நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 01, 2017

அறிவினர் சேர்க..

நீர் வளமும் நில வளமும் நெல் வளமும்
நிறையப் பெற்றதாகப் புகழப்பட்ட தஞ்சையின் வளங்கள்
நாளுக்கு நாள் தேய்ந்து அழிவதைக் கண்டு மனம் பதைக்கின்றது...

கண்ணெதிரே - கால் நடந்த தடங்கள் காணாமற்போகின்றன..

நீர் பாய்ந்து நிறைந்த நெடுவயல்கள் சுடுமணற் பாலைகளாகின்றன..தஞ்சையிலிருந்து -

பூதலூர் - திருக்காட்டுப்பள்ளி,
திருவையாறு - அரியலூர்,
பாபநாசம் - கும்பகோணம் (சென்னை),
திருக்கருகாவூர் - கும்பகோணம்,
நாகப்பட்டினம்,
மன்னார்குடி,
பட்டுக்கோட்டை,
மருங்குளம் - திருவோணம்,
கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை,
வல்லம் - திருச்சிராப்பள்ளி

- ஆகிய ஊர்களுக்குச் செல்லும் சாலைகள் எல்லாமே இருமருங்கிலும் குடை விரித்தாற்போல பசுமையான மரங்களால் சூழப்பட்டவை..

காலத்தின் கொடுமையால் - அகன்ற சாலைகள் எனும் பேரில் - முதலில் பலியானது திருச்சி சாலை..

இச்சாலையின் இருபுறமும் இலுப்பை, அரசு ஆலமரங்கள் நிறைந்திருக்கும்..

அவை எல்லாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டன..

இன்றைக்கு அகன்ற வழிச்சாலையில் அவசரத்துக்கு ஒதுங்கக் கூட நிழல் கிடையாது...

அதற்கு அடுத்து நாகை சாலையில் நீடாமங்கலம் வரை
நிழல் விரித்திருந்த பெருமரங்கள் எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டன...

பின்னும் புதுக்கோட்டை வழியாக தென்மாவட்டங்களுச் செல்லும் சாலை பதம் பார்க்கப்பட்டது...

இச்சாலையின் இரு மருங்கிலும் குன்றிமணிக் கொடி படர்ந்த பனை மரங்கள்.. நெடிதுயர்ந்த பனை மரங்களை அடுத்த நிலங்களில் முந்திரிக் காடுகள்..

இவை அனைத்தும் நகர விரிவாக்கத்தில் அழிக்கப்பட்டு வீழ்ந்தன..

அடுத்தாற்போல் கொடுங்கோடரிகள் திருவையாறு அரியலூர் சாலையின் இருமருங்கிலும் தழைத்திருந்த மாமரங்கள் புளிய மரங்களை கூறு போட்டு குதுகலித்தன..

எல்லாவற்றிலும் மேம்பட்டதாக
தஞ்சையிலிருந்து மன்னார்குடிக்குச் செல்லும் சாலை மிக்க அழகுடையது..

சொல்லுதற்கொணாத அழகுடையது...

அந்த அழகை ஓரளவுக்கு கீழுள்ள படங்களால் உணரலாம்..


இவ்வழித் தடத்தில் தான் புகழ்பெற்ற வடுவூர் ஏரி விளங்குகின்றது..
இந்த ஏரியில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது..

சமீபத்தில் இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது...

அதற்கேற்றவாறு - உடனடியாக மரங்களை வெட்டி வீழ்த்தும் பணியும் நடந்து கொண்டிருக்கின்றது...

அந்தக் கொடுமையான காட்சிகள் - இதோ தங்கள் பார்வைக்கு...

நிழற்படங்கள் - பாஸ்கர் செல்லப்பன்
நன்றி - தஞ்சாவூர் Fb

இந்த சாலைக்கு எதற்கு இவ்வளவு அழகு?.. - என்று அழித்து விட்டார்கள்...

நெடிதுயர்ந்து நிழல் கொடுத்த மரங்கள் எல்லாம்
நிலத்தின் மீது வீழ்ந்து விட்டன..

அழகே உனை என்று காண்போம் இனி?.. - என, மனம் கலங்குகின்றது..சாலை விரிவாக்கம் என்பது தேவையான ஒன்றுதான்.. எனினும்,

நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்து கிடப்பதைப் படத்தில் காணும்போதே மனம் கலங்கித் தவிக்கின்றது...

வேறு வழியே இல்லையா!?..

