ய மன்னர் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.
  மரம் வளர்த்து, பறவையினம், மற்றும் மக்கள் நலம் பெறட்டும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. திருமழபாடியில் திருமணம் - அழைப்பு சிறப்பு. கூடவே நல்ல செய்தியும் சொன்னது அதைவிடச் சிறப்பு.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா! எப்படி எழுதுகின்றீர்கள் ஐயா!! நந்தித் திருமண அழைப்பிதழ் மனதைக் கவர்கிறது என்றால் அதனூடே சொல்லிச் சென்ற செய்தி அதைவிடச் சிறப்பு.!!! நல்ல கற்பனை வளம் ஐயா!! மிகவும் ரசித்தோம்...அந்த மன்னர் கேட்பார்...இக்காலத்து மன்னர்கள் செவி சாய்ப்பரோ?!! கல்யாணம் முடிந்துவிட்டது இருந்தாலும் இறை அருள் கிடைக்காதா என்ன??!!

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..