இவையெல்லாம் நம்முடன் இருந்து நலம் கொடுத்த மரங்கள்..

கூட வளர்ந்து குதுகலம் அளித்த இயற்கைச் செல்வங்கள்..

பறவைகள் கூட்டங்கூட்டமாகக் கூடி 
கூடு கட்டிக் களித்திருக்க கிளை பரப்பிய பெருந்தனங்கள்..

அந்தப் பெருந்தனங்கள் இன்னும் பலகாலம்
நீடூழி வாழ்வதற்கு நாம் விடவில்லை...

இன்னும் எத்தனை காலங்கள் ஆகக்கூடுமோ - 
இத்தனை மரங்களும் தழைத்து வளர்வதற்கு?...

வாழ்வளித்த மரங்கள் வாழ்விழந்து கிடக்கின்றன...

இவையெல்லாம் ஓரறிவு உடைய சிற்றுயிர்கள்..
நாமோ - ஆறறிவு உடைய பேருயிர்கள்..

சிற்றுயிர்கள் நிழல் கொடுத்தன.. பலன் கொடுத்தன..
பேருயிர்களான நாம் பழி தீர்த்தோம்.. அவற்றின் உயிர் கெடுத்தோம்!..


இன்றைக்கு சர்வதேச முட்டாள்கள் தினம்...

எதிர் வரும் காலத்திலாவது
அறிவிலிகள் விலகட்டும்..

இயற்கையைப் பாதுகாப்பதற்கு
அறிவினர் சேரட்டும்...

நமக்காக வாழ்ந்து வீழ்ந்துபட்ட
அவ்வுயிர்களின் ஆன்மா நற்கதி அடைவதாக!.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

16 கருத்துகள்:

 1. தங்களது பொதுவுடமைக் கவலை தங்களின் ஒவ்வொரு வரியிலும் படர்ந்து விரியக் கண்டேன் ஜி.

  மாற்றுக்கருத்து :
  அவைகளை வைத்துக்கொண்டே நிலங்களை அழித்து விட்ட இடத்தில் முற்றிலும் புதிய வழித்தடம் அமைத்து இருக்கலாமோ ?

  காரணம் வயல்வெளிகளையும்தான் இழந்து விட்டோமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. சமூகப் பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட கட்டுரை. இதில் உள்ள பல உணர்ச்சிகளை நானும் சொல்லவேண்டும் என்று நினைத்ததுண்டு.1974இல் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் அதிகாரியாக வேலை கிடைத்து முதன்முதலில் கடலூர்-சிதம்பரம்-சீர்காழி-மாயவரம்- கும்பகோணம் பாதையில் பஸ்சில் பயனித்தபோதுதான் மரங்கள் குடைவிரித்து புளியமணம் கமழ்ந்த சாலைகளைக் கண்டேன். எங்கள் வட ஆற்காட்டில் சாலையெங்கும் புளியமரம்தான் இருக்கும். ஆனால் இவ்வளவு அடர்ந்த மரங்கள்- வெயிலே தெரியாமல் நிழல் பரப்பும் மரங்களின் வரிசை - அங்கே கிடையாது. இப்போது மீண்டும் அதே சாலையில் பயணித்தால் -பழைய ஊர்கள் வருவதில்லை. பைபாஸ் சாலையில் சென்றால் அந்த ஊர்களை மட்டுமின்றி அந்த மரங்களையும் அவற்றின் நினைவுகளையும் bye-pass செய்துவிடுகிறோம் என்பது பரிதாபமான நிலைமை.

  - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   நிழல் விரிந்த சாலைகளை இழந்து கொண்டிருக்கின்றோம்..

   அடுத்த தலைமுறை வெட்ட வெளியைப் பார்த்து ரசிக்கப் போகின்றது..
   பழைய ஊர்கள் தங்கள் முகவரியை இழந்து விட்டன..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 3. ஆமாம் ஐயா...
  இப்போது நிறைய ரோடுகளில் மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி மொட்டை ரோடாக மாற்றி வைத்திருக்கிறார்கள்....

  தேவகோட்டை - காரைக்குடி ரோட்டில் மரங்கள் அதிகம்... அதுவும் குறிப்பாக தேவகோட்டையில் இருந்து ஒரு 10 கிமீ தூரம் அதிக மரங்கள்.... அதில் வண்டி ஓட்டிச் செல்வது அவ்வளவு சுகம்... சென்ற முறை ஊருக்குச் சென்ற போது ஒரு மரம் இல்லாமல் வெட்டி எடுத்து விட்டார்கள்....

  என்ன செய்வது.... அரசின் செயல்கள் எல்லாமே இயற்கையை பாழாக்கும் திட்டங்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   ஊர்கள் தோறும் இப்படித்தான் இயற்கை அழிப்பு தொடர்கின்றது..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. ஆம் ஐயா! பல சாலைகள் நெடுஞ்சாலைகளாக்கப்படுவதால் மரங்கள் அத்தனையும் வீழ்த்தப்படுகின்றன. வறண்ட பாலைவனம் போல் ஆகிவருகின்றன...ஊர்திகள் மின்னல் வேகத்தில் பறக்ககின்றன...இந்த ஊருக்கு இத்தனை மணி நேரத்தில் சென்றுடிடலாம்...ரோடு அப்படி போட்டுருக்காங்க என்று பீற்றிக் கொள்ளலாம் ஆனால் மரங்கள்? அழகு? ஆங்காகே மரங்களைப் பாதுகாப்போம், மழைநீரை சேமிப்போம்...இயற்கையைப் பாதுகாப்போம் என்று போர்டுகள் வேறு இங்கு பறவைகள் வரும் இடம் சத்தமில்லாமல் செல்லவும் என்றெல்லாம் போர்டுகள்...சிரிப்புத்தான் வருகிறது மரம் இருந்தால் தானே இத்தனை போர்டுகளுக்கும் அர்த்தம்? மரங்கள் வெட்டப்படும் முன் அந்தப் படங்கள் அழகு! ஆனால் வெட்டப்பட்டு இருக்கும் படங்கள் மனதை வேதனையுறச் செய்கிறது... யோசித்திருந்தால் மரங்களை அழிக்காமல் செய்திருக்க முடியும்...ஆனால் அப்படி இல்லையே...

  என்ன சொல்லுவது என்று தெரியவில்லை...வேதனைப்படுவதைத் தவிர..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மரங்களற்ற வெட்டவெளிச் சாலைகளில் பயணம் செய்வதில்
   பெருமகிழ்ச்சி அடையப் போகின்றது வருங்கால சமுதாயம்..

   மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் எந்த திட்டங்களையும் காணோம்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 5. பல சாலையோர மரங்கள் இப்படி அழிக்கப்படுவது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. சாலைகள் தேவை தான் என்றாலும், மரங்களை வெட்டுவதற்கு பதிலாக அதை அப்படியே விட்டு பக்கவாட்டில் இன்னுமொரு சாலை அமைக்கலாம்... புதிய மரங்கள் நடுவதும் இல்லை என்பது தான் சோகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   பெரிய மரங்களை வெட்டித் தள்ளிவிட்டு அரளிச் செடிகளை நட்டு வைக்கின்றார்கள்.. என்னே விந்தை...

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 6. வளர்ச்சி என்னும் பெயரில்
  மரங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம் ஐயா
  மரங்களை வெட்டுகிறோமே தவிர வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை
  வேதனை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   உண்மைதான்.. மரங்களை வெட்டுவதில் காட்டும் வேகம் வளர்ப்பதில் இருப்பதில்லை..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 7. வளர்வதாகக் கூறிக்கொண்டு நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் சொல்வது உண்மைதான்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 8. வெறுமே புலம்புவதை விட தீர்வுகள் வரவேண்டும் நாடு முன்னேற சாலைகள் அவசியம் ஆனால் சாலைகளை உருவாக்கும் போது மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களை வெட்டாமல் சாலை உருவாக்க முடியுமா மாற்று வழிகள் உண்டா இல்லையாயின் சாலை மராமத்து செய்யும்போது புதுமரக் கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப் பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் பட வேண்டும் இன்று நடும் மரங்கள் குறைந்தது பத்து ஆண்டுகளில் நிழல் தரு தருவாகலாம் போக்கு வரத்துக்கு சாலைகள் அவசியம் ஊர்மக்கள் ஒற்றுமையுடன் இருந்தால் சகட்டு மேனிக்கு வெட்டப்படும் மரங்களாவதுபிழைக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   நல்ல்ல சாலைகள் வேண்டுமென்பதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை..

   ஆனால், மாற்று வழிகளைப் பற்றியெல்லாம் யோசித்து செயல்படும் அலுவலர்கள் யாரும் இல்லை..

   மேலும் மரங்களை வெட்டுவதில் காட்டும் வேகம் வளர்ப்பதில் கிடையாது..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